உடனடிச்செய்திகள்

Thursday, October 10, 2013

”சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை” தோழர் கி.வெங்கட்ராமன் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் பேட்டி!

Untitled
”சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியான பேட்டியில் தெரிவித்துள்ளார்..

அதன் முழு விவரம்:

ராகுல் காந்தியை புதிய நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதமுடியுமா?, 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான மக்களின் அதிருப்திகளை அவரால் எதிர்கொள்ள முடியுமா? பதில் சொல்கிறார், தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.

”ராகுல்… நச்சுச் சூழலின் வாரிசு!”

”காங்கிரஸ் கட்சி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்து மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. எதிர்வரும் தேர்தல் அந்தக் கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கப்போகிறது. ஆகவேதான், அவர்கள் தோற்றுப்போன ஓர் அரசின் பிரதிநிதியான மன்மோகன் சிங்கை ஓரம் கட்டிவிட்டு, ராகுல் காந்தியை முன்னே கொண்டுவருகின்றனர். 

ஆனால், இந்தச் சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை என்பதுதான் யதார்த்தம்.

நாளைக்கே ராகுல் காந்தி பிரதமராக வந்தாலும், மன்மோகன் சிங் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இதே தனியார் மய, தாராளமயக் கொள்கைகளைத்தான் இன்னும் வேகமாக; நாசூக்காக அமல்படுத்தப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், இன்றைய அரசியல் என்பது கட்சிகளும் கம்பெனிகளும் இரண்டறக் கலந்ததாக மாறிவிட்டது. முன்பு எல்லாம் கம்பெனிகள், கட்சிகளுக்கு காசு கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வார்கள். அதை நாம் ‘லஞ்சம்’ என்போம்; அவர்கள் ‘நன்கொடை’ என்பார்கள். இப்போது இந்த இடைவெளியே இல்லை. கம்பெனியே கட்சி ஆரம்பிக்கிறது; கட்சிக்காரர்கள் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். 

இதனால் கம்பெனிகளின் ஒட்டுண்ணிகளாக, ‘கட்சிக்காரர்கள்’ பரிணாம வளர்ச்சி அடந்துள்ளனர். இந்த ‘ஒட்டுண்ணி முதலாளிகள்’ இருக்கும்வரை ராகுல் காந்தியால் எந்த மாற்றத்தையும் செயல்படுத்த இயலாது.”

”அதாவது, ‘ராகுல் காந்தி நல்லது செய்யத்தான் நினைக்கிறார். ஆனால், அரசியல் சூழல் அவரது கைகளைக் கட்டிவைத்திருக்கிறது’ என்கிறீர்களா?”

”இல்லை. அப்படி நல்லது செய்ய நினைப்பவராக இருந்தால், ‘நான்சென்ஸ்’ என்று பிரதமருக்கு எதிராக அற ஆவேசத்துடன் பொங்கி எழும் அவர், தன் சொந்த சகோதரியின் கணவரான ராபர்ட் வதேராவின் டி.எல்.எஃப் முறைகேடுகளை வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும். 

ஹரியானா மாநிலத்தையே வளைத்துப்போடும் அளவுக்கான வதேராவின் நிலச் சூறையாடல் வெளிப் படையாக அம்பலப்பட்ட பின்னரும், ராகுல் காந்தி பெயர் அளவுக்குக்கூட கண்டிக்கவில்லை. இதில் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டு, உத்தரப்பிரதேசத்தின் குடிசை வீட்டில் கஞ்சி குடிப்பதால் மட்டும் அவர் ஏழைப்பங்காளன் ஆகிவிடமாட்டார். இந்தக் கஞ்சி குடிக்கும் காட்சியை எல்லாம் இவரது அப்பா ராஜீவ் காந்தி காலத்திலேயே பார்த்துவிட்டோம்.

கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில்கூட காங்கிரஸ் கட்சி, ‘ஆம் ஆத்மி’ என்பதைதான் தங்களின் தேர்தல் முழக்கமாக முன்வைத்தது. ‘ஆம் ஆத்மி’ என்றால், ‘சாமானியன்’ என்று பொருள். அந்தச் சாமானியர்கள், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடியைச் சூறையாடியிருக்கிறார்கள் என்பதைதான் நாம் பார்த்திருக்கிறோமே! இந்த நச்சுச் சூழலின் வாரிசான ராகுல் காந்தி மட்டும் எப்படி மேன்மையானவராக இருப்பார்?”

”காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் குறைந்தபட்சம் மதச்சார்பற்ற அம்சத்திலேனும் ஆதரிக்கலாம் அல்லவா?”

”பா.ஜ.க. மதவாதக் கட்சி என்பதாலேயே, காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சியாகிவிடாது. உண்மையில், பா.ஜ.க. ஒரு தீவிர இந்துத்துவக் கட்சி என்றால், காங்கிரஸ் ஒரு மிதவாத இந்துத்துவக் கட்சி. பாபர் மசூதி இடிப்பு, நரசிம்மராவ் அரசின் பாதுகாப்புடன்தான் நடைபெற்றது.
மத்தியப்பிரதேசத்தில் பசு வதை தடைச் சட்டம் கொண்டுவந்த திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அதே திக்விஜய் சிங்தான், ‘உமாபாரதி முட்டை கலந்த கேக் சாப்பிட்டார்’ என்று அதை ஒரு தேசியப் பிரச்னையாக மாற்றினார். குஜராத்தில் மோடி மட்டும்தான் மதவெறியரா? அங்கு பாரதிய ஜனதாவில் இருந்து விலகிவந்த அதே காவிக் கும்பல்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுகின்றனர்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் அகமதாபாத்தில்தான், தலித் மக்களுக்கு என்று தனியே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இப்படி நவீன நகர்ப்புறச் சேரிகள் அமைப்பதை காங்கிரஸ் தடுத்து நிறுத்தவில்லையே? குறைந்தபட்சம் குஜராத்தில்கூட வலுவான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த வில்லையே? ஆகவே, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்றது என்பது ஒரு போலித் தோற்றம். இதைத் தாங்கிப் பிடிப்பவராகவே ராகுல் காந்தியும் இருக்கிறார்.”

” ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’, ’100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்’ போன்ற அம்சங்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு செயல்பட்டிருக்கிறதே?”

”ஆர்.டி.ஐ. என்பது, பெரும் போராட்டத்துக்குப் பிறகு வேறு வழியே இல்லாமல் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், பெரும் ஊழலுக்குள் சிக்கிக்கிடப்பதை நாடே அறியும்.

‘தமிழ் இனம்’ என்று எடுத்துக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சி பெரும் துரோகம் இழைத்துவிட்டது என்பதையும், ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது என்பதையும் யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது!
ஈழத் தமிழர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியத் தமிழர்களுக்கே காங்கிரஸ் கட்சியால் எந்தப் பயனும் இல்லை. தமிழ்நாட்டுக்கு, காங்கிரஸ் அரசால் எந்தப் பொருளாதார ஆதாயங்களும் இல்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 5.9 கோடி லிட்டர் மண்ணெண்ணெயை மானிய விலையில் மத்தியத் தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்துவந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை 2.9 கோடி லிட்டராகக் குறைத்துவிட்டார்கள்.

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் 13-வது நிதி ஆணையம், ‘மத்திய அரசின் வருவாயில் இருந்து, ஆண்டு ஒன்றுக்கு 5.01 சதவிகிதம் நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. அதன்படிதான் ஒதுக்கீடும் நடந்துவருகிறது. ஆனால், சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கீட்டை 2.5 சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். இதற்கு, ‘தமிழ்நாடு செயல்திறன்மிக்க மாநிலம்’ என்று சப்பைக் காரணம் சொல்கிறார்கள். இது மோசடியான வாதம்.

தமிழ்நாட்டுக்கான வருமானம் எங்கிருந்து வருகிறது? இந்திய அரசு, இங்கிருந்து அள்ளிச்செல்லும் வரி வருவாயில் பாதியையாவது கேட்டுப் பெறக்கூடிய அரசியல் துணிச்சல், கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ கிடையாது. அதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளை திறந்து, மக்களுக்கு சாராயம் விற்று வருமானத்தைப் பெருக்குகிறார்கள். இந்தச் ‘செயல்திறனுக்குதான்’ நிதியை பாதியாகக் குறைக்கிறார்கள். பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தவறு இல்லை. அதை மத்திய நிதியில் இருந்து ஒதுக்கிக் கொடுக்கவேண்டும். பக்கத்து மாநிலத்தின் நிதியில் இருந்து எடுத்துத் தரக் கூடாது. ஆக, காங்கிரஸ் ஆட்சி என்பது, தமிழ்நாட்டுக்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது!”

”’மதவாதத்தை உயர்த்திப்பிடிக்கும் பாரதிய ஜனதாவின் மோடியைவிட, ‘குறைந்த தீமை’ (Lesser evil) என்ற அடிப்படையில், காங்கிரஸின் ராகுல் பரவாயில்லை’ என்று சிலர் சொல்கிறார்களே?”

”எரியும் கொள்ளியில், சின்னக் கொள்ளி, பெரிய கொள்ளி என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. தீமை என்றால் தீமைதான். 2004-ல் பா.ஜ.க. ‘பெரிய தீமை’ (Greater evil); காங்கிரஸ் ‘குறைந்த தீமை’ (Lesser evil). இப்போது அப்படியே தலைகீழாகத் தெரிகிறது. எது ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அது பெரிய தீமையாகத் தெரிவது இயல்பு. ஆனால், மக்களாகிய நமக்கு இரண்டு கழிசடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. நாங்கள் ‘தேர்தலைப் புறக்கணியுங்கள்’ என்கிறோம். அதையும் மீறி வாக்குச்சீட்டில் எதையாவது பதிவுசெய்ய வேண்டும் என்றால், இப்போதுதான் ‘யார் மீதும் நம்பிக்கை இல்லை’ என்பதை பதிவுசெய்ய ‘நோட்டா’ (NOTA) என்ற வசதி வாக்குச்சீட்டில் வந்துவிட்டதே… அதைப் பயன்படுத்துங்கள்.”

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT