உடனடிச்செய்திகள்

Tuesday, August 9, 2016

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை வழங்கக் கோரி! தோழர். பெ. மணியரசன் தலைமையில் 2016 செப்டம்பர் – 12 அன்று திருச்சி தொடர் வண்டிக் கோட்ட அலுவலகம் முற்றுகைப் போராட்டம்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்!


தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை 
வழங்கக் கோரி!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர். பெ. மணியரசன் தலைமையில் 2016 செப்டம்பர் – 12 அன்று திருச்சி தொடர் வண்டிக் 
கோட்ட அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்!


தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், ஒசூரில் நேற்று (07.08.2016) காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, பெண்ணாடம் க. முருகன், குடந்தை கா. விடுதலைச்சுடர், மதுரை இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒசூர் செம்பரிதி, தருமபுரி விசயன், திருச்சி இராசாரகுநாதன், தஞ்சை ம. இலட்சுமி, பூதலூர் ஆ. தேவதாசு, மதுரை பே. மேரி, திருத்துறைப்பூண்டி ப. சிவவடிவேலு, புதுக்கோட்டை த. மணிகண்டன், ஈரோடு வெ. இளங்கோவன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி உள்ளிட்டு, தமிழகமெங்கிலுமிருந்து வந்திருந்த தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் காலமான தமிழ்த் தேசியப் பேரியக்க சென்னைத் தோழர் சாதிக்குல் ஜன்னா (எ) புதுமொழி, தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் ஐயா மு. அருணாச்சலம், நாகாலாந்து விடுதலை இயக்கத் தலைவர் ஐசக் சிசு, தமிழர் தன்மானப் பேரவை துணைப் பொதுச் செயலாளர் முனைவர் நா. காமராசு, பாலாற்றில் உயிரீகம் செய்த உழவர் சீனிவாசன், நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் – போராளி வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. “தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே 90% வேலை - தமிழே அலுவல் மொழி” - திருச்சி தொடர் வண்டி கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம்!
தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் தொழில் – வணிகங்கள் அனைத்தும் இன்று மார்வாடி, குசராத்தி, தெலுங்கர், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரின் கைகளில் உள்ளது. மேலும் உ.பி., பீகார், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அயல் மாநிலங்களைச் சேர்ந்தோர், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகை எண்ணிக்கையில் குடியேறி, தமிழர் தாயகத்தை சீர்குலைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலுள்ள தொடர்வண்டித்துறை, பாதுகாப்புத்துறைத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., பெட்ரோலிய ஆலைகள், ஓ.என்.ஜி.சி., துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், நெய்வேலி சுரங்கம் – அனல் மின் நிலையம், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி, கடவுச் சீட்டு, கணக்காயர் அலுவலகங்கள், ஈட்டுறுதி (இன்சுரன்சு), அலுவலகங்கள் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு அலுவலகங்களில் அயல் இனத்தாருக்கு பணி வழங்கி, அயலாரை தமிழ்நாட்டில் இந்திய அரசே நேரடியாகக் குடியேற்றுகிறது. சொந்த மண்ணிலேயே தமிழினத்து இளைஞர்கள் வேலையின்றி ஏதிலியராகத் திரியும் நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. எனவே, தற்காப்புப் போராட்டங்களில் இறங்கி தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் தமிழர் தாயகத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும். தமிழர்களுக்கு சேவையாற்றவும் வேலைவாய்ப்பளிக்கவும் உருவாக்கப்பட்ட இந்நிறுவனங்களில், 1976ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டப்படி தமிழே அலுவல் மொழியாக செயல்பட வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 2016 செப்டம்பர் 12 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர். பெ. மணியரசன் தலைமையில், திருச்சி தொடர்வண்டி கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவது என இப்பொதுக்குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இப்போராட்டத்தை இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுச்சி மிக்க போராட்டமாக நடத்தவும், அதற்கேற்ப சுவர் விளம்பரங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான துண்டறிக்கை பரப்புரை, கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி விரிவான பரப்புரை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
2. புதிய கல்விக் கொள்கையைக் கைவிடுக!
அரசின் பிற்போக்கான கொள்கைகளால், சீரழிந்த அரசியலால் மிகவும் கேடு அடைந்த துறையாக கல்வித்துறை சீர்குலைந்துள்ளது. இனி மீட்க முடியுமா என்று அச்சப்படும் அளவுக்கு அனைத்து முனைகளிலும் கல்வித்துறை நிலை குலைந்து வருகிறது. நரேந்திர மோடி அரசு குறிவைத்து சீரழித்துவரும் முதன்மைத் துறையாகவும் கல்வித்துறையே இருக்கிறது. தற்போது, மோடி அரசு முன்வைத்துள்ள புதியக் கல்விக் கொள்கை ஆவணங்கள், இதை உறுதி செய்கின்றன.
ஆரிய ஆதிக்கத்தையும் உலகமய வேட்டையையும் கல்வித்துறையில் தங்குதடையற்றுத் திறந்துவிட்டு பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு வரும், இப்புதியக் கல்விக் கொள்கையை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்குக் கல்வி உரிமையை மறுத்து, குறைகூலித் தொழிலாளர் பட்டாளத்திற்கு விரட்டும் நோக்கில் இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி மானியம் நிறுத்தப்பட உள்ளது. சமற்கிருதத் திணிப்பையும் ஆரிய பண்பாட்டு ஆதிக்கத்தையும் இக்கொள்கை மேலும் இறுக்குகிறது.
இதைத் தடுத்து நிறுத்தும் பணியில், தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் மாணவர் அமைப்புகளும் முதல் வரிசையில் அணி திரள வேண்டும் எனவும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
அவசரகால நிலையின்போது, மாநில அரசின் அதிகாரப் பட்டியலிருந்து நீக்கப்பட்ட கல்வியை, திரும்பவும் மாநில அரசு அதிகாரப் பட்டியலுக்கேக் கொண்டு வர வேண்டும். தாய்மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி முறை, மாணவர் – ஆசிரியர் உறவையும் அறிவையும் வளர்க்கும் சனநாயக வழிப்பட்டக் கல்வி முறை உள்பட கல்வியில் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும்.
3. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக!
இந்த ஆண்டு ஆகத்து மாதம் பிறந்தும் மேட்டூர் அணை திறக்க முடியாத நிலையில், இவ்வாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒருபோக சம்பா சாகுபடியும் செய்ய முடியாத பேராபத்து ஏற்படுமோ என்று அச்சப்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்து, சம்பா சாகுபடியையும் இழந்தால், ஊரில் குடியிருப்பதா அல்லது பிழைப்புக்கு வழி தேடி வெளியேறுவதா என்ற கேள்வியை பல இலட்சம் மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பேரிழப்பிற்குக் காரணம் காவிரித் தீர்ப்பாயம் - உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளை செயல்படுத்து மறுத்து கன்னட இனவெறியோடு செயல்படும் கர்நாடக ஆட்சியாளர்கள் மற்றும் கர்நாடகத்திற்கும் - தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தண்ணீர் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்து தமிழ்நாட்டிற்கு பாதகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் ஆகியோர் ஆவர்.
காவிரி ஆற்றின் மீது கர்நாடகம் கட்டியுள்ள நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 80 விழுக்காட்டு அளவிற்கு தண்ணீர் உள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, பற்றாக்குறை காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதற்கும் வழிகாட்டியுள்ளது. ஆனால், தற்போது முழு அளவிலும் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையிலும்கூட, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரிப் பங்கு நீரைத் திறந்துவிடவில்லை. இந்திய அரசோ உச்ச நீதிமன்றமோ, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் இந்த அநீதியை கேள்வி கேட்கக்கூட முன் வரவில்லை.
கன்னட இனவெறியர்களும் நடுநிலை தவறி நயவஞ்சகமாகச் செயல்படும் இந்திய ஆட்சியாளர்களும் எந்தளவிற்கு தமிழ்நாட்டிற்குத் தீங்கிழைக்கிறார்களோ, அதே அளவிற்கான தீங்கை செயல்பட மறுக்கும் இப்போதைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் முன்னாள் ஆட்சியாளர்களும் செய்து வருகிறார்கள்.
இந்தியத் தலைமையச்சர் மோடிக்கு கடிதம் எழுதுவதோடு முதல்வர் செயலலிதாவும், ஊடகங்களுக்கு அறிக்கை அளிப்பதோடு முன்னாள் முதல்வர் கருணாநிதியும் காவிரிச் சிக்கலில் நாடகமாடிக் கொண்டிருப்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம், வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாடு அரசு, உடனடியாக தமிழ்நாட்டுப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் குழு ஒன்றை அனுப்பி, கர்நாடகத்தின் நான்கு அணைகளிலுள்ள தண்ணீரை நேரில் அறிந்து, அக்குழுவின் தகவல்களைக் கொண்டு, கர்நாடக முதலமைச்சருடன் நேரடியாகச் சென்று பேச்சு நடத்தி, தமிழ்நாட்டிற்குரிய தண்ணீர் விகிதத்தைத் திறந்துவிட வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். அதில் பலனில்லை எனில், இந்தியத் தலைமையமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைத்து, காவிரித் தீர்ப்பை செயலுக்குக் கொண்டுவர வேண்டும்.
மகதாயி ஆற்று நீர் உரிமைச் சிக்கலில், மராட்டிய மாநிலத்தை எதிர்த்து, கர்நாடக உழவர்களும் மக்களும் நடத்திய போராட்டங்களை பார்த்த பிறகாவது, காவிரி டெல்டா பகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் கட்சித் தலைமைகளின் கட்டளைகளுக்குக் காத்திராமல் களமிறங்கிப் போராட முன் வர வேண்டும். இவ்வாறான போராட்டங்கள் மட்டுமே காவிரி உரிமையை மீட்கும். டெல்டா உழவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும்.
இதனை உணர்ந்து, களமிறங்கிப் போராட முன் வர வேண்டும் என தமிழ்நாட்டு மக்களைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
4. பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள நீர்த்தேக்கத்தை இடிக்க வேண்டும்!
1892ஆம் ஆண்டு மைசூர் அரசு – சென்னை மாகாணம் ஒப்பந்தத்தின்படி, கர்நாடகா – ஆந்திரா – தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில், கடைமடைப் பகுதியான தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது. ஆனால், அதை ஆந்திரமும் கர்நாடகமும் தொடர்ந்து மீறி வருகின்றன.
ஏற்கெனவே ஆந்திராவின் பல்வேறு தடுப்பணைகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பாலாறு மறுக்கப்பட்டு பாலைவனமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த நிலையில், பாலாறு தமிழ்நாட்டிற்குள் நுழையும் வேலூர் மாவட்டம் புல்லூரில், ஆந்திர அரசு புதியதொரு நீர்த்தேக்கத்தை சட்டவிரோதமாக உருவாக்கியுள்ளது.
ஏற்கெனவே புல்லூரில் இருந்த 5 அடி தடுப்பணையை 12 அடியாக உயர்த்துவதாகச் சொல்லிக் கொண்டு, மிகப் பலமாக அடித்தளம் போட்டு, 25 அடி உயரமும் 12 அடி நீளமும் 300 அடி அகலமும் கொண்ட நீர்த்தேக்கமாகவே மாற்றியுள்ளது. இதன் காரணமாக, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மிகப்பெரும் ஆபத்து ஏற்படும்.
இந்த நீர்த்தேக்கம் காரணமாக, தமிழ்நாட்டிற்குள் பாலாற்று நீர் ஒரு சொட்டு கூட நுழையாது என்று நாம் கூறியதை உறுதி செய்வது போல், அண்மையில் பெய்த மழை காரணமாக வந்த நீர் அனைத்தும் தற்போது, புல்லூர் நீர்த்தேக்கத்தில் அப்படியே தேங்கியுள்ளது. இதனைக் கண்டு வேதனையடைந்த புல்லூர் உழவர் சீனிவாசன் அவர்கள், அங்கிருந்த நீரில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்த கனக நாச்சியார் அம்மன் கோவிலை – ஆந்திர அரசு முறைகேடான வகையில் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது.
ஆந்திர அரசு அணை கட்டும்வரை அமைதியாக இருந்த தமிழ்நாடு அரசு, அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்துவிட்டு, மக்கள் போராடி அப்போராட்டச் செய்தி ஊடகங்களில் வந்த பின்னர், ஆந்திர முதல்வருக்குக் கடிதம் எழுதியது.
தமிழ்நாடு அரசு, மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் உரிய அதிகாரிகள் குழுவை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுப்பி அவரிடம் நேரில், பாலாற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை வலியுறுத்தும் 1892 சென்னை – மைசூரு ஒப்பந்தம், ஆந்திர அரசு ஏற்கெனவே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட முயன்றதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளதையும் எடுத்துரைப்பதுடன், புல்லூர் தடுப்பணையை உயர்த்துவதன் மூலம் தமிழ்நாட்டு உழவர்களுக்கு ஏற்படும் வேளாண்மை இழப்பையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் குடிநீர் பாதிப்பையும் விளக்க வேண்டும்.
புல்லூர் தடுப்பணையை உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று இடித்துத் தள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. இணயம் துறைமுகத் திட்டத்தை, மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்து - மக்கள் கருத்தை அறியாமல் செயல்படுத்தக் கூடாது!
சற்றொப்ப 1076 கிலோ மீட்டர் நீளமான தமிழ்நாட்டு கடலோரப் பகுதியில், வெறும் 68 கிலோ மீட்டர் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிறது. ஆனால், அம்மாவட்டத்தில் மட்டும் சற்றொப்ப 20 விழுக்காட்டு கடலோடி மக்கள் வாழ்கின்றனர். எனவே, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், தரம் உயர்த்தப்பட்ட நவீன மீன்பிடித் துறைமுகம் வேண்டுமென குளச்சல் பகுதி மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், குளச்சலுக்கு மேற்கு பகுதியிலுள்ள இனையம் பகுதியில், ரூபாய் 27,500 கோடி செலவில், அனைத்துலக பெட்டக மாற்று வணிகத் துறைமுகம் (International Container Transhipment Terminal – ICTT) ஒன்று அமைக்கவுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே கேரள மாநிலத்தின் கொச்சியில் இந்திய அரசு அமைத்துள்ள இதேவகைத் துறைமுகமும், இனையத்திற்கு 35 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் உள்ள விழிஞ்சம் துறைமுகமும் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில், அதே போன்றதொரு இன்னொரு துறைமுகத் திட்டத்தை இனையம் பகுதியில் நிறுவ முற்படும் இந்திய அரசின் ”அவசர நடவடிக்கை” விவாதத்திற்குரியது.
இது போன்ற வணிகத் துறைமுகக் கட்டுமானங்களில் சிறிய அளவில் பங்கெடுத்தால்கூட, அதானி போன்ற பெருங்குழும நிறுவனங்களுங்கு அங்கு அதிகளவில் உரிமையளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தில் வெறும் 13 விழுக்காடு மட்டுமே பங்களிப்பு செய்த அதான குழுமம், அத்துறைமுகத்தை 60 ஆண்டுகள் நிர்வகிக்க சலுகைப் பெற்றிருப்பது, நம் ஐயத்தை உறுதிப்படுத்துகின்றது.
இன்னொருபுறம், மிகப்பெரும் முதலீட்டில் அமையவுள்ளதாகக் கூறப்படும் இந்த புதிய துறைமுகத்தின் மூலம் அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு சேவையளிக்க முடிவு செய்துள்ள இந்திய அரசு, 5 இலட்சம் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியை இதற்கெனத் தேர்ந்தெடுத்துள்ளது கடும் விவாதத்திற்குரியது.
இத்திட்டத்தின் காரணமாக இனையம், புத்தனன்துரை, ராமந்துறை, மூல்லூர்துறை, அலூ நகர், மேல்மிடலம், கீழ்மிடலம் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த - சற்றொப்ப 50,000 மக்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேற நேரிடும் என்பதும், புதிதாக அமைக்கப்படவுள்ள நான்கு வழிச் சாலைகள் மற்றும் தொடர்வண்டிப் பாதை ஆகியவற்றிற்காக 57,000 மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, தமிழ்நாட்டில் கடல் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் எழுப்பப்பட்ட பல்வேறு துறைமுகங்கள் காரணமாக, எண்ணூர் தொடங்கி புதுச்சேரி – கடலூர் – நாகப்பட்டினம் – தூத்துக்குடி என தமிழ்நாட்டின் கடலோர மீனவர் கிராமங்களில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு தீவிரப்பட்டு வரும் நிலையில், இனையம் துறைமுகத் திட்டத்திற்காக – பெருமளவில் தடுப்புச் சுவர்கள் எழுப்பவும், 800 ஏக்கர் கடல் மீது மணல் கொட்டவும் திட்டமிடுவது, தெரிந்தே குமரிப்பகுதி மக்களை ஆபத்தில் தள்ளுவதாகும்.
திட்ட மதிப்பீட்டு அறிக்கை, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, பொது மக்கள் கருத்துக் கேட்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், இத்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தியேத் தீருவோம் என நடுவண் அரசின் அமைச்சர்கள் தொடர்ந்து அறிவிப்பு செய்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குமரி மாவட்ட கடலோடிகளின் கருத்துகளுக்கேற்ப நவீன மீன்பிடித் துறைமுகத்தை அமைக்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவையாற்றும் வகையில் வணிகத் துறைமுகம் கட்டும் திட்டத்தை இந்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.
எனவே, இந்திய அரசு உடனடியாக இனையம் துறைமுகத் திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்பதோடு, இத்திட்டத்திற்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் இத்திட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
6. தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நடப்பாண்டிலேயே நிதி ஒதுக்கி செயலுக்குக் கொண்டு வர வேண்டும்!
கிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டை பகுதியானது சிறுதானியங்கள், மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தினசரி உணவிற்குத் தேவையான புளி, கொத்தமல்லி, புதினா என அனைத்து விதமான வேளாண் பயிர்களும் எப்பருவத்திலும் விளையும் இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. இராயக்கோட்டை காய்கறி சந்தையிலிருந்து தினந்தோறும் தமிழகம் தவிர கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு காய்கறி மற்றும் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி உழவர்கள் அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தருகின்றனர்.
பெருமுதலாளிகளின் சுயநலத் தேவைகளுக்காக, மலைகளும், காடுகளும் என சூழலியல் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இப்பகுதி, உழவர்களும், பொது மக்களும் தண்ணீரின்றி கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கிணற்று நீர் கானல் நீராகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இதனால் இப்பகுதியில் அனைத்து உழவர்களும் ஆழ்துளை கிணறுகளை மட்டுமே நம்பி வேளாண்மை செய்து வருகின்றனர். தற்போது, நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு மேல் சென்றுவிட்டது.
ஆழ்துளை கிணறுகளுக்காக செலவிட்டு, கடன்பட்டு வட்டி கட்டமுடியாமல் தங்கள் வாழ்வாதாரமான நிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு - வயிறு பிழைக்க நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலையில், இம்மக்கள் தத்தளிக்கின்றனர். இதுமட்டுமின்றி உழவுத் தொழிலை சார்ந்த பலதொழில்களும் தொடர்ந்து அழிந்து வருகின்றன. இவற்றிக்கெல்லாம் மூலகாரணமாக, இப்பகுதியின் தண்ணீர்ச் சிக்கலே உள்ளது!
20 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் நிலவும் பருவநிலை மற்றும் சூழலியல் மாற்றங்களை அறிந்த இப்பகுதி பெரியோர்கள், இப்பகுதியில் நிலத்தடி நீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தென்பெண்ணை கிளைவாய்க்கால் மூலம் ஆண்டிற்கு ஓரிரு முறை இப்பகுதியில் இருக்கும் ஏரி, குளம், குட்டை, ஊரணிகளில் நீரை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டத்தை நிலைநாட்ட முடியும் என உணர்ந்தனர். இவற்றில், நீரை நிரப்பக் கோரும் திட்டத்திற்காக, 20 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
தொடர் போராட்டங்களின் காரணமாக, கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபரில் களஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் தான் என பதில் அளித்த தமிழக பொதுப்பணித்துறை, 2012- 2013இல் இத்திட்டதிற்கான அளவீடுகளை செய்து 2014 ஏப்ரலில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூபாய் 22.20 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்துள்ளதாகத் தெரிவித்தது. அதன்பின், இத்திட்ட மதிப்பீடு, 2014-15-ஆம் ஆண்டில் 29 கோடியே, 50 இலட்சம் ரூபாயாக உயர்ந்தது.
கடந்த ஆண்டின் (2015) இறுதியில், தமிழ்நாட்டில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்ட நிலையிலும், கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட போதும், மாவட்டத்தின் மற்றொரு பகுதியான தென்பெண்ணை ஆற்றுக் கரையோரப் பகுதிகளான உத்தனப்பள்ளி, இராயக்கோட்டை பகுதிகளில் பெரும்பாலான ஏரி - குளங்கள் நிரம்பாமல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. கருக்கநல்லி, பெரிய ஏரி - குட்டை, கீழ் ஏரி, மேல் ஏரி, இராசப்பன் குட்டை உள்ளிட்ட 12 ஏரி – குளங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியிருந்தால், கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு வெள்ளப்பெருக்கு அபாயமும் குறைந்து, இப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வேளாண்மையும் செழிக்கவும் பயன்பட்டிருக்கும். எனவே, இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கி, திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழுக் கூட்டம் கோருகிறது.
7. வழக்குரைஞர்கள் மீதான இடை நீக்கத்தைக் கைவிட, வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பூட்டும் ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெற இந்திய - தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
ஒழுங்குமுறை விதிகள் என்ற பெயரால் நீதிபதிகளை கேள்விமுறையற்ற சர்வாதிகாரிகளாக மாற்றி வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் விதிகளை சென்னை உயர் நீதிமன்றம் 2016 மே மாதத்தில் வெளியிட்டது.
இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்களை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றப் பணிகள் முற்றிலும் நிலைகுலைந்து ஒரு கொந்தளிப்பான சூழல் நீதித்துறையில் நிலவுவது நல்லதல்ல. போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்து அவர்களது தொழிலுக்குத் தடை விதித்து இந்திய பார் கவுன்சில் சர்வாதிகார ஆணையிட்டுள்ளது. இதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி போராட்டம் நடத்திய, வழக்குரைஞர்கள் உள்ளிட்டு 43 வழக்குரைஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, ஒன்பது மாதமாக அவர்கள் தொழில் நடத்த முடியாமல் அல்லல்படுகிறார்கள்.
இவ்வளவு கொந்தளிப்பான நிலைமை நீதித்துறையில் நிலவும்போது, இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் பாராமுகமாக இருப்பது சனநாயகச் சூழலையேக் கெடுத்து விடும்.
உயர் நீதிமன்றம் நிபந்தனை ஏதுமின்றி மே மாதத்தில் பிறப்பித்த வழக்குரைஞர்கள் ஒழுங்குமுறை விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 43 வழக்குரைஞர்கள் மீதான இடை நீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். இந்திய பார் கவுன்சில் 126 வழக்குரைஞர்கள் மீது விதித்துள்ளத் தடை ஆணையை திரும்பப் பெற வேண்டும்.
இச்சிக்கலல் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தலையிட்டு நீதிமன்ற சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெறவும் வழக்குரைஞர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT