உடனடிச்செய்திகள்

Sunday, May 4, 2025

*சாதிக் கொலைகள் !* *நோய் நாடி நோய்முதல்நாடி!* பெ.மணியரசன்

 



*சாதிக் கொலைகள் !*
*நோய் நாடி நோய்முதல்நாடி!*

பெ.மணியரசன்



பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=============================================
கூலிக்கொலைகள் ,சாதிக்கொலைகள், குடும்பக் கொலைகள் மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
பள்ளி ,கல்லூரி மாணவர்களின் புத்தகப் பைக்குள் வீச்சரிவாளும் வெட்டுக்கத்தியும் இருக்கின்றனவா என்று சோதித்து மாணவர்களை கல்வி நிலையத்துக்குள் அனுமதிக்கும் அவலம் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது.
கடந்த 29 .04.2025 நாளேடுகளில் ஒரு சாதிக் கொலை செய்தி வந்தது. நிகழ்வு பழையது .
உச்ச நீதிமன்றம் சாதி கொலைகாரர்களின் வாழ்நாள் சிறைத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பு வந்திருந்தது .
தினத்தந்தி நாளேடு( 29 .4 .2025) மிகவும் விரிவாக அக்கொலை நிகழ்ந்த முறையை எழுதியிருந்தது.
தொலைக்காட்சிகளும் விரிவாக மேற்படி சாதிக்கொலைகளை விவரித்தன.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள புதுகூரைப்பேட்டையைச் சேர்ந்த பட்டியல் வகுப்புப் பொறியாளர் (அகவை 25 ) முருகேசனும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கண்ணகியும்( அகவை 22 )காதலித்து- பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு வெளியூரில் குடும்பம் நடத்தினர் .
அவர்களை ஏற்றுக் கொள்வதாகப் பொய்கூறி ஏமாற்றி அழைத்து வந்து கண்ணகியின் பெற்றோரும் உற்றார் உறவினரும் ஊர் மக்கள் முன்னிலையில்( 8 .7. 2003) அன்று கண்ணகியையும் முருகேசனையும் நிறுத்தி இருவர் -ஆடைகளை களைந்து சாணி போன்ற கழிவுகளைக் கரைத்து ஊற்றி இருவர் முகத்திலும் காரித் துப்பி உயிர் கொல்லி நஞ்சுக் கரைசலை இருவர் மூக்குக்குள்ளும் காதுகளுக்குள்ளும் கொட்டி துடிக்கத் துடிக்க சாகடித்தார்கள்! இரசித்தவர்கள் இரசித்தார்கள்; துக்கப்பட்டவர்கள் வெளிக்காட்டாமல் மனதிற்குள் வேதனைப்பட்டார்கள். துக்கத்தை வெளிப்படுத்தினால் சாதிய வெறியர்களின் அடி உதை பரிசாக கிடைத்திருக்கும்.
இந்த இரட்டை படுகொலை விருத்தாசலம் காவல்துறையினருக்குத் தெரிந்திருக்கிறது .மேல் சாதி ஆதிக்க வெறியில்இருந்த விருத்தாசலம் ஆய்வாளர் செல்லமுத்து உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் இருவரும் இக்கொலை குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வில்லை .எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
பத்து நாட்கள் கழித்து இப் படுகொலைகள் நாளேடுகளில் வந்துள்ளன . அதன் பிறகு காவல்துறையினர் ஒப்புக்கு கண்ணகி உறவினர்கள் 4 பேர் -முருகேசன் உறவினர் 4 பேர் என "சம நீதி- வழங்கி வழக்குப் பதிந்து சமூகநீதி காத்து " கைது செய்கின்றனர்.
தன்னார்வ அமைப்புகள் நடந்த உண்மைகளைப் போட்டு உடைக்கின்றன. மனச்சான்றுள்ள மனிதர்கள் அனைவரிடமும் ஆத்திரம் பொங்குகிறது .
2004 ஆம் ஆண்டு இவ்வழக்கு இந்திய அரசின் காவல்துறை (சிபிஐ) விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
இதில் முக்கிய மிக கொடிய குற்றவாளியான- கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியனுக்குத் தூக்கு தண்டனையும்- கண்ணகியின் தந்தை துரைசாமிக்கும் மற்றும் 9 பேருக்கும் தலா 3 வாழ்நாள் தண்டனையும்- ஆய்வாளர் செல்லமுத்து உதவியாளர் தமிழ்மாறன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
அண்மையில் தஞ்சை மாவட்டம் நடுக்காவேரி காவல்நிலையப் பெண் ஆய்வாளர் சாதியப் பாகுபாட்டுடன் நடந்து கொண்டதால் படித்த பட்டியல் வகுப்புப் பெண் காவல் நிலையம் முன்பாகவே நஞ்சருந்தி இறந்தார். என்ன கொடுமை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்ணகி முருகேசன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்தது .காவல் உதவி ஆய்வாளர் தமிழ் மாறனின் வாழ்நாள் தண்டனையை இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையாகப் குறைத்தது .மற்றவர்களின் வாழ்நாள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேலும் முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான் ஷீ துலியா ,பிரசாந்த் குமார் அமர்வு 28.04.2025 அன்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. மிகக் கடுமையாக காவல்துறை அதிகாரி செல்லமுத்துவையும் சாதி ஆதிக்க வெறியர்களான கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் சாடி உள்ளது உச்சநீதிமன்றம் .
இதற்கு முன் தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டகை பகுதியில் இதேபோன்று பிற்படுத்தப்பட்ட பெண்ணுக்கும் -பட்டியல் வகுப்பு இளவரசன் ஆணுக்கும் காதல் ஏற்பட்டதால் பட்டியல் வகுப்பாரின் மூன்று வீதிகளில் வீடுகளை முழுமையாக மேல் சாதியார் எரித்து சாம்பல் ஆக்கினர். உடுமலைப்பேட்டை கடைத்தெருவில் சங்கர் என்ற பட்டியல் வகுப்பு இளைஞரை சாதிவெறியர்கள் வெட்டிப் படுகொலை செய்தார்கள் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்ததுதான் சங்கர் செய்த குற்றம்! அதற்கு முன் சேலம் ஓமலூர் பட்டியல் வகுப்பு பொறியியல் பட்டதாரி கோல் ராஜ் படுகொலை செய்யப்பட்டார். பிறப்படுத்தபட்ட பட்டதாரி பெண்னை காதல் செய்த குற்றம்!
கடந்த ஆண்டு நாங்குநேரியில் பட்டியல் வகுப்பு மாணவன் தன்னோடு படிக்கும் மேல் சாதி மாணவர்களுக்கு பீடி, சிகரெட் ,தின்பண்டங்கள் ,வாங்கித் தர மறுத்ததற்காக அம்மாணவனையும் அவன் சகோதரியையும் வெட்டி காயப்படுத்தினர் மேல் சாதிஆதிக்க வாத மாணவர்கள் . அதே மாணவன் மீண்டும் அதே சாதி வெறியர்களால் அண்மையில் தாக்கப்பட்டுள்ளார் .
பள்ளி ,கல்லூரி மாணவர்களின் இடையே பொதுவான நட்புமும் பழக்கமும் இருந்த காலம் மலையேறிவிட்டது. அவர்கள் தங்கள் -தங்கள் சாதிகளுக்கு என்று தனி அடையாளமுள்ள கயிறுகளைக் கைகளில் கட்டிக் கொண்டு சாதி அடிப்படையில் மட்டுமே நட்புக் கொள்கிறார்கள். சாதி முகாம்களாகவே பள்ளிப் பிள்ளைகள் பிரிந்து படிக்கிறார்கள் என்ற கொடுமையைக் கேட்கும் போதே காதுகளில் வலி -நெஞ்சில் சூடு ஏறுகிறது !
தினமணி நாளேட்டில் 28.04 2025 அன்று ஒரு சிறப்புக் கட்டுரை! அதில் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் போடுவதில்
மாணவர்கள் காட்டிய சாதி ஆணவங்கள்- வெறிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் பழிக்குப்பழி வாங்கும் உறுமல்களுடன் சாதி மோதல்களை தூண்டும் ரீல்ஸ்கள் ஏராளம் !
இதனால் காவல்துறை 464 பக்கங்களை சமூக ஊடகங்களில் மூடி உள்ளது.
தமிழ்ச் சமூகம் பண்பாட்டுத்துறையில் வளர்ச்சி அடையாமல் கடந்த காலத்தை விடவும் கொடுமையாகவும் ,சாதி வெறி உணர்வுகளுடன் - சாதி படுகொலைகளுடன் பின்னோக்கிப் போவது ஏன் ?
இது என்ன சமூக இயங்கியல் ?
எந்திர வளர்ச்சியின் பயன்கள் எல்லோருக்கும் கிடைக்கின்றன. கொலம்பியாவில் உள்ள பேரக் குழந்தைகளை குற்றாலத்தில் உள்ள தாத்தாவும் பாட்டியும் கைபேசியில் நேருக்கு நேர் பார்த்து கொஞ்சிக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட வளர்ச்சிகள் எல்லா சாதிகளுக்கும் கிடைக்கின்றன !
கல்வி வசதியும் அப்படியே அனைத்து சாதியினருக்கும் கிடைக்கின்றது .
ஆனால் சாதி உயர்வு தாழ்வு மனித மனத்தில் பேயாட்டம் போடுவது ஏன் ?
"யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர் )"என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் முன்னோர்கள் சொன்னார்கள் என்று பெருமைப்பட்டுகொள்கிறோம் .
பிறப்பால் அனைவரும் சமம் என்று ஆசான் திருவள்ளுவப் பெருந்தகை சொன்னார் என்கிறோம்.
அவர்கள் வழிவந்த இந்த தமிழ்ச் சமூகம் இன்னும் திருந்தவில்லையே!
சாதி தீவிரவாதத்தில் இறங்கிச் சீரழிகிறதே! ஏன் ?
*சாதிகள் இல்லையடி பாப்பா!* *குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"* என்றார் பாரதியார்"
*"இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே "* என்று சாடினார் பாவேந்தர் பாரதிதாசன்!
இங்கு ஏன் இன்றும் சாதி வெறி?
காந்தியடிகளும் காங்கிரசாரும் சமத்துவம் பேசி, சகோதரத்துவம் வளர்த்த நாடு இது என்று பெருமை பேசுகிறார்கள்!
இங்கு ஏன் இவ்வளவு கொடிய சாதி வெறித் தாண்டவம் !அதுவும் உழைக்கும் பட்டியல் வகுப்பு மக்களுக்கு எதிராக!
தென் ஆப்ரிக்காவில் வெள்ளை இன ஆதிக்க வெறியர்கள் நம்மைப் போல் பிறப்பு உயர்வு தாழ்வில் இவ்வளவு கொலை வெறியோடு நடந்து கொண்டிருப்பார்களா? ஐயமே !
ஈவேராவும் திராவிடமும் சமூக நீதியை நிலைநாட்டி - உலகிற்கே சமத்துவ ஒளி வீசி வழிகாட்டிக் கொண்டிருக்கிறது திராவிடம் என்கிறார்களே !இங்கு ஏன் இவ்வளவு கொடிய சாதிப் படுகொலைகள்! சாதிப் பகையாட்டம்?
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதைக் கைவிட்டு -தமிழர்களைப் பிடித்தாட்டும் சாதி உளவியல் நோயை களைய வழி என்ன என்று சிந்திப்போம் !
*நோய் நாடி* *-நோய்முதல் நாடி!*
நம்முடைய பேராசான் திருவள்ளுவப் பெருந்தகை கூறியது போல் இக்காலத்திலும் இச்சாதி நோய் பரவியதற்கான மூல காரணத்தை ஆராய்வோம்!
இப்போது பிறப்பு அடிப்படையில் உழைப்புப் பிரிவினை இல்லை!
சாதி அடிப்படையில் தொழில் பிரிவினை இல்லை!
எல்லா சாதியினரும் அதிகமாகக்
கற்றிருக்கிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலர் முதல் தலைமைச் செயலாளர் வரை எல்லாப் பதவிகளிலும் சாதித் தடை இன்றி எல்லோருமே இருக்கிறோம் .
தொழிற்சாலைகளில்- அலுவலகங்களில் எல்லா சாதியினரும் பணிபுரிகிறோம் !
உணவகங்களில் சாதிஒதுக்கீடில்லாமல் எல்லோரும் எல்லா இருக்கைகளிலும் உட்கார்ந்து உண்ணுகிறோம் !
ஆனால் பள்ளிக்கூடங்களில் சாதிக் கயிறு கட்டிக் கொண்டு மாணவர்கள் தனித்தனித் தொகுப்பாக உட்கார்வது ஏன் ?
வர வர சாதிப் பிரிவுகளில் அகலம் - ஏற்ற இறக்கம் குறைவதற்கு மாறாக அதிகமாவது ஏன்? சாதி அரசியல் கட்சிகள் பெருகியது ஏன் ?
அனைத்து சாதியினருக்குமான பொதுக் கட்சிகள் போல் தோற்றம் அளிப்பவை அனைத்தும் சாதி வாக்கு வங்கிகளைச் சார்ந்திருப்பது ஏன் -அவற்றை ஊக்கப்படுத்துவது ஏன் ?
சாதி அடிப்படையிலேயே பொதுக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் அமர்த்தப்படுவது அல்லது தேர்வு செய்யப்படுவது ஏன்?
இப்படிப்பட்ட உள்முகச் சாதிவாதம் காங்கிரசு, திமுக ,அதிமுக, போன்ற பல கட்சிகளில் பளிச்சென்று தெரிகிறது. ஆனால் சிபிஜ, சிபிஎம் போன்ற கம்யூனிஸ்டுக் கட்சிகளிலும் இந்தச் சாதிவாதம் தொற்றிக் கொண்டது எப்படி!
தமிழ்த் தேசிய அமைப்புகளையும் இந்த "சாதிவாதம்" விட்டு வைக்காது!
இன்னொரு அதிர்ச்சிச் செய்தியும் இருக்கிறது .சாதிவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பு சாதிப் பிரிவுகளுக்கிடையே கடுமையான சாதி உயர்வு தாழ்வு நிலவுகிறது !அவர்களுக்கு இடையேயும் ஒற்றுமை இல்லையே ஏன் !
இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன? தமிழர்களிடையே சமத்துவமும் ஒற்றுமையும் வளர வழி என்ன?
தேடுவோம்! (தொடரும்)
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
======================================

Friday, May 2, 2025

*போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் அறச்சீற்றம், ஆன்மிகர்களுக்கு வழிகாட்டி!* பெ. மணியரசன்



*போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின்
அறச்சீற்றம், ஆன்மிகர்களுக்கு வழிகாட்டி!*


பெ. மணியரசன்



பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
நாள் : 2.5.2025 ===================================
ஆன்மிகச் சான்றோர்கள் அரசியலுக்கும் சமூக அறத்திற்கும் சிறந்த பங்களிக்க முடியும் என்பதை மெய்ப்பித்து, அண்மையில், 21.4.2025 அன்று மறைவெய்தியுள்ளார் போப்பாண்டவர் என்ற பொறுப்பில் இருந்த போப் பிரான்சிஸ் அவர்கள்.
ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்தும், - தென்னமெரிக்காவின் பின்தங்கிய நாடான அர்ஜென்டினாவிலிருந்தும் ரோமாபுரி - வத்திக்கான் அரசுத் தலைவராக வரமுடியும் என்பதை அவர் நிலைநாட்டியுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகள் செல்வாக்குடன் தொடர்ந்து அப்பதவியில் இருந்துள்ளார்.
உலக அமைதி - நீதி - ஏழைகளுக்கான குரல் என்ற இம் மூன்றும் போப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலட்சியங்கள்!
கட்டற்ற லாப வேட்டை நடத்தும் தனியார் தொழில் - வணிகங்களை அவர் சாடினார். அனைத்து மனிதர்களுக்கும் ஞாயமான ஊதியமும் கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்க வேண்டும் என்றார்.
எந்த அக்கறையும் இல்லாமல் இயற்கை வளத்தைச் சீரழிப்பதை - இதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பைக் கடுமையாக - வெளிப்படையாகச் சாடினார். சுற்றுச் சூழலுக்கு இழைக்கப்படும் தீங்கு ஒரு சமூக அநீதியே என்றார். இது குறித்து அவர் அவரது பதவிக்கே உரியதான வெளிப்படைக் கடிதம் ஒன்றை (Encyclical) 2015-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அது நூல்வடிவில் லாடேட்டா சி (Laudato Si) என அறியப்படுகிறது.
போப் பிரான்சிஸ் மத நல்லிணக்கத்திற்கு உழைத்தவர் என்று புகழப்படுகிறார். பல்வேறு மாற்று மதங்கள், கிறித்துவத்துக்குள்ளேயே இருக்கும் உட்பிரிவுகள், (Denominations) கடவுள் நம்பிக்கை அற்றோர் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களிடையே, பேச்சு வார்த்தைகள் மற்றும் குறைபாடுகளைத் திருத்துதல் வடிவில் சமரசம் ஏற்பட உழைத்தார்.
உலகெங்கும் உள்ள ஏழைகள், இன்னும் குறிப்பாக உள்நாட்டு நிலைமைகளால் ஏதிலிகள் ஆனோர் - புலம் பெயர்ந்தோர் முதலியவர்களின் குரலாய் விளங்கினார் போப் பிரான்சிஸ். பன்னாட்டு சிக்கல்களில் கருத்துக் கூறத் தயங்காதவர்!
அதிகாரமற்றவர்களின் குரலாய் விளங்கிய போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில் உலக நாடுகளில் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ள குடியரசுத் தலைவர்கள், தலைமை அமைச்சர்கள், அமைச்சரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எந்த மதம் அல்லது சமயமாக இருந்தாலும், அவற்றின் பொறுப்பில் உள்ளோர் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதினங்களும் வைணவ ஜீயர்களும், கிறித்துவ, இசுலாமிய பீடங்களும் சமூகச் சிக்கலில் நடுநிலை, அறம் சார்ந்து கருத்துகள் கூற வேண்டும். காலஞ்சென்ற குன்றக்குடி அடிகளார், அவ்வாறு சமூகவியல் - மொழி - தமிழ்இனம் சார்ந்து கருத்துகள் கூறினார். ஆட்சியில் இருப்பவர்களின் மனம் கோணாமல் செயல்பட வேண்டும் என்று சமயத் தலைமை பீடங்கள் சுருங்கிக் கொண்டால், அரசியல் சீரழிவுகள், அட்டூழியங்கள் பெருகும்!
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்று உரத்துப் பேசினார் 7-ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர். “கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என்றார் இராமரலிங்க வள்ளலார் 19-ஆம் நூற்றாண்டில்!
வத்திக்கான் அரசுத் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களுக்கு வீர வணக்கம்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================


 

Thursday, May 1, 2025

மே நாள்: சிந்தனைப் புரட்சிக்குத் திசை காட்டட்டும் ! பெ. மணியரசன்



மே நாள்:
சிந்தனைப் புரட்சிக்குத்
திசை காட்டட்டும்
பெ. மணியரசன்


பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===================================
மே நாள் என்பது தொழிலாளர் நாள் மட்டுமல்ல - சாரத்தில் மனிதத்தின் நாள்! உழைக்கும் விலங்குகளுக்குக் கூட ஓய்வு கொடுத்த - பணவேட்டையாடிகள் - உழைக்கும் மனிதர்களுக்கு ஓய்வு கொடுக்க மறுத்தார்கள்!
ஓய்வு கோராத எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் - உழைப்பாளர்களுக்குக் கூடுதலாக ஓய்வு கிடைத்திருக்க வேண்டும்! மனித மனத்தில் தெய்வமும் உண்டு சாத்தானும் உண்டு என்பர்! அதாவது, மனித உள்ளத்தில் அறமும் உண்டு, அறக்கேடும் உண்டு. களைத்துப் போகாத எந்திரங்களைப் போலவே மனிதர்களும் உழைக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்கள். ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம்கூட வேலை வாங்கினார்கள்!
தீங்குகள் தொடரும்போது தீர்வுகள் வெடித்தெழும்! உழைப்புக்கு மனித நேயமுள்ள நேரவரம்பு கோரினார்கள் தொழிலாளர்கள்! பலநாடுகளில் இக்கோரிக்கை தன்னெழுச்சியாய்ப் பற்றிப் படர்ந்தது.
பன்னாட்டு தொழிலாளர் பேராயம் (The International Workers’ Congress) மாநாடு 1889-இல் பாரீசில் நடந்தபோது, தொழிலாளர்கள், நிகரமையர்கள் (Socialists) மார்சியக் கட்சியினர் முதலியோரைக் கொண்ட இரண்டாவது பன்னாட்டு மையத்தை (அகிலத்தை) அமைத்தனர். அது தொழிலாளர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வடித்து. அதற்காக பன்னாட்டளவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்தது. அப்போது, மே மாதம் முதல் நாளில் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள். மே 1 ஐத் தேர்ந்தடுத்த காரணம் இதுதான்:
அமெரிக்கக் கூட்டரசுத் தொழிலாளர்கள் (American Federation of Labour) என்ற யு.ஏஸ்.ஏ நாட்டுத் தொழிலாளர் அமைப்பு ஏற்கெனவே 1886 மே 1-ஆம் நாளில் தொடங்கி, தொடர்ந்து வட அமெரிக்க சிகாகோவில் ஹே மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தது.
4.5.1886 அன்று அமெரிக்க அரசின் காவல் துறையினர் ஆர்பாட்டக்கார்கள் பலரை அடித்து படுகாயப்படுத்தி கலைத்தனர். அப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக விளங்கிய 3 தொழிலாளர் தலைவர்கள் உட்பட 8 பேரை சிறையிலடைத்து தூக்கில் போட்டார்கள். அந்த 3 தலைவர்களின் பெயர்களும் இன்றும் ஒளிவீசி உலகெங்கும் பரவுகின்றது. அவர்கள், ஆகஸ்ட் ஸபைஸ், ஆல்பர்ட் பார்சன், சாமுவேல் ஃபீல்டென்! அதன்பிறகு உலகெங்கும் 8 மணி நேர வேலை கோரும் போராட்டம் மேலும் வீச்சுப் பெற்றது.
எனவே, அந்த 1886 மே 1-ஆம் நாளைத் தொழிலாளர் உரிமைப் போராட்ட நாளாக 1889-இல் பாரிசில் கூடிய பன்னாட்டுப் பேராயம் அறிவித்தது.
இந்த மே 1 உழைப்பாளர் நாளை இந்தியாவில் முதல் முதலாகக் கொண்டாடிய இடம் சென்னை கடற்கரை! முன்னெடுத்தவர் தென்னாட்டின் முதல் பொதுவுடைமையாளர் - சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்! சென்னையில் மெரினா கடற்கரையில் காலையிலும் திருவான்மியூர் கடற்கரையில் மாலையிலும் கொண்டாடினர். எம்.பி.எஸ். வேலாயுதம், சுப்பிரமணிய சிவா போன்ற துடிப்பு மிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்த மே நாள் கூட்டங்களில் உரையாற்றினர்.
இந்த இடத்தில் இன்னொரு முதன்மை நிகழ்வையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே, வெற்றிகரமான தொழிலாளர் வேலை நிறுத்தம் நடத்தி, சம்பள உயர்வும், வேலை நேரக் குறைப்பும் முதல்முதலாக சாதித்த இடம் தூத்துக்குடி! முன்னெடுத்துத் தலைமை தாங்கியவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்! ஆண்டு 1906! தொழிற்சாலை கோரல் மில்ஸ் நூற்பாலை.
அடுத்து முதல் முதலாக முறைப்படி ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கம் நிறுவப்பட்ட மண்ணும் இ்நதியாவிலேயே தமிழ் மண்ணே! சென்னை பின்னி ஆலைத் தொழிலாளர்களை மையப்படுத்தி இச்சங்கம் தொடங்கப்பட்டது. “சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union)! ஆண்டு 1918. இதன் முகாமையான நிறுவனர்கள் நடேச முதலியார் (நீதிக்கட்சி மூலவர்களில் ஒருவர்), திரு.வி. கலியாண சுந்தரனார்! சர்க்கரைச் செட்டியார் ஆகியோர்!
உழைக்கும் மக்களுக்கான முதல் புரட்சி - நிகரமைப் புரட்சி 1917 இரசியப் புரட்சி! அதை வரவேற்று, பூரித்து மனித சமத்துவம் - சனநாயகம் இரண்டையும் முதன்மைப்படுத்தி கவிதை யாத்தவர் பெரும் பாவலர் பாரதியார்!
“ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழந்தான்!”
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி”
என்று இரசியப் புரட்சியை பாடிப் பரவசப்பாட்டார் பாரதியார்!
பாவேந்தர் பாரதிதாசன் பிற்காலத்தில்
“ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினில்
உதித்ததும் மெய்யல்லவோ?”
“கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புலி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?” என்று கேட்டார்.
“எல்லார்க்கும் எல்லாமும் என்றிருப்பதான
இடம் நோக்கி நகர்கின்றது இந்த வையம்” என்றார்!
இன்று தமிழ்நாட்டின் நிலை என்ன?
‘மே நாளுக்கு விடுமுறை அறிவித்தது கலைஞர் ஆட்சி, மே நாள் பூங்கா அமைத்தது எங்கள் ஆட்சியில்தான்‘ என்று பெருமை பேசிக் கொண்டுள்ள தி.மு.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி என்பதை 12 மணி என்று, - 50 % உயர்த்தி, சட்டம் செய்தார். அரிவாள் - சுத்தியல் கொடி போட்டுக் கொண்டு, உதய சூரியனுக்கு விசுவாசம் காட்டி, சில தொகுதிகள் பெறும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் உட்பட பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும் மனித உரிமையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தவுடன், அச்சட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தார்.
ஆனால், நடைமுறையில் தொழிற்சாலை முதலாளிகள் தொழிலாளர்களிடம் 12 மணி நேரம் வேலை வாங்குவதைத் தி.மு.க. ஆட்சி உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு சென்னை - காஞ்சிக் கிடையே செயல்படும் தென்கொரிய சாம்சங் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், தாங்கள் 11 மணி முதல் 12 மணிநேரம் வரை வேலை வாங்கப்படுவதாகவும், தங்களுக்கு தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்படுவதாகவும் கூறி, 8 மணிநேரம் வேலை; தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள உரிமை கோரி சனநாயக வடிவில் போராடினர். அதை சி.பி.எம். தொழிற்சங்கம் வெளியிலிருந்து வழிநடத்தியது. தி.மு.க. ஸ்டாலின் ஆட்சி முழுக்கமுழுக்க சாம்சங் முதலாளிகளையே ஆதரித்து 8 மணி நேர வேலைக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
“தொழிலாளர்களுக்கு உற்ற தோழன் தி.மு.க.வே” என்று தி.மு.க. ஒரு காலத்தில் முழங்கியது. அப்போது அண்ணா சொன்னார், “மாஸ்கோவிற்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன், நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன். இரசியா எங்களை ஆதரிக்கும்” என்றார். காங்கிரசு பேசுது சனநாயக சோசலிசம். அது முதலாளிகளின் சோசலிசம். கழகம் பேசுவது விஞ்ஞான சோசலிசம், காரல் மார்க்சின் சோசலிசம். என்று பேசினார் எழுதினார். எந்த முழக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு சந்தை அதிகமாக இருக்கிறதோ அதைக் களவாடிமக்களிடம் முழங்குவது தி.மு.க.வின் பரம்பரை உத்தி! கருணாநிதியும் இதையேதான் செய்தார்.
கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க.வின் வாக்குச் சந்தை உத்திக்கு 50 விழுக்காடு வந்துவிட்டார்கள். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற, சட்ட மன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை உதயசூரியனுக்குக் கீழ் இணைந்து சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் சி.பி.எம். கட்சி, சாம்சங் தொழிலாளர்களுக்கு இரண்டகம் செய்து, ஆலை நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, மு.க. ஸ்டாலினுக்குச் “சலாம்” போட்டது!
தமிழ்நாட்டில் வெளிநாடுகளுக்குச் சென்று விருந்து வைத்து முதலாளிகளை அழைத்து வருவதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் (அ.தி.மு.க.) மு.க. ஸ்டாலினுக்கும் (தி.மு.க.) இடையே “ஆரோக்கியமான” போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
தொழிற்சாலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் அடிமாட்டுக் கூலிக்கு தற்காலிக, ஒப்பந்த தொழிலாளிகளையே - ஊழியர்களையே இந்திய - தமிழ்நாடு ஆட்சியாளர்களும் முதலாளிகளும் அமர்த்துகிறார்கள். தொழிற்சங்கங்கள் அந்த வரம்புக்குள் செயல்பட்டுக்கொண்டுள்ளன.
இந்த ஆண்டு (2025 மே 1) மே நாளுக்குத் தமிழ்நாட்டு நாளேடுகள் சிறப்புக் கட்டுரைகள் எதுவும் வெளியிடவில்லை.
நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் - எண்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்சியாகச் செயல்பட்டுவரும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், வேறெந்த அமைப்பையும் விட அதிகமாக ஈகம் செய்துள்ளன; மக்களுக்ககாகப் போராடியுள்ளன. ஆனால், அக்கட்சிகளுக்கு உரிய வளர்ச்சி இல்லை. எனவே, இந்திய ஏகாதிபத்தியவாத கட்சியான காங்கிரசு, பதவி - பணம் - விளம்பர வேட்டைக் கட்சிகளாக உள்ள தி.மு.க.- அ.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிறுத்துப் போகின்றன!
காரல்மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் மாமேதைகள்தாம்; ஆனால் அகநிலை விருப்பத்திற்கு அதிகமாக உள்ளாகிக் கற்பனை முடிவுகளையும் தங்கள் ஆய்வில் கலந்தார்கள். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்க்கலாம்.
தொழிலாளிகள் வர்க்கம் - இயல்பிலேயே புரட்சிகரமானது. அதுவே தலைமை தாங்கி நிகரமை (சோசலிச) புரட்சியை நடத்தும் என்று வரையறுத்துக் கூறினார்கள். (இதில் லெனினுக்கு சிறு வேறுபாடு உண்டு). ஆனால், உலகில் எங்காவது தொழிலாளி வர்க்கம் நிகரமைப் புரட்சியையோ, நாட்டு விடுதலைப் புரட்சியையோ, சனநாயகப் பாதுகாப்பு அல்லது சனநாயக மீட்புப் புரட்சியையோ முன்னெடுத்தது உண்டா? இல்லை! பல வர்க்கங்களில் உள்ள சனநாயக ஆற்றல்கள், புரட்சியாளர்கள் முன்னெடுத்துத் தலைமை தாங்கித்தான் - உழவர்கள் தொழிலாளர்கள், மற்றுமுள்ள மக்கள் பிரிவினர் ஆதரவைப் பெற்று நிகரமைப் புரட்சியோ, அல்லது மக்கள் சனநாயகப் புரட்சியோ, நாட்டு விடுதலைப் புரட்சியோ நடந்துள்ளன. எடுத்துக் காட்டு இரசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் புரட்சிகள்).
தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழினச் சிக்கலை முன்னெடுத்த தி.க., தி.மு.க. போன்ற கட்சிகள்தாம் கிடுகிடுவென வளர்ந்தன. (ஈ.வெ.ரா - சூதாகத் திராவிடத்தை திணித்தாலும், தமிழிர்கள் அதைத் “தமிழர் ஆரியர்”, “தமிழ்நாடு எதிர் இந்திய ஏகாதிபத்தியவாதம்” என்றே புரிந்து கொண்டனர்.)
இந்தியா என்பது ஒரு தேசமல்ல; பல தேசங்களைக் கொண்ட ஒரு நிர்வாகம் என்ற சமூக - அரசியல் உண்மையைக் கூட மறுத்து, ஆரிய-இந்தி ஏகாதிபத்தியவாதிகளான காங்கிரசுத் தலைவர்கள் திணித்த “இந்திய தேசியத்தை” இன்றுவரை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள்! பல தேசிய இன நாடுகள் கூட்டரசுகள் ஒரே நாட்டில் வாழ லெனின் வழிகாட்டினார். அதை ஏற்க மறுத்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்டுகள்!
அரசியல் சீரழிவு அனைத்துச் சீரழிவுகளையும் மக்களிடம் விதைக்கும். அதனால்தான், “அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி“ என்றனர் நம் முன்னோர். தி.மு.க.-அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளுக்கு மக்களுக்கான இலட்சியம் எதுவும் இல்லை! பதவி-பணம்-விளம்பரம் இம் மூன்றுமே இவற்றின் இலட்சியம்! சீரழிந்த ஊழல் தலைவர்கள் மக்களிடமும் சீரழிவை - ஊழலை விதைத்து வளர்ப்பர். அப்போதுதான் அவர்கள் தலைமையும், அவர்கள் குடும்பத்தார் தலைமையும் நீடிக்க முடியும், தொடர முடியும்!
தமிழ்த்தேசியர்கள், மே நாளைப் போற்ற வேண்டும். உழைப்பாளர் உரிமைகளை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். ஆனால், இங்கு ஏற்கெனவே உள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளைப் பின்பற்றக் கூடாது. மனித சமநிலைக்கு முன்னுரிமை கொடுப்போம். உழைக்கும் மக்கள் உரிமைக்கு முதலிடம் கொடுப்போம்.
அனைவர்க்கும் மே நாள் வாழ்த்துகள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================


 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT