உடனடிச்செய்திகள்

Monday, April 19, 2021

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்துத் தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு - தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!



தமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்துத் தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத்திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! 

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் கோரிக்கையாக இருந்து வந்தது. அண்ணல் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரசுக் கட்சிக் கோரிக்கையாகவும் அது அப்போது இருந்தது. 

இதற்கு முன்னோட்டமாகத்தான், சென்னை மாகாணமாக இருந்த காலத்திலேயே 1920களில் காங்கிரசுக் கமிட்டி, மொழிவழி தேசிய இன அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி என்று சீரமைக்கப்பட்டது. 

“மாநிலம்” என்பது வெறும் நிர்வாக அலகு (Administrative Unit) அல்ல – ஆட்சிப்பகுதி (Teritory) அல்ல என்பதை அப்போதே காந்தியடிகள் தெளிவுபடுத்தினார். மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப் படும் என்று இரண்டாம் உலகப்போர் காலத்திலேயே காங்கிரசுத் தலைமை உறுதி கூறியது. ஆயினும், சுதந்திரத்திற்குப் பின்னால் அந்த வாக்குறுதியை மீறியதால், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்டு பல்வேறு தேசிய இனப் பகுதிகளில் கடும் போராட்டங்கள் எழுந்தன. அவற்றின் விளைவாக மாநிலச் சீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. 

இந்த மாநிலச் சீரமைப்புக் குழு மாநிலத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கோட்பாடு வளப் பகிர்வா, வளர்ச்சிப் பகிர்வா, மொழிவழி தேசிய இனத் தாயக ஏற்பா என்பது குறித்தெல்லாம் விவாதித்து, மொழிவழி தேசிய இனத் தாயகம் என்பதுதான் மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு அடிப்படைக் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதடினடிப்படையில் மாநிலங்களை உருவாக்கப் பரிந்துரைத்தது. 

அதனடிப்படையிலேயே 1956 நவம்பர் 1 அன்று மொழிவழி தேசிய இன மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டது; பல்வேறு மாநிலங்களும் உருவாக்கப்பட்டன. 

அன்றைக்கே கூட ஆர்.எஸ்.எஸ்.சும், அன்றைய இந்து மகா சபையும் மொழிவழி மாநிலங்கள் கூடாது, இந்தியா முழுவதையும் “ஜன்பத்” என்ற பெயரால் பல்வேறு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது.
ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தைத்தான் தன்னுடைய சொற்களில் மருத்துவர் இராமதாசு கூறுகிறார். 

அவ்வாறு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தீர்க்கப்படாத மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்த பல்வேறு மொழிவழி தேசிய இனங்களும், இனக்குழு மக்களும் தங்களுடைய தாயகம் தனி மாநிலமாக ஏற்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். 

தமிழ்நாட்டை மூன்றாகக் கூறுபோடலாம் என்ற தனது கோரிக்கைக்கு ஆதாரவாக மருத்துவர் இராமதாசு முன்வைப்பதெல்லாம் இவ்வாறான மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் இனக்குழு மக்களின் கோரிக்கைகள்தான்! 

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்தில் ஆவத்பிரதேசம், புந்தல்கண்ட் போன்ற கோரிக்கைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். அவத்தி மொழி, அந்த மொழி பயிலும் மக்களின் தாயகம் ஆகியவை தனித்தன்மையானவை. அந்த அவத்தி மொழியை இந்தி மொழி என்று கபளீகரம் செய்து, உத்திரப்பிரதேசத்தில் இணைத்தபோது அவத்தி மொழி பேசும் சற்றொப்ப நான்கரை கோடி மக்கள் தங்களுடைய மொழித் தாயகம் “ஆவத்பிரதேசம்” எனத் தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரினர். இன்றும் கோரி வருகின்றனர். இந்தி மொழி இராமாயணம் என்று சொல்லப்படும் துளசிதாசர் இராமாயணமே் அவத்தி மொழியில் எழுதப்பட்டதாகும். அது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டதால், அதை இந்தி என்று சொல்லி விழுங்கிவிட்டார்கள் என்பது அம்மக்களின் ஆவேசக் குரலாக இருக்கிறது. 

அதேபோல், புந்தல்காண்ட் என்பது உத்திரப்பிரதேசத்தில் ஆறு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் ஏழு மாவட்டங்கள் அடங்கிய தனித்த இனக்குழு மக்களின் தாயகமாகும். மாநிலச் சீரமைப்பு நடந்த காலத்திலேயே புந்தல்காண்ட் தனி மாநிலமாக உருவாக்குவது பற்றி பரிவோடு பரிசீலிக்கலாம் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களே கூறியிருக்கிறார். 

அதேபோல், பீகாரில் மைதிலி மொழி பேசக்கூடிய சற்றொப்ப 3 கோடியே 80 இலட்சம் மக்கள் தங்களுக்கு மிதிலை மாநிலம் தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள். போஜ்புரி மொழி பேசும் சற்றொப்ப 5 கோடி மக்கள், தங்கள் மொழிக்கு அங்கீகாரத்தையும், தங்கள் தேசிய இனத்திற்குரிய போஜ்புரி மாநிலத்தையும் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். போஜ்புரி மொழிக்கு சாகித்திய அகாதெமியில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, அவர்களுடைய தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த சிறிய வெற்றியாகும்! 

மருத்துவர் இராமதாசு கூறும் போடோலோந்து கோரிக்கையும் இவ்வாறு இனத்தாயகம் சார்ந்த கோரிக்கையாகும். போடோலாந்து மக்கள் தனிநாடு கோரி போராடி, அது கிடைக்கவில்லை என்ற நிலையில், அசாமிலிருந்து தனி போடோலாந்து மாநிலம் வேண்டுமென்று போராடு கிறார்கள். 

ஏற்கெனவே மருத்துவர் இராமதாசு கூறும் சார்க்கண்ட், உத்தரகண்ட், சத்தீசுகார் ஆகிய மாநில உருவாக்கங்களும் தனித்த பண்பாடு – வரலாறு கொண்ட இனக்குழு மக்களின் தாயக ஏற்பாகும். அதுபோல், தெலங்கானாவும் தனித்த மொழி உச்சரிப்பும், பண்பாடும், வரலாறும் கொண்ட அம்மக்களின் தொடர் போராட்டத்தால் உருவானதாகும். 

இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்கள் எடுத்துக்காட்டியுள்ள அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் மொழிவழி தேசிய இனங்கள் – இனக்குழுக்கள் தாயகம் படைப்பதற்குத்தான் எடுத்துக்காட்டுகளே தவிர, தாயகத்தைக் கூறுபோடுவதற்கான எடுத்துக்காட்டுகள் அல்ல! 

அவர் கூறுவதுபோல் தமிழர் தாயகமான தமிழ்நாட்டைக் கூறுபோட்டுத் தனித்தனி மாநிலம் ஆக்கினால், வரலாற்றவர்களாக – தாயகம் அற்றவர்களாக தமிழர்கள் மாற்றப்படுவார்கள். அவ்வாறு கூறுபோடப்படும் மூன்று மாநிலங்களிலுமே மிக விரைவில் தமிழர்கள் சிறுபான்மை யினராக மாறிப் போவார்கள். இந்திக்காரர்களும், மார்வாடிகளும், பிற மாநிலத்தவரும் ஆதிக்கம் செய்யும் ஆட்சிப்பகுதியில் உரிமையற்ற கொத்தடிமைகளாக அனைத்துச் சாதி தமிழர்களும் ஒடுக்கப்படுவார்கள். 

மதத்தைக் காட்டி காசுமீரிகளின் வரலாற்றுத் தாயகமான சம்மு காசுமீரை இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதியாக மோடி அரசு சிதைத்தது. மருத்துவர் இராமதாசு, சாதியை முதன்மைக் காரணியாகக் கொண்டு, தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தை மூன்றாகக் கூறுபோடுவதற்கு வழி ஏற்படுத்த முயல்கிறார். இதற்கு நிர்வாகச் சீரமைப்பு, வளர்ச்சிப் பங்கீடு என்று பட்டாடைப் போர்த்தப் பார்க்கிறார். 

மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் என்ற நிலையில் இருக்கும்வரை தான் அந்தந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தவாவது முடியும். அது இல்லையென்றால், பா.ச.க.வின் ஒற்றை இந்தியா என்ற டாங்கிகளின் பல் சக்கரத்தில் சிக்கி தமிழ்நாடு அழிந்து போகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! 

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென்ற மருத்துவர் இராமதாசு அவர்களின் தமிழினப் பகைக் கருத்துக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    
    

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT