உச்ச நீதிமன்றத்தின் உயரம் குறைகிறதா?
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக ஆந்திரத்தைச் சேர்ந்த என்.வி. இரமணா 24.04.2021 அன்று பதவி ஏற்றுள்ளார். 47ஆவது தலைமை நீதிபதியாக இருந்த சரத் ஏ. பொப்டே கடந்த 23.04.2021 அன்று பணி ஓய்வு பெற்றார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26இல் செயலுக்கு வந்த போதே அது முழுமையான ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பையோ, முழுமையான மதச்சார்பின்மையையோ கொண்டிருக்கவில்லை. முழுக்க முழுக்க மக்கள் உரிமை, சமத்துவப் பொருளியல் சார்ந்ததோ இல்லை. ஆனால் அதற்குள் நின்று கொண்டு அதனை மேம்படுத்தியவர்கள் வழக்கறிஞர்கள் சிலரும் நீதிபதிகள் சிலரும் ஆவர். அவர்கள் மக்களுக்குப் பெரும் கடமை ஆற்றியுள்ளார்கள்.
அரசமைப்புச் சட்டத்திற்கு முற்போக்கான விளக்கவுரைகள் வழங்கி அதை வளர்த்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பாராட்டிற்குரியவர்கள். 1970களிலும் அதற்குப் பின்னரும் இருந்த நீதிபதிகளில் சிலர் பெயர் என் நினைவில் நிற்கிறது. தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி, நீதிபதி வி.ஆர். கிருஷ்ணயர், நீதிபதி எச்.ஆர். கண்ணா, நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி இப்படி இன்னும் சிலர்.
வழக்கறிஞர்களில் நானி பால்கிவாலா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியவர். இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமைக்கும் நான்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கின்றன. இந்த நான்கு தூண்களில் தான் அரசமைப்புச் சட்டம் நிற்கிறது. இவற்றை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற வாதத்தை ஒரு வழக்கில் நானி பால்கிவாலா முன்வைத்தார். இதனாலேயே இவ்வழக்கு புகழ் பெற்றது. கேசவானந்த பாரதி ஸ்ரீபாதகல்வாரு எதிர் கேரள அரசு (1973) என்ற வழக்கே அவ்வழக்கு!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி தலைமையில் மொத்தம் 13 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அரசமைப்பு ஆயம் அவ்வழக்கை விசாரித்தது. கேரளத்தில் ஒரு மடத்தின் தலைவரான கேசவானந்த பாரதிக்காக மூத்த வழக்கறிஞர் நானி பால்கிவாலா வாதாடினார்.
தீர்ப்பு வெளிவந்தது; பதின்மூன்று நீதிபதிகளில் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி உட்பட ஏழு நீதிபதிகள் பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கினர். ஆறு நீதிபதிகள் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தனர். அந்த ஏழு நீதிபதிகளும் நானி பால்கிவாலா முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளாக உள்ள நான்கு கூறுகளை மாற்றிட, திருத்திட நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கினர். அந்த நீதிபதிகள் பால்கி வாலாவைப் பாராட்டினர். ஆட்சியாளர்கள் தங்களுக்குள்ள நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பறித்து, புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டுவராமல் தடுக்கும் நோக்கம் கொண்டது பால்கி வாலாவும் ஏழு நீதிபதிகளும் கொண்டு வந்த அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானக் கோட்பாடு!
உச்ச நீதிமன்றத்தின் அக்காலத் தரத்திற்கு இப்போதுள்ள நிலையை ஒப்பிட முடியுமா? பணி ஓய்வு பெறும் நீதிபதி பொப்டேயையும் பதவி ஏற்கும் என்.வி. இரமணாவையும் ஒப்பிட முடியுமா?
சம்மு காசுமீருக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 வழங்கிய சிறப்புரிமையை 2019இல் நீக்கி, அதன் மாநிலத் தகுதியையும் அழித்து, இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது மோடி ஆட்சி. இந்த அநீதியை எதிர்த்தும் மேற்படி திருத்தத்தை செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களையும் தொண்டர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் 100 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதையத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் அப்படியே காலவரம்பின்றிக் கிடப்பில் போட்டார். அதேவேளை, இரபேல் போர் வானூர்தி ஊழல் வழக்கிலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் பா.ச.க. ஆட்சியினர்க்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கினார். பணி ஓய்வு பெற்ற உடனேயே பா.ச.க.வினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டார் ரஞ்சன் கோகோய்!
அடுத்துத் தலைமை நீதிபதியான சரத் ஏ.பொப்டே சம்மு காசுமீர் கலைப்புத் தொடர்பான 100 மனுக்களையும் அவர் பதவிக்காலமான 18 மாதமும் விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, ஓய்வு பெற்றுள்ளார். அதேபோல் மிக மோசமான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டுப் பணி ஓய்வு பெற்றுள்ளார் பொப்டே!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் எவ்வளவு பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடந்தன! தில்லியில் ஆரியத்துவா பயங்கரவாதிகளால் பலர் கொலை செய்யப்பட்டனர். தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் முதலியவற்றில் காவல்துறையின் கண் முன்னே பா.ச.க.வின் வன்முறைப் பிரிவினர் உள்ளே புகுந்து மாணவர்களையும் பேராசிரியர்களையும் தாக்கினர். இந்தியாவே மாதக்கணக்கில் கொந்தளிப்பில் போராடிக் கொண்டிருந்தது. ஆனால் தலைமை நீதிபதி பொப்டே, CAA தொடர்பான மனுக்களைக் கடைசி வரை விசாரணைக்கு எடுக்கவே இல்லை!
மியான்மரில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு, புத்த மதவெறியர்களால் ரோகிங்கியா முசுலிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உயிர் காக்க எல்லையோர நாடான இந்தியாவுக்குள் ஓடி வந்தார்கள் ரோகிங்கியா மக்கள். அவர்களை அனுமதிக்க மறுத்து - திருப்பி விரட்டியது பா.ச.க ஆட்சி! அந்த மனிதநேயமற்றச் செயலை தடுக்கக் கோரி பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி பொப்டே கடைசி வரை விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டார்.
ரோகிங்கியா ஏதிலியரைச் சிறைப் பிடிக்க தடுக்கக் கோரிய அவசர மனுவைத் தள்ளுபடி செய்தார் பொப்டே!
பெருங்குழும நிறுவனங்கள் தேர்தல் காலத்தில் கட்சிகளுக்குக் கொடுக்கும் நிதிப் பத்திரங்கள் (Electoral Bonds) மற்றும் நிதியளிப்புப் பற்றி வெளியே தெரிவிக்க வேண்டியதில்லை, கணக்கும் காட்டவேண்டியதில்லை என்று பா.ச.க ஆட்சி கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் – பெரியோர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்கள். அம்மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் காலம் கடத்தி பின்னர், அம்மனுக்களைத் தள்ளுபடி செய்தது பொப்டே தலைமையிலான உச்ச நீதிமன்றம்.
பொப்டே போய்விட்டார்; புதிய தலைமை நீதிபதியாக என்.வி. இரமணா வந்துள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து கொண்டு அந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆந்திர உயர் நீதிமன்றத்தை ஆந்திர முதலமைச்சர் செகன் மோகன் ரெட்டிக்கு எதிராகச் செயல்பட வைத்துள்ளார்.
ஆந்திரத்தின் முதலமைச்சராக இருந்தபோது சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கான புதிய தலைநகரமாக அமராவதியை உருவாக்குகிறார். அதில் ஏராளமான ஊழல்கள் என்று பின்னர் வந்த முதல்வர் செகன்மோகன் கூறுகிறார். அரசின் சிறப்புக் காவல் படை சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்கிறது. அவ்வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தின் மூலம் முடக்குகிறார் என்.வி. இரமணா. இவர் மாணவப் பருவத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
ஆந்திர உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேசுவரி 2019 செப்டம்பர் 15 அன்று அவசரம் அவசரமாக இரவில் உயர் நீதிமன்றத்தைக் கூட்டி சந்திரபாபு நாயுடு மேல் சிறப்புக் காவல்படை பதிவு செய்த வழக்கைப் பற்றிய தகவலை எந்த ஊடகமும் சமூக வலைத்தளங்களும் வெளியிடக்கூடாது என்று ஆணை இடுகிறார்.
அடுத்து சந்திரபாபு நாயுடு மீது பதியப்பட்ட ஊழல் வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையையும், அவ்வழக்கிற்குப் பரிந்துரைத்த அமைச்சரவைத் துணைக்குழுவின் அறிக்கையையும் இரத்துச் செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இருவர் வழக்குத் தொடுக்கின்றனர். அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சோமயாசுலு, சந்திரபாபு நாயுடு மீதான சிறப்புக் காவல் படையின் முதல் தகவல் அறிக்கைக்கும் (FIR) அமைச்சரவைத் துணைக்குழுவின் பரிந்துரை அறிக்கைக்கும் இடைக்காலத் தடை விதிக்கிறார்.
ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்தத் தடையை எதிர்த்து, ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. நான்கு வாரங்களைக் கடந்தும் உச்ச நீதிமன்றம் இந்த மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2020 அக்டோபர் 1ஆம் நாள் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு “ஆந்திரத்தில் அரசமைப்புச் சட்டம் சீர்குலைந்து இருக்கிறது; இது தொடர்பாக ஆணை இடப்படும், எனவே அடுத்த விசாரணைக்கு ஆந்திர அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) இந்நீதிமன்றம் வரவேண்டும்” என்று ஆணை இட்டது.
அப்போது விழித்துகொண்ட செகன் மோகன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொப்டே அவர்களுக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். ஊடகங்களிலும் அதை வரச் செய்தார்.
இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 356 ஐப் பயன்படுத்தி, செகன்மோகன் ஆட்சியைக் கலைக்க ஆணையிடும் அளவிற்கு ஆந்திர உயர் நீதிமன்றம் செல்வதற்கு – அதனை இயக்கியவர் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. இரமணா என்பது செகன்மோகன் கடிதம் மூலம் வெட்ட வெளிச்சமானது. அதன் பிறகு உச்ச நீதிமன்றமும் என்.வி. இரமணா முயற்சிகளைக் கட்டுப்படுத்தியதாக நம்பலாம்.
இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த காலங்களில் அடைந்திருந்த உயரம் அதிகம். ஆனால் அண்மைக் காலமாக அதற்கேற்பட்ட சரிவுகள் – அதன் மதிப்பைக் குறைந்தன என்று பார்க்கக் கூடாது; மக்களின் சனநாயக உரிமைகள், மாநில உரிமைகள் முதலியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றே பார்க்க வேண்டும்.
நீதிபதிகள் தேர்வில் சமூக நீதி
----------------------------------------
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சாதிப் பன்மையும் மதப் பன்மையும் சமூகச் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவில் அடிப்படை அரசு ஊழியரிலிருந்து அதிகாரி வரை இட ஒதுக்கீடு செயல்படுகிறது. அது தேவை! மாவட்ட நீதிபதி வரை இட ஒதுக்கீடு செயல்படுகிறது. ஆனால் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் தேர்வுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது முரண்பாடான விதியாகும்.
உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34. இதில் இப்பொழுது 27 பேர் பணியில் இருக்கிறார்கள். ஏழு இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த 27 நீதிபதிகளில் சற்றொப்ப 18 பேர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், கிறித்துவர் இசுலாமியர் ஒருவர் நீதிபதியாக இருக்கிறார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்; அவரும் பிராமணர்!
தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்விற்கு இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டிருந்தால் ஒடுக்கப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இன்னும் கூடுதல் நீதிபதிகள் கிடைத்திருப்பர். பெரும்பாலும் ஒருவர் சமூகத்தில் வசிக்கும் படிநிலை அவர் கருத்துகளில் வெளிப்படும். முழுமையாக இல்லை என்றாலும் ஓரளவாவது வெளிப்படும். வழக்குகளை அணுகும்போது சமூக அமைப்புத் தேவைகள் – நீதிகள் அவர்கள் உளவியலில் செயல்பட வாய்ப்பளிக்கும். எனவே, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
பணி ஓய்விற்குப் பிறகு அரசு, தனியார்
வேலைக்கு போகத் தடை வேண்டும்!
-----------------------------------------------------
இந்தியாவில் நீதித்துறை தற்சார்பானது. நீதிபதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. மாவட்ட நீதிபதி வரை உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மீது அந்தந்த மாநில உயர் நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க முடியாது.
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி – அதன் வழியாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
அவ்வாறான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கு மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அவையில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதில் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு நடவடிக்கை எடுப்பது மிக மிக அரிது.
ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் கட்டுப்படாமல் தற்சார்பாக, தன்னாட்சி உரிமையுடன் நீதித்துறை செயல்படவேண்டியது. மிக மிகத் தேவை. அதற்காகவே நீதித்துறைக்கு இவ்வாறான தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதிலும் ஆளுங்கட்சியின் அடியொற்றிச் செல்லும் போக்குகள் இருந்ததை இக்கட்டுரையின் முற்பகுதியில் பார்த்தோம்.
நீதிபதிகள் நீதி தவறும் போது, நீதி காக்கும் தனி நபரின் சட்ட வழிப்பட்ட தலையீடுகள், மக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி முதலியவையே நீதித்துறையை சரியான தடத்தில் செல்ல வைக்கும்.
நீதித்துறை தற்சார்புடன் – நீதியின் பக்கம் நின்று செயல்படுவதற்கு மேலும் ஒரு நிபந்தனையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறது.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப்பின் வேறு எந்தத் தனியார் பணிக்கும் அரசுப் பணிக்கும் போகத் தடை விதிக்க வேண்டும். அவர்களை எந்த விசாரணை ஆணையத்திற்கும் தலைவராகப் போடத் தடைவிதிக்க வேண்டும். நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிடத் தடை விதிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் ஈடுகட்டும் வகையில் அவர்களின் ஓய்வு அகவையைச் சற்றுக் கூடுதலாக்கலாம். சம்பளம், ஓய்வுதியம் ஆகியவற்றைத் தனிவகைப் படுத்திக் கூடுதலாக்கலாம். இவ்வாறான திறனாய்வுகளையும் மாற்றுத் திட்டங்களையும் இத்தருணத்தில் சிந்திப்போம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment