உடனடிச்செய்திகள்

Tuesday, August 7, 2018

வாக்காளர்களுக்கு அதிகமாகக் கையூட்டு தருவது வளர்ச்சிக்கான சான்றாம்! – நியூஸ்18 வாதம்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

வாக்காளர்களுக்கு அதிகமாகக் கையூட்டு தருவது வளர்ச்சிக்கான சான்றாம்! – நியூஸ்18 வாதம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
நேற்று (06.08.2018) மாலை கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சிகள் அது தொடர்பான நேரலைகள் – கருத்துரையாடல்கள் முதலியவற்றை வெளியிட்டன. நியூஸ்18 – தமிழ் தொலைக்காட்சி, திரு. குணசேகரன் அவர்களை நெறியாளராகக் கொண்டு ஒரு கலந்துரையாடலை நேரலை செய்தது. அதில், திரு. சுமந்த் சி. இராமனும் மற்றும் ஒருவரும் (அவர் பெயர் நினைவில் இல்லை) கலந்து கொண்டனர்.

தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியின் 50 ஆண்டுகளில் மற்ற பல மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் வாக்காளர்களுக்கு அதிகமாகப் பணம் கொடுப்பது கூட பொருளாதார வளர்ச்சியின் பக்க விளைவுதான் என்றும் சுமந்த் சி. இராமனும் மற்றவரும் கூறினர். பணமதிப்பு குறைக்கப்பட்ட நேரத்தில் கண்டெய்னர் சரக்குந்துகளில் 89 கோடி ரூபாய் கடத்தப்பட்டது கூட பணமதிப்பு குறைப்பால் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்பதற்கான அடையாளம் தான் என்று மேலும் இருவரும் கூறினர். இவ்விருவரின் இக்கருத்தை ஏற்றுக் கொண்ட நெறியாளர் திரு. குணசேகரன், இந்த வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஓர் உவமை கூறினார்.

ஆலைக்கழிவுகளால் பாதிப்பு வருகிறது, ஆனால் அது தொழில் வளர்ச்சியின் பக்க விளைவு அல்லவா என்றார்.

உலகில் எந்தப் பொருளியல் வல்லுநரும் பொருளாதார வளர்ச்சிக்கான அளவு கோலாகக் கையூட்டுத் தொகையின் அளவு அதிகரிப்பைக் கூறியிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைவிட பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகளில் தமிழ்நாட்டைப் போல் அதிகமாக வாக்காளர்ககுக் கையூட்டுக் கொடுக்கிறார்களா? இல்லை!

பாலியல் தொழில் வளர்ச்சியடைந்து, அதில் கட்டண உயர்வு ஏற்பட்டால், அதுவும் தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சிகள் நிகழ்த்திய சாதனைதான் என்பார்களோ இவர்கள்!

கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நமது வாதமன்று! வெள்ளையராட்சியில் கூட அணைக் கட்டுகள், தொழிற்சாலைகள், சாலைகள், தொடர்வண்டிகள், கல்விக் கூடங்கள் எனப் புதிய முன்னேற்றங்கள் வரத்தான் செய்தன.

கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில், அவர் ஆட்சி பற்றி அக்குவேறு ஆணி வேறாக விமர்சிப்பது தேவை இல்லை.

பொதுவாகத் தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் அரசியல் சீரழிவுகள் அதிகமாக ஏற்பட்டன. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கழகங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர் வாங்கும் கையூட்டுத் தொகை கற்பனைக் கெட்டாத வடிவங்களில், அளவுகளில் வளர்ந்தது.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நடத்திக் கொண்ட தனிநபர் பகை அரசியல் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு கேவலமானது! சுக துக்கங்களில் கலந்து கொள்வதுகூட குற்றம் என்று ஆக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இரு கழகங்களின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்க முடியாத அவலம்!

கச்சத்தீவு பறிபோனது, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க முடியாமல் போனது, காவிரி உரிமை போனது, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாட்டை மாற்றியது போன்ற பேரிழப்புகளும், பேரவலங்களும் கழகங்களின் ஆட்சியில்தான் ஏற்பட்டன.

கல்வித் தகுதி பெற்று தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடிப் பதிவு செய்துள்ள இளையோர் எண்ணிக்கை 90 இலட்சத்திற்கு மேல்! உரிய கல்வியும் உயர்கல்வியும் கற்றவர்கள் உரிய ஊதியம் இல்லாமல் மிகக் குறைவான அத்துக்கூலியில் கல்வி நிலையம் தொடங்கி தொழிற்சாலைகள் வரை தமிழ்நாட்டில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள்.

இவைதாம் தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சியின் “சாதனைகள்” !

வடமாநிலங்களைவிடத் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று இம்மூவரும் கலந்துரையாடலில் கூறினர். கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் எந்தக் காலத்தில் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைவிட வளர்ச்சி பெற்றிருந்தார்கள்? வேறு எதில்தான் தமிழ்நாட்டைவிட முன்னேறியிருந்தார்கள்?

இதுவரை வடமாநிலத்தவர்களைக் காட்டிலும் பொருளாதாரம், அறிவாற்றல், கலைப்படைப்புகள் அனைத்திலும் தமிழர்தாம் முன்னேறி இருந்தார்கள்! கழகங்களின் ஆட்சியில் எவ்வளவோ சீரழிவுகளும், அரசியல் கொள்ளைகளும் இருந்தாலும், மரபுத்தொடர்ச்சி வளர்ச்சி தமிழர்களுக்கு இருக்கிறது என்பதே உண்மை!

திராவிடப் பொற்கால ஆட்சி குறித்த பூரிப்பில் இருப்பவரும், தமிழ்நாட்டில் இந்திய ஏகாதிபத்தியவாதத்தின் கடைசிப் புகலிடம் திராவிட அரசியல்தான் என்று அடையாளம் கண்டவர்களும் நடத்திய கலந்துரையாடல் என்று இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT