உடனடிச்செய்திகள்

Monday, October 7, 2013

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தோழர் தியாகு!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தோழர் தியாகு!

 

காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி "இலங்கையில் காமன்வெல்த் - எதிர்ப்பியக்கம்" சார்பில், காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த அக்டோபர் 1 முதல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தோழர் தியாகுவுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உண்ணாப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தன.

 

அவ்வகையில், போராட்டத்தின் 7ஆம் நாளான இன்று (அக்டோபர் 7) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், .தே.பொ.. தோழர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் .முருகன், தோழர் .ஆனந்தன், தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் .அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் .குபேரன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் உள்ளிட்ட திரளான .தே.பொ.. தோழர்கள், இதில் பற்கேற்றனர்.


போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தோழர் தியாகுவின் உடல்நிலையை சோதித்தது. அதன்பின், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாப் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

 

'இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகுவின் போராட்டத்தை முடக்காதே!' என கூடியிருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்களுக்கிடையில், அரசு மருத்துவ வாகனத்தில் தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டாது. தற்போது, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

 

தோழர் தியாகுவின் போராட்டம், நம் அனைவரின் போராட்டம்! போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய, அனைவரும் ஒருங்கிணைந்து உழைப்போம்!

 

 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)


Friday, October 4, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகு உண்ணாப்போராட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர்கள் நேரில் சென்று ஆதரவு!



தமிழீழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, அவ்வாறு நடைபெற்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை, சென்னை உயர்நீதிமன்ற அனுமதியோடு 01.10.2013 அன்று மாலை முதல் தொடங்கியுள்ளார். 


சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இன்று(03.10.2013) மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அவரை நேரில் சந்தித்தனர்.


போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய தோழர் கி.வெங்கட்ராமன், இப் போராட்டம் தமிழகமெங்கும் விரிவுபட வேண்டுமென சுட்டிக்காட்டிப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் த.இ.மு. செயலாளர் தோழர் கோ.நல்லன், தோழர்கள் கவிபாஸ்கர், முத்துக்குமார், அர.குமரேசன், புதுமொழி, செம்மொழி, கடாபி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.


காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என போராடுவோம்! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க வேண்டுமென குரல் கொடுப்போம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இன்று(03.10.2013) மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அவரை நேரில் சந்தித்தனர். 

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய தோழர் கி.வெங்கட்ராமன், இப் போராட்டம் தமிழகமெங்கும் விரிவுபட வேண்டுமென சுட்டிக்காட்டிப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் த.இ.மு. செயலாளர் தோழர் கோ.நல்லன், தோழர்கள் கவிபாஸ்கர், முத்துக்குமார், அர.குமரேசன், புதுமொழி, செம்மொழி, கடாபி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர். 

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என போராடுவோம்! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க வேண்டுமென குரல் கொடுப்போம்!




(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Wednesday, October 2, 2013

கூடங்குளமஅணு உலையை இழுத்து மூடுக! தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடுக! தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வேண்டும், அணுஉலையை எதிர்த்து அறவழியில் போராடி வரும் மக்கள் மீது தமிழக அரசு போட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று(அக்டோபர் 2) தமிழக மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற  இவ்வார்ப்பாட்டங்களில் பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.


சென்னை
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தோழர் செல்வி தலைமையேற்றார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், ம.தி.மு.க. வடசென்னை மாவட்டச் செயலாளர் திரு. ஜீவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் திரு. தெகலான் பாகவி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் விடுதலைத் தோழர் கார்கி வேலன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி பங்கேற்று கண்டன உரையாற்றினார். தோழர் அன்பு தனசேகரன் (தி.வி.க.) நிகழ்வை ஒருங்கிணைத்தார்.


தஞ்சை
தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை பாலகிருட்டிணன் தலைமையேற்றார். தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் திரு குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு ஆர்.பி.தமிழ்நேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு வீரன்.வெற்றிவேந்தன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் திரு எம்.கணேசன், மள்ளர் மீட்புக்களம் மாவட்ட ஒருகிணைப்பாளர் திரு செந்தில் காலாடி, தாளாண்மை உழவர் இயக்கம் திரு கோ.திருநாவுக்கரசு, மனித நேய மக்கள் கட்சி திரு கலந்தர், எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் திரு முகமது இக்பால் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.


கடலூர்
கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் அம்பேத்கார் சிலை அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு.  தி.வேல்முருகன் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு எஸ்.இராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் திருமாற்பன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு ஷேக்தாவுத், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் ப.மோகன், தமிழ்நாடு நூகர்வோர் கூட்டமைப்பு திரு நிஜாமுதின், தமிழர் தேசிய இயக்கம் திரு வை.இரா.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.


மதுரை 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு அன்பழகன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் கண்டன முழக்கங்களை எழுப்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் திரு உஞ்சை அரசன், நாம் தமிழர் கட்சி திரு. வெற்றிகுமரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் க.பரந்தாமன், தோழர் ஆறுமுகம்(சி.பி.ஐ-எம்.எல்.), திரு. ஜாபர் சுல்தான்(எஸ்.டி.பி.ஐ.), திரு. இப்ராகிம் (மனித நேய மக்கள் கட்சி), தோழர் செல்வம்(ஆதித்தமிழர் பேரவை), தோழர் ஆரோக்கியமேரி(தமிழ்நாடு மக்கள் கட்சி), வழக்கறிஞர் இராசேந்திரன்(சமநீதி வழக்கறிஞர் சங்கம்), தோழர் பரிதி(தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் கார்த்தி(மே பதினேழு இயக்கம்), தோழர் விடுதலைச்செல்வம் (த.ஒ.வி.இ.), தோழர் பகவந்தா(அனைத்து கல்லூரி மாணவர் இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்,  மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு பங்கேற்று கண்டன உரையாற்றினார். 


காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மனித நேய மக்கள் கட்சி காஞ்சி தெற்கு மாவட்டத் தலைவர் திரு. எஸ்.எம்.சாஜகான் தலைமையேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. அப்துல் சமது, ம.தி.மு.க. மாவட்டத் தலைவர் உதயம் திரு. கோ.இராதா, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. சூ.க.விடுதலைச்செழியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் திரு. ச.தீனன், பொறியாளர் கோ.சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்), , எஸ்.டி.பி.ஐ. மாவட்ட அமைப்பாளர் திரு. முகமது பிலால், தமிழ்த் தேச மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் செந்தமிழ்க்குமரன், நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மாவட்டத் தலைவர் திரு. ஆ.சா.திருமலை, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் டேவிட் பெரியார், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கப் பொறுப்பாளர் திரு. காஞ்சி அமுதன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசீர்வாதம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

 

கோவை 
கோவை - காந்திபுரம் தமிழ்நாடு உணவு விடுதி அருகில் காலை 10.00 மணியளவில் நடைபெற் ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாளர் திரு. வி.என்.அபுதாஹீர் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு மோகன்குமார், நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பி.யூ.சி.எல். தோழர் பொன்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

 

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழுத் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்புக்குழு திரு. வீரசோழன், மாவட்டச் செயலாளர் திரு. இரமேஷ், மனித நேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் திரு. சாதிக்கான், தமிழக குடியரசு இயக்கத் தோழர் ஒப்புராவாளர், தோழர் சுப்பிரமணி (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் முத்துவேல் (தமிழக இளைஞர் முன்னணி) உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதுப்பேருந்து நிலையம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு கே.எம்.சரீப்  தலைமையேற்றார். மனித நேய மக்கள் கட்சி திரு. என்.துரைமுகமது, த.மு.மு.க. திரு. முகமது சாதிக் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. தெ.கலைமுரசு, நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் திரு. ந.சத்தியமூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் திரு. கே.அசனுதீன், உலகத் தமிழர் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் திரு. துரை.மதிவாணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. மு.சரவண தேவா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மாவட்டச் செயலாளர் தோழர் த.அருள்மொழி உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்,  பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.ஆரோக்கியசாமி கண்டன உரையாற்றினார். த.தே.பொ.க. ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தோழர் பெ.இலட்சுமணன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

 

ஈரோடு

ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி தலைமையேற்றார். மக்கள் நலவாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ப.இரத்தினசாமி, தமிழக உழவர் இயக்கத் தோழர் கி.வே.பொன்னையன், தோழர் நிலவன் (த.ஓ.வி.இ.) உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன், தமிழக இளைஞர் முன்னணி பவானி அமைப்பாளர் தோழர் பரமேசுவரன், தோழர்கள் பார்த்திபராசன், பழனிசாமி, தாயம்மாள், மா.செந்தில் குமார், செ.கருப்புசாமி, குரு.சேகர், தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர். 

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)


Saturday, September 28, 2013

நிதி ஒதுக்கீட்டைப் பாதியாக வெட்டி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் இரகுராம் ராஜன் குழு பரிந்துரை - தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்.


நிதி ஒதுக்கீட்டைப் பாதியாக வெட்டி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் இரகுராம் ராஜன் குழு பரிந்துரை த.தே.பொ.க பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்.

நாம் மதிப்பிட்டதைப் போலவே இந்திய அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை  மாநிலங்களின் மீது சுமத்துவதற்கு உறுதியான திட்டம் தீட்டிவிட்டது. அதிலும் தமிழ் நாட்டை வஞ்சிப்பதில் குறியாக உள்ளது.  இந்திய அரசு தான் வசூலிக்கும் வரி வருமானத்தில்  மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது  என்பது குறித்து ஆய்வு செய்ய  இந்திய நிதியமைச்சர் நியமித்த இரகுராம்ராஜன் குழு  அளித்துள்ள அறிக்கை 26.09.2013 அன்று வெளியாகி உள்ளது.

இரகுராம் ராஜன் குழு தனது பரிந்துரையை கடந்த செப்டம்பர் 2 ஆம் நாளே நிதியமைச்சரிடம் அளித்துவிட்ட போதிலும் அவ்வறிக்கை  நிதியமைச்சகத்தின் ஆய்வுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

மறைமுக வரியிலும், நேரடி வரியிலும் இந்திய அரசு திரட்டும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படும் வரியினங்களின் பங்கீட்டு விகித்ததை தீர்மானிக்கவும், மாநிலங்களுக்கு என ஒதுக்கப்படும் பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யவும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது. இப்போது 13 ஆவது  நிதி ஆணையம் செயலில் உள்ளது.

நிதி ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டப்படி நிறுவப்படும் அமைப்பாகும். அது இருக்கும் போதே அரசமைப்புச் சட்டத்திற்கு தொடர்பில்லாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதே செய்தி குறித்து முடிவு செய்ய  இன்னொருக் குழுவை  நியமைச்சர் ப.சிதம்பரம் நியமித்ததே கடும் அத்துமீறலாகும்.

நிதியாணையம் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்டப் பின்பே தனது பரிந்துரையை அளிக்கிறது.  ஆனால், நிதியமைச்சர் நியமித்த  நிதிப்பங்கீட்டு குழுவுக்கு அப்படி ஒரு சட்டக் கடப்பாடே இல்லை. எனவே, தானடித்த மூப்பாக இப்பரிந்துரையை அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் ஒட்டுமொத்த வரிப்பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதற்கு  இரகுராம் ராஜன் குழு அளித்துள்ளப் பரிந்துரையை உற்று நோக்கினால், செயல்திறன் உள்ள மாநிலங்களை தண்டிக்கும் நோக்கில் அது அமைந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம்.  குறிப்பாக இப்பரிந்துரை  தமிழகத்தின் மீதுமிகக் கொடுமையான நிதித்தாக்குதலைத் தொடுக்கிறது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தகுதியான ஒட்டுமொத்த வரி நிதியில் அனைத்து மாநிலங்களுக்கும்  தலா 8.4 விழுக்காட்டுத் தொகை  வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள 91.6 விழுக்காட்டு நிதியை தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு  முக்கால் பங்கும் செயல்திறன் உள்ள மாநிலங்களுக்கு கால்பங்கும் என்ற அளவில் பிரித்துக்கொடுக்கலாம் என்றும் இரகுராம் ராஜன் குழு அறிக்கை வரையறுக்கிறது. 

தேவையுள்ள மாநிலங்கள் (needed states) என்பதைத் தீர்மானிக்க வளர்ச்சியின்மையை (underdevelopment ) அளவுகோலாக இரகுராம்ராஜன் குழு வைத்துக்கொள்கிறது. வளர்ச்சி குறித்த 10 முக்கிய அளவுகோல்களைக் கொண்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டை (underdevelopment  index)      இக்குழு வரையறுத்தது.

1)       மாநிலத்தின் தனி நபர் மாத நுகர்வுச் செலவு 2) கல்வி நிலை 3) உடல் நலம் 4) குடும்பத்தில் உள்ள வசதிகள் 5) வறுமை விகிதம் 6)பெண் கல்வி 7) மாநில மக்கள் தொகையில்  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தொகை விகிதம் 8) நகரமயமாக்கல் விகிதம் 9) மக்களிடையே நிதி ஆதாரப்பகிர்வு 10) சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்  ஆகிய  பத்து கூறுகளில்  ஒரு  மாநிலம் எந்த அளவுக்கு பின் தங்கியிருக்கிறதோ அந்த அளவுக்கு அதற்கான வளர்சியின்மைக் குறியீடு வழங்கப்படும்.

இந்த வளர்ச்சியின்மைக் குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை  மூன்று தொகுதிகளாக இரகுராம் ராஜன் குழு வகைப்படுத்துகிறது.

முற்றிலும் எந்த வளர்ச்சியும் இன்மை என்பதை  1 ஆகக் கொண்டு இந்த குறியீட்டு அளவு  தீர்மானிக்கப்பட்டது.   இதன்படி 0.6 க்கு மேல் வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள்  “மிகவும் வளர்ச்சிக்குறைவான   மாநிலங்கள்    (least developed) என்றும், 0.4 க்கும் 0.6 க்கும் இடைப்பட்ட வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள்  “வளர்ச்சிக் குறைவான   (less developed)  மாநிலங்கள் என்றும் 0.4 க்குக் கீழ் வளச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் ஒப்பீட்டளவில் வளர்ந்த  (relatively developed)  மாநிலங்கள்  என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.  

பீகார் , மத்தியப் பிரதேசம்,  இராசஸ்தான், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பெரும்பாலான வட மாநிலங்கள்  மிகவும் வளர்ச்சிக் குறைவான மாநிலங்கள் என்றப் பட்டியலில் வருகின்றன. இவற்றிக்கு நிதித்தேவை அதிகம் என மதிப்பிடப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதே இரகுராம்ராஜன் குழுவின் பரிந்துரை.

இவ் வகைப்பாட்டின்படி குசராத் , ஆந்திரா, பஞ்சாப்  போன்ற மாநிலங்கள் கூட வளர்ச்சிக்குறைவான மாநிலங்கள்  எனப் பட்டியலிடப்பட்டு அவற்றிக்கு தமிழ்நாட்டைவிட கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டில்  0.34 பெற்று ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலம் எனற கிரீடம் சூட்டப்பட்டு  நிதி ஒதுக்கிட்டில் கீழ் நிலையில் வைக்கப்படுகிறது.

கல்வி, சாலை வசதி உள்ளிட்டவற்றில் பிற மாநிலங்களைவிட  சொந்த முயற்சியில்  முன்னேற்றம் கண்டதால் தமிழ் நாட்டிற்கு இரகுராம் ராஜன் குழு அளிக்கிற பரிசு இது.

வரி வசூலில் தமிழ்நாடு இந்தியாவின் பெரும்பாலான பிற மாநிலங்களை விட திறன் பெற்ற மாநிலமாகும்.  இங்கேயும் வரி ஏய்ப்பவர்கள் உண்டு என்றாலும் ஒப்பீட்டளவில் குறைவு.

 தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகக் கூறப்படும் குசராத், மகாராட்டிராவை விட தமிழ்நாட்டில்  வரி வசூல் விகிதம் அதிகமாகும்.  2012-2013 ஆம் நிதியாண்டில் தமிழ் நாட்டிலிருந்து இந்திய அரசு அள்ளிச்சென்ற வரி வருவாய் ஏறத்தாழ 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.  இது இந்திய அரசின் ஒட்டுமொத்த வரி வசூலில் 14.12 விழுக்காடு ஆகும்.

ஆனால் இந்திய அரசு கடந்த  நிதி ஆண்டு  தமிழகத்திற்கு ஒதுக்கிய வரிப் பங்கீடு மற்றும் மானியங்களின்  மொத்த அளவு ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

மாநிலங்களுக்கென்று இந்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மொத்த நிதித்தொகையில் தமிழகத்திற்கு வழங்குவது 4.18 விழுக்காடே ஆகும். அதாவது 14.12 விழுக்காடு எடுத்துக்கொண்டு வரிப் பங்காக 4.18 மட்டுமே வழங்குகிறது.

13 ஆவது நிதி ஆணையம் இந்திய அரசு  மாநிலங்களுக்கு ஒதுக்கிடு செய்யும் மொத்த நிதித் தொகையில் தமிழ்நாட்டுக்கு 5.01 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.  திட்டக்குழு  4.46  விழுக்காடு பகிர்ந்த்தளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால் இந்திய அரசு தமிழத்திற்கு அளித்ததோ 4.18 விழுக்காடு  தொகை.

 இதையும் ஏறத்தாழ பாதியாகக் குறைத்து 2.51   விழுக்காடு தொகையை தமிழ் நாட்டிற்குக் கொடுத்தால் போதும் என இரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்றப் பட்டியலில்  தமிழ்நாட்டை விட  முன்னே உள்ள கேரளாவுக்கு செய்த நிதி ஒதுக்கீட்டையும் விட இது குறைவானது.  இதற்கு முன்னர் மாநிலங்களுக்கு இடையில் நிதிப்பகிர்வு வழங்குவதற்காக உருவாக்கபட்ட  காட்கில் வழிமுறை (பார்முலா), காட்கில்- முகர்ஜி வழிமுறை  ஆகிய  அனைத்தையும் விட இரகுராம் ராஜன் குழு வழிமுறை தமிழகத்தைப் பெரிதும் வஞ்சிக்கக்கூடியது.

இந்திய அரசு தமிழ் நாட்டிலிருந்து அள்ளிச்செல்லும் வரி வருமானத்தில் பாதியையாவது தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, இருக்கும் குறைவான ஒதுக்கீட்டையும் இன்னும் பாதியாகக் குறைப்பது  இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கில் இன்னும் ஒரு கொடிய நடவடிக்கையாகும்.

இந்திய அரசின் இந்த நிதித் தாக்குதலை எதிர்கொள்ள தமிழக முதலமைச்சர் செயலலிதா தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்துக்கொண்டு இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இரகுராம் ராஜன் குழு பரிந்துரையை  இந்திய அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும்.


இந்திய அரசு தனது நயவஞ்சகத்தை தொடருமேயானால் தமிழகத்திலிருந்து இந்திய அரசு வரி வசூல் செய்வதை தடுப்போம் என தமிழக அரசும் மக்களும் களம் இறங்கவேண்டிய  நேரமிது. 
    
                                                                                  கி.வெங்கட்ராமன் 
 பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம் :  சிதம்பரம்

Friday, September 27, 2013

இசுலாமியரை இனப்படுகொலை செய்த நரேந்திரமோடியே தமிழகத்திற்குள் நுழையாதே! சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட தோழர்கள் கைது!

இசுலாமியர்களை இனப்படுகொலை செய்யத் துணை நின்ற குசராத் முதல்வரும், பாரதிய சனதாக் கட்சி இந்தியப் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 26.09.2013 வியாழன் அன்று சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மே பதினேழு இயக்கம் சார்பில், பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையேற்றார். மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட் பெரியார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறை கைது செய்தது
.
த.தே.பொ.க. சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், த.இ.மு. சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் செயலாளர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கலந்து கொண்டு கைதாயினர்.

பல்லாவரம் ஆதித்தனார் திருமண நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட தோழர்கள் அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
P1120274
P1120281
P1120288
P1120299
P1120304
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT