உடனடிச்செய்திகள்

Sunday, January 27, 2013

“தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மொழிப்போர்வீரவணக்க நாள் கூட்டம் நடத்த யோக்கியதை உண்டா?” - பெ.மணியரசன் கேள்வி


தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்
மொழிப்போர்வீரவணக்க நாள் கூட்டம் நடத்த
யோக்கியதை உண்டா?
மொழிப்போர் ஈகியர் வீரவணக்கக் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் கேள்வி

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மொழிப்போர் நாள் கூட்டம் நடத்த யோக்கியதை உண்டா?”  என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், மறைமலை நகரில் நடைபெற்ற மொழிப்போர்ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் பாவேந்தர் சாலையில், மொழிப் போர் நாளான 25.01.2013 அன்று, மாலை 6 மணியளவில், மறைமலை நகர் தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்திய, ‘இனமொழி ஈகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்ட’த்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு, இனஉணர்வாளர் பொறியாளர் ஆனந்த் சுகுமார் தலைமையேற்றார். த.தே.பொ.க. தோழர் மு.பிச்சைமுத்து வரவேற்புரையாற்றார். திரு. மா.சமத்துவமணி தொகுத்து வழங்கினார். மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் கா.திருமுருகன் தொடக்கவுரையாற்றினார்.  திரு. துரை.முத்து ஒருங்கிணைத்தார்.

தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம் இது.
“மொழி என்பது தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் கருவியும் அல்ல, அது கடவுளும் அல்ல. மொழி, வரலாற்றைச் சேமித்து வைக்கும் கொள்கலன். 1938-இலும், 1965-இலும் தமிழ் மொழிக் காக்க நடைபெற்ற, மொழிப் போரில் உயிரீகம் செய்த ஈகிகளை இன்றைக்கு நாம் நினைவுத்துப் பார்க்கிறேன். 1965 மொழிப் போராட்டம் என்பது எவ்வளவுப் பெரும் மக்கள் எழுச்சியாக நடந்தது என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

சனவரி 25ஆம் நாளை, நாம் மொழிப் போர் நாளாகக் கடைப்பிடிக்கிறோம் ஏன் தெரியுமா? 1965 சனவரி 26ஆம் நாளான இந்தியக் குடியரசு நாள் முதல் இந்தியைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டு வந்தனர். அது விடுமுறை நாள் என்பதால், தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்கள் அதற்கு முன்பாகவே கூடி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியக் கட்டாயத்தில் இருந்தனர். எனவே, சனவரி 25ஆம் நாள் தமிழகமெங்கும் மாணவர்கள் பேரணிகள் நடத்தினர். தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய பேரணியில் பள்ளி மாணவனான நான் கலந்து கொண்டேன்.

மதுரையிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது காங்கிரசுக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அது வானொலியில் செய்தியாக ஒலிபரப்பான போது, தமிழகம் கொந்தளித்தது. காங்கிரசுக் குண்டர்களைக் கண்டித்துப் பேரணிகள் நடந்தன. அப்போது நான் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்து வந்தேன். அப்போது, எங்கள் பள்ளியின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராகவும் நான் இருந்தேன். நாங்கள் காவல்துறையினரின் தடைகளை மீறிப் பேரணியாக சென்ற போது, காவல்துறை அதிகாரியாக இருந்த தங்கையன் என்பவர், பல ஊர்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் பற்றிக் கூறி எங்களை மிரட்டினார். 202 ரவுண்டு சுடுவதற்கு ஆர்டர் வாங்கி வைத்துள்ளேன் என்றார். நாங்கள் பேரணியாகச் சென்றோம்.

மதுரையிலும், சென்னையிலும் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக இரயில்வே கேட் அருகில் சென்ற போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மார்பில் குண்டேந்தி மாணவன் இராசேந்திரன் சாய்ந்தான். உடனடியாக சிகிச்சை அளிக்கக் காவல்துறை மறுத்ததால் அந்த இடத்திலேயே துடிதுடித்து அவன் செத்தான். இப்படுகொலை  தமிழகமெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் போர்க்களம் ஆனது.  அதன்பின், மாணவர் போராட்டங்களை ஒடுக்க, தமிழகத்திற்குள் இந்திய இராணுவம் வந்தது.

பொள்ளாச்சி, திருப்பூர், குமாரபாளையம் ஆகிய இடங்களில் இராணுவமும் காவல்துறையும் நடத்தியத் துப்பாக்கிச் சூடுகளில் கூட்டம் கூட்டமாக 300க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பொள்ளாச்சியில், இந்தி எழுத்துகளை அழித்த மாணவர்களைக்  காக்கைக் குருவி போல சுட்டு வீழ்த்தியது இந்தியப் படை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில், 4 வயது குழந்தையும் அடக்கம். அந்த 4 வயதுக் குழந்தையை மடியில் ஏந்தி, தமிழ் இராணுவ வீரன் ஒருவன், “இந்த இனத்தில் பிறந்தது தான் நீ செய்த குற்றமா?” என மனமுருகும்படி கேட்ட செய்திகள் எல்லாம் நாளேடுகளில் வந்தன. மதுராந்தகத்தில், இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி சிறைபட்டிருந்தவர்கள் வைக்கப்பட்டிருந்த லாக் அப் அறையைக் காவல் காத்த காவலர் இன உணர்வு பீறிட – துப்பாக்கியுடன் தெருவில் இறங்கி “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று முழக்கமிட்டார்.  

அப்படி, இராணுவம், காவல்துறை என பலவற்றிலும் தமிழ் இன உணவுர்வு பீறிட்டது. ரசியப் புரட்சியின் போது, அரசப் படையினர் பிளவுண்டு, மக்கள் பக்கம் நின்றதைப் போலிருந்தது. வெறும் மொழிப் போராட்டமாக அது நின்றுவிடவில்லை, இனப்போராட்டமாக மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக அது நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் மக்களை லாரிகளில் கொண்டுபோய், கூட்டம் கூட்டமாகப் புதைத்தார்கள். இன்று வரை அப்பகுதிகளில் இதற்கு ஒரு நினைவுச் சின்னம் கூட கிடையாது என்பது, இங்கு ஆள்கின்ற திராவிடக் கட்சிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.

1937 சூலை 15இல் இராஜாஜி முதல்வராகப் பதவியேற்றதும், இந்தியைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டு வந்தார். 1938 ஏப்ரல் 21 முதல் 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கி ஆணையிட்டார். சமற்கிருதம் தான் கட்டாயமாக்கப்பட வேண்டும், இந்தி வந்தால் பரவாயில்லை என காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி, இந்தியை வரவேற்றார். இவ்வாறு பார்ப்பனர்கள் இந்தி மொழியை வரவேற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழறிஞர்கள் தான் இந்தித் திணிப்பை தீவிரமாக எதிர்த்தனர். 1938 சூன் 3-லிருந்து மறியல் போராட்டங்கள் தொடங்கின.

ஆகத்து 27-இல் தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழவேள் உமா மகேசுவரனார் இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் கூட்டத்தை நடத்தினார். இரண்டு நாள் கழித்து திருவையாற்றில் செந்தமிழ்க் கழகம் சார்பில் கண்டனப் பேரணி நடந்தது. திசம்பர் 26 அன்று திருச்சியில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது. அதில், உமா மகேசுவரனார் வரவேற்புரையாற்றினார். நாவலர் சோமசுந்திர பாரதியார் தலைமை தாங்கினார். பெரியார் சிறப்புரையாற்றினார். இந்தித் திணிப்பை மட்டுமல்ல, தமிழர்களுக்கென தனி மாநிலம் வேண்டும் என்று தீர்மானம் போட்டனர். திருச்சியிலிருந்து பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் தலைவர்கள் தலைமையில் சென்னை நோக்கிப் புறப்பட்ட இந்தி எதிர்ப்புப் பரப்புரை நடைப்பயணம் சென்னைக் கடற்கரைக்கு 11.9.1938 அன்று வந் போது நடந்த வரவேற்புக் கூட்டத்தில் தான், தமிழறிஞர்கள் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து, பெரியார் தமது ஏட்டில், அனைவரும் “தமிழ்நாடு தமிழருக்கே” என பச்சைக் குத்திக் கொள்ள வேண்டுமென எழுதினார். தமிழறிஞர்கள் முன்னெடுத்த இந்தித் திணிப்பு எதிர்ப்பை மட்டுமின்றி, தமிழறிஞர்கள் முன்வைத்த பார்ப்பனப்  புரோகிதரல்லாத திருமணமுறை, கும்பாபிடேக் போன்றவற்றை பெரியார் ஏற்றுப் பெருமெடுப்பில் பரப்பினார்.

இன்றைக்கு உலகத் தாய்மொழி நாள் என ஐ.நா. அறிவித்துள்ள நாள், 300க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மொழிக்காக சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அல்ல. நடராசன், தாளமுத்து ஆகிய ஈகிகள் உயிரீந்த நாள் அல்ல. மாணவ ஈகி இராசேந்திரன் குண்டடிபட்டு மாண்ட நாள் அல்ல. கிழக்குப் பாகிஸ்தானாக வங்கதேசம் இருந்தபோது, அங்கு பாகிஸ்தான் அரசு உருதுமொழியைத் திணித்ததைக் கண்டித்து 11 பேர் உயிரீகம் செய்ததை நினைவு கூரும் வகையில், தான் அது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன், தமிழ்நாட்டின் உயிரீகம் மதிக்கப்படவில்லை்? ஐ.நா.வுக்கு இங்கு இவ்வளவு பேர் மொழிக்காக கொல்லப்பட்டனர் என்ற செய்தி கூடத் தெரியுமா என்பது கேள்வி. வங்கதேசத்திற்குக் கிடைத்த அந்த பெருமை, இவ்வளவு ஈகம் செய்த தமிழர்களுக்கு கிடைக்கவில்லையே ஏன்? அங்கு மொழிப் போராட்டம், தாயக விடுதலையுடன் இணைக்கப்பட்டு, அது வெற்றிபெற்றது. ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. வங்காளிகளுக்கு ஒரு நாடு உருவாகி அது ஐ.நா. மன்றத்தில் உறுப்பு வகிக்கிறது. அந்நாடு அங்கு பேசி, ஐ.நா. நாளைப் பெற்றது. நம் நிலை என்ன? நமக்குச் சுதந்திர நாடில்லை.

சனவரி 25-ஆம் நாளை நாம் ஆண்டுதோறும் மொழிப் போர் நாளாகக் கடைபிடித்துக் கொண்டுவரும் நிலையில், மொழிப் போராட்டத்தைச் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. உறுப்பு வகிக்கின்ற நடுவண் அரசு என்ன செய்துள்ளது தெரியுமா? சனவரி 25-ஐ வாக்காளர் நாளாக அறிவித்துள்ளது. தில்லி ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக நாம் இருக்கிறோம் என்பதற்கான அடிமை முறியைப் புதுப்பிக்கும் முறைதான் தேர்தலாக உள்ளது. தில்லிக்கு எடுபிடியாக ஒரு கங்காணி அரசின் தலைவராகத்தான் முதல்வர் பதவி உள்ளது. அந்த அடிமை முறியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் வகையில், சனவரி 25ஆம் நாளை வாக்காளர் நாளாக அறிவித்துள்ளார்கள். சனவரி 25ஆம் நாள் மொழிப்போர் நாளாக நாங்கள் கடைபிடிக்கிறோம், எனவே, அந்த நாளை வாக்காளர் நாளாக அறிவிக்க வேண்டாம், வேறொரு நாளில் அதை வைத்துக் கொள்ளுங்கள் என தி.மு.க. சொல்லவில்லை. இந்த உருத்தலே அவர்களுக்கு இல்லை. உள்ளே ஒரு பேச்சு வெளியே ஒரு பேச்சு. இந்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக செயலலிதா கூறுகிறார். அதென்ன மாற்றாந்தாய் மனப்பான்மை? ஒரு அடிமையைப் போல் நடத்துகிறான் எனச் சொல்ல வேண்டியது தானே? இவர்களுக்கு இந்த உருத்தல் கொஞ்சமும் இல்லை என்பதே உண்மை.

இன்றைக்கு இந்திய அரசின் இந்தித் திணிப்பு, முன்பை விட தீவிரம் பெற்றுள்ளது. நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கும் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான மறைமலை யடிகளின் பெயரால் உள்ள இதே மறைமலை நகரின், பலகையில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. மொழிப் போர் நாளான இன்று, மதுரையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒருங்கிணைப்பில், பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடத்திருக்கிறது. மதுரையின் முக்கிய வீதிகளில், பெயர் பலகைகளில் இந்தி எழுத்து புதிதாகப் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தான் அந்த ஆர்ப்பாட்டம்.

ஏன் இந்தி எழுத்துகள் எனக் கேட்டால், சுற்றுலா நகரம் என்பதால் இந்திக்காரர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படியென்றால், தமிழர்கள் அடிக்கடி செல்லுகின்ற காசி, தில்லி நகரங்களில் தமிழில் பெயர்ப் பலகை இல்லையே ஏன்? இங்கிருக்கும் இந்தி எழுத்துகள், வெறும் எழுத்துகள் அல்ல, நான் உன் எஜமானன் நீ எனது அடிமை என்று இந்திக்காரர்கள் சொல்லும் அறிவிப்பு அது. அ.தி.மு.க.கட்சியைச் சேர்ந்தவர்தான் மதுரை மேயர். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க.வினர் மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கக் கூட்டம் நடத்துகிறார்கள்.

நடுவண் அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது தான், தமிழகத்தின் நால்வழிச் சாலைகளில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டன. அதைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பு வகித்த, தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் போராட்டம் நடத்தினோம். இந்தி எழுத்துகளை அழித்தோம். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயலலிதாவை விட நாங்கள் குறைவாகத் தான் இந்தியில் எழுதினோம் என்றார். தமிழர்கள் மீதான இந்தித் திணிப்பு, தமிழர்கள் வாயில் மலம் திணிப்பதற்கு சமம். மலத்தை நான் கொஞ்சமாகத் தான் திணித்தேன் என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? இது தான் தி.மு.க. – அ.தி.மு.க. அரசின் இலட்சணம். இவர்கள் தான் இன்றைக்கு மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கக் கூட்டங்களை வெட்கமின்றி, கூச்சமின்றி நடத்துகிறார்கள். 

இன்றைக்கு, தொடர்வண்டித்துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், இந்தியிலும், மலையாளத் திலும் தான் முன்பதிவு படிவங்கள் கிடைக்கின்றன. தமிழில் இல்லை. மக்கள் தொகையில் குறைவாக உள்ள கேரளா, தமிழ்நாட்டுத் தொடர்வண்டித் துறையில் ஆதிக்கம் செலுத்து கிறது. இதைத் தடுக்க, திராவிட ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்?

1938இல் இந்தியை எதிர்த்து முழக்கமிட்ட பெரியார், 1968இல் என்ன சொன்னார்? இந்தி வரக்கூடாது என்று தான் நான் முழக்கமிட்டேனேத் தவிர, தமிழ் வர வேண்டும் எனச் சொல்லவில்லை, நான் கடந்த 40 ஆண்டுகளாக தமிழைக் காட்டுமிராண்டிமொழி எனச் சொல்கிறேனே, இந்திக்கு பதில் ஆங்கிலம் தான் வரவேண்டும் என்றார். வீட்டில் கூட அனைவரும் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார். ஆங்கிலம் அறிவியல் மொழி என்றார். அறிவியல் மொழி, அறிவியலற்ற மொழி என்றெல்லாம் ஒன்று கிடையாது. மூடநம்பிக்கைக் கருத்துகள் அனைத்து மொழிகளிலும் தான் இருக்கின்றன. ஏன், ஆங்கிலத்தில் தானே இங்கு ஆவியெழுப்பும் கூட்டங்கள் நடைபெறுகின்றன? எனவே தான், அறிவியல் மொழி, மூடநம்பிக்கை மொழி என்றெல்லாம் ஒன்று கிடையாது என்கிறோம்.

அப்போது காங்கிரசுக்காரர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே இல்லாத ஒன்றாக இணைப்பு மொழி (Link language) என்பதைப் பற்றிப் பேசினார்கள். பல தேசிய இனங்கள் உறுப்பு வகித்த இரசியாவில் கூட, இணைப்பு மொழி என்ற ஒன்று இல்லை. நான்கு மொழிகொண்ட சுவிட்சர்லாந்தில் இணைப்பு மொழி இல்லை அவரவர் தாய்மொழியே இணைப்பு மொழி. தி.மு.க., தி.க. ஆகிய கட்சிகள் காங்கிரசின் இணைப்பு மொழிக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டன. காங்கிரசார் இந்தியை இணைப்பு மொழி என்றனர். கழகத்தார் ஆங்கிலத்தை இந்தியை இணைப்பு மொழி என்றனர். கழகத்தார் ஆங்கிலத்தை இனைப்பு மொழி என்றனர். இரண்டுமே நமக்கு அயல் மொழிதான். தமிழ் மொழியே, ஆட்சி மொழி, கல்வி மொழி, வழக்கு மொழி என்ற ஒருமொழிக் கொள்கையை முன்வைக்கவில்லை. மாறாக தி.மு.க. தலைவர் அண்ணா முதல்வராக இருந்தபோது, ஆங்கிலம் - தமிழ் என்ற இருமொழிகளைக் கொண்ட ராஜாஜியின் இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார். தமிழ் இருக்க வேண்டிய இடத்தில், ஆங்கிலத்தை அமர்த்தினார்.

திராவிட ஆட்சியாளர்கள் எங்கே தமிழை அரியணையில் ஏற்றினார்கள்? ஆங்கிலத்தைத் தான் வாழ வைத்தார்கள். 1938-இல் தமிழ்ப் பகுதிகளில் 60 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இன்று ஆயிரக்கணக்கான பல்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கின்றன. தமிழில் பேசினால் அபராதம் என இன்றைக்கு தமிழ்நாட்டிலே, எத்தனைப் பள்ளிகளில் அபராதம் விதிக்கிறார்கள்? அங்கெல்லாம் நாம் போராட வேண்டும். இது தான் இன்றைக்கு நிலைமை. இப்படி தமிழுக்கு பதில் ஆங்கிலத்தை திணித்தார்களே, தமிழில் என்ன குற்றம் கண்டார்கள்? இங்கே ஏன் மொழிக் குழப்பம்? இங்கே சரியான மொழிக் கொள்கை வைக்கப்படவில்லை? மொழிப்போராட்டம் நடத்திய திராவிடத் தலைவர்கள் நம் இன அடையாளத்தையே குழப்பிவிட்டார்கள். இந்தியன் என்றும் திராவிடன் என்றும் தமிழர்கள் திரிக்கப்பட்டார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தான் இனத்தால் திராவிடன் என்றும், நாட்டால் இந்தியன் என்றும், மொழியால் தமிழன் என்றும் சொல்லிக்கொள்கிறார். ஆக, இங்கு இனமே தெளிவாக முன்வைக்கப்படாத குழப்ப நிலை நீடிக்கிறது. நாம், மொழியாலும், தேசிய இனத்தாலும், மரபினத்தாலும் தமிழர்களே என்று உணர வேண்டும்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் சமற்கிருதம் சேரச்சேர பெருமை பெறும், தமிழ் மட்டும் தான் சமற்கிருதம் தீரத் தீர பெருமை பெறும் என்பார் பாவாணர். இப்படி, ஆரியத்துக்கு எதிராக மொழி வடிவிலும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழை, ஏன் திராவிட ஆட்சியாளர்கள் முன் நிறுத்தவில்லை? எங்கிருந்தோ வந்த ஆரியர்கள் வைத்த திராவிடம் எனும் பெயரை சுமந்து கொண்டு, நம் இனத்தை மறுதலித்தது சரியா? திராவிட இயக்க நூற்றாண்டு தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்பட்டது, ஏன், கேரளாவில், ஆந்திராவில் அது கொண்டாடப்படவில்லை? ஆரியத்துக்கு எதிராகத் தமிழ்தான் என்றைக்கும் முன்னின்றுள்ளது என்பதே வரலாறு. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத் தான் நாம் போராடிக் கொண்டுள்ளோம். தொடர்ந்து போராடுவோம்”. மொழியால் இனத்தால், நாட்டால் நாம் தமிழர்களே! நம் இனம் தமிழர் மட்டுமே!

கூட்டத்தின் நிறைவில், தோழர் கொண்டல்சாமி (மே பதினேழு இயக்கம்) நன்றி நவின்றார்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT