”உழவர்கள் கட்சி கடந்து திரள வேண்டும்” – தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!
“உழவர்கள் கட்சி கடந்து
திரள வேண்டும்” என தமிழக உழவர்
முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன்
பேசினார்.
அடயாளம் சிறு
அணைக்கட்டிலிருந்து நடப்பு நிதியாண்டிலேயே வாய்க்கால் வெட்ட நிதி ஒதுக்கி
செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணி மற்றும் தென்பெண்ணை கிளை
வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பில் இன்று (31.12.2012),
இராயக்கோட்டை
பேருந்து நிலையம் அருகில், உண்ணாப் போராட்டம்
நடைபெற்றது.
போராட்டத்திற்கு திரு தூ.தூருவாசன் (தமிழக உழவர்
முன்னணி) தலைமையேற்றார். தென் பெண்ணைக் கிளை வாய்க்கால்
கோரும் உழவர் அமைப்பு இலங்கனம்பட்டி கிளைச் செயலாளர் திரு. செ.தேவராசன்
வரவேற்புரையாற்றினார். தமிழக உழவர் முன்னணியாளர்கள் லிங்கனம்பட்டி திரு.
நிர்மலா, கொப்பக்கரை திரு. காவேரி, திரு பெ.திருப்பதி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
தென்பெண்ணை
கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பின் ஆலோசகரும், தமிழக
இளைஞர் முன்னணித் தலைவருமான தோழர் கோ.மாரிமுத்து, அளேசிபம் கிளைச் செயலாளர் திரு.அனுமந்தப்பா, அயர்னப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் திரு. பாப்பண்ணா உள்ளிட்ட
பல்வேறு தலைவர்களும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிறைவாக கோரிக்கை
குறித்து, தமிழக உழவர் முன்னணி
ஆலோசகரும், தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் விளக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில்,
“வேளாண்மைக்காக நீரின்றி தவிக்கும் அடயாளம் பகுதியில் வாய்க்கால் மூலம் 12 ஊராட்சிகளுக்கு
உட்பட்ட ஏரி, குளம், குட்டைகளில் நீரினை நிரப்ப
வாய்ப்புள்ளது. அப்படி நிரப்பப்பட்டால் நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்பாகவும் அது அமையும் என்று கருதி தான், கடந்த 20 ஆண்டுகளாக, இப்பகுதியில் வாய்க்கால் வெட்ட வேண்டுமெனத் தொடர்ந்து தனிநபர்களாலும், பல்வேறு அமைப்புகளாலும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
அடயாளம் அணையிலிருந்து
தொடங்கி தென் பெண்ணை கிளை வாய்க்கால்
அமைத்திடும் இந்த எளிய திட்டத்திற்கு கூட
நிதி ஒதுக்காமல் தமிழக அரசு புறக்கணித்து வருகிறது. இராயக்கோட்டை பகுதியில் தக்காளி, காய்கறி சாகுபடிகள் முக்கியமானவை. ஆனால் இங்கு ஒரு
குளிர்பதன கிடங்குகூட அமைக்கப்படவில்லை. இதனால், எளிதில் அழுகும்
பொருட்களை விளைவிக்கும் உழவர்கள், வணிகர்களின்
தயவில் விடப்படுகிறார்கள். இந்த குளிர்பதன
கிடங்கு அமைக்கும் எளியத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்த
மறுக்கிறது அரசு. இதற்கான அடிப்படை காரணம், உழவர்களை வேண்டாதவர்களாக, இந்திய, தமிழக அரசு நினைத்துக் கொண்டுள்ளதே ஆகும்.
அண்மையில் தேசிய வளர்ச்சி
மன்றக் கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உழவர்கள் வேளாண்மையை விட்டு
வெளியேற வேண்டும் என்று கூறியிருப்பது இந்திய அரசின் கொள்கை நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இடுபொருட்களின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிற
இந்திய அரசு, இதையேக் காரணமாகக் கூறி உழவர்களை
வேளாண்மையை விட்டு வெளியேறுமாறு கூறுகிறது.
உழவர்களை நிலத்தில்
இருந்து வெளியேற்றிவிட்டு அந்நிலங்களை பெரும் தொழில் நிறுவனங்களுக்கு,
பெரும் பண்ணைகள்
அமைத்துக் கொள்ள உதவும் வகையில் வழங்க விரும்புகிறது. மக்களின் உணவு தேவைக்கு இறக்குமதி செய்து
கொள்ளலாம் என்று திட்டமிடுகிறது. இவ்வாறான உழவர் விரோத
போக்குகளை எதிர்த்து போராடுவதுக்கு தேர்தல் கட்சிகளுக்கு தெம்பு கிடையாது. ஏனெனில், இக்கட்சிகளை கம்பெனிகளே நடத்துகின்றன. எனவே உழவர்கள் கட்சி கடந்து ஒன்று திரண்டு தொடர்ந்து போராட
வேண்டும்” என பேசினார்.
எழுச்சியோடு
நடைபெற்ற இவ் உண்ணாநிலை
போராட்டத்தில், 12 ஊராட்சிகளை சேர்ந்த
உழவர்களும், ஊர் பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும்
திரளாகப் பங்கேற்றனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Post a Comment