திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்
தோழர் கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்க!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!
ஏற்கெனவே சிறையில் இருக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மீது தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டிருப்பது முற்றிலும் சனநாயக விரோதமானது; சட்ட நெறிகளுக்குப் புறம்பானது; கண்டனத்திற்குரியது.
இனப்படுகொலைக் குற்றவாளியான இராசபட்சேக்குப் பன்னாட்டு அரங்கில் புகழ் மகுடம் சூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு பொதுநலநாடுகள் மன்ற (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில் நடத்த முழு முயற்சி எடுத்துக் கொண்டது. இனப்படுகொலை, மனித உரிமைப் பறிப்பு,பெண்களைப் பாலியல் வன்முறை செய்து கொல்வது, சிறுவர்களைப் பிடித்து வைத்துக் கொல்வது முதலான குற்றங்கள் செய்த இலங்கை அரசுபொதுநலநாடுகள் மன்ற விதிகளின்படி அந்த அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் மேற்படிக் குற்றங்கள் அனைத்தையும் தமிழினத்திற்கு எதிராக இழைத்த இலங்கை அதிபர் இராசபட்சேக்கு சிறப்பு சேர்க்கும் முயற்சியில் இந்தியஅரசு ஈடுபட்டிருப்பது தமிழகத் தமிழர்களிடையே சினத்தை உண்டாக்கியுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சிலர் இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் பொதுநலநாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றுவலியுறுத்தி சென்னையிலும் சேலத்திலும் இந்திய அரசு அலுவலகங்களில் தீயைப் பயன்படுத்திப் போராட்டம் நடத்தியதாகத் தளைப்படுத்தப்பட்டுசிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்போட்டுள்ளது தமிழக அரசு. அத் தோழர்களின்போராட்ட வடிவம் தமது கட்சி ஏற்றுக்கொண்ட வடிவம் அல்ல என்று ஏற்கெனவே தோழர் கொளத்தூர் மணி அறிவித்துவிட்டார்.
அத்துடன் நேற்று (5.11.2013) சேலத்தில் நடந்த தி.வி.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் மேற்படி போராட்ட வடிவங்களைத் தங்கள் அமைப்புஆதரிக்கவில்லை என்றும் அந்த ஏழுத் தோழர்களையும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதாகவும் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர்விடுதலை இராசேந்திரன் அறிவித்துள்ளார்.
அமைப்புத் தலைமையின் ஒட்டுமொத்தக் கருத்து இவ்வாறு இருக்கும்போது, அதன் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை அவ்வழக்கில் சேர்த்ததும்அவர்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதும் ஏன் என்ற கேள்வி நடுநிலையாளர் நெஞ்சத்தில் எழுகிறது. காவல்துறை கூறுவது போல் தோழர்கொளத்தூர் மணி மேற்படி நிகழ்வுகளுக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.
முதல்வர் செயலலிதா அவர்கள் தலைமையில் உள்ள தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற சனநாயக மறுப்புத்தடுப்புக் காவல் சட்டங்களை மிகத் தாராளமாகப் பயன்படுத்தி வருகிறது. ஏற்கெனவே சென்னை உயர்நீதி மன்றம், பொருத்தமற்ற முறையில் விருப்புவெறுப்பு அடிப்படையில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் ஆகியவை போடப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை விடுதலைசெய்து ஆணையிட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போக்கு சனநாயக மறுப்பும் எதேச்சாதிகார விருப்பும் கொண்டதாகும்.
எனவே மேற்படி நிகழ்வுகளுக்காகத் தோழர் கௌத்தூர் மணி அவர்கள் மீது போட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளைக் கைவிட்டுதமிழக அரசு அவரை உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
இடம்; தஞ்சை
Post a Comment