உடனடிச்செய்திகள்

Wednesday, November 13, 2013

செயலலிதாவின் முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு இட்லர் பாணியில் உள்ளது! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை




செயலலிதாவின் முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு
 இட்லர் பாணியில் உள்ளது!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் 
தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

தமிழக முதல்வர் செயலலிதாவின் கட்டளையைத் தலைமேற் கொண்டு இன்று  (13.11.2013) விடியற்காலை தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும்  'திருப்பணி'யில், மாவட்ட வருவாய்த்துறையும், காவல்துறையும், தமிழக நெடுஞ்சாலைத்துறையும் கூட்டாக ஈடுபட்டன.

 சுற்றுச்சுவரை முற்றாக இடித்துத் தகர்த்துவிட்டனர். 60 அடி அகலத்திற்கு, சுற்றியிருந்த பூங்காவையும் நாசம் செய்து விட்டனர். கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட நீருற்றை, அப்புறப்படுத்திவிட்டனர்.

 இந்த அட்டூழியங்களுக்கு அவர் சொல்கின்ற காரணம், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான புறம்போக்கில் பூங்கா எழுப்பியிருக்கிறார்கள், எனவே இடித்தோம் என்கிறார்கள். இந்த பூங்காவையும் சுற்றுச்சுவரையும் அப்புறப்படுத்த வேண்டுமென்று நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு எதையும் செய்யவில்லை.
 சாலையோரம் உபரியாகக் கிடந்த இந்த புறம்போக்கு நிலத்தில், நெடுஞ்சாலைத்துறையின் எழுத்து வடிவிலான ஒப்புதலோடு தான், பூங்கா அமைக்கப்பட்டது. இப்பொழுது, அந்த உத்தரவை நாங்கள் நீக்கி விட்டோம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலையில் கூறினார்கள்.

 சாலையோர பூங்கா அமைத்துக் கொள்ளத் தனியாருககு அனுமதி வழங்கும் விதிமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் இருக்கிறது. அவ்விதியின்படி, கொடுக்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இரத்து செய்வதற்கான விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி, இரத்து செய்தது பற்றிய செய்தியை எழுத்துவடிவில் அய்யா பழ.நெடுமாறன்  அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வழங்கவில்லை.

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை அவர்களும், நானும் உரிமை இரத்து செய்து கொடுத்த நகலைக் காட்டுங்கள் என்று கேட்டபோது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, அவர்களாக எழுதிக் கொண்ட அறிக்கையைக் காட்டினார்களே தவிரஅந்த அறிக்கையை தொடர்புடையவரிடம் கொடுத்து பெற்றுக் கொண்டோம் என்பதற்கான கையொப்பமுள்ள நகலை அந்த அதிகாரி காட்டவில்லை. எனவே, நீங்கள் இப்பொழுது ஜோடனையாகத் தயாரித்துக் கொண்ட அறிக்கை இது என வாதிட்டோம்.

 அடுத்து, மதுரை உயர்நீதிமன்றம், இப்பொழுதுள்ள ஒட்டுமொத்தக் கடடுமானத்தோடு முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் திறந்து கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. அத்துடன், ஆக்கிரமிப்புப் பற்றி தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற ஆணைக்குப் புறம்பாக இடிப்பது சட்டவிரோதம், நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக் காட்டினோம். அதற்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பதில் சொல்லவில்லை. அவர்கள் இடிப்பதிலேயே குறியாக இருந்தனர்.
 சுற்றுச்சுவர்களை முழுமையாக இடித்த பிறகு, பூங்காவை நாசப்படுத்திய பிறகு, முற்றத்தில் உள்ள மண்டபங்களுக்குச் செல்லும் பாதையையும், கம்பி வேலிகட்டி அடைத்தார்கள். அந்த முற்றத்திற்குள் நுழைய எந்த வாசலும் அவர்கள் வைக்கவில்லை.

 முற்றத்தின் மண்டபங்கள் பட்டா நிலத்தில் உள்ளது. அது உலகத் தமிழர் பேரமைப்பினுடையத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்களது பெயரில் உள்ளது. தனியாருக்குச் சொந்தமானது. அதற்குப் போவதற்குப் பாதை வேண்டும். அதுமட்டுமல்ல, அய்யா நெடுமாறன் குடியிருக்கும் வீடு அதிலுள்ளது. அவ்வீட்டில் மனைவி, மகள் ஆகியோருடன் நெடுமாறன் குடியிருந்து வருகிறார். அவர்களையும் சேர்த்து உள்ளே வைத்து கம்பி வேலி வைத்து அடைத்துவிட்டால்,எப்படி வெளியே வருவார்கள்?

 துப்பாக்கிச் சூடு நடத்தி நெடுமாறனை சுட்டுக் கொன்றால் பழி வரும் என்று அஞ்சி, கம்பி வேலி அடைப்புக்குள் பட்டினி கிடந்து சாகட்டும் என செயலலிதா இந்தத் திட்டம் போட்டிருக்கிறாரா? என்று கேட்டோம்.

 ஒரு வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைப்பதற்கு, யாருக்கு உரிமை இருக்கிறது? எந்த சட்டத்தில் இடமிருக்கிறது? என்று கேட்டபிறகு, அதிகாரிகள் யோசித்து, வீட்டுக்கு செல்லும் பாதையை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களுக்குச் செல்லும் பாதையை கம்பி வேலி கட்டி அடைத்துள்ளார்கள்.

 முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் தமிழக அரசு அதிகாரிகள் இடிக்கிறார்கள் என்ற செய்திப் பரவியதும் மக்கள் திரண்டுவிட்டார்கள். அந்த மக்கள் ஆவேசத்தோடு அதிகாரிகள் போட்ட வேலியை அப்புறப்படுத்தினார்கள். காவல்துறையினர் அந்த மக்களைக் கைது செய்து, தஞ்சை நகரில் காவலில் வைத்துள்ளார்கள்.

 அய்யா பழ.நெடுமாறன் அவர்களையும், அவரோடு முள்ளிவாய்க்கால் முற்ற மண்டபத்தில் உட்கார்ந்திருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை உள்ளிட்ட பலரையும் காவல்துறை கைது செய்து கொண்டுபோனது.

 இந்த அநீதியைக் கண்டித்து, த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட 17 தோழர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளார்கள். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், தமிழக இளைஞர் முன்னணித் தோழர் ரெ.ரெங்கராசு தலைமையில், மறியல் செய்த மகளிர் ஆயம் ஒன்றியப் பொறுப்பாளர் தோழர் மீனா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடந்து கொண்டுள்ளன.

 நேற்று மாலை, காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியா செல்லககூடாது என்று சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் போட்டு பரபரப்புக் காட்டிய முதலமைச்சர் செயலலிதா, இன்று காலை விடிவதற்குள் ஈழத்தமிழர்களின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கச் செய்திருப்பது, இட்லரின் செயல்பாட்டை நினைவுட்டுகிறது.

 1933ஆம் ஆண்டு மே முதல் நாள், இலட்சக்கணக்கான மக்களை, தொழிலாளர்களைத் திரட்டி மே நாள் கொண்டாடினார் இட்லர். அந்த பெருந்திரள் கூட்டத்தில் பேசிய இட்லர், இன்று முதல் ஜெர்மன் தேசமெங்கும் இரண்டு முழக்கங்கள் ஒலிக்க வேண்டும் என்றார். அது, "உழைப்பை மதிப்போம்! உழைப்பாளியை கவுரவிப்போம்!" என்ற முழக்கங்களாகும் என்றார். ஆனால் மறுநாள் விடிந்தவுடன், நாளேடுகளில் தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன, தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என செய்தி வந்தது. செயலலிதாவின் முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு நிகழ்வு. இட்லரின் தந்திரத்தை ஒத்ததாக இருக்கிறது.

 இலங்கையில், ஈழ விடுதலைக்குப் போராடிய வீரர்களுக்கு, மக்களுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களையெல்லாம் இராசபக்சே இடித்தான். தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை முதலமைச்சர் செயலலிதாவே இடிக்கிறார்.

 முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் இந்த சட்டவிரோதச் செயலுக்கு, நடுவண் அரசின் தூண்டுதல் இருக்கும் என்ற போதிலும், முதலமைச்சர் செயலலிதாவின் தீவிர முனைப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழினத்தின் மீது இந்திய அரசுக்கு எந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ, அதே அளவுக்கு காழ்ப்புணர்ச்சி செயலலிதாவுக்கும் இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

 தமிழக அரசின், முள்ளிவாய்க்கால் முற்றத் தகர்ப்பு அழிவு வேலையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அய்யா பழ.நெடுமாறன் உட்பட  கைது செய்யப்பட்ட தோழர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதே வேளை, தமிழகஇந்திய அரசுகளின் தமிழின விரோதச் செயல்களை தமிழ் மக்கள் எதிர் கொள்வார்கள், முறியடிப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.




போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT