உடனடிச்செய்திகள்

Wednesday, September 9, 2020

” தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா?” - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


”தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில்
 சமற்கிருதம் படிக்க ஊக்கத் தொகையா? 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. அதில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், சமற்கிருதம் படிக்க இந்திய அரசு உதவித்தொகை தருவதாகவும், அவ்வாறு விரும்பும், தகுதியுள்ள மாணவர் பட்டியலை எடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்ப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய படிவத்தில் (form 1, form 2) நிரப்பி 10.09.2020 மாலை 5 மணிக்குள் கையொப்பமிட்ட நகலினை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

மோடி அரசு இந்தியை மட்டுமின்றி சமற்கிருதத்தையும் சேர்த்தே தமிழ்நாட்டில் திணிக்கிறது என்பதற்கு மேற்கண்ட கடிதம் மற்றுமொறு சான்று. இந்தி மற்றும் சமற்கிருத மொழிகளை விரும்பினால் படிக்கலாம் என்று போலியாக சொல்லிக்கொண்டு, இந்தியைக் கட்டாயமாகவும், சமற்கிருதத்தைப் பணத்தாசை காட்டியும் திணிக்கிறது. இச்செயல் தமிழை, தமிழ்நாட்டின் கல்வியில் இருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் தொலைநோக்குத் திட்டம் கொண்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான செயல்பாடாகும்.

அத்துடன் இந்தி சமற்கிருதம் இரண்டையும் திணிபதன் மூலம் தமிழ்நாட்டுக் கல்வியை ஆரியமயப் படுத்தும் உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.

தனது அரசின் இருமொழித் திட்டத்திற்குக் குழி தோண்டும் சமற்கிருதத் திணிப்பை ஆதரித்துத் தனது அதிகாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு இருமொழிக் கொள்கையை உண்மையாகவும் உறுதியாகவும் பின்பற்றுகிறது என்றால் உடனடியாக சமற்கிருத திணிப்பு சுற்றறிக்கையை இரத்து செய்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கதின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT