உடனடிச்செய்திகள்

Tuesday, January 1, 2013

“டாஸ்மாக்கை மூட வலியுறுத்தாதவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகளைக் கண்டிக்கும் தகுதி கிடையாது” - தோழர் அருணா பேச்சு!


“டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தாதவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகளைக் கண்டிக்கும் தகுதி கிடையாது” என மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா பேசினார்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்துப் போராடும் வகையில், மதுரையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மகளிர் ஆயம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட 20 அமைப்புகளை ஒருங்கிணைத்து ‘பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்புப் போராட்டக் குழு’ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் சார்பில், நேற்று (31.12.2012) மாலை 4 மணியளவில், மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஜினி தலைமையேற்றார். பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற இவ்வார்ப்பாட்டத்தில், மகளிர் ஆயம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தோழர் சந்திரா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தோழர் அருணா பேசுகையில், “தில்லியில் நிர்பயா, தமிழகத்தில் புனிதா என இன்றைக்கு நாம் பேசுகின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விட, இங்கு அதிகமான வன்கொடுமைகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் மக்களின் கவனத்திற்கு வராததன் பின்னணியில் ஊடகங்கள்தான் உள்ளன.
பெண்களை ஆணாதிக்க வெறியர்கள், பாலியல் நோக்குடன் காண்பதற்கு என்ன காரணம்? ஊடகங்கள் தான் பெண்களை அவர்களுக்கு அப்படிக் காட்டி தன்னை வளர்த்துக் கொண்டன. பெண்களை போகப் பொருட்களாகக் காட்டுகின்ற ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்காமல், வெறும் பாலியல் வன்கொடுமைகளை மட்டும் கண்டித்து என்ன பயன்? பெண்கள் மீதான, ஆண்களின் இந்த வெறித்தனத்திற்கு மதுவும் ஒரு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாள்தோறும் எவ்வளவு பேரை குடிகாரர்களாக்கிக் கொண்டுள்ளது என நாம் பார்த்துக் கொண்டுள்ளோம்.

டாஸ்மாக் மது விற்பனையை ஆதரிக்கும் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு, நிர்பயா, புனிதாவுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து இரங்கல் தெரிவிக்க எந்தவித அருகதையும் கிடையாது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தாதவர்களுக்கு, பாலியல் வன்கொடுமைகளைக் கண்டிக்கும் தகுதி கிடையாது. எனவே, தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும், ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்” என பேசினார்.

கொட்டும் மழையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மகளிரும், இன உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : ராசு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT