கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!
கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் நகரங்களில் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடக்காவிடில், 1991-இல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தை போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி, இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில், நேற்று (20.10.2017) மாலை சென்னை நுங்கமபாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தலைவர்களும், தோழர்களும் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், “கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!, கன்னடவெறியர்களைக் கண்டிக்கின்றோம்”, “ஒருமைப்பாட்டு உபதேசம் புரியும் இந்திய அரசே! தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்காதே!”, “கன்னடன் உனக்கு பங்காளி! தமிழன் உனக்குப் பகையாளியா?” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனத்தில் ஏற்றினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தோழர் அன்புத் தென்னரசு, தமிழ்த் திரைப்பட இயக்குநர் வ. கவுதமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் சோழன் மு. களஞ்சியம், காவிரி உரிமை மீட்புக் குழு திரு. பழனிராசன், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி, புலவர் இரத்தினவேலவன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்தி, மே பதினேழு இயக்கத் தோழர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பாவலர் முழுநிலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.
கர்நாடக அரசே! தமிழர்களைத் தாக்கியக் கன்னட இனவெறியர்களைக் கைது செய்து சிறையிலடை!
தமிழ்நாடு அரசே! தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்காதே! உடனே கண்டனக் குரல் எழுப்பி, கர்நாடக அரசுக்கு நெருக்குதல் கொடு!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com
Post a Comment