உடனடிச்செய்திகள்

Thursday, January 8, 2009

பிரதமருக்குக் கருப்புக் கொடி :: பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500 பேர் கைது.

பிரதமருக்குக் கருப்புக் கொடி 
பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500 பேர் கைது.
 
 ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு தமிழக மக்கள் விடுத்தக் கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனா.
 
ஈழத்தில் நடைபெறும் போரை நிறுத்துமாறு தமிழக முதல்வர், தமிழக அனைத்துக் கட்சிக் குழு, தமிழக சட்டமன்றம், பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும் இயக்கங்களும் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாமல் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம் காத்து வருகிறார். இலங்கைக்கு செல்லப் போவதாக அறிவித்திருந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அதற்கான வேலைகளில் சிறிதும் ஈடுபடவில்லை. ஈழத்தமிழர்களை முற்றாக சிங்கள அரசு அழித்து விட்ட பிறகுதான் அவரது பயணத்திற்கு நாள் குறிக்கப்படும் என தெரிகிறது.
 
இந்நிலையில் தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து தற்பொழுது ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை சிறையில் சந்தித்து ஆலோசனை செய்து விட்டு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற்ன, சிறைவாசலில் சென்னை வரும் இந்தியப் பிரதமருக்குக் கருப்புக் கொடிக் காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
 
இதனிடையே பிரதமர் கலந்து கொள்ளவிருக்கும் மாநாட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போராட்டத்திற்கு அனுமதி மறுத்துத் தடை விதிக்கப்பட்டது.
 
போராட்டத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து உட்பட 3 பேர் ஓசூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் நேற்றிரவு(7-1-2008) 9.30 மணியளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
 
இச்சூழலில் தடையை மீறி இன்று(8-1-2008) காலை 8. மணியளவில் சென்னை கவர்னர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
 இவ்வார்ப்பட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தேனிசை செல்லப்பா, திரைப்பட இயக்குனர் புகழேந்தி உட்பட பல தலைவர்களும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் கருப்பு உடையுடனும்  கருப்புக் கொடிகளுடன் திரளாக கலந்து கொண்டனர். இந்திய அரசைக் கண்டித்தும் பிரதமர் மன்மொகன் சிங்கை திரும்பிப் போ என வலியுறுத்தியம் முழக்கங்கள் எழுப்பபட்டன.
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலையம் பின்புறமுள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT