உடனடிச்செய்திகள்

Monday, October 30, 2017

போர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. - பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்!

போர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்!
 
முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக்குறைவால் 30.10. 2017 இன்று காலமானார் (வயது 67) என்ற செய்தி அறிந்ததும் பேரிடியாக இருந்தது.

உழைக்கும் மக்களின் வலியை தனது படைப்பின் வழியாக வெளிக்கொணர்ந்த மேலாண்மையாரின் சிறுகதைகள் ஏராளம். கரிசல் மண்ணின் வாழ்வியல் கூறு பொன்னுசாமியின் எழுத்தில் எதிரொலிக்கும். அவரது ஒவ்வொரு நாவல்களிலும் வாழ்க்கைக்கான தடமிருக்கும்; மண்ணின் மக்களின் பதிவிருக்கும். கதை இலக்கியத்தில் தனக்கென ஒரு உத்தியை, எளிய சொல்லாடல்கள் கையாள் வதில் சிறந்து விளங்கினார்.

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் மேலாண்மை பொன்னுசாமி. 5ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளி படிப்புத்தொடராத மேலாண்மையார் படைப்புலகில் சிறந்த பட்டங்களை பெற்றார். ”படிக்க முடியவில்லையே என்ற மனக்காயமும் ஏக்கமும்தான் என்னைத் தீவிர வாசிப்புக்கு உள்ளாக்கியது. நூலகங்களே எனது கல்விச்சாலைகளாயின” என்பார் மேலாண்மையார்.

இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து எழுதத் தொடங்கினார். 1972இல் முதன்முதலில் செம்மலர் இதழில் பரிசு என்ற சிறுகதையை எழுதினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் மூன்று முறை தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். சிறுகதைகள், நாவல்கள் குறுநாவல்கள் என 36 நூல்களுக்குமேல் எழுதியுள்ளார்.

அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான் என்ற புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார். மேலாண்மை பொன்னுசாமி எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.

பெண்ணுரிமை, சாதி மறுப்பு, சமத்துவம் என தனது படைப்பு வழியாக தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர். ஆணும் பெண்ணும் தோழமையுடன் வாழும் நிலை வேண்டும். அதற்கான களமாக இச்சமூசமுகம் அமைய வேண்டும் என்பதையே தனது எழுத்துகளில் எப்போதும் எடுத்துரைப்பவர் மேலாண்மை பொன்னுசாமி.

இலக்கியத்தை வாழ்க்கைக்குறிய வருவாய் வழியாக நினைக்காமல் இலக்கியத்தின் ஊடாக எதற்கும் சமரசமாகி விடாமல், போர்க்குணம் மிக்கப் படைப்பாளியாக திகழ்ந்தார். தனது பொதுவுடமைக் கொள்கை - இலட்சியங்களில் உறுதிபாட்டுடன் தொடர்ந்து அப்பாதையிலேயே தன் எழுத்தோடு பயணித்தார்.

மேலாண்மை பொன்னுசாமியின் முற்போக்குப் படைப்புகள் ஒவ்வொன்றும் தமிழ்ச்சமூகத்திற்கான நிகரமையை, உரிமையை மீட்க உதவும் எழுத்துக் கருவிகள். அது இளைய தலைமுறையை முன் நகர்த்தும்.

தனது படைப்பு வழியாக மக்களுக்காக பரப்புரை செய்த மாபெரும் இலக்கியர் மேலாண்மை பொன்னுசாமியின் மறைவு ஈடுசெய்யமுடியாதது. அவருக்கு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.


பேச: 9841604017, 7667077075
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
இனையம்: www.kannotam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT