உடனடிச்செய்திகள்

Thursday, November 28, 2013

“பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உடனே விடுதலை செய்ய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரை!

“பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உடனே விடுதலை செய்ய வேண்டும்
வடசென்னை மாவீரர் நாள் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரை!

“நீதிபதி கே.டி.தாமஸ், விசாரணை அதிகாரி தியாகராஜன் போன்றோரின் வாக்குமூலங்கள் வந்த பிறகும், பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதம்! அவர்கள் அனைவருக்கும் தலா 10 கோடி இழப்பீடு வழங்கி உடனே விடுதலை செய்ய வேண்டும்என, வடசென்னை மாவீரர் நாள் கூட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தமிழீழ விடுதலைக்காக உயிரீந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளான நவம்பர் 27 – மாவீரர் நாளையொட்டி, வடசென்னை மாவட்ட ம.தி.மு.. சார்பில், தண்டையார்பேட்டையில் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, .தி.மு.. பொதுச் செயலாளர் திரு. வைகோ தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. .வெள்ளையன், தந்தை பெரியார் தி.. பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தற்சார்பு உழவர் இயக்க அமைப்பாளர் திரு. கி.வே.பொன்னையன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் திரு. நாகை திருவள்ளுவன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று உரையாற்றினர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு தோழர் பெ.மணியரசன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக நாம் இங்குக் கூடியுள்ளோம். இந்தக் கூட்டத்திற்கு தடை வந்துவிடுமோ என்றெண்ணி, தடை வந்தால் கூட்டத் தலைவர் மீது தானே வழக்குப் போடுவார்கள், அதை என் மீது போடட்டும் என திரு. வைகோ அவர்கள், தானே முன்வந்து இக்கூட்டத்திற்கு தலைமையேற்றிருக்கிறார் எனக் கருதுகிறேன். கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

மாவீரர்களுக்கு என்றைக்கும் மரணமில்லை. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ‘தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை, தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?’ எனக் கேட்டார். அது போல, இன, மொழி விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளுக்கு என்றைக்கும் மரணமில்லை. அவர்கள் மரணத்திற்கு பின்னும் வாழும் மகத்துவம் படைத்தவர்கள். ஈழ விடுதலைக்குப் போராடி மாய்ந்த மாவீர்ர்கள் ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் நாளும் புதிதாகப் பிறக்கிறார்கள். நாமெல்லாம் ஒரு தடவை பிறந்ததோடு சரி.

வயோதிகம் காரணமாக கொடியவன் இராசபக்சே பின்னால் இறந்து போனால், அவனை இலங்கையே நினைவில் வைத்துக் கொள்ளாது. ஆனால், மாவீரர்களோ மறுபடியும் மறுபடியும் நினைவில் கொள்ளப்பட்டு, மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். கரும்புலி வீரர்கள் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பகத்சிங், திலீபன் ஆகியோர் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு நீடிக்க வேண்டுமென விரும்பினால், மொழி – இன விடுதலைக்கு நாம் போராட வேண்டும்.

இந்த ஈகியருக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தனது மாவீரர் நாள் உரையில், ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு மட்டும் நிற்க மாட்டார். தற்போது போராட்டத்தின் நிலை என்ன? அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, கணக்குப் போடுகின்ற வகையில் அவர் உரையாற்றுவார்.

அதுபோல, தமிழீழ மக்களை இரத்த வெள்ளத்தில் இனப்படுகொலை செய்த கொடியவன் இராசபக்சே – மன்மோகன் கும்பலை, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த நாம் எந்தளவிற்கு முயற்சி எடுத்திருக்கிறோம்? தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிடம் எந்தளவு கருத்துருவாக்கம் செய்திருக்கிறோம்? என்பதையெல்லாம் நாம் இம்மாவீர்ர் நாளில் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.

கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணித்தது. எங்கோ இருக்கும் சின்னஞ்சிறியத் தீவான மொரீசியஸ் புறக்கணித்தது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரூன், அங்கு யாழ்ப்பாணத்தில் பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் நம் தமிழ் மக்களை தானே நேரில் சென்று பார்த்தார். வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை அவைக் கூடுவதற்கு முன்பு, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் முறையாக விசாரிக்கப் படவில்லையெனில், அதே கூட்டத்தில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு ஏற்பாடு செய்வோம் என்று டேவிட் கேமரூன் எச்சரித்தார்.

பிரித்தானியத் தமிழர்களின் போராட்டம் காரணமாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியின் எதிரொலி இது. உலகெங்கும் வாழும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் தங்களது போராட்டங்களின் மூலம் ஏற்படுத்திய முன்னேற்றம் இது! நம்முடைய போராட்டங்கள் இல்லையேல், உலகம் இலங்கையில் கொல்லப்ட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்களை மறந்திருக்கும்.

குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்டவனைப் போல, பவுடர் பூசப் போய் கரி பூசிக் கொண்டவனைப் போல, உலக நாடுகளின் பாராட்டைப் பெறலாம் என்று காமன்வெல்த் மாநாடை இலங்கையில் நடத்தி அம்பலப் பட்டுப் போனான் இராசபட்சே ! இலங்கையில் நடந்த போர் குற்றங்களை, மனித உரிமைமீறலகளை பலநாட்டுத் தலைவர்களும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக காமன் வெல்த் மாநாடு அமைந்தது.

வரும் மார்ச் மாதம் ஐ.நா.வில் நடைபெறும் மனித உரிமை அவைக்கூட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகளவு நாடுகள் இலங்கையை எதிர்க்கும். அந்தளவிற்கு இலங்கையைத் தனிமைப்படுத்தும் பணிக்கு, நம்முடைய போராட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டம், நெருங்கி வருகின்ற மக்களவைத் தேர்தல் ஆகியக் காரணிகள், அவரை அம்முடிவை எடுக்க வைத்திருக்கின்றன.
நம் போராட்டம் இலங்கையை, இந்தியாவை மட்டும் அசைக்கவில்லை. இங்கே ஆண்டு கொண்டிருக்கும் செயலிதா – கருணாநிதி ஆகியோரையும், நமக்குப் பின்பாட்டுப் பாட வைத்திருக்கிறது. இனத்துரோகி என இன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் கருணாநிதியின் கதி நமக்கும் வந்து விடுமோ என்றெண்ணி, அம்மையார் செயலலிதா தானும் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்பதாகக் காட்டிக் கொள்ள ஒப்புக்கு சில தீர்மானங்களைப் போடுகிறார்.

இவர்கள் இருவரும் முழு உள்ளத்தோடு, தமிழர்களுக்கு ஆதரவானத் தீர்மானங்களையும், அறிக்கைகளையும் தருவதில்லை. பழைய காலம் போல், இப்பொழுது தமிழர்களை ஏமாற்ற முடியாது என புரிந்து கொண்ட காரணத்தினால் தான் அவர்கள் இந்த நிலையை எடுக்க வேண்டியிருக்கிறது.

பழைய காலம் போலில்லாமல், புதிய சிந்தனையுடன் இளைஞர்கள் வருகிறார்கள். இணையதளங்களில், முகநூல் பக்கங்களில் விவாதிக்கிறார்கள். கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் வெற்றியே இது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த வெற்றி, தமிழர்கள் கட்சி சார்பற்று, இனச்சார்புடன் போராடியதன் விளைவு! இதை நாம் எக்காரணம் கொண்டும் மறந்துவிடலாகாது! நம் எதிரிகள் வலைக்குள் மாட்டிக் கொள்ளும் கயிறு சுருங்கிக் கொண்டே வருவதன் வெளிப்பாடு இது!

இராசீவ் காந்தி கொலை வழக்கு பற்றி விசாரித்த சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஐ.பி.எஸ்., என்பவர், பேரறிவாளன் நிராபராதி என்றும், அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது தான் கடமை தவறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தது உண்மையே என்றாலும், அந்த பேட்டரியைப் பயன்படுத்தித்தான் இராசீவ் காந்தியைக் கொல்லப் போகிறார்கள் என்ற செய்தி எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொன்னார்.

ஆனால் னக்குத் தெரியாது என்று அறிவு சொன்ன வார்த்தையை வாக்குமூலத்தில் நான் பதிவு செய்யவில்லை. ஏனெனில், வாக்குமூலம் அளிப்பவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே எழுதுவது காவல்துறை மரபல்ல. காவல்துறை தயாரித்துள்ள வழக்குக்கு வலுச்சேர்க்கும் வகையில் தான், ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். அதனால்தான், நான் பேரறிவாளன் சொன்னதை அப்படியே பதிவு செய்யவில்லை. இதன் காரணமாகவே பேரறிவாளன் மரண தண்டனை பெற்றிருக்கிறார் என்பது என் மனதை உருத்துகிறது என்று தியாகராஜன் கூறியிருக்கிறார்.  

இதன் பொருள், ஒருவரை துன்புறுத்தி, அடித்து, உதைத்து, அவர் மீது என்ன குற்றத்தைக் காவல்துறை சுமத்தியிருக்கிறதோ, அதை அவர்களே ஒப்புக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்படுவது தான், ஒப்புதல் வாக்குமூலம் என்பது. தியாகராஜன் 16 பேரிடம் வாங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் மரண தண்டனை, வாழ்நாள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், வழக்கில் சிக்க வைக்கப்பட்ட 26 பேரும் அப்பாவிகள். நவநீதம் என்ற சவநீதம் பூந்தமல்லி நீதிமன்றத்தில், 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கினார். அது, உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு சென்ற போது, அங்கு National Collective consiciousness. அதாவது, தேசத்தின் கூட்டு மனச்சான்றின்படி, இவ்வழக்கில் மரண தண்டனை வழங்கியாக வேண்டும் என்று அங்கே 4 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கினார்கள்.

நாங்கள், கொலை செய்தவர்களை சும்மா விடச் சொல்லவில்லை. ஆனால், சும்மாயிருந்தவர்களை கொலை செய்யாதீர்கள் என்று தான் கேட்கிறோம்.

07.05.1991 அன்று சிவராசன் புலிகளின் தலைமையகத்திற்குப் பேசியதை, இடைமறித்துக் கேட்ட போது, இராசீவ் காந்தியைக் கொலை செய்யும் இத்திட்டம் தமிழகத்தில் யாருக்குமே தெரியாது என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே, இவ்வழக்கில் கூட்டுச்சதிக்குரிய சட்டப்பிரிவான 120(b) பொருந்தாது என நீதிபதி கே.டி.தாமஸ் இப்பொழுது கூறியிருக்கிறார். அப்போது அந்த வயர்லஸ் பேச்சை மேம்போக்காக எடுத்துக் கொண்டோம் என்று அவர் இப்பொழுது பேசுகிறார்.

இந்த இரண்டு அதிகாரிகளும் இப்பொழுது கூறுபவற்றை, அப்பொழுதே கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால், யாருக்குமே இந்த வழக்கில் தண்டனை கிடைத்திருக்காது. இந்த வழக்கை வைத்துக் கொண்டு, இவர்களை மட்டுமல்ல ஒரு இனத்தையே அல்லவா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள்? தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்திய அரசும், வடநாட்டு ஊடகங்களும் குற்றப் பரம்பரைப் போல் நடத்தின; நடத்துகின்றன. தமிழீழத்திற்குப் படையனுப்பி, ஒன்றரை இலட்சம் மக்களை துடிக்கத் துடிக்க இனப்படுகொலை செய்தார்கள். இந்தக் கொலையை வைத்து, அம்மையார் செயலலிதா, இராசீவ்வின் மறைவையொட்டி என்ன ஆட்டம் ஆடினார்? கூட்டங்களுக்குத் தடை, ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, அய்யா பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்களுக்கு பொடா சட்டத்தின் கீழ் சிறை, விடுதலைப்புலிகள் மீதான தடை என செயலலிதா ஆடிய ஆட்டமென்ன? கருணாநிதி ஆடிய ஆட்டமென்ன?

தமிழீழத்தில் இனப்படுகொலைப் போர் நடைபெற்ற 2008-2009ஆம் ஆண்டுகளில், போர் நிறுத்தம் கோரி பேசியதற்காக எத்தனை பேரைக் கைது செய்தார் கருணாநிதி? தோழர் கொளத்துர் மணி மீது, இயக்குநர் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஏற்பாடு செய்த ஒரு பொதுக்கூட்டத்தில், போர் நிறுத்தம் கோரி பேசியதற்காக என்னையும், தோழர் கொளத்தூர் மணி அவர்களையும், இயக்குநர் சீமான் அவர்களையும் கோவைச் சிறையில் அடைத்தார் கருணாநிதி.

அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்ற உண்மை இப்போது வெளிவந்துவிட்டதே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இராசீவ் கொலை வழக்கில் மறுவிசாரணையெல்லாம் தேவையில்லை. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 72 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தூக்குத் தண்டனையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனையும், வாழ்நாள் தண்டனையிலுள்ள நளினி, இராபர்ட் பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், ஜெயகுமார்  உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிபதி கே.டி.தாமஸ், அதிகாரி தியாகராஜன் ஆகியோர் வாக்குமூலங்கள் வழங்கிய பிறகும், இவர்கள் அனைவரும் சிறையில் இருப்பது சட்ட விரோதம்! எனவே, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? ஆரியத்தின் சூழ்ச்சி நடக்கிறதா?

குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மனித உரிமை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, இந்த வழக்கில் நடந்தத் தவறுகளை விசாரிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும். தில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர், சி.பி.ஐ.  விசாரணைக் குழுத் தலைவர் - தமிழ்நாட்டுத் தடியர் கார்த்திகேயன்.

மரண தண்டனைக்கு எதிராக இப்பொழுது பேசி வரும் அவர், அண்மையில் புதிய தொலைக்காட்சி நேர்படப்பேசுவிவாதத்தில், இராசீவ் கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டுமென கூறியதற்கு ஆத்திரத்துடன் எதிர்த்துப் பேசினார். என்ன விளையாடுறீங்களா? சட்டம், கோர்ட் எல்லாம் நீங்க வச்சதா? மறுவிசாரணை செய்ய முடியாதுஎன்றார். நீதிபதி கே.டி.தாமஸ், தியாகராஜன் ஆகியோர் மனச்சான்று உறுத்தி உண்மையைப் பேசியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த தடியரான கார்த்திகேயன், நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லையே ஏன்? அவருக்கு பின்னாலிருந்து இயக்கியவர்கள் யார்? இவற்றையெல்லாம் விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்.

தூக்குத் தண்டனையிலிருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரையும், வாழ்நாள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி, இராபர்ட் பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடாக இந்திய அரசு, தலா 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும். தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட 19 பேருக்கும் தலா 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை இந்திய அரசு வழங்க வேண்டும்.

இது நடந்தால் தான், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகப் பொருள். இல்லையெனில், இங்கு தமிழினத்திற்கு எதிரான ஆரிய சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

மாவீர் நாளான இன்று, அந்த மாவீர்களுக்குக் காணிக்கை செலுத்தும் விதமாக, இராசீவ் கொலை வழக்கு குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் வகையில், நம்முடைய இளைஞர்கள் பெருமுயற்சி செய்து இந்த உயிர்வலி ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்கள். தியாகராஜனுடைய பேட்டியை பி.பி.சி. வானொலி எடுத்து வெளியிட்டிருக்கிறது. இவர்களுக்கு நம் பாராட்டுகள்!

தமிழ்நாட்டில் என்ன நிலைமை? இனப்படுகொலைப் போரில் இறந்து போன தமிழீழத் தமிழர்களுக்கான ஒரு நினைவுச் சின்னமாக எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை, செயலலிதா அரசு இடித்திருக்கிறது. இதற்கு, இந்திய அரசின் தூண்டுதல் பின்னணியில் இருந்திருக்கலாம். அவ்வப்போது தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் காட்டிக் கொள்கிறாரே நடுவண் அமைச்சர் ஜி.கே.வாசன், அவர் அண்மையில் கருத்துத் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழகத்தில் தேவையில்லை என்றார். காங்கிரசுக் கட்சி கூடத்தான் தமிழர்களுக்குத் தேவையில்லை! அந்த வேண்டாத கட்சியை தலையில் சுமக்கிறானே தமிழன்! முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழ்நாட்டில் வைப்பதில் என்ன கேடு? தமிழ்நாட்டில் வைக்காமல் வேறு எந்த நாட்டில் வைப்பது?

ஆனால், வெறும் இந்திய அரசின் தூண்டுதல் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அ.தி.மு.க. தலைவி செயலலிதாவுக்கு இயல்பிலேயே இருக்கும் தமிழ் மொழி – தமிழ் இனத்திற்கு எதிரானக் காழ்ப்புணர்ச்சியால் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருக்கிறார்.  

முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவுக்குத் தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றம் வரைச் சென்றது தமிழக அரசு. அங்கு முதலில் தீர்ப்பு வழங்கிய ஒற்றை நீதிபதி, நிகழ்ச்சி நடத்த் தடையில்லை என்று கூறி அனுமதி வழங்குமாறு காவல்துறைக்குக் கட்டளையிட்டார். அதன்பிறகு, அங்கேயே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விடம், விழாவுக்குத் தடை கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இரு நீதிபதிகளும் விழாவுக்கு அனுமதி வழங்கக் கட்டளையிட்டனர்.

நடுவண் அரசின் தூண்டுதல் மட்டும் தான் காரணமென்றால், தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவைக் காட்டி, நிகழ்ச்சிக்குத் தொந்தரவு கொடுக்காமல் ஒதுங்கியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கும் சென்று, விழாவுக்குத் தடை கோரியது தமிழக அரசு. உச்சநீதிமன்றம் உடனடியாக அவ்வழக்கை எடுக்க மறுத்தது. திறப்பு விழா சிறப்பாக முடிந்த பின், முள்ளிவாய்க்கால் முற்றத்தை மூடி முத்திரையிடுவதற்கு ஆணை தருமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. அவ்வழக்கையும் உடனடியாக எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  

இந்த நிலையில் தான், விழா முடிந்த பிறகு நவம்பர் 13 அன்று அதிகாலை 5.30 மணியளில் முற்றத்தைத் திருட்டுத் தனமாக, சட்டவிரோதமாக இடிக்க முற்பட்டது செயலலிதா அரசு. அன்றைக்கு தஞ்சையில் இருந்த எனக்கு, காலையில் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் கைபேசியில் பேசினார். முற்றத்தை இடிக்கிறார்கள் சீக்கிரம் வாருங்கள் என அய்யா நெடுமாறன் கூறியது, மதுரையில் கண்ணிகி எழுப்பிய ஓலம் போல் இருந்தது.

உடனே தோழர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றோம். த.தே.பொ.க., ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, சி.பி.ஐ. கட்சி ஆகியவற்றின் தோழர்கள் அங்கு, அந்த அதிகாலையிலும் திரண்டுவிட்டார்கள். அங்கு காவல்துறை எங்களை உள்ளே செல்ல விடாமல் இழுத்துப் பிடித்துத் தள்ளியது. தள்ளுமுள்ளு நடந்தது. அந்த வேளையில், கைலி பனியனுடன் அங்கு வந்த திரு. பழ.நெடுமாறன் அவர்கள், எனது கையை இழுத்துப் பிடித்து, “என்னுடன் வாருங்கள், போலீசுடன் மோத வேண்டாம், சட்டப்படி பார்த்தக் கொள்வோம்” என்றார். அங்கு நடந்த இடிப்பு அட்டூழியங்களை  நாற்காலியில் உட்கார்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர், அரசு அதிகாரிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், அரசின் சொத்துகளை இடித்துத் தகர்த்ததாகவும், இன்னும் பல பிரிவுகளையும் சேர்த்து அன்று, அய்யா நெடுமாறன் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவருடன் சேர்த்து, 82 பேர்களையும் கைது செய்தனர். திருச்சி நடுவண் சிறையில் அடைத்தனர்.

காலனியாட்சிக் காலத்தில், காந்தியார் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினார். கொடுங்கோல் ஆட்சி செய்த வெள்ளையர்கள் கூட, காந்தியார் கத்தியால் குத்தச் சொன்னார் என்று பொய் வழக்குப் போட்டதில்லை. ஆனால் செயலலிதா அரசு, நெடுமாறன் அரசு அதிகாரிகளுக்கு எதிராகக் கொலை மிரட்டல் விட்டார் என்றும், மண்வெட்டி – கடப்பாரையுடன் அரசுக் கட்டுமானத்தை இடித்தார் என்றும் பொய் வழக்குப் போடுகிறது. என்னென்ன பிரவுகளில் வழக்குப் போட வேண்டுமென்பது, சென்னையிலிருந்து தஞ்சாவூர் காவல்துறைக்கு கட்டளையிடப்பட்டது. இதெல்லாம், செயலலிதாவின் கைவரிசை அல்லாமல் வேறு யாருடைய வேலை? தமிழ் இனத்தின் மீது செயலலிதாவுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சி தான், இதற்கெல்லாம் காரணம். தமிழர்களின் நினைவுச் சின்னங்கள், பெருமிதத்திற்குரிய அடையாளங்கள் எதையும் செயலலிதாவால் சகித்துக் கொள்ள முடியாது.

இப்பொழுது, சென்னை கடற்கரைச் சாலையிலிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்றத் தமிழக அரசு முனைகிறது. சிவாஜி, தமிழ் இனத்தின் கலைப்பெட்டகமாக, கலையுலக ஆற்றலாக, தலைச்சிறந்த நடிகராக வெளிப்பட்டவர். அந்த வகையில், தமிழினத்தின் அடையாளச் சின்னமாக சிவாஜி கணேசன் இருக்கிறார். சிவாஜி, தமிழ்த் திரையுலகின் பிதாமகன் ஆவார். அவரது சிலையால் வலது பக்கம் திரும்ப முடியாமல், இடது பக்கம் திரும்ப முடியாமல் போக்குவரத்துக்கு இடைஞ்சல் என தமிழக அரசுச் சொல்வது கற்பனை.

அம்மையார் செயலலிதா அவர்களே, சிவாஜி சிலையல்ல இடைஞ்சல். நீங்கள் சாலையில் செல்கின்ற போது தான், பொதுமக்களுக்கு சாலையோரம் எங்கும் இடைஞ்சல். சாலைகளெங்கும் அ.தி.மு.க.வினர், தமிழில், ஆங்கிலத்தில், தெலுங்கில், மலையாளத்தில் என உங்களுக்கு பாதபூஜை செய்து பிளக்ஸ் போர்டுகளை வைக்கிறார்கள். அவற்றால் பொது மக்களுக்கு, ஊர்தி ஓட்டுநர்களுக்கு எவ்வளவோ இடையூறு ஏற்படுகிறது. இதையெல்லாம் நீங்கள் அகற்றச் சொல்லாமல், அருவருக்கத்தக்க வகையில் இரசித்து மகிழ்கிறீர்கள், நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்றச் சொல்லலாமா?

நடிகர் சிவாஜி சிலையை அகற்றிவிட்ட பிறகு, அம்மையார் கண்ணகி சிலையை நோக்கித் திரும்புவார் என நான் ஐயப்படுகிறேன். ஏற்கெனவே, கண்ணகி சிலையை அம்மையார் அகற்றினார். பின்னர் வந்த தி.மு.க. அரசு, அதை அதே இடத்தில் நிறுவியது. இப்பொழுது, சிவாஜி சிலையை அகற்ற நாம் விட்டுவிட்டோம் என்றால், அடுத்து அதே துணிச்சலில் அவர் கண்ணகியை நோக்கித்தான் பாய்வார்.

ஏனெனில், தமிழ் இனம், மொழி என்றாலே ஒவ்வாமை ஏற்பட்டுவிடும் செயலிதாவுக்கு.  தமிழர்களின் நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதுவே இதற்கான காரணம்!

எனவே, தமிழ்நாட்டு இளைஞர்கள், தமிழ் இனத்துக்குக் கங்காணி வேலை பார்க்கும் கருணாநிதி – செயலலிதா ஆகியோரைப் புரிந்து கொண்டு புறந்தள்ளி, மாற்று அரசியலைக் கையிலெடுக்க வேண்டும். தமிழ் இனத்திற்கான, இன அரசியலைக் கையிலெடுக்க வேண்டும். கட்சிகளைக் கடந்து நாம் ஒன்று சேர வேண்டும்.

தமிழக முதல்வரும், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சட்டப் பேரவையில் ஒருநாளாவது ஒன்றாக அமர்ந்து பேசியிருக்கிறார்களா? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இந்த அநாகரீகம் உண்டா? இவர்களைத் தேர்ந்தெடுத்தத் தமிழ் மக்கள் காட்டுமிராண்டிகளா? முக்கியப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் செயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே இல்லை. இவர்கள் சந்தித்துக் கொண்டால், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்துவிடுவார்களா என்ன? ஏன் கூடிப் பேசக் கூடாது?

காவிரிச் சிக்கலில் அழுத்தம் கொடுக்க, தமிழக முதல்வர் தலைமையில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவாகச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்து முறையிட வேண்டுமென நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், செயலலிதா அனைத்தக் கட்சிக் கூட்டம் கூட்டுவதில்லை. 

இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைகக் வேண்டுமென வலியுறுத்தியும், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி காவிரி உரிமைக்கு தமிழகம் தழுவிய பேரணிகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கர்நாடகம் தமிழகத்திற்குத் தர வேண்டிய 26 டி.எம்.சி. காவிரி நீர் பாக்கியை உடனே பெற்றுத் தர வேண்டுமெனக் கோரியும், வருகின்ற திசம்பர் 3ஆம் நாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்தவுள்ளோம். இதில், விவசாயிகள் சங்கங்களும், ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.தே.பொ.க., விடுதலைத் தமிழ்ப்புலிகள், தமிழர் தேசிய இயக்கம் போன்ற அரசியல் இயக்கங்களும் பங்கு கொள்கின்றன.

தமிழ் இனத்திற்கு என்னக் கேடு நேர்ந்தாலும் தமிழர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்ற இந்த சூழல் தான் சிங்களனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. கன்னடனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. இந்திய அரசுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. செயலிதாவும் – கருணாநிதியும் தான் நமக்குப் பாதுகாப்பு என்று அவர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து நம்மை எதிர்த்துவிடாமல் பிரித்து வைத்து, தமிழ்நாட்டிலேயே நமக்குப் பாதுகாப்பான அரண்களாக செயலலிதாவும், கருணாநிதியும் விளங்குகிறார்கள் என்ற அவர்கள் நினைக்கிறார்கள்.

எனவே, தமிழ்நாட்டு இளைஞர்கள் இதிலிருந்தெல்லாம் பாடம் கற்றுக் கொண்டு, கட்சி கடந்த தமிழர் ஒற்றுமையை, இன அரசியலை மாற்று அரசியலாக் கையிலெடுக்க வேண்டும்.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தொழிற்சாலைகள் மிகுந்திருந்த வடசென்னை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான ம.தி.மு..வினரும், தமிழின உணர்வாளர்களும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.









போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT