உடனடிச்செய்திகள்

Friday, August 24, 2018

வெள்ளப் பேரழிவு காலத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

வெள்ளப் பேரழிவு காலத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள பேரழிவால், அதன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தைப் பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையில் நீர்த் தேக்கும் உயரத்தை 142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்கவும், அவ்வணையில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரத்தை புதியதொரு மேலாண்மைக் குழுவிடம் ஒப்படைக்கவும் கேரள அரசு குறுக்குவழியில் சிந்தித்து செயல்படுவது கண்டனத்திற்குரியது.

கேரளத்தைச் சேர்ந்த இரசல் இராய் என்பவர் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தைக் குறைத்தால்தான் கேரளம் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று உள்நோக்கத்துடன் கூடிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன் விசாரணையின் போக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமிழ்நாட்டுத் தரப்பின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே, “தமிழ்நாடு அரசு மனச்சான்றுக்கு அஞ்சி நீர் மட்டத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்ய வேண்டும்” என்று அறிவுரை கூறினார். அப்பொழுது காணொலி மூலம் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நான் கொடுத்த அறிக்கையில், “காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமையை வெட்டிக் குறைத்து – குறைப்பிரசவம் போல் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இப்போது முல்லைப் பெரியாறு அணை உரிமையிலும் கை வைக்கிறாரே!” என்று கவலை தெரிவித்திருந்தேன்.

அடுத்து, நடுவண் நீர்வளத்துறை தலைவர் யு.பி. சிங் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழு, 139.99 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை வழங்கியுள்ள செய்தி இன்று வந்துள்ளது. இதே யு.பி. சிங்தான், உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்பு கூறிய “ஒரு செயல்திட்டம்” என்பது “மேலாண்மை ஆணையத்தை” குறிக்காது என்று முதன் முதலில் “விளக்கம்” கூறியவர் என்பது கவனத்திற்குரியது! தமிழ்நாட்டிற்கெதிரான அதே மனநிலையில்தான் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் உயரம் தொடர்பாகவும் அவர் சிந்தித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நிலவும் இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள அரசு நேற்று (23.08.2018) அபாண்டமான ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், கேரளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மனித உயிர்களும், பொருட்களும் சேதமானதற்கு முதன்மையான காரணம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாடு அரசு திடீரென்று திறந்துவிட்ட பெரு வெள்ளம் தான் என்று கூறியுள்ளது.

அவர்களின் கூற்றுக்கு சான்றில்லை என்றாலும், அவர்கள் வாதத்தில் கூறியுள்ளதை ஏற்றுக் கொண்டால் கூட ஆகத்து 15 அன்று 9,000 கன அடி மட்டுமே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளத்தின் வெள்ளப்பேரழிவு ஆகத்து 8ஆம் நாள் வாக்கிலேயே தொடங்கிவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விட்ட 9,000 கன அடி நீர் இடுக்கி அணைக்குச் சென்று, அதன் மதகுகள் வழியே வெளியேற வேண்டும். 70.5 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையின் வடிகாலுக்கு 9,000 கன அடி நீர் அபாயமான அளவா?

கர்நாடக அரசு முன் கூட்டியே தெரிவிக்காமல், திடீர் திடீரென்று 2 இலட்சம் கன அடி – இரண்டரை இலட்சம் கன அடி என்று காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறது. அதற்காகக் கர்நாடக அரசைத் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டவில்லை!

அடுத்ததாக, 21,450 கன அடி தண்ணீர் திறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தத் தண்ணீர்தான் இவ்வளவு பேரழிவிற்குக் காரணமா? இடுக்கி அணை உட்பட 80 நீர்த் தேக்கங்களிலிருந்து கேரள அரசு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. இந்த உண்மையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தக்கவாறு எடுத்துக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகத்து 16 அன்று, முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தை142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்க வலியுறுத்தி எழுதிய கடிதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய விடை மடலில், இரண்டு துயரச் செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்று, அணைக்கு முன்பாக உள்ள நீர் வரத்துப் பகுதியில் நீர் வரும் அளவு எடுப்பதற்கு தமிழ்நாட்டு அதிகாரிகளை கேரள அரசு அனுமதிக்கவில்லை என்பது. இன்னொன்று, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அணைப் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவால் யானை ஒன்று இறந்ததை சாக்காக வைத்துக் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு அன்று துண்டித்த மின் இணைப்பை இன்றுவரை கொடுக்க மறுப்பது. இவ்வளவு பெரிய முல்லைப் பெரியாறு அணையில் அனைத்துப் பணிகளும் மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலம்தான் செயல்படுகின்றன என்பது வேதனை அல்லவா!

மின் இணைப்புக் கட்டுமானத்திற்காக கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்ட நிலையிலும், மின் இணைப்பு கொடுக்க இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லியிருந்தார்.

இன்று (24.08.2018) உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் எந்தப் பகுதியையும் செப்பனிட்டு வலுப்படுத்த கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி மறுக்கிறது என்ற உண்மையைக் கூறியுள்ளது.

அத்துடன், கேரள அரசு கெட்ட நோக்கத்துடன் சதித்திட்டம் தீட்டுவதுபோல் முல்லைப் பெரியாறு அணை திறப்பினால்தான் கேரளத்திற்கு இவ்வளவு பெரிய வெள்ளமும், இவ்வளவு பேரழிவும் ஏற்பட்டது என்று குற்றம்சாட்டுகிறது என்று தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2014இல் வழங்கிய தீர்ப்பில், முதல் கட்டமாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் மூலம் மாற்றிவிடலாம் என்று கேரள அரசு முனைகிறது. இதில் வெற்றியடையா விட்டால், கேரள அரசு புதிய அரசமைப்பு ஆயம் கோரவும் கூடும்!

கேரள அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தக்க முறையில் எதிர்வினையாற்றி வருவது வரவேற்கத்தக்கது! அதேவேளை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள இந்த வழக்கின் ஊடாக, முல்லைப் பெரியாறு அணையின் சிற்றணைப் பகுதியில் அணையை வலுப்படுத்துவதற்குரிய கட்டுமானப் பணிகளை செய்வதற்கு புதிய ஆணை ஒன்றைப் பெற்றாக வேண்டும். கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு (பணத்திற்குத்தான்) கொடுக்க வேண்டும் என்ற ஆணையையும் உச்ச நீதிமன்றத்தில் பெற வேண்டும்.

நடுவண் நீர்வளத்துறைத் தலைவரின் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைத்து, அது தண்ணீரைத் திறந்து மூடும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ள கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது! 06.09.2018 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, தகுந்த வழக்கறிஞர்களை வைத்து, கேரளத்தின் சதித்திட்டங்களை முறியடிக்க தமிழ்நாடு அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT