உடனடிச்செய்திகள்

Monday, November 25, 2013

“இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை என்பது அம்பலம்”இவ்வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!


இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை என்பது அம்பலம்
இவ்வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!
  
உயிர்வலிஎன்ற ஆவணப்படம் இராசீவ் காந்தி கொலை வழக்கு நடுவண் புலனாய்வு காவல்துறையின் கட்டுக்கதை என்பதை நூற்றுக்கு நூறு அம்பலப்படுத்திவிட்டது. இராசீவ் காந்தி கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் கொலை சதி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, மரண தண்டனை, வாழ்நாள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டன.

இதற்கு, ஆதாரமாக பேரறிவாளன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமும், கொலைச் சதி நடந்தது என்ற கூற்றும் பயன்படுத்தப்பட்டன.

மேற்கண்ட 2 ஆதாரங்களும், பொய்யானவை, எப்படியும் தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காக புனையப்பட்டவை என்பவற்றை பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய இந்தியக் காவல்பணி அதிகாரி தியாகராஜனுடைய வாக்குமூலமும், உச்சநீதிமன்றத்தில் மரண தண்டனையை உறுதிப்படுத்திய அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ் வாக்குமூலமும் உயிர்வலி ஆவணப்படத்தில் வெளியாகியுள்ளது.

பேட்டரி வாங்கியது உண்மை, அது எதற்காக வாங்கப்பட்டது என்ற செய்தி எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் கூறிய வாக்குமூலத்தில், எதற்காக எனத் தெரியாது என்று அவர் கூறும் உயிரான பகுதியை, வார்த்தைக்கு வார்த்தை வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டக்கடமையில் இருந்து நழுவிப் பதிவு செய்தேன் என்றும், முக்கியமான இந்த வாக்குமூலத்தின் வார்த்தைகளைப் பதிவு செய்யாமல் தவிர்த்து விட்டேன் என்றும், வாக்குமூலங்கள வாங்கும் போது இந்த விதிமுறை மீறல் நடந்தே வருகிறது என்றும் காவல் அதிகாரி தியாகராஜன் கூறியுள்ளார்.

தியாகராஜன் வாக்குமூலத்தை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்த போது நடைபெற்ற இந்தத் திரிபு, வாக்குமூலம் அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோப்பதிவில் அம்பலமாகியிருக்குமே என்ற கேள்வி ஆவணப்படத்தின் பார்வையாளர்களுக்கு எழும். அதற்கும் அப்படத்திலேயே விடை வந்துவிட்டது.

சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உறுப்பு வகித்த மோகன்ராஜ் என்ற அதிகாரி, வழக்கின் புனைவுக்கு ஏற்ப வீடியோ தணிக்கை(Edit) செய்யப்பட்டு, அது தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்று கூறுகிறார். இந்திய அரசின் உள்துறை இராசீவ் காந்தி கலந்து கொண்ட திருப்பெரும்புதூர் பொதுக்கூட்டத்தை ஒளிப்பதிவு செய்திருந்தது. அந்த வீடியோப் பதிவு மறைக்கப்பட்டுள்ளது என்பதை இன்னொரு புலனாய்வு அதிகாரி இரகோத்தமன் கூறுவதும் இந்த ஆவணப்படத்தில் பதிவாகியிருக்கிறது. நேர்மையாகப் புலன் விசாரணை நடைபெற்றிருந்தால், கொலை நடந்த நேரடிக் காட்சிப் படத்தை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்காது.

இரண்டாவதாக, இராசீவ் காந்தி கொலை பற்றி யாரிடமும் தான் பேசவில்லை என்று சிவராசன் மறைமுக குறியீட்டு மொழி மூலம் 07.05.1991 அன்று ஈழத்திற்குத் தெரிவித்ததை, அதன் பொருளைத் திரித்து, இராசீவ் காந்தி கொலை வழக்குக் குற்ற அறிக்கையில் சி.பி.ஐ. காவல்துறை பதிவு செய்திருக்கிறது.

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தீர்ப்பு வழங்கி விட்டோம் என்று உயிர்வலி ஆவணப்படத்தில் நீதிபதி கே.டி.தாமஸ் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த இரண்டு ஆதாரங்களும் பொய்யானவை என்று ஆன பிறகு, இந்த வழக்கு நூற்றுக்கு நூறு பொய் வழக்கு என்றாகிவிட்டது. இந்த நிலையில், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவி மக்களுக்கு கொடியத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அதிகாரிகளுக்குப் பின்னாலிருந்து, சட்ட விரோதச் செயல்களைச் செய்யுமாறுத் தூண்டிய அமைச்சர்கள் மற்றும் செல்வாக்குள்ள அரசியல்வாதிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு துயர் துடைப்புப் பணிகள் செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது.

இந்தியாவில், சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது உண்மையானால், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகியுள்ளவர்களுக்கும் தண்டனை நீக்கம் செய்து அவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவிக்க வேண்டும்.

22 ஆண்டுகளாக மரண தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரையும், வாழ்நாள் தண்டனை பெற்று சிறையிலுள்ள நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய அனைவரையும் உடனடியாக குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்ய வேண்டும். இந்த வழக்கில், சிறை புகுந்த அனைவருக்கும் அவரவர் தண்டனைக்கு ஏற்ப மிக அதிகமாக இழப்பீட்டுத் தொகையை இந்திய அரசு வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு சட்ட நீதி வழங்குவதற்கு, குடியரசுத் தலைவர் சிறப்பு ஏற்பாடாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் மனித உரிமை வல்லுநர்களையும் கொண்ட ஓர் ஆணையத்தை காலவரம்பிட்டு அமைக்க வேண்டும். ஆணையத்தின் முடிவுக்குக் காத்திராமல், இவ்வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

புதிதாக கிடைத்துள்ள மெய் விவரங்கள் அடிப்படையில் தமிழக முதலமைச்சர், இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 161இன் கீழ் ஆளுநர் மூலம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை இரத்து செய்தும், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரது வாழ்நாள் தண்டனையை தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்து செய்தும், இவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுத்தால் தான், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை நம்மால் நம்ப முடியும். இல்லையேல், வீதிக்கு வந்து மக்கள் போராடித்தான் நீதியைப் பெற வேண்டிய தேவையுள்ளது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                       
இங்ஙனம் 
பெ.மணியரசன்
இடம்: தஞ்சை                                                                                 தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT