ஈரோட்டில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகபேசியதாக தமிழக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரையும் நிபந்தனையில்லா பிணையில் விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டது. கடந்த 20-1-2008 அன்று மாலை 7 மணியளவில் மூவரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்தனர்.
அவர்களை வரவேற்க பெரியார் திராவிடர் கழக கோவை செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், கோவை மாவட்ட த.தே.பொ.க. அமைப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட தலைவர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாக சிறை வாயிலில் கூடி இருந்தனர். தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடிக்க மூவரும் ஊர்வலமாக மக்கள் திரளுடன் கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சிறை அனுபவங்களையும் சென்னை உயர் நீதிமன்றமானது தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கியமை பற்றியும் விளக்கிகூறினார்கள்.
அதில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர் என்று கூறினார்.
"பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல நாடுகள் எதிர்ப்பால், தாக்குதல் நிறுத்தப்பட்டது. பாலஸ்தீனம் மீது தாக்குதல் கூடாது என்று இந்தியாவும் சொன்னது. தமிழர்களுக்கென்று எந்த நாதியும் இல்லை. பாலஸ்தீனம் மீது தாக்குதல் கூடாது என்று சொன்ன இந்தியா, இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை.
ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை மட்டுமே தொடர்ந்து பேசுகின்றனர். தமிழகம் டில்லியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர்.
காங்கிரஸ் எங்கு போட்டியிட்டாலும் அங்கு எதிர்ப்பு தெரிவிபோம்,. காங்கிரசை ஒழிப்போம் என்று பெரியார் கூறினார். அந்த வேலையை அவரது பேரன் இளங்கோவன் செய்து கொண்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிப்பதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பெ.மணியரசன் பேசினார்.
Post a Comment