Friday, March 21, 2008
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
Saturday, March 8, 2008
மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம் - பெ.மணியரசன்
பன்னாட்டு முதலாளிகளின் கொற்றம்
தொகை ஒதுக்காமலேயே அறுபதாயிரம் கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் போல் ஆகிவிடக்கூடாது. இரண்டு எக்டேர் (5 ஏக்கர் கூட அல்ல. அதற்கும் கீழே) வரை நிலம் கொண்டுள்ள சிறு, குறு உழவர்களின் கடன்கள் தான் தள்ளுபடி செய்யப்படும் என்கிறார். மெய்யான துயர் தணிப்பு, எல்லா உழவர் கடனையும் தள்ளுபடி செய்வதாகும். மராட்டியத்தில் விதர்பா பகுதியில் தான் அதிக எண்ணிக்கையில் பருத்தி உழவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்கள். விதர்பா ஜன அந்தோலன் என்ற அமைப்பின் தலைவர் கிசோர் திவாரி, உழவர் தற்கொலை மிகுந்துள்ள ஆறு விதர்பா மாவட்டங்களில் இக்கடன் தள்ளுபடி பயன் அளிக்காது. சாதாரணமாக, ஆறு அல்லது ஏழு ஏக்கர் நிலம் உள்ளவர்கள் அங்கு மிகுதி என்கிறார். இரண்டு எக்கேருக்கு மேல் நிலம் உள்ள உழவர்கள் கடனில் அசல் வட்டி இரண்டையும் சேர்த்து 75 விழுக்காடு செலுத்தினால் 25 விழுக்காடு தள்ளுபடி ஆகும் என்கிறார். வட்டியைக்கூட தள்ளுபடி செய்யாத இந்த ஏற்பாடு வசூல் தந்திரம் தவிர வேறு அல்ல. ஒரே நேரத்தில் கடன் தீர்க்கும் திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் ஏற்கெனவே இவ்வாறான சலுகைகள் வழங்கி வருகின்றன. உழவர் உற்பத்திப் பொருட்களுக்கு இலாபவிலை கிடைக்கவும், சந்தை வாய்ப்பு பெருகவும் எந்த ஏற்பாட்டையும், இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. அது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் நம் தாயாகிய விலைநிலங்களை, பூச்சி மருந்து உரம் வேதிப்பொருட்களால் நஞ்சாக்கி, மலடாக்கிவிட்டனர். மான்சாண்டோ போன்ற உயிர் கொல்லி நிறுவனங்கள் மரபீனி மாற்று விதைகளைக் கொண்டு வந்து, மரபுவழிப்பட்ட விதைகளை அழித்து, நீடித்து விளைச்சல் தராத புதிய விதைகளைக் கொடுத்து, உழவர்களை ஓட்டாண்டி ஆக்கிவிட்டனர். இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை கிடைக்கவும் துரும்பைக் கூட அசைக்கவில்லை. சோனியா –
மன்மோகன் புகழ்ந்து தள்ளும் சிதம்பரம் வரவு செலவுத் திட்டம் இது.
சிறப்புப் பொருளியல் மண்டலங்களுக்காக, விளை நிலங்களை அபகரித்து, கிராமங்களைக் காலி செய்யும் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த எந்த முன்மொழிவையும் இத்திட்டம் கூறவில்லை. நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடைந்து வருவதாகப் போலித் தோற்றம் காட்டி வந்த மன்மோகன்- ப.சிதம்பரம் வாய்வீச்சு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அம்மணமாக அம்பலமாகிவிட்டது. இந்த ஆண்டு செலவில், மிக அதிக விகிதத்தைப் பெற்றிருப்பது நடுவண் அரசின் திட்டங்களோ மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரிப் பங்குத்தொகைகளோ அல்ல. நடுவண் அரசு கட்ட வேண்டிய வட்டித் தொகை தான் அது! மொத்தச் செலவில் 21 விழுக்காடு வட்டி செலுத்த மட்டுமே போகிறது. அசலைக் கட்டுவதற்கான அறிகுறி தொடுவானத்திற்கப்பால் கூட தெரியவில்லை. அத்துடன் புதுக்கடன் இவ்வாண்டு ஏராளமாகத் திரட்டப்போகிறார்கள். மொத்த வரவில் 14 விழுக்காடு கடன் வாங்குவதன் மூலம் வரும் தொகையாகும். ஆனால் உண்மையில் 14 விழுக்காட்டிற்கும் மேல் பல்லாயிரம் கோடி கடன் வாங்க உள்ளார். கடன் என்று சொல்லாமல் "சந்தை நிலை நிறுத்தல் திட்டம்" (Market stabilisation Scheme) என்று அக்கடன் வரவுக்குப்
புதுப்பெயர் சூட்டியுள்ளார்.
இந்திட்டத்தின்படி ரூ.13,958 கோடி கடன் திரட்டுகிறார். இஃதன்னியில் எண்ணெய் நிறுவனக்கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5519 கோடியும், உணவுக்கழக கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1319 கோடியும் திரட்டுவது வேறு. இவையனைத்தும் கடன் வரவில் காட்டப்படவில்லை ஓட்டு மொத்த நிதிப்பற்றாக்குறை என்று அவர் கணக்குக் காட்டியிருப்பது ரூ.1,33,287 கோடியாகும். உண்மையான பற்றாக்குறை இதைவிடக் கூடுதலாகும். வேளாண்கடன் தள்ளுபடிக்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்படாததால், அத்தொகைiயும் பற்றாக்குறையில் சேர்க்க வேண்டும். அதே போல் நடுவண் அரசு ஊழியர் 6வது சம்பளக் குழு பரிந்துரைப்படி தரவேண்டிய ஊதிய உயர்வு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு செலவு திட்டத்தில் காட்டப்படவில்லை. இவ்விரு தொகைகளையும் சேர்த்தால் ரூ.90,0000 கோடி ரூபாய் பற்றாக்குறை வருகிறது. அதாவது கண்ணுக்குத் தெரிந்த பற்றாக்குறை ரூ.1,33,2887 + ரூ.90,000 = ரூ.2,23,287 கோடி. இவ்வளவு பற்றாக்குறையையும் எப்படி ஈடுகட்டப் போகிறார்கள். கடன்வாங்கியும், அரசுத்துறை உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியும், புதுவரிகளைக் கண்டுபிடித்தும், வரி உயர்வு செய்தும்,
கணக்கை மீறி ரூபாய்த் தாள்களை அச்சிட்டும் தான் ஈடுகட்டப் போகிறாhர்கள். விலை உயர்வு, பணவீக்கம், பொருளியல் மந்த நிலை என்பவை தான் இதனால் உண்டாகும்.
மருத்துவ நலத்திட்டங்களுக்கு கடந்த ஆண்ட விட 15 விழுக்காடு நிதி அதிகமாக
ஒதுக்கிவிட்டதாக ப.சிதம்பரம் தம்பட்டம் அடிக்கிறார். தனியார் மருத்துவமனைகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் தனியார் பன்முகச்சிறப்பு மருத்துவமனைகளுக்கு (Mutlti speciality Hospitals) ஐந்தாண்டுகளுக்கு வரி ஏதும் கிடையாது. இவை உண்மையில் மையக்கிராமப் பகுதிகளில் அமையாது. மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் மருத்துவமனையை
நிறுவிக்கொண்டு, வரிவிலக்குப் பெறுவார்கள். அவ்வாறான மருத்துவமனைகள் ஏற்கனவே நோயாளிகளைக் கொள்ளையடிப்பது நாடறிந்த உண்மை.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில், நட்சத்திரவிடுதிகள் கட்டும், முதலாளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதே கிராமப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ள ஏழை உழவனுக்கு வட்டித் தள்ளுபடி செய்யக்கூட மறுக்கிறார். கிராமப்புறங்களில் மருத்துவமனை, நட்சத்திர விடுதி என்று இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் மனைத்தொழில் இறக்கை கட்டிப்பறக்கப் போகிறது. 2007 சனவரி முதல் மனைத் தொழிலில் (Real Estate) நூற்றுக்கு நூறு வெளிநாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தில் 2003-04 இல் 4.5
விழுக்காடாக இருந்த மனைத்தொழில் மூலதனம் 2006-2007-இல் 26 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற விவரம், அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும். தங்கள் தாய் மண்ணை இழந்து, நாடோடிகளாக நம்மக்கள் மாறுவர். மனைத்தொழிலில் ஒரு சில ஆண்டுகளில் 130 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.(செமினார் ஆங்கில இதழ், 2008 பிப்ரவரி - ஸ்ரீவத்சவா, பக்கம் 60) மார்க்கன் ஸ்டேன்லி, ப்ளாக் ஸ்டோன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை கடந்த சில
மாதங்களில் இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளன.(ASSOCHAM அறிக்கை -2007)
இந்த வரவு – செலவுத்திட்டத்தில் சிறுகார், இருசக்கர தானியங்கி வாகனங்கள் ஆகியவற்றிகு 4% வரி குறைக்கப்பட்டுள்ளது. சிங்கூர் டாட்டா சிறுகார் உற்பத்திக்கு ஒரு விழுக்காடு வட்டியில் கடன் தருகிறார்கள். பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டு வரிவதிப்பில்லை என்று விலக்கு அளித்துள்ளார்கள். உழவர்களிடம் 7 விழுக்காடு வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. படைத்துறைக்கான செலவு 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. ரூ 1,05,600 கோடியை ஒதுக்கியுள்ளார். கடந்த ஆண்டு (2007-2008) ஒதுக்கிய ரூ. 96,000 கோடியில் ரூ.4,217 கோடி செலவு செய்யப்படாமலேயே உள்ளது. அந்த நிலையில், இவ்வாண்டு இன்னும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானவரி, மதிப்புக் கூட்டு வரி, உற்பத்தி வரி ஆகியவற்றில் சில இனங்களில் வரியைக்
குறைத்துள்ளார். அதே வேளை கம்பெனி வருமானவரியைக் (Corporate Tax) குறைக்கவே இல்லை. காரணம், முன்னவை மாநிலங்களுக்கும் பங்கு கொடுக்கப்படவேண்டியவை. கம்பெனி வருமானவரி, அதற்கென துணை வரி ஆகியவற்றில் மாநிலஙக்ளுக்கு எந்தப் பங்குத்தொகையும் கிடையாது. மொத்த வரி வருமானத்தில் கம்பெனி வருமானவரி தான் மிக அதிக விகிதம் கொண்டது. அது 24 விழுக்காடாகும். மாநிலங்கள் மேலும் மேலும் இந்திய அரசை நோக்கி பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே
வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு வரிப்பங்கீட்டில் கூடுதல் தொகை ஒதுக்குவதுடன், கம்பெனி வருமானவரியில் குறைந்தது 50 விழுக்காடாவது ஒதுக்க வேண்டும். நேரடியான மக்கள் நலத்திட்டங்களான, கல்வி, நலத்துறை, வேளாண்துறை, சாலை வசதி போன்றவற்றை செயல்படுத்துபவை மாநிலங்களே.
பொருளியல் வளர்ச்சி (GDP) நடப்பாண்டில் (2007-2008) 10 விழுக்காடு வரும் என்று
கூறிக்கொண்டிருந்தனர் மன்மோகனும் சிதம்பரமும். அது கடந்த ஆண்டை விடவும் குறைந்து 8.7 விழுக்காடு தான் வந்துள்ளது. இதில், வேளாண் உற்பத்தியின் பங்களிப்பு வெறும் 2.6 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டு (2007-2008) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 9.4. சுருக்கமாகச் சொன்னால் திரு ப.சிதம்பரம் முன்வைத்துள்ளது மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத் திட்டம். பன்னாட்டு முதலாளிகளுக்கான திட்டம் இது. இந்தியப் பெருளாதாரதத்தை மேலும் திவாலாக்கும். இந்த வரவு செலவுத் திட்டத்தை தேர்தல் கண்ணோட்டத்துடன் போடப்பட்ட திட்டம் என்று எதிர்க்கட்சிகள் திறனாய்வு செய்தது காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக பாராட்டும் செயலாகவே அமையும். வாக்கு வாங்கும் நோக்கில் மக்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக பொருள் படும். ஆனால் இது முழுக்க முழுக்க மக்கள் விரோத வரவு செலவுத் திட்டம்.
அனைத்துக்கட்சிகளும் இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து முறியடிக்க வேண்டும். புதிய மாற்றுத் திட்டத்திற்கு முன்மொழிவுகள் வைக்க வேண்டும்.
Friday, February 22, 2008
சென்னை உண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம்
அராஜகம் செய்த காவல் ஆய்வாளரைப் பாதுகாக்க
மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோதச் செயல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
தமிழக அரசின் ஆங்கில ஆதரவு – தமிழ்ப் புறக்கணிப்புப் போக்கைக் கண்டிக்கும் வகையில், முறைப்படி விளம்பரம் செய்து, அறிக்கை கொடுத்து அறிவித்துவிட்டு 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.,.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ, பயணிகளுக்கு ,டையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு ,டதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையினர்; மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ,துவரை நடவடிக்கை ,ல்லை.
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை ,டைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடைத்துவதற்கு அனுமதி கோரும் மனு 4-02-2008 அன்று கொடுக்கப்பட்டது. அவ்வுண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து மாநகரக் காவல்துறை ஆணையர் திரு. நாஞ்சில் குமரன் அவர்கள் 21-02-2008 அன்று பிற்பகல் கடிதம் கொடுத்துள்ளார்.
மாநகரக் காவல் ஆணையரின் இம்மறுப்பு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. முதலில் நாங்கள் 19-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் கொடுத்தோம். அதற்கு மாநகர ஒற்றுப்பிரிவு உயர் அதிகாரி திரு. ,ளங்கோ அவர்கள் 22-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் வைத்துக் கொள்ளுமாறு வாய்மொழி ஒப்புதல் கொடுத்து, தேதி மாற்றி மனு கொடுக்க சொன்னார். அதே போல தேதி மாற்றி மனு கொடுத்தோம். அவரை அவ்வப்போது அணுகி உண்ணாப் போராட்டத்திற்கான அனுமதிக் கடிதம் கேட்ட போது விரைவில் தருவோம் என்று கூறிவந்தார்.
அதை நம்பி உண்ணாப் போராட்டத்திற்கான விளம்;பரச் செலவுகள் உட்பட அனைத்துச் செலவுகளும் செய்து முடிக்கப்பட்டன. தமிழகமெங்கும் இருந்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு வாடகை வாகனங்களில் வர எமது இயக்கத் தோழர்கள் பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். ,ந்த நிலையில் உண்ணாப் போராட்டம் நடைபெற வேண்டிய நாளுக்கு முதல் நாள் பிற்பகல் அனுமதி மறுத்ததன் மூலம் எங்களுக்கு ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் உழைப்பும் விரையமாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி மறுப்புக்கு தடை வாங்கி உண்ணாப் போராட்டம் நடத்திட வாய்ப்பு தரக்கூடாது என்ற கெட்ட நோக்கத்துடன் மாநகரக் காவல் ஆணையர் 04-02-2008 அன்று கொடுக்கப்பட்ட அனுமதி கோரும் மனுவுக்கு 21-02-2008 அன்று மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார். அனுமதி மறுப்புக் கடிதத்தை, நிகழ்ச்சி நடக்க வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பதாகக் கொடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகும் ஆணையரின் இச்செயல்.
தன் கீழ் பணியாற்றும் கோயம்பேடு காவல் ஆய்வாளர் தேன்தமிழ்வளவனையும் மற்ற காவல்துறையினரையும் சட்டவிரோத வழிகளில் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையை அணுகி நிவராணம் தேடும் வாய்ப்பை வேண்டும் என்றே கெடுத்துள்ளார் மாநகரக் காவல் ஆணையர். இது பழிவாங்கும் செயலாகும். அமைதியான வழியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுத்துள்ள மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோத, சனநாயக விரோத செயலை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
Wednesday, February 20, 2008
சென்னையில் உண்ணாப் போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை
தோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்திய
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவல்துறையினரை
இடைநீக்கம் செய்யக் கோரி
சென்னையில் உண்ணாப் போராட்டம்
கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
தமிழக அரசு தனக்குள்ள அரசiமைப்புச் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்தாமல் ஆங்கிலத்திற்கு முன்னுரிமையும் மேலாதிக்கமும் தருகிறது.
தமிழக அரசின் ஆங்கில ஆதரவு-தமிழ்ப் புறக்கணிப்பு போக்கை; கண்டிக்கும் வகையில் 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.இ.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ பயணிகளுக்கு இடையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு இடதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை.
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடை பெறுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தோழர் தியாகு(பொதுச் செயலர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் இரா.பாவணன் (தலைவர், தமிழர் கழகம்), தோழர் நிலவன் (பொதுச் செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), கவிஞர் தமிழேந்தி (மார்க்சியப் பெரியாரியப் பொதுசுடைமைக் கட்சி) ஆகியோர் கண்டன உடையாற்றுகின்றனர். புலவர் கி.த.பச்சையப்பனார் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைக்கிறார்.
இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து அதே நாளில் தஞ்சையில் தலைமை அஞ்சலகத்தில் இந்தி எழுத்துகளை த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் அழித்த 23 பேர் கைது செய்யபட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், ஊழியர்களைக் கடமையாற்ற விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது. அவ்வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறு இவ்வுண்ணாப் போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் இவ்வுண்ணாப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Saturday, January 26, 2008
காவல்துறையினர் கொடுத்த பொய்ச் செய்திக்கு மறுப்பு
காட்டுமிராண்டித் தனமாகத் தடியடி நடத்தியதை
மூடிமறைக்க காவல்துறையினர் கொடுத்த
பொய்ச் செய்திக்கு மறுப்பு
காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தடியடியில் பாதிக்கப்பட்ட சென்னை க.பாலகுமரன் கோயம்பேட்டில் சட்டவிரோதமாக நடந்து கொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அவர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் ஆங்கில எழுத்துக்களை அழித்த த.தே.பொ.க தோழர்களை பொதுமக்களும் பேருந்து ஊழியர்களும் தாக்கியதாக சென்னை மாநகரக் காவல்துறை அதிகாரிகள் சிலர் தவறான செய்தி கொடுத்து, காவல்துறை தாக்கியதை மூடி மறைத்துள்ளார்கள். காவல்துறை கொடுத்த அச்செய்தி உண்மையல்ல.
எனவே தாங்கள் ஆங்கில எழுத்துக்களை அழித்த த.தே.பொ.க. தோழர்களைத் தடியடி நடத்தி தாக்கிப் படுகாயப்படுத்தி எலும்பு முறிவையும் ஏற்படுத்தியவர்கள் காவல்துறையினரே என்ற உண்மைச் செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Friday, January 25, 2008
காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை
இன்று(25-01-2008), 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட நாள் என்ற வகையில், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழ் மொழி காப்பதற்காக தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பு போக்கை கண்டிக்க அடையாளப் பூர்வமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் பேருந்துகளில் எழுதியுள்ள ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்தியது.
Thursday, January 10, 2008
இந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து போராட்டம்
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும்
எதிர்த்து
மொழிப்போர் நாளில்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம்
இந்தித் திணிப்பை எதிர்த்து
இடம் : தஞ்சைத் தலைமை அஞ்சலகம்
தலைமை : தோழர் பழ.இராசேந்திரன்,
தஞ்சை மாவட்ட செயலாளர், த.தே.பொ.க
ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து
இடம் : சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
தலைமை : தோழர் அ.பத்மநாபன்,
தலைமைச் செயற்குழு, த.தே.பொ.க
தமிழில் தந்தி கொடுக்க சில நகரங்களில் வசதி செய்வதாக சொன்னார்கள். தொடக்கத்திலிருந்தே அதைச் சரியாக செயல்படுத்தவில்லை. எந்திரம் பழுது என்றார்கள் அலுவலர்கள்;; தமிழில் கொடுத்தால் தந்தி தாமதமாகத்தான் போகும் என்றார்கள். இவ்வாறாகத் தமிழில் தந்தி கொடுப்பதை ஒழித்தார்கள்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாகக் கொண்டுவர, இந்திய அரசு ஆணையிடக் கோரி அரசமைப்புச் சட்ட விதி 348(2)-இன் கீழ் தமிழக அரசு தில்லிக்கு முறையான கடிதம் அனுப்பியது. அவ்வாறு தமிழை வழக்கு மொழி ஆக்க முடியாது என்று மறுத்து நடுவண் அமைச்சரவை தமிழக அரசின் கடிதத்தைத் திருப்பி அனுப்பிவிட்டது.
ஆனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக இந்தி ஏற்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு நிறுவனங்கள், இந்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தியில் தான் பெயர் சூட்டப் பெறுகின்றன. தொலைத்தொடர்புத் துறைக்கு பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) என்றும், "அனைவருக்கும் கல்வி" என்ற திட்டத்திற்கு சர்வ சிட்சா அபியான்(எஸ்.எஸ்.ஏ) என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள்.
இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்றார்கள். இந்தி படித்த தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைக்கவில்லை. மாறாக, இந்திக்காரர்கள் தாம் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல், பெட்ரோலியத்துறை போன்ற இந்திய அரசுத் துறைகளில் ஏராளமாக வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அத்துடன், தனியார் தொழில் துறை, வணிகம், தெருவோர விற்பனை போன்றவற்றிலும் இங்கு இந்திக்காரர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள். தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைக்காதது மட்டுமல்ல, வடநாட்டார் ஆதிக்கத்தால் தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளும் பறிபோகின்றன.
எனவே தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கு அடையாளமாக தஞ்சைத் தலைமை அஞ்சலகம், தொலைத் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றில் 25-1-2008 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேற்கண்ட இந்தித்திணிப்பையும், இந்திக்காரர் ஆக்கிரமிப்பையும் எதிர்க்க மறுக்கும் தமிழக அரசு தனது அதிகாரத்துக்குட்பட்ட நிறுவனங்களில் ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழைப் புறந்தள்ளுகிறது. தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் பெயர் சூட்டுகிறார்கள். அதன் பிறகு தமிழிலும் பெயர் வைக்கிறார்கள். இதனால் அலுவலர்கள் மட்டத்தில் அத்திட்டம் ஆங்கிலப் பெயராலேயே அழைக்கப்படுகின்றது. திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.
தமிழக அரசு நடத்தும் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், நிறுவனப் பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுகின்றனர். விரைவுப் பேருந்துகளில் எஸ்.இ.டி.சி என்றும், மற்ற பேருந்துகளில் டி.என்.எஸ்.டி.சி என்றும் எழுதியுள்ளார்கள். அதே போல் "அல்ட்ரா டீலக்ஸ்", "பாயிண்ட் டு பாயிண்ட்" என்று ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்கள். இப்பொழுது கணிப்பொறிகள் மூலம் நடத்துனர்கள் கொடுக்கும் பயணச்சீட்டுகள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தில், விதிவிலக்கு என்ற பெயரில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு விரிவாக உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதைத் திருத்தி தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் தமிழ் மட்டுமே அலுவல் மொழி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கை ஆங்கிலத்திற்கே மேலாண்மை தருகிறது. இதனால் அன்றாடம் நம் தமிழ்மொழியை ஆங்கிலம் ஒடுக்கி உருக்குலைத்து வருகிறது.
ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பதை நாம் ஆதரிக்கிறோம். ஆனால் பயிற்றுமொழியாக (Medium), தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழக அரசுத்துறை மற்றும் இந்திய அரசுத்துறை ஆகியவற்றில் எந்த விதிவிலக்கும் இல்லாமல் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக செயல்பட வேண்டும். இது தான் ஒருமொழிக் கொள்கை.
இந்தி, ஆங்கிலம், தமிழ் மூன்றையும் கல்விமொழியாகவும் அலுவல் மொழியாகவும் வைக்கக் கூறுகிறது காங்கிரசு, பா.ச.க. கட்சிகளின் மும்மொழிக் கொள்கை. ஆங்கிலம், தமிழ் இரண்டையும் கல்விமொழியாகவும், அலுவல்மொழியாகவும் வைக்கக் கூறுகிறது கழகங்களின் இருமொழிக்கொள்கை. இந்த இருமொழிக் கொள்கை இப்பொழுது இந்தித்திணிப்பை தனது மவுனத்தின் மூலம் ஏற்றுக் கொள்கிறது.
இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை
ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை
மொழிப் போர் நாளான 25-1-2007 அன்று தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து, சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கில எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடைபெறும்.
தஞ்சை, சென்னை கோயம்பேடு ஆகிய இடங்களில் நடைபெறும் இப்போராட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். எந்த இடத்தில் எந்தெந்தப் பகுதித் த.தே.பொ.க. தோழர்கள் கலந்து கொள்வது என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தமிழ் உணர்வாளர்கள் அவரவர் வாய்ப்புப்படி தஞ்சை அல்லது கோயம்பேட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
1938ல் தந்தை பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தலைவர்கள், சான்றோர்கள் தலைமையில் தமிழ் காக்கும் மொழிப் போர் தொடங்கியது. இப்போராட்டத்தில் நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறைக்கொட்டடியில் மரணத்தைத் தழுவினர். 1965-இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் மார்பில் துப்பாக்கிக் குண்டேந்தி முதல் களபலி யானார். மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடந்த அம்மொழிப் போரில் முந்நு}றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மற்றவர்களும் காங்கிரசு ஆட்சியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கீழப்பழூர் சின்னச்சாமி தொடங்கி, தன் உடலையே தமிழ் உணர்ச்சியின் தழல் சுடராய் எரியவிட்டு மடிந்தோர் பலர். நஞ்சுண்டு மடிந்து நம் தமிழ் உணர்வூட்டியோர் பலர்.
ஆதிக்க இந்தியையும் ஆங்கிலத் திணிப்பையும் முறியடிப்போம்.
போராடப் புறப்படுவீர்!
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி,
20-7, முத்துரங்கம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
தொடர்புக்கு 9445295002, 9841949462
Tuesday, December 18, 2007
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்
இந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும்
ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும்
கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15-12-2007 அன்று தஞ்சையில் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கி.வெங்கட்ராமன், நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. இந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலதை திணிக்கும் தமிழக அரசையும்
கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம்
இந்திய அரசு அன்றாடம் புதிது புதிதாக இந்தித் திணிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் மொழியை அடியோடு புறக்கணித்திட திட்டமிட்டு செயல்படுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட விதி 348(2) - இன் கீழ் தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக செயல்படுத்திட உரிமை இருக்கிறது.
இந்த விதிக்கேற்ப தமிழக அரசு சட்டப் பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் வழியாக இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்திய அரசு அதைச் செயல்படுத்த முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டது. அரசமைப்புச் சட்டத்தின் உயர்வு பற்றி தனக்குச் சாதகமான முறையில் உபதேசம் செய்து வரும் இந்திய அரசின் ஆட்சியாளர்கள், அச்சட்டப்படி தமிழ் மொழி உயர்நீதி மன்ற அரங்கில் ஏற முனைந்த போது, தமிழைக் கீழே தள்ளி இழிவு செய்தார்கள். அரசமைப்புச் சட்ட விதியையும் அவமதித்து காலில் போட்டு மிதித்தார்கள்.
ஆனால், அதே இந்திய அரசின் ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதி மன்றத் தீர்ப்புகளையும் இந்தி மொழியில் வெளியிடும் முயற்சியில் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையைப் பெற்றுள்ளார்கள்.
தமிழில் தந்தி கொண்டு வந்தார்கள். முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் அது செயல்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் மெல்ல மெல்ல அந்தத் திட்டத்தைக் கை கழுவி விட்டார்கள். தமிழில் தந்தி கொடுக்க யாரும் முன் வரவில்லை என்று பொய்க்காரணம் சொன்னார்கள். நடந்ததோ வேறு. தமிழில் தந்தி கொடுக்க மக்கள் முன் வந்த போதெல்லாம் இயந்திரம் பழுது என்றார்கள். தமிழில் தந்தி கொடுத்தால் தாமதமாகத்தான் போகுமென்றார்கள். இப்படியாக தொலைபேசித் துறை அதிகாரிகள் தமி;ழ் வழித் தந்தியை ஒழித்தார்கள்.
இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அத்தனையும் இந்தி பெயர்கள் தாங்கியே வருகின்றன. அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து செயல்படுத்தினால் நிதி உதவி நிறுத்தப்படும் என்கிறது நடுவண் அரசு.
தமிழ் நாட்டில் இயங்கும் அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் புயல் வேகத்தில் இந்தி திணிக்கப்படுகிறது. அதே வேகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழில் எழுதி வந்த அலுவலகப் பெயர்களைக் கூட இப்பொழுது கைவிட்டு, இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே எழுதுகிறார்கள். தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் வழிக்குறிப்புகளை எழுதுகிறார்கள்.
இந்தித் திணிப்பின் முன்மாதிரி மையமாக அஞ்சலகத் துறை விளங்குகிறது
தில்லி அரசின் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தமிழக ஆட்சி மொழியாகிய தமிழை அலுவல் மொழியாகச் செயல்படுத்தவும் இந்திய அரசை வலியுறுத்தி வரும் மொழிப்போர் நாளான 25-01-2008 அன்று தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் போராட்டம் நடத்துவதென்று த.தே.பொ.க தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பு
தமிழக அரசு வேகவேகமாக ஆங்கிலத்தைத் திணித்து வருகிறது. அது கொண்டு வரும் புதிய திட்டங்களின் பெயாகளை முதலில் ஆங்கிலத்திலேயே அறிமுகப்படுத்துகிறது.
தமிழக அரசுப் பேருந்துகளில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே செய்யப்படுகின்றன. இப்பொழுது விரைவுப் பேருந்துகளில், "அல்ட்ரா டீலக்ஸ்" என்ற 'மிகை சொகுசு வண்டிகளை' தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதைத் தமிழ்ப் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கலாம். தமிழாக்கம் கூட இல்லாமல் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே "அல்ட்ரா டீலக்ஸ்" என்று எழுதப்படுகிறது. அதே போல், "பாயின்ட் டு பாயின்ட்" என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டி அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்தையும் தமிழ் மொழியில் தான் உரியவாறு பெயர் சூட்டி அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். இந்திய அரசு தனது திட்டங்கள் அனைத்திற்கும் இந்தியில் பெயர் சூட்டுகிறது என்பதையாவது தமிழக அரசு கவனித்து தமிழ்நாட்டில் தமிழில் பெயர் சூட்ட முனைந்திருக்கலாம்.
தமிழக அரசின் தமிழ்;ப் புறக்கணிப்பைக் கண்டித்து வரும் 25-1-2008 மொழிப்போர் நாளில் சென்னை கோயம்பேடு நடுவண் பேருந்து நிலையத்திலும், தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடத்துவது என்று த.தே.பொ.க தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.
2. மண்ணின் மக்களுக்கு வேலை தராமல் மற்ற மாநிலத்தவர்க்கு வேலை தரும் இன ஒதுக்கல்
கொள்கையைக் கண்டித்து திருச்சி மிகுமின தொழிலகம் முன் மறியல் போராட்டம்
திருச்சி திருவரம்பூர் மிகுமின் தொழிலகம் (பி.எச்.இ.எல்) புதிய விரிவாக்கத்திற்காகப் பல்லாயிரக் கணக்காணோரை வேலைக்குச் சேர்க்கத் தொடங்கியுள்ளது. இதுவரை வேலைக்கு சேர்க்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் மலையாளிகளும் இந்திக்காரர்களும் ஆவர். அந்நிறுவனத்தில் உள்ள ஆறு பொது மேலாளர்களில் நால்வர் மலையாளிகள்.
தமிழ் நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான மிகுமின் தொழிலகத்தில் 80 விழுக்காட்டுப் பணியிடங்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குத் தான் வழங்கப் படவேண்டும். மிகுமின் தொழிலகத்தில் வேலைக்குச் சேர்க்கும் போது தமிழர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அவர்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் 1970-களில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அந்த ஆணை இப்போது புறக்கணிக்கப்படுகிறது.
இதே போல் திருச்சி கோட்டத் தொடர் வண்டித் (ரயில்வே); துறையில், மிகை எண்ணிக்கையில் பீகாரிகளையும் இதர பகுதி இந்திக்காரர்களையும் வேலைக்குச் சேர்த்து வருகிறார்கள். கடந்த ஓராண்டிற்குள் வணிகப் பிரிவில் 200 வடநாட்டாரும், இளநிலைப் பொறியாளர் நிலையில் 100 வடநாட்டாரும், மூன்றாம் நிலைப் பிரிவில் 300 வடநாட்டாரும் ஆக மொத்தம் 600 வடநாட்டாரும் பணியமர்த்தம் பெற்றுள்ளனர்.
இந்திக்காரரான லல்லு பிரசாத் யாதவ் தொடர் வண்டித் துறை அமைச்சாரனதிலிருந்து அத்துறையில் இந்தித் திணிப்பும் இந்திக்காரர் திணிப்பும் தீவிரப்படுத்தபட்டுள்ளன. தமிழும் தமிழர்களும் புறக்கணிக்ப்படுகிறார்கள். மேலே சொன்ன இந்திக்காரர் திணிப்பு திருச்சிக் கோட்டத்தில் மட்டும் நடந்தது. சென்னைக் கோட்டத்தில் இன்னும் அதிகமாக வடவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போல் திருச்சி அருகிலுள்ள ஆயுதத் தொழிற்சாலையிலும் (எச்.ஏ.பி.பி) வேற்று மாநிலத்தவர் மிகையாகச் சேர்க்கப்படுகின்றனர். தமிழர்கள் புறக்கணிக்ப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் தொழிலகப் பணியிடங்களில் 80 விழுக்காடு இடங்கள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் என்று ஏதேதோ காரணம் காட்டி, முறையான கல்வித் தகுதி பெற்றுள்ள தமிழக ஆண்களையும் பெண்களையும் இன ஒதுக்கல் செய்வது, மொழி வாரி மாநிலம் அமைக்கப்பட்ட நோக்கத்தையே சீர்குலைப்பது ஆகும்.
வேற்று இனத்தாரை மிகையாக வேலைக்குச் சேர்த்து மண்ணின் மக்களாகிய தமிழர்களைப் புறக்கணிக்கும் இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்துத் தமிழ்த் தேசியத் தன்னுரிமை நாளான 25-2-2008 அன்று காலை பத்து மணிக்கு திருவரம்பூர் மிகுமின் தொழிலக ஆலை வாயிலில் த.தே.பொ.க சார்பில் மறியல் போராட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது.
3. இரயில்வே நிர்வாகமே, பாலாற்று ஊற்று நீரைக் காலி செய்யாதே!
தென்னகத் தொடர் வண்டித் துறை "ரயில் நீர்" என்ற பெயரில் ஒரு பாட்டில் பத்து ரூபாய்க்கு தொடர் வண்டிகளிலும் நிலையங்களிலும் தண்ணீர் விற்கத் திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதற்காக காஞ்சிபுரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையில் உள்ள பாலூர் என்ற இடத்தில் பாலாற்றில் ஊற்று நீர் எடுப்பது தான் தமிழக நலன்களுக்கு எதிரானது.
இத்திட்டத்தின் கீழ் பாலூரில் ஒரு நாளைக்கு 1,20,000 லிட்டர் பாலாற்று ஊற்று நீரை எடுக்க உள்ளார்கள். இந்த நீர், ஆந்திர, கர்நாடக, தமிழக, கேரளப் பகுதிகளில் ஓடும் தொடர் வண்டிகளிலும், நிலையங்களிலும் விற்கப்பட உள்ளது.
பாலாற்றில் தமிழகப் பகுதிக்குத் தண்ணீரே வருவதில்லை. பாலாற்றின் கரையிலுள்ள வேலூருக்கு ஒன்பது நாளுக்கு ஒரு தடைவை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. மேல்வரவு நீரும் ஊற்று நீரும் மிகமிகக் குறைவாக உள்ளதுதான் இந்த அவலத்திற்குக் காரணம். ஏற்கெனவே தமிழக அரசு இதே பகுதியில் பாலாற்றிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடியே எண்பது லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஆலந்தூர் வரை வழங்குகிறது.
ஆம்பூர் பகுதியிலிருந்து வெளியேறும் தோல்பதனிடும் கழிவு நீர் காஞ்சிபுரம்; வரை ஓடி வந்து ஊற்று நீரை பாழ்படுத்தி விட்டது. மிச்சம் உள்ள தண்ணீரையும் ரயில் நீர் திட்டத்திற்கு எடுத்து விட்டால் தோல் கழிவு நீர் மெலும் கிழக்கு நோக்கி ஆற்றில் பரவும் .பாலாற்றில் எஞ்சியுள்ள ஊற்று நீரும் பயன் படாமல் போய்விடும்.
தமிழகத்தை விட பல பத்து மடங்கு ஆற்று நீர் வளம் நிறைந்துள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த இரயில் நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கலாம்.
பாலாற்றை மலடாக்கும் இந்த ரயில் நீர்த் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இழந்த காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை நீர் போன்றவற்றை மீட்க முடியாத தமிழக அரசு, இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் பாதுகாக்கும் முயற்சியில் இல்லை.
எனவே, பாலாற்று ஊற்று நீரை எடுக்கும் திட்டத்தை தென்னகத் தொடர் வண்டித் துறை கை விடுமாறும், இத் திட்டத்திற்கு வழங்கிய அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
Wednesday, November 14, 2007
தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம்
| தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க ஊர்வலம் 4000 தமிழ் உணர்வாளர்கள் திரண்டனர் கைது செய்யப்பட்டவர்கள் 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு |
| தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் விடுதிவரை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வீரவணக்கப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இந்தப் பேரணிக்கு சென்னை நகர ஆணையர் அனுமதி மறுத்தார். என்றபோதும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடத்தப்படும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்தார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் தடையை மீறி நடத்தப்படும் பேரணியில் ம.தி.மு.க பங்கு கொள்ளும் என அறிவித்தார்.
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படம் போட்டு வீரவணக்க வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாகை ஒன்றை ஒருங்கிணைப்புக் குழுவினர் ஒரு ஊர்தியில் வைத்திருந்தனர். காவல்துறை அதிகாரிகள் அந்த வாடகை ஊர்தி ஓட்டுநரை மிரட்டி வாகனத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதனை எதிர்த்து குரல் எழுப்பியவர்களை உடனே கைது செய்யப் போவதாக மிரட்டினர். கூடியிருந்தவர்கள் காவல்துறையின் அத்துமீறல்களை எதிர்த்துக் குரல் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்தனர். தலைவர்கள் வராமல் யாரையும் கைது செய்யக் கூடாது என காவல்துறையினரிடம் வாதிட்டனர்.
இதற்கிடையே, மன்றோ சிலைக்கு எதிர் திசையான பெரியார் சிலைப் பக்கமிருந்து திடீரென பெரும் ஆரவாரம் கேட்டது. திறந்த ஊர்தி ஒன்றில் பழ. நெடுமாறன், வைகோ, இருவரும் கையில் தமிழ்ச்செல்வன் படம் போட்ட வீரவணக்கப் பதாகைகளை ஏந்தியபடி,
சாலையின் மறுபுறம் கூடியிருந்த ஏறத்தாழ 4000 பேரும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ்நாடு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து ஆகியோரும் தலைவர்கள் வந்த ஊர்தியில் ஏறிக் கொண்டனர்.
இது கூடியிருந்த உணர்வாளர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொந்தளிப்பை அதிகரிக்கும் வகையில் காவல் துறையினர் கூடியிருந்த கூட்டத் திடையே புகுந்து தொண்டர்களை பலவந்தமாக இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்ற முனைந்தனர்.
அதோடு நில்லாமல், 83 வயதான ஆனைமுத்து அவர்களை, அவரின் வயதைக் கூடப் பொருட்படுத்தாமல், ஊர்தியிலிருந்து கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர். உணர்வாளர்கள் ஓடி வந்து அதைத் தடுத்து காவல்துறையினருடன் சண்டையிட்ட பிறகே அவரை மெதுவாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் தலைவர்கள் ஒவ்வொருவராக காவல் துறை வாகனத்தில் ஏறினர். கூடியிருந்த அனைவரையும் கைது செய்யாமல், ஏறத்தாழ 1000 பேர் அளவில் மட்டுமே கைது செய்து அவர்களை இராசரத்தினம் விளையாட்டரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரவு 10 மணியளவில் அவர்கள் அனைவருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி புழல் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த திருமாறன், இராசேந்திர சோழன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், ஓவியர் வீர சந்தானம், சந்திரேசன், மரு. சுந்தர், புதுவை அழகிரி, நா. வை. சொக்கலிங்கம், பொன்னிறைவன், கி. த. பச்சையப்பன், கா. பரந்தாமன், இரா. பத்மநாபன், கே. எஸ். இராதாகிருஷ்ணன், ம.தி.மு.க-வின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், ம.தி.மு.க வழக்கறிஞர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி: தென் ஆசிய செய்திகள் |
Tuesday, November 13, 2007
வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது
| வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது |
| |
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். |
| சென்னை மன்றோ சிலை அருகே இன்று திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து
அப்போது ம.தி.மு.க. நிர்வாகி வேளச்சேரி மணிமாறனை காவல்துறை தாக்கியதாக வைகோ குற்றம்சாட்டி முழக்கமிட்டார்.
அதன் பின்னர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் மாலை 5:20 மணியளவில் கைது செய்தனர்.
மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, கவிஞர் இன்குலாப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 14 பெண்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 346 பேரும் இன்று இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். |
Friday, November 2, 2007
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு !
















பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.





