ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசையும் அதற்கு துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து தமிழகத் தலைநகர் சென்னையில் இந்திய மத்திய அரசு அலுவலகம் முன்பு இன்று காலை(29-01-09) தீக்குளித்து வீரமரணம் எய்திய ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் இரங்கல் கூட்டங்கள் இன்று மாலை நடந்தன.
தஞ்சை
தஞ்சை தொடர்வண்டி நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி அமைதிப் பேரணி நடந்தது. பேரணி பழைய பேருந்து நிலையத்தை அடைந்ததும் அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் சந்திரக்குமார், தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த அய்யனாபுரம் சி.முருகேசன், மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில காளியப்பன், ஆதித்மிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் இளமதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கலுரை ஆற்றினர்.
"மொழிப்போர் தியாகிகள் தொடங்கி ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் வரை இந்தியாவிற்கான கடைசி வணக்கம். இந்திய தேசியத்தையும் காங்கிரஸ் கட்சியையும் கூண்டோடு ஒழித்து இறுதி வணக்கம் செலுத்துவோம்" என்று பெ.மணியரசன் இரங்கலுரையில் குறிப்பிட்டு பேசினார்.
ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மதுரை
ஈழத்தமிழர்களுக்க இன்னுயிர் நீத்தி ஈகி முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து மதுரை ஜான்சி ராணி புங்காவில் வீரவணக்கப் பேரணி நடந்தது. மாலை 6.00 மணியளவில் ஜான்சிராணி புங்காவில் தொடங்கிய பேரணி மேலமாசி வீதியில் முடிவுற்றது.
பேரணியின் முடிவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை அமைப்பாளர் இராசு தலைமை தாங்கினார். இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மதுரை மாநகரச் செயலாளர் பரவணன், ம.தி.மு.க. மதுரை மாநகரச் செயலாளர் பொடா புமிநாதன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் செந்தில் வேல் மற்றும் வழக்கறிஞர்கள், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவா்கள், தலித் அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் திரளாக இதில் கலந்து கொண்டன. இறுதியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் கருப்பையா இரங்கலுரையாற்றினார்.
சென்னையில் நாளை இறுதி ஊர்வலம்
சென்னை கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமாரின் வீட்டிலிருந்து நாளை காலை 10.00 மணியளவில் இறுதி ஊர்வலம் நடக்கிறது. இதில் தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டு கொள்கிறது.
Post a Comment