உடனடிச்செய்திகள்

Wednesday, February 10, 2010

இயக்குநர் சீமான் மீது வழக்குக் கூடாது: பெ.மணியரசன் வலியுறுத்தல்

மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்ட வழக்கில்
சீமான் பெயரை நீக்க வேண்டும்

பாரதிராஜா அலுவலகத்தைத் தாக்கியவர்களைக்
கைது செய்ய வேண்டும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

மலையாள நடிகர் செயராம், தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை "கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி அவளை எப்படி கண்ணடிக்க (சைக் அடிக்க) முடியும்" என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறி பொதுவாகப் பெண் குலத்தையும் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தி குற்றம் புரிந்துள்ளார்.

இச்செய்தி தமிழ்நாட்டில் பரவியதும் தமிழகமெங்கும் தமிழ் இன உணர்வாளர்கள் மனம் கொந்தளித்தனர். கண்டனக் குரல் எழுப்பினர். இந்நிலையில் சென்னையில் உள்ள மலையாள நடிகர் செயராம் வீட்டை யாரோ சிலர் தாக்கியுள்ளனர். மிகவும் விரைந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து 16 பேரைக் கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் நாம் தமிழர் இயக்கத் தோழர்கள்.


நடிகர் செயராம் வீட்டைத் தாக்கத் தூண்டிவிட்டவர் என்று குற்றம் சாட்டி நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமானை அவ்வழக்கில் சேர்த்து அவரை கைது செய்ய காவல்துறை தேடுகிறது. இது சனநாயக நெறிமுறைகளுக்கும், தமிழ் இன உணர்வுக்கும் எதிரான செயல். செயராம் வீட்டைத் தாக்கினால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


வேடிக்கைப் பார்க்க வேண்டியதில்லை தான். ஆனால் அந்த நிகழ்வில் பங்கெடுக்காத இயக்குநர் சீமானை வழக்கில் சேர்ப்பது தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும். ஒரு வீட்டில் வன்முறை நடக்கும்போது வேடிக்கைப் பார்க்கமாட்டோம் என்று இப்போது மலையாள நடிகர் செயராம் பாதிக்கப்பட்ட போது உறுமும் முதல்வர், தமிழ் இன உணர்வாளர் சீமான் கார் தீ வைக்கப்பட்ட போது, ஈழத்தமிழர்களைக் காக்கப் போராடிக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்ட போது தமிழ் இன உணர்வுள்ள இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கணிப்பொறி மற்றும் படப்பிடிப்புக்குரிய கருவிகள், அறைகலன்கள் நொறுக்கப்பட்ட போது தமிழகக் காவல்துறை வேடிக்கைதான் பார்த்தது.


மேற்கண்ட மூன்று வன்முறை நிகழ்விலும் இன்றுவரை குற்றவாளி ஒருவரைக் கூடக் கைது செய்யவில்லை. காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டது யார்? முதல்வர் கருணாநிதி விளக்கம் சொல்லவேண்டும். செயராம் வீட்டைத் தாக்கிய வழக்கிலிருந்து இயக்குநர் சீமானை விடுவிக்க வேண்டும் என்றும், சீமான், தா.பாண்டியன் ஆகியோர் கார்களுக்குத் தீ வைத்த குற்றவாளிகளையும் பாரதி ராஜா அலுவலகத்தைத் தாக்கிய குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
நாள் : 09.02.2009

Tuesday, February 9, 2010

தாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம்

தாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம்

சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சூளுரைப் பொதுக்கூட்டம் வரும் சனிக்கிழமை(13.02.2009) அன்று மாலை நடக்கிறது.

தாம்பரம் பாரதித் திடலில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, பா.ஆரோக்கியசாமி(த.தே.பொ.க.) ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர்.

தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் மா.சாந்தக்குமார் நன்றியுரை நிகழ்த்துவார்.






Thursday, February 4, 2010

சிறைவாசிகளை தாக்குவதுதான் காவல்துறையின் கடமையா? பெ.மணியரசன் கேள்வி

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்களை தாக்கிய காவல்துறையினரைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பொங்குதமிழ்.காம் இணையதளத்திற்கு வழங்கிய பேட்டியின் முழு வடிவம்.

கைதிகளை தாக்குவதுதான் காவற்துறையின் கடமையா: மணியரசன்
செங்கல்பட்டில், நேற்றிரவு காவற் துறையினர் சிறப்பு தடுப்பு முகாமில் புகுந்து அடித்து நொருக்கிய சம்பவம் பற்றி அறிந்தபோது, இலங்கைச் சிறையில் சிங்களக் காடையர்கள் எப்படி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்களோ அப்படியேதான் செங்கல்பட்டு முகாமிலும் நடத்துகிறார்கள் என்ற உணர்வுதான் வந்தது எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் திரு பெ. மணியரசன்.

நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழ் கைதிகள் மீது தமிழக பொலிசார் மேற்கொண்ட கண்மூடித்தனமாக தாக்குதல்கள் குறித்து பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே திரு மணியரசன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் அவர்களில் 18 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பதும் அவர்களில் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் இருப்பதுவும் சிங்கள காடையர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே காட்டுகிறது.

சிறப்பு முகாம் என்பது வண்ணம் பூசப்பட்ட ஒரு கொடிய சிறைச்சாலையாக இருக்கிறது. அவர்கள் பல தடவை காலவரம்பற்ற உண்ணாவிரதம், உள்ளிருப்பு என்று போராடி அரசு தரப்பில் அதிகாரிகள் சென்று வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

10 -15 வருடங்களுக்கு முகாமிலேயே இருப்பதா என்று கேட்கிறார்கள். வழக்கை நடத்தி குற்றம் செய்தார்களெனில் நீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுக்கட்டும். இல்லையென்றால் வெளியே அனுப்புங்கள். அதை விடுத்து இரண்டும் கெட்டானாக நடத்துவது ஒரு பாசிச முறை.

உலகம் முழுவதும் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதில் ஒரு கைதிக்கு என்ன உரிமை உண்டோ அத்தனையும் வழங்கியே அவரை விசாரிக்க வேண்டுமே தவிர, சட்டத்திற்கு விலக்காக துன்புறுத்தி சித்திரவதை செய்து காலத்தை நீடிப்பது ஒரு சட்ட நெறியையே அரசு கவிழ்த்து விடுவதாக அர்த்தம்.

எனவே அந்தக் கோரிக்கையை வைத்து அவர்கள் போராட்டம் நடத்தும்போது பேச்சுவார்த்தை நடத்தி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, காவற் துறையை ஏவி, அடித்து நொருக்கி படுகாயப்படுத்தி அவர்கள் மேல் ஒரு பொய் வழக்கை, அதாவது காவலர்கள் அரச ஊழியர்களை பணி செய்ய விடாது தடுத்தனர் என்பதாக, ஒரு பொய் வழக்கைப் போட்டிருக்கிறார்கள்.

ஒரு கைதியை அடிப்பதுதான காவற்துறையின் கடமையா? அந்த கடமையை செய்ய விடாது தடுப்பது குற்றமா? பாசிஸ்டுகள் ஆட்சியில்தான் அதுமாதிரி செய்ய முடியும். தமிழ்நாட்டில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

உடனடியாக இதற்கு உத்தரவிட்ட அதிகாரிகளையும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டு ஒரு விசாரணைக் கமிஷன் வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். தவிர தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

ஒரு கையும் காலும் இல்லாதவர்களையெல்லாம் அங்கு அடைத்து வைத்துக்கொண்டு, அவர்களை வெளியில் விட்டால் ஓடிப்போய் விடுவார்கள் என்பதெல்லாம் பொய் பிரச்சாரம். இது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழுரிமை அமைப்புக்கள் மட்டுமல்ல, சனநாயகத்தில் மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து இவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் போராட வேண்டும்.

Friday, January 29, 2010

மாவீரன் முத்துக்குமாருக்கு த.தே.பொ.க.வின் வீரவணக்கங்கள்!


மாவீரன் முத்துக்குமாருக்கு த.தே.பொ.க.வின் வீரவணக்கங்கள்!



தமிழகமெங்கும் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சிகள்!

ஈழத்தமிழர் மீதான இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்த மாவீரன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (29.01.2010) கடைபிடிக்கப்படுகின்றது. இதனையொட்டி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக மாணவர் முன்னணி, தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை

தஞ்சையில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் ஈகி முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவாக, தெருமுனைக் கூட்டம் - சுடரோட்டம் - கருத்தரங்கம் ஆகியவை 29.01.2010(வெள்ளி) இன்று நடத்தப்படுகின்றது. கருத்தரங்கை ஒட்டி, 29.01.2010 அன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், தெருமுனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில், பள்ளியக்கிரகாரத்திலிருந்து, முத்துக்குமார் நினைவுச் சுடரோட்டம நடத்தப்படுகின்றது.

மாலை 6 மணியளவில் ஆப்ரகாம் சாலையில், கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்குகிறார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நகர அமைப்பாளர் புலவர் கோ.நாகேந்திரன் பாவீச்சு நிகழ்த்துகிறார். ”ஈழத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும், ”ஈகி முத்துக்குமாரின் இறுதி அறிக்கையும் தமிழ்த்தேசியமும்” என்ற தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

ஈரோடு

ஈரோட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திறந்தவெளி கருத்தரங்கம் நேற்று (28.01.2010)) மாலை நடத்தப்பட்டது. நேற்று மாலை 5.30 மணியளவில், கருங்கல்பாளையம் திருநகர் காலனி அருகே இளந்தமிழர் இயக்கக் குழுவினரின் தப்பாட்டத்துடன் இந்நிகழ்ச்சித் தொடங்குகிறது.

இக்கருத்தரங்கிற்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்குகிறார். சாதி ஒழிப்புக் கூட்டியக்கத் தலைவர் இரத்தினசாமி, வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் தொடக்கவுரை நிகழ்த்துகின்றனர். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்.

பரமக்குடி

பரமக்குடியில் 29.01.2010 இன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் படிப்பகம் திறப்பு நிகழ்ச்சியும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. மாலை 5.30 மணியளவில் நடைபெறும் கருத்தரங்கிற்கு முன்னதாக, மாவீரன் முத்துக்குமார் நினைவு சுடரோட்டம் நடக்கிறது. நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரமக்குடி நகரச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்குகிறார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பொதுக்குழு உறுப்பினர் மகிழ்நன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். முன்னதாக த.தே.பொ.க. கொடியை திரு. பெ.மணியரசன் ஏற்றி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்புண்டி

திருத்துறைப்புண்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. 31.01.2010 அன்று திருத்துறைப்புண்டி தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்குகிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

திருச்செந்தூர்

மாவீரன் முத்துக்குமார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது. 01.02.2010 அன்று மாலை ஆத்தூர் கடைத்தெருவில் நடக்கும் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினது ச.தமிழ்மணி தலைமை தாங்குகிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சிதம்பரம் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை

சிதம்பரத்தில் தமிழக மாணவர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆகியவை அமைப்புகள் இணைந்து, 30.01.2010 அன்று மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தலை முன்னிட்டு திறந்தவெறி உரையரங்கம் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தன.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், இளந்தமிழர் இயக்க நெறியாளர் ம.செந்தமிழன் உள்ளிட்டோர் உரையாற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்நிகழ்விற்கு திடீரென காவல்துறை தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் முடிவை ஒட்டி, வேறொரு நாளில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் காவல்துறை தடை

கோவையில் தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து 02.02.2010 அன்று கோவை ராஜவீதியில் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன. தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகரச் செயலாளர் பா.தமிழரசன் ஆகியோர் உரை நிகழ்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், இக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் கொடுத்துள்ளனர். காவல்துறையின் தடைக்கு எதிராக வழக்கு நடத்திய பின், வேறொரு நாள் கூட்டம் நடத்தப்படும் என த.தே.பொ.க. கோவை மாநகரத் துணைச் செயலாளர் பா.சங்கர் அறிவித்துள்ளார்.

தாம்பரம்

சென்னை தாம்பரத்தில் 13.02.2010 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகள் சார்பில் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார். உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

Thursday, January 28, 2010

சிதம்பரத்தில் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் காவல்துறை தடை

சிதம்பரத்தில் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கொலைப் போரைத் தடுத்த நிறுத்து வலியுறுத்தி மாவீரன் முத்துக்குமார் மற்றும் 17 பேர் 2009ஆம் ஆண்டு தங்கள் தேகங்களைத் தீக்கிரையாக்கி ஈகம் செய்தனர். முத்துக்குமார் உள்ளிட்ட இத்தியாகிகளை நினைவு கூர்ந்து வீரவணக்க சுடரோட்டம் - பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் 30.01.10 அன்று நடத்த திட்டமிட்டிருந்தோம்.

இக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மதுத்துத் தடை விதித்துள்ளது.

நினைவேந்தல் கூட்டத்திற்குக் கூட காவல்துறை தடை விதிப்பது - அதுவும் இதே வகைக் கூட்டங்களுக்கு எங்கள் கட்சிக்கும், பிற அமைப்பினருக்கும் தமிழகம் முழுவதும் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் போது சிதம்பரத்தில் மட்டும் தடை விதிப்பது வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

காவல்துறையின் இச்செயல் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை சனநாயக உரிமையை மறுக்கும் செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தடையாணைக்கு எதிராக சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு வேறொரு நாளில் இக்கூட்டம் நடைபெறும்.

எனவே, 30.1.10 அன்று நடப்பதாக இருந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சுடரோட்டம், பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

தலைமைச் செயற்குழு உறுப்பினர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

சிதம்பரம்.

Monday, January 25, 2010

இன்று மொழிப்போர் தியாகிகள் நாள்: த.தே.பொ.க. வீரவணக்கம்!

இன்று மொழிப்போர் தியாகிகள் நாள்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் அஞ்சலி

1938-1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்தும், நஞ்சுண்டும், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று(25-1-2009) கடைபிடிக்கப்படுகிறது.

திருச்சி

இதனை முன்னிட்டு, இன்று காலை திருச்சியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திப் பேசினார். திராவிட இயக்கங்களின் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை மோசடிக் கொள்கை என்றும், தமி்ழ் மட்டுமே அனைத்து நிலைகளிலும் செயல்பட வழிவகுக்கும் ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்றும் அவர் பேசினார்.

சென்னை

சென்னையில் மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாலமுத்து நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் தோழர்கள், இன்று காலை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சிதம்பரம்

மொழிப்போரில் இந்திய அரசின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மொழிப் போர் ஈகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் தெற்கு சன்னதித் தெருவில், த.தே.பொ.க. சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் கு.சிவப்பிரகாசம், இளந்தமிழர் இயக்க நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் அரவிந்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொள்கின்றனர்.

Wednesday, January 20, 2010

இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்கக் கூடாது - த.தே.பொ.க. தீர்மானம்

இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்கக் கூடாது

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தீர்மானம்

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15.01.2010 அன்று தஞ்சையில் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் மற்றும் தோழர்கள் கி.வெங்கட்ராமன், நா.வைகறை, குழ.பால்ராசு, அ.மகிழ்நன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

1.         இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்கக் கூடாது.

 

தெலங்கானா தனிமாநிலப் போராட்டத்தை ஒட்டி இந்திய அரசு இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்க முனைவதாகத் தெரிகிறது.

 

1956 இல் அமைக்கப்பட்ட முதல் மாநிலச் சீரமைப்புக் குழு, பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் தாயக அடிப்படையில் மாநிலம் அமைக்கக் கோரிப் போராடி, பலர் உயிர்த் தியாகம் செய்தபின் உருவானது.  ஆனால் இப்பொழுது மொழிவாரி மாநில அமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் தேசிய இனத்தாயகங்களை வெறும் நிர்வாக அமைப்புகளாகத் துண்டாடும் உள்நோக்கத்துடன் மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்க முயல்கிறது இந்திய அரசு.

 

மாநிலத் தன்னாட்சியை மறுத்து மேலும் மேலும் தில்லி மையத்தில் அதிகாரங்களைக் குவித்து வரும் இந்திய அரசு தனது ஒற்றையாட்சி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தெலங்கானாப் போராட்டத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது.

 

இரண்டாவது சீரமைப்பு ஆணையத்தின் ஆய்வுப் பரிந்துரைப் பொருள் பட்டியலில் மொழிவாரி மாநில அமைப்பை முழுமைப்படுத்துவதோ அல்லது தேசிய இனத்தாயக அடிப்படையோ இடம் பெறாது என்பது உறுதியாகத் தெரிகிறது.

 

இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் நிறுவப்பட்டால் புதிய போராட்டங்கள் உருவாகுமே தவிர, சிக்கலுக்குத் தீர்வு ஏற்படாது. 

 

ஏதாவது ஒரு மாநிலத்தில் மாநிலத்தைப் பிரிக்கும் கோரிக்கை எழுந்தால் அம்மக்களுடன் பேசி அதற்குத் தீர்வு காண வேண்டுமே தவிர ஒட்டு மொத்த இந்தியாவுக்கு மாநிலச் சீரமைப்பு ஆணையம் போட வேண்டிய தேவை இல்லை.

 

தமிழ்நாட்டைத் துண்டாடக் கூடாது

 

தெலங்கானாப் போராட்டத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு சில தன்னல சக்திகள் தமிழ்நாட்டைத் துண்டாட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றன.

 

தமிழ்நாட்டைத் துண்டாடுவது தமிழ் இனத்தின் அழிவில்தான் போய்முடியும்.

 

தமிழ்த்தேசிய இன மறுப்பாகவும் தமிழர் தாயக மறுப்பாகவும் இத்துண்டாடுதல் அமைந்துவிடும்.  இத்தன்னல சக்திகளின் துண்டாடும் கோரிக்கை மொழிவாரித் தாயக உரிமை பறிக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு இனிக்கும் செய்தியாகும்.

 

எனவே தமிழ்நாட்டு மக்கள் இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையத்தையும் தமிழ் நாட்டைத் துண்டாடும் கோரிக்கையையும் எதிர்க்குமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

 

2.         மரபீனி மாற்றுக் கத்தரிக்காயைத் தடுப்போம்

 

பன்னாட்டுப் பகாசுரக் கொள்ளை நிறுவனமான மான்சான்டோவும் அதன் கூட்டாளி அமைப்புகளும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை இந்தியச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்க இந்திய அரசு முடிவு செய்துவிட்டது. ஒப்புக்குக் கருத்துக் கேட்பு நாடகம் நடத்துகிறது இந்தியா. வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய முகவர் போல் செயல்படும் இணைஅமைச்சர் ஜெய்ராம் ரமே'; கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துவது வெறும் கண்துடைப்பே.

 

தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தமிழ்நாட்டில் மரபீனி மாற்றுக் கத்தரிக்காய் விற்பனைக்கு வருமென்றும் அது மான்சான்டோ உருவாக்கியது அன்று என்றும் தமிழ் நாட்டு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியது என்றும் அண்மையில் சட்டப் பேரவையில் கூறினார்.

 

மரபீனி மாற்றுக்கான மூலசூத்திரத்தை மான்சான்டோவிடம் இருந்துதான் தமிழ்நாட்டு வேளாண் பல்கலைக் கழகம் வாங்கியுள்ளது.

 

தமிழக அரசின் முத்திரையை முகமூடியாகப் போட்டுக் கொண்ட மான்சான்டோ மரபீனி மாற்று கத்தரிக்காய் முதலில் வரும். பின்னர் முகமூடியை அகற்றிவிட்டு நேரடியாக மான்சான்டோ கத்தரிக்காயே விற்பனைக்கு வரும்

 

தமிழக அரசும் வீரபாண்டி ஆறுமுகமும் மான்சான்டோவின் நெருங்கிய கூட்டாளிகள் என்பது ஏற்கெனவே அம்பலப்பட்ட ரகசியமாகும். மான்சான்டோவின் மரபீனி மாற்று நெல் விதை நாற்றங்காலைத் தமிழ்நாட்டில் தமிழக அரசு ரகசியமாக அனுமதித்ததும் உழவர்கள் அந்நாற்றங்காலை அழித்ததும் ஊரறிந்த செய்தி.

 

எந்தப் பெயர் ஒட்டிக் கொண்டு வந்தாலும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. மரபீனி மாற்றுப் பருத்தியைச் சாகுபடி செய்து உரிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டு கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட விதர்ப்பா, ஆந்திரப் பிரதேச உழவர்களின் எலும்புக் கூடுகள் நமக்கு எச்சரிக்கைச் சின்னமாகும்.  மரபீனி மாற்று உணவுப் பண்டங்களை உண்போர்க்கு பலவகை நோய்கள் வருகின்றன.

 

எனவே என்ன விலை கொடுத்தேனும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்களைத் தமிழ்நாட்டில் நம் மக்கள் அனுமதிக்கக் கூடாது.  மரபீனி மாற்றுக் கத்தரிக்காய் சந்தைக்கு வந்தால் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அவற்றை அழிப்பதற்குத் உறுதி ஏற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

3.         தஞ்சைப் பெரிய கோயில் 1000 மாநாடு

 

ஒப்புவமை அற்ற உலகப் பெரும் கலைப் படைப்பான தஞ்சைப் பெரிய கோயிலைச் சோழப் பேரரசன் இராசராசன் எழுப்பி 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

 

இதனைக் கொண்டாடும் வகையில் தஞ்சையில் வரும் சூலை மாதம் தஞ்சைப் பெரிய கோயில் 1000 மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.

 

அம்மாநாட்டில் சோழர்கால ஆட்சி நிர்வாக முறை, பாசன முறை, கட்டடக் கலை, ஓவியம், நாட்டியம், இசை, இலக்கியம், மக்கள் வாழ்வியல் எனப் பல்வேறு தலைப்புகளில் பன்முகக் கருத்தரங்குகளும் ஆடல் பாடல்களும் நடைபெறும்.

 

தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வறிஞர்களும் கலைஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

 

 

Sunday, January 10, 2010

தமிழீழ தேசியத் தலைவர் தந்தையாருக்கு த.தே.பொ.க.வின் வீர அஞ்சலி!


தமிழீழ தேசியத் தலைவர் தந்தையார்

திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வீர அஞ்சலி!

கேணல் கிட்டுவிற்கு த.தே.பொ.க.வின் வீரவணக்கம்!

இந்திய அரசின் துரோகத்திற்கு பலியான வேங்கைகளுக்கு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின்

வீரவணக்கம்!

Friday, December 25, 2009

இந்தியத் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் - இவ்வாண்டின் முக்கிய சம்பவமாய் ஆனந்த விகடனில்...




ஈழத்தமிழர் மீது இனவொழிப்புப் போரை தொடுத்த இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, பண உதவியும் ஆள் உதவியும் செய்த இந்திய அரசைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் இணைந்து “இந்திய - இலங்கை தேசியக் கொடிகள் எரிப்புப் போராட்ட”த்தை மே 25 2009 அன்று நடத்தியது.


சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சை, ஓசூர் ஆகிய முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பலரும் கைது செய்யப்பட்டனர்.


கோவையில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பா.தமிழரசன்(த.தே.பொ.க.), வே.பாரதி (த.தே.வி.இ.) உள்ளிட்ட தோழர்கள் 200 நாட்களுக்கும் மேலாக கோவை நடுவண் சிறையில் சிறைவைக்கப்பட்டு கடந்த மாதம் தான் விடுதலையாயினர்.


கடந்த ஆண்டு நடந்த 50 முக்கிய சம்பங்களில் இப்போராட்டமும் ஓர் முக்கிய சம்பவமாக “ஆனந்த விகடன்” வார இதழ் வெளியிட்டுள்ளது. அச்செய்தி வருமாறு:


Wednesday, December 23, 2009

மாவீரன் முத்துக்குமார் நினைவு நாளும் நம் கடமையும் - த.தே.பொ.க. அறிக்கை!

மாவீரன் முத்துக்குமார் கடந்த ஆண்டு, 2009 சனவரி 29ஆம் நாள் தமிழீழ மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தித் தீக்குளித்து மாவீரரானார். அவர் நினைவைப் போற்றும் வகையிலும் அவர் அளித்த இறுதி அறிக்கையின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதியெடுக்கும் வகையிலும் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை 2010 சனவரி 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் வீரவணக்கச் சூளுரை நாளாகக் கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கிறது.
இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள மார்வாடி குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் மற்றும் வடவர்கள் உள்ளிட்ட வெளியாரை வெளியேற்றுவோம்! தமிழ் ஈழம் அமைய துணை நிற்போம்! தமிழ்த் தேசக் குடியரசு அமைய தமிழ்த் தேசியப் புரட்சியை முன்னெடுப்போம்!
- ஆகிய சூளுரைகள் ஏற்கும் வகையில் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நடத்தப்படும் நிகழ்வுகளில் கீழ்க்கண்ட வாசகங்களை முழக்கங்களாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

’’தமிழினத்தின் இருள் நீக்கத்
தன்னையே சுடராக்கி தீக்குளித்த முத்துக்குமார்
உன்னை வணங்குகிறோம்
திலீபனும் மில்லரும் சேர்ந்து உருவான
செல்வனே வீரவணக்கம்!

இந்தி ஆதிக்கத்தின் இருளகற்ற
செந்தீ மூட்டி உயிரீந்த
சின்னச் சாமியின் எச்சமே வீரவணக்கம்!

உன்னைப் பின்பற்றி
உடலை நெருப்பிற்குத் தந்த
பதினைந்து தமிழர்க்கும் வீரவணக்கம்

மாற்று அரசியலைக் கட்டுங்கள்
ஓட்டு அரசியலை ஓட்டுங்கள் என்று
மாணவர்க்கும் இளைஞர்க்கும்
வழிகாட்டிய விடிவெள்ளி விடிவெள்ளியே
வீரவணக்கம்!

சேட்டென்றும் சேட்டானென்றும்
வந்தவனெல்லாம் தமிழகத்தைச் சுரண்ட
சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது என்றாய்

உன் நினவு நாளில்
வெளியாரை வெளியேற்ற சூளுரைக்கிறோம்!

ஈழம் வெல்லவும்
இங்கு தமிழ்த் தேசம் மலரவும்
எங்களை ஒப்படைக்கிறோம்!

இந்தியாவும் சிங்களமும் தமிழினத்தின்
இரட்டைப் பகையென அறிந்து கொண்டோம்

உங்களை எரித்த நெருப்பு
எங்கள் பகையை எரிக்கட்டும்
எங்கள் மன அழுக்குகளை எரிக்கட்டும்
சாதி வெறி, மத வெறி மாசுகளை எரிக்கட்டும்

நெருப்புப் போராளிகளே
உங்களுக்கு எங்கள் நினைவு மலர்கள்!
வெல்க தமிழ்த் தேசியம்!’’

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT