ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில்
தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர் மரணம்
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கம் சிங்கள அரசையும் அதற்கு துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இந்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகம்(சாஸ்திரி பவன்) முன்பு வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.
ஈழத்தமிழனத்தை அடியோடு ஒழித்துக் கட்டும் இனவெறிச் செயலில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தி வேண்டுமெனவும் சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரியும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் ஈரோட்டு வழியாக சிங்கள அரசிற்கு பீரங்கிகளை இந்திய அரசு அனுப்பியதும், ஈழப்போரில் சிங்கள இராணுவத்துடன் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது புகைப்படங்கள் மூலம் அம்பலமானதும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டில் சாகும் வரை உண்ணாப்போரில் ஈடுபட்ட 4 மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் உள்ளனர். மேலும் அப்போராட்டத்தை நசுக்கும் தீய நோக்கோடு நேற்று காலை கலைஞர் கருணாநிதி அரசின் காவல்துறை பலவந்தமாக கைது செய்தது. அதே போல சென்னை, சேலம், கோவை என அனைத்து கல்லூரி மாணவர்களும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த் இளைஞர் முத்துக்குமரன் என்பவர் சென்னையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகம் (சாஸ்திரி பவன்) அலுவலகம் முன்பு, ஈழத்தமிழர்களுக்காக ஆதரவான முழக்கங்களை எழுப்பிக் கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. முத்துக்குமரன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
ஈழத்தமிழர்களை முழுவதுமாக அழித்தொழித்த வரும் சிங்கள அரசுடன் கைக்கோத்து செயல்படும் இந்திய அரசே இம்மாணவரின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இம்மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
Post a Comment