உடனடிச்செய்திகள்

Tuesday, August 16, 2016

சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும் மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கவும் செயல்படுமாறு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி மக்கள் போராட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும்
மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கவும்
செயல்படுமாறு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி
மக்கள் போராட வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 15.08.2016 அன்று பெங்களூருவில் இந்திய விடுதலை நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் ரூபாய். 5,912 கோடியில் புதிய நீர்த்தேக்கம் கட்டத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். மேக்கேத்தாட்டுவில் 50 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் அணைகள் கட்டுவது கர்நாடகத்தின் திட்டம்!

அப்படிக் கட்டிவிட்டால் வெள்ளப் பெருக்குக் காலங்களில்கூடக் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூர் அணைக்கு வரும் நிலை இருக்காது. காவிரி நீராவாரி நிகாம் மூலம் புதிதாக 430 ஏரிகளில் காவிரி நீரைத் தேக்கிட, அந்த ஏரிகளைக் குட்டி அணைகளாக மாற்றிட 1,002 கோடி ரூபாயில் திட்டம் தீட்டியுள்ளதாகவும் சித்தராமையா தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கர்நாடகத்தில் நீர், நிலம், மொழி விடயங்களில் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்றும் சித்தராமையா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தன்னல ஆதாய அரசியலும் அதனால் தனிநபர் பகை அரசியலும் கோலோச்சுகின்றன. எனவே இங்கு நடக்கும் கட்சிகளின் பகை அரசியல் தமிழர்களின் வாழ்வுரிமை, வரலாற்றுரிமை அனைத்தையும் பலியிட்டுக் கொண்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் 2013 சனவரி மாதம் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த இந்திய அரசுக்கும் தொடர்புடைய மாநில அரசுகளுக்கும் கட்டளை இட்டது. ஆனால் அத்தீர்ப்பின்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இந்திய அரசு மறுக்கிறது; தமிழ்நாட்டை வஞ்சித்து மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களை ஆதரிக்கிறது நடுவண் அரசு.

செல்வி செயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு செயலற்ற அரசாக உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் தாய்ப்பாலாக ஓடிவரும் காவிரியின் மீது தமிழ்நாட்டிற்கு உள்ள வரலாற்று உரிமையை செயலலிதா தமது ஆட்சிக் காலத்தில் நிரந்தரமாக இழந்து விடுவாரோ என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகக் காவிரி அணைகளில் இப்போது மொத்தக் கொள்ளளவில் 80 விழுக்காடு அளவிற்குத் தண்ணீர் உள்ளது.

பொதுப்பணித்துறைப் பொறியாளர்களை அனுப்பிக் கர்நாடகக் காவிரி அணைகளை நேரில் பார்வையிடச் செய்து, நீர் இருப்பின் உண்மை அளவுகளை எடுத்து, அவ் விவரங்களுடன் தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் வல்லுநர் குழுவுடன் கர்நாடக முதல்வரைச் சந்திக்க வேண்டும். இருப்பு நீரில் தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான விகித நீரைத் திறந்துவிடக் கோர வேண்டும். மறுத்தால் உண்மை விவரங்களைப் பெங்களூருவில் செய்தியாளர் கூட்டம் நடத்தி வெளிப்படுத்த வேண்டும்.

அதன்பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு வலியுறுத்த வேண்டும் என்று கடந்த சூலை மாதத்திலிருந்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொண்டோம்.

முதல்வர் செயலலிதா அசையவில்லை. கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது என்ற வழக்கமான கண்துடைப்பு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை முதல்வர் செயலலிதாவால் தடுக்க முடியுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் காரைக்கால் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரி நீர் உரிமையை மீட்கத் தமிழ்நாட்டு முதலமைச்சரையே செயல்பட வைக்க முடியவில்லை எனில், தமிழ் மக்களால் இந்திய அரசை எப்படி செயல்பட வைக்க முடியும், கர்நாடக அரசை எப்படி நீதியின் பக்கம் திருப்ப முடியும் என்ற வினா எழுகிறது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி நீர் பெறவும், மேக்கேத்தாட்டு அணை முயற்சியைத் தடுக்கவும் செயல் துடிப்புள்ள நடவடிக்கைகளில் இறங்கிடக் கோரிக்கை வைத்துத் தமிழ் மக்கள் அறப் போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாகக் குறுவை சாகுபடியை இழந்தோம். இவ்வாண்டு சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகிவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற அரசியல் நடவடிக்கைகளில் களமிறங்கிட வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் நடத்த முன்வருமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT