உடனடிச்செய்திகள்

Tuesday, October 22, 2013

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பெல்காம் சிறையிலுள்ள நான்கு தமிழர்களை தோழர் பெ.மணியரசன் சந்தித்தார்!

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பெல்காம் சிறையிலுள்ள
நான்கு தமிழர்களை தோழர் பெ.மணியரசன் சந்தித்தார்!

கர்நாடக மாநிலம் பெல்காம் நடுவண் சிறையில் மரண தண்டனை சிறைவாசிகளாக உள்ள நான்கு தமிழர்களான சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோரை இன்று(22.10.2013) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான 10 பேர் கொண்ட தமிழகக் குழுவினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இக்குழுவில், பேரறிவாளன் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மாள், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன், மற்றும் தோழர்கள் பார்த்திபராசன், மு.வேலாயுதம், குழந்தைராஜ் ஆகியோர் இருந்தனர்.

கர்நாடகத்தில், வெவ்வேறு தனிப்பட்ட வழக்குகளில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைவாசிகளான சிவா, ஜடேசுவர சாமி, சாய் பன்னா நடேகர் ஆகியோரையும் தமிழகக் குழுவினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இவர்கள் அனைவருடைய கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுத் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.
இவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்குகளில் எள்ளளவும் தொடர்பில்லை என்று மனம் நொந்துப் பேசினார்கள்.

குறிப்பாக, ஞானப்பிரகாசம் கூறிய செய்தி, அனைவர் மனதையும் உருக்கியது. காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வேறொரு ஞானப்பிரகாசத்தின் கொலையை மறைப்பதற்காக காவல்துறையினர், அப்பாவியான ஞானப்பிரகாசத்தை பாலாறு வெடிகுண்டு வழக்கில் இணைத்துள்ளதை ஞானப்பிரகாசம் மனமுருக எடுத்துச் சொன்னார்.

அதே போல், பிலவேந்திரன் ஈரோடு பகுதியில் வேளாண் பண்ணை ஒன்றில் அவரும், அவரது மனைவியும் வேலை செய்திருந்த போது, காவல்துறையால் பிடித்து வரப்பட்டு பாலாறு வெடிகுண்டு வழக்கில் சேர்த்துள்ளனர். அதிரடிப்படை அவரை விசாரிக்கும் போது, அவரை அம்மணப்படுத்தி, அவரது ஆண் குறி உட்பட அனைத்து உறுப்புகளிலும் மின்சார அதிர்வு கொடுத்து சி்த்திரவதை செய்யப்பட்டதை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

மீசை மாதையன் நீண்டகாலத் தனிமைச் சிறை வாழ்க்கையாலும், அதிரடிப்படை சித்திரவதையாலும் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் இருக்கிறார்.

பாலாறு வெடிகுண்டு வழக்கில் தீர்ப்பளித்த தடா சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 133 பேரில், 7 பேருக்கு வாழ்நாள் தண்டனை விதித்தது. மீதமிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீ்டு செய்தனர்.
உச்சநீதிமன்றமோ, ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் என்பது போல், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, மற்றவர்களை விடுதலை செய்தது.

ஒரு மேல் முறையீட்டு வழக்கில், தண்டனையை உறுதி செய்து அல்லது தண்டனையைக் குறைத்து தான் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். ஆனால், மேல் முறையீடு செய்தவர்களைத் தூக்கிலிடும் தீர்ப்பை முதன் முறையாக இந்நான்கு தமிழர்களுக்கும் உச்சநீதிமன்றம் விதித்ததாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சைமன் மற்றும் கர்நாடகச் சிறைவாசிகள் மூவரும், அவரவர் வழக்குகளில் காவல்துறையினரால் எப்படி பொய்யாக சேர்க்கப்பட்டோம் என்பதை விவரித்துச் சொன்னார்கள். 61 அகவையான சாய் பன்னா நடேகர் என்ற முதியவர், கடந்த 22 ஆண்டுகளாக மரண தண்டனை பெற்று அவர் சிறையிலிருப்பதைக் கூறி கண்ணீர் வடித்தார்.

அனைவரும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தங்களுக்கு ஞாயம் வழங்கும் என எதிர்பார்ப்போடு உள்ளனர்.

தோழர் பெ.மணியரசன் அவர்களும், கி.வெங்கட்ராமன் அவர்களும், “தமிழ்நாட்டில் இராசீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட மூன்று தமிழர் உயிரைக் காக்கவும், பெல்காம் சிறையிலுள்ள நான்கு தமிழர் உயிரைக் காக்கவும், இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்படவும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் போராடி வருகிறது. கர்நாடகத்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், கன்னட இலக்கியவாதிகள் போன்றோருடன் தொடர்பு கொண்டு மரண தண்டனை ஒழிக்கப்படுவதற்கு ஆதரவாக கருத்தரங்குகள், பரப்புரைகள் நடத்த முயற்சிகள் எடுப்போம். நம்பிக்கையோடு இருங்கள். தெம்பாக இருங்கள். உங்களுக்காக கவலைப்படுவோர் வௌயில் ஏராளமானோர் உள்ளனர்” என்று தெரிவித்து அவர்களிடமிருந்து விடை பெற்றனர்.(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு) 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT