உடனடிச்செய்திகள்

Thursday, January 17, 2013

தமிழர் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் - தோழர் பெ.மணியரசன் பேச்சு


தமிழ்ப் புத்தாண்டு - தைப் பொங்கல் விழா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி -
 தமிழக இளைஞர் முன்னணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


தஞ்சை - செங்கிப்பட்டி

பூதலூர் ஒன்றிய தமிழக இளைஞர் முன்னணி மற்றும் செங்கிப்பட்டி தானி ஓட்டுநர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில், 14.01.2013 அன்று மாலை, தமிழர் திருநாள் பெருவிழா செங்கிப்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு, த.இ.மு. ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு தலைமையேற்றார். தோழர் பி.தட்சிணாமூர்த்தி வரவேற்புரையாற் றினார்.

“தழல் தருக தை மகளே” என்ற தலைப்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தஞ்சை செயலாளர் புலவர் கோ.நாகேந்திரன் தலைமையில் பாவீச்சு நடை பெற்றது. ‘இனப்பகை எரிக்க’ என்ற தலைப்பில் கவி ஞர் கவிபாஸ்கர் அவர்களும், ‘மொழிப்பகை எரிக்க” என்ற தலைப்பில் கவிஞர்  கவித்துவன் அவர்களும், ‘பெண்ணுரிமைப் பகை எரிக்க’ என்ற தலைப்பில் கவிஞர் இராசாரகுநாதன் அவர்களும், ‘மண் ணுரிமைப் பகை எரிக்க” என்ற தலைப்பில், கவிஞர் குழ.பா.ஸ்டாலின் அவர்களும் பாவீச்சு நிகழ்த்தினர். 

முனைவர் த.செயராமன் அவர்களை நடுவராகக் கொண்டு,  “தமிழின உயர்வுக்கு பெரிதும் தடையாய் இருப்பது பொறுப்பற்ற ஊடகங்களா? விழிப்பு ணர்வற்ற மக்களா? கொள்கையற்ற அரசியலா?” என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் நடைபெற்றது. “பொறுப்பற்ற ஊடகங்களே” என தோழர் சிவராசு அவர்களும், “விழிப்புணர்வற்ற மக்களே” என தோழர் ரெ.கருணாநிதி அவர்களும், “கொள்கையற்ற அரசியலே” என தோழர் நா. வைகறை அவர்களும் சொற்போர் புரிந்தனர். கொள்கையற்ற அரசியலே என நடுவர் த.செயராமன் தீர்ப்பு வழங்கினார்.

திரு. அய்யனாவரம் சி.முருகேசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.இ.மு. துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமார், நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.காமராசு, மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் கெ.மீனா, தோழர் அ.விடுதலை வேந்தன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். தானி ஓட்டுநர் சங்கத்  தோழர் வி.சத்யா நன்றி நவின்றார். 

நிறைவாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விழாப் பேருரை யாற்றினார். அவர் பேசுகையில், “நாம் பொங்கல் விழா, தமிழர் திருநாள் விழா, உழவர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழா என பல்வேறு சிறப்புகளை உள் ளடக்கி இந்த விழாவைக் கொண்டாடுகிறோம். மக்கள் மொழியில் பொங்கல் என்று அழைக்கிறார்கள். ஆனால், பஞ்சாங்கத்தில் மகர சங்கராந்தி என்று இந்நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனியச் சார்பாளர்களும், இந்நாளை ‘சங்கராந்தி’ என்றே குறிப்பிடுகிறார்கள். தமிழர்களுடைய கோயில்கள், ஊர்கள் ஆகியவற்றின் பெயர்களை தமிழிலிருந்து சமற்கிருதத்திற்கு மாற்றி விட்டார்கள். அதைப் போலவே தமிழர்களுடைய திருவிழாக்கள், பண் பாட்டுச் செயல்கள் அனைத்தையும் சமற்கிருதத்தில் பெயரிட்டு அழைக்கிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள்? 

தமிழர்களுக்கென்று சொந்த வரலாறில்லை, சொந்த பண்பாடு இல்லை, சமற்கிருதத்தைத் தவிர்த்துவிட்டு இயங்குவதற்கு தனித்துவமுள்ள மொழி இல்லை என்று தமிழ்நாட்டிலேயே மண்ணின் மக்கள் தங்களை தாழ்வாகக் கருதிக் கொள்ள வேண்டும், இரண்டாந்தர மக்களாக கருதிக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தோடு தான் ஆரியப் பார்ப்பனர்கள் அனைத்தையும் சமற்கிருதமயமாக்கி வருகிறார்கள். 

இன்றைக்கு தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. 1921ஆம் ஆண்டு முதல் பல்வேறு கருத்தரங்குகளில் மறைமலை அடிகளார், நமச்சிவாயர், திரு.வி.க., சோமசுந்திர பாரதியார், கி.ஆ.பெ.விசுவசாதம் போன்ற தமிழறிஞர்கள் கூடி தை முதல் நாளை தமிழர் திருநாளாக கொண்டாட வேண்டுமென அறிவித் தார்கள். தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமாக, அதை திருவள்ளுவர் ஆண்டு தொடக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். கடந்த தி.மு.க. ஆட்சி, அதை அரசாணையாக்கி தை முதல் தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாள் என்று அறிவித்தது. அதற்குப்பின் வந்த, செயலலிதா ஆட்சி, அந்த அரசாணையை நீக்கி சமற்கிருதப் பெயர்களையுடைய பழைய 60 ஆண்டுகளையே தமிழாண்டாக நீடிக்கச் செய்துள்ளார். 

தமிழ் என்றாலே செயலலிதாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு விடுகிறது. செயலலிதா ஆட்சியிலிருக்கின்ற இந்தக் காலம், பார்ப்பனியத்துக்கு புத்துணர்ச்சி காலம் என்று பார்ப்பனிய சக்திகள் கருதுகின்றன. தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குநராக இருந்த நாகசாமி என்பவர் இப்பொழுது மிகத்துணிச்சலாக தமிழுக்கு எதிராக ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதில், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்றவை அனைத்தும் சமற்கிருத நூல்களைப் பார்த்து தமிழில் எழுதப்பட்டவை என்று அவர் கூறுகிறார். தமிழர் களுக்கென்று சொந்த இலக்கியம், வாழ்க்கைமுறை எதுவும் இல்லை என்கிறார். தமிழ் எழுத்துகளும், தமிழ் எழுத்து முறையும், பிராமணர்கள் உருவாக்கிய பிராமி எழுத்துமுறையிலிருந்து வந்தது என்கிறார். 

தமிழுக்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக, கருத்துகள் கூறி, பார்ப்பனியத்திற்கு புத்துயிர் ஊட்ட புதிய எழுச்சியோடு கிளம்புகிறார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தையும், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவல கத்தையும் கட்டி பல்கலைக்கழகத்தின் அடையாளத் தையே செயலலிதா அழிக்கிறார். 

தி.மு.க.வோ, அதன் தலைவர் கருணாநிதியோ தமிழைப் பற்றி பேசுவார்களே தவிர, ஆரியத்துடன் கூட்டணி சேர்ந்து கொண்டு, தமிழர் தனித்துவ அடையாளங்களை அழிப்பதற்குத் துணை போ வார்கள். இந்த நிலையில், நாம் கொண்டாடும் தமிழர் திருநாள் பெருவிழா தமிழர்களின் சிறந்த கூறுகளை முன்னிறுத்துவதாகவும், ‘மனிதர்கள் அனைவரும் சமம் தமிழர்கள் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டை, கனியன் பூங்குன்றன், திருவள்ளுவர் ஆகியோர் வலியுறுத்திய சமத்துவ அறங்களின் மீது மீட்டுருவாக்கம் செய்வதாகவும் அமைய வேண்டும்” என அவர் பேசினார்.

சிதம்பரம்

சிதம்பரம் நகர தமிழக இளைஞர் முன்னணி சார்பில், 14-01-2013 தமிழர் புத்தாண்டு - தைத் பொங்கல் நாளன்று, ஆடவர், பெண்கள், சிறுவர், சிறுமியர் புத்தாடை அணிந்து தமிழர் திருநாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 

விழாக்கோலம் பூண்ட  சிதம்பரம் வர வர முனி பள்ளித் திடலில் கபடி, உரியடி, சிலம்பாட்டம், மகளிர் மற்றும் சிறுவர் பங்குபெற்ற ஊசி கோத்தல், எலு மிச்சை ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தோழர் இரா.ராசேசுக்குமார் அவர்களின் சிலம்ப பயிற்சி மாணவர்களின் சிலம்பாட்டம், குத்து வரிசை தற்காப்பு முறை, கலை நிகழ்ச்சிகள் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. 

போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் ‘பொங்க லோ பொங்கல்’ என மகிழ்ச்சி முழக்கங்களுக்கிடையே பொங்கல் வைக்கப்பட்டது. விழா நிகழ்ச்சிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழக இளைஞர் முன்னணி தோழர்களும், தோழியர்களும், சிறு வர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் உற்சா கத்துடன் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ஆ.கலைச்செல்வன், இர.நாராயணன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று போட்டிகளை சிறப்பாக வழிநடத்தினர்.

விழாவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழக உழவர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி, அக்னிச்சிறகுகள் அமைப்புகளின் தோழர்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் அரசுக் கலைக்கல்லூரி கல்வியாளர்களும் திரளாகப் பங்கு பெற்றனர். 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் திருநாள் விழா மற்றும் போட்டி நிகழ்ச்சிகளை தோழர்கள் ஆ.குபேரன், வே.சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஒருங்கிணைத் தனர்.

முருகன்குடி

பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், த.இ.மு. மற்றும் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் விழா, முருகன்குடி நூலகக் கட்டடம் அருகில், காலை 6 மணி முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. 

காலை 6 மணிக்கு, தமிழ்ப் புத்தாண்டை வர வேற்று, வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. “ஆங்கில சனவரியை புறக்கணிப்போம்! பார்ப்பன சித்திரையைப் புறக்கணிப்போம்! தைத்திங்களே தமிழர் புத்தாண்டு!” என முழக்கங்கள் எழுப்பியவாறு எழுச்சிமிக்க ஊர்வலம் நடைபெற்றது. காலை 7 மணியளவில், கோலமிடுதல் போட்டி நடைபெற்றது. பின்னர், சிறுவர்களுக்கான கபடிப் போட்டி நடத்தப் பட்டது. 

மதியம், மகளிர் ஆயம் அமைப்புக் குழுத் தோழர் வித்யா, கிளைச் செயலாளர் தோழர் வளர்மதி, மற்றும் தோழர்கள் எழிலரசி, இன்பமதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், பொங்கல் வைத்து அனைவ ருக்கும் பரிமாறினர். 

மாலை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வு, புதிதாக உருவாக்க்கப்பட்ட,  சாத்துக்குடல் தமிழக இளைஞர் முன்னணித் தோழர் இளையநிலா தலைமையிலான தப்பாட்டக் குழுவினர் தப்பாட்ட இசை முழக்கத்தோடு தொடங்கியது. தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு வரவேற்புரை யாற்றினார். திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திரு. ரா.கார்த்திகேயன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் முருகன் முன்னிலை வகித்தார். 

சனவரி 4 அன்று, தமிழக இளைஞர் முன்னணி சார்பில் முருகன்குடியில் நடத்தப்பட்ட, டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டத்தில் கைதான 54 பேருக்கும் ஊர்மக்கள் சார்பில், ஆசிரியர்கள் பழனிவேல், வெள்ளையத்தேவன் ஆகியோர் துண்டு அணிவித்து சிறப்பு செய்தனர். சிலம்பக் கலையை இவ்வூரில் பயிற்றுவித்து வந்த பயிற்று நர்கள் 9 பேருக்கு, முருகன்குடி பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திருவள்ளுவர் படம் பொறித்த நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தனர்.

சாத்துக்குடல் த.இ.மு. தோழர்கள், மின்வெட்டு குறித்து பேசும் நாடகம் ஒன்றையும், முருகன்குடி த.தே.பொ.க. தோழர்கள் அணுஉலை ஆபத்து குறித்து பேசும் நாடகம் ஒன்றையும் மேடையில் அரங்கேற்றி, பார்வையாளர்களை ஈர்த்தனர். திருவள் ளுவர் மன்றத் தலைவரும், த.இ.மு. தோழருமான மணிமாறன், மன்றச் செயலாளர் தோழர் ஞானப் பிரகாசம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். த.தே. பொ.க. தோழர்கள் கனகசபை, பெரியார் செல்வன், உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறப்புற மேற்கொண்டனர்.  

ஓசூர்

ஓசூர் பாரதிதாசன் நகர் விளையாட்டுத் திடலில், தமிழக இளைஞர் முன்னணி - இளம்துளிர் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழர் திருநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. 
12.01.2013 ஞாயிறு அன்று, பொங்கல் வைத்து, தப்பாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மான்கொம்பு, தீ நடனம், கரகாட்டம் ஆகிய தமிழர் கலை நிகழ்ச்சி களோடு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இளம்துளிர் மக்கள் இயக்கத் தலைவர் திரு. வடிவேல் வர்மா தலைமையேற்றார். திரு லோகேஷ் வரவேற்பு ரையாற்றினார். திரு. கார்த்தி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரி முத்து எழுச்சியுரை நிகழ்த்தினார். மறுநாள் 13.01.2013 அன்று, உரியடித்தல், வழுக்கு மரம், கபடிப்போட்டி ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தோழர்கள் சதிஷ், கார்த்தி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வுகளில், திரளான உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். 

இராயக்கோட்டை

தமிழக உழவர் முன்னணி - தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில், 14.01.2013 அன்று காலை 10 மணியளவில், கிருட்டிணகிரி மாவட்டம் இராயக் கோட்டை - லிங்கனம்பட்டி கிராமத்தில், முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குயிக் மற்றும் அய்யன் திருவள்ளுவர் படத்திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்வுக்கு, தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மு.வேலாயுதம் தலைமை யேற்றார். அய்யன் திருவள்ளுவர் படத்தை, புலவர் ‘கவியருவி’ நாகராசன் அவர்களும், கர்னல் பென்னி குயிக் படத்தை, வணிகர்  கோவிந்தசாமி அவர்களும் திறந்து வைத்து உரை யாற்றினர். திரு. கரிகாலன், துருவாசன் உள்ளிட்ட தமிழக உழவர் முன்னணி நிர்வாகிகளும், திரளான ஊர் பொது மக்களும் இந்நிகழ்வில்  கலந்து கொண் டனர். திருவள்ளுவர் இளைஞர் மன்றச் செயலாளர் திரு. அரிக்குமார் நன்றி நவின்றார்.
( செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு )

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT