மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தோழர் தியாகு!
காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி "இலங்கையில் காமன்வெல்த் - எதிர்ப்பியக்கம்" சார்பில், காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 1 முதல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தோழர் தியாகுவுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உண்ணாப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தன.
அவ்வகையில், போராட்டத்தின் 7ஆம் நாளான இன்று (அக்டோபர் 7) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், த.தே.பொ.க. தோழர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.முருகன், தோழர் அ.ஆனந்தன், தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள், இதில் பற்கேற்றனர்.
போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தோழர் தியாகுவின் உடல்நிலையை சோதித்தது. அதன்பின், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாப் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.
'இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகுவின் போராட்டத்தை முடக்காதே!' என கூடியிருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்களுக்கிடையில், அரசு மருத்துவ வாகனத்தில் தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டாது. தற்போது, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தோழர் தியாகுவின் போராட்டம், நம் அனைவரின் போராட்டம்! போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய, அனைவரும் ஒருங்கிணைந்து உழைப்போம்!
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Post a Comment