உடனடிச்செய்திகள்

Monday, November 18, 2013

டிசம்பர் 3 காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 29 காவிரி மாநாடு காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு

டிசம்பர் 3 காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்
 டிசம்பர் 29 காவிரி மாநாடு
 காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு

காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்துரையாடல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் 14.11.2013 அன்று மாலை தஞ்சையில் கூடியது.
பல்வேறு உழவர் அமைப்புகளின் தலைவர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேட்டூர் அணையில் தற்போதுள்ள தண்ணீர் இருப்பு சம்பா பயிருக்கு போதுமானதல்ல. இத்தண்ணீர் இன்னும் 3 வாரத்திற்கு மேல் கிடைக்காது. இப்போதே கடை மடை பகுதிகளுக்கு போதிய நீரின்றி பயிர்கள் காய்ந்து வருகின்றன. இந்நிலை நீடித்தால் சென்ற ஆண்டைப் போலவே காவிரிப் பாசனப் பகுதிகளின் பயிர் கருகி மிகப் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

ஆனால் இந்திய அரசோ, தனது சட்டக் கடமைகளை நிறை வேற்றாமல் கர்நாடகத்தின் அடாவடிக்கே தொடர்ந்து துணை போகிறது.

அண்மையில் தில்லியில் கூடிய காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு இறுதித் தீர்ப்புப் படி தரவேண்டிய 26. ஆ.மி.க (டி.எம்.சி) நீரை உடனடியாக திறந்து விடுமாறு கூறியது. உடனடியாக கர்நாடகம் இதனை ஏற்க மறுத்ததாக அறிவித்தது. கடந்த ஆகஸ்ட்டு மாதத்தில் கர்நாடகத்தில் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வலிந்ததையும் கணக்காகச் சொல்லி தமிழகத்திற்கு நீதிமன்றத் தீர்ப்பையும் தாண்டி அதிகத் தண்ணீர் நிரம்பி விட்டுவிட்டதாக கூறியது.
கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ள போதிலும் தீர்ப்பின் படி தண்ணீர் தர கர்நாடகம் மறுக்கிறது. மேற்பார்வைக் குழு கேட்டுக் கொண்டபடி 26 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு இந்திய அரசு ஆணையிட  மறுக்கிறது.

உச்சநீதி மன்றமோ, ஆகஸ்ட்டில் அடைமழை பெய்ததை சாக்காகச் சொல்லி  “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை 2014 சனவரிக்கு தள்ளி வைத்தது. இந்திய அரசும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப் படி  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் இருக்கிற நெருக்கடியை புரிந்து கொண்டு, காவிரி உரிமையை நிலை நாட்ட விரைந்து செயல்பட வேண்டிய  செயலலிதா அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு போட போவதாக அறிவித்துள்ளது.
தஞ்சையில் கூடிய “காவிரி உரிமை மீட்புக் குழு” கூட்டம் இச்சூழல்களையெல்லாம் விரிவாக விவாதித்து கீழ்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவதென முடிவு செய்தது.

1. காவிரி மேற்பார்வைக்குழு கூறியபடி “காவிரி இறுதித் தீர்ப்புக்கிணங்க தமிழகத்திற்குத் தர வேண்டிய 26. டி. எம்.சி. காவிரி நீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு இந்திய அரசு ஆணையிட வேண்டும்.
2. காவிரி இறுதித் தீர்ப்பில் கூறியவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை  உடனடியாக இந்திய அரசு நிறுவி, கர்நாடகக் காவிரி அணைகளை இவ்வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.
3. மேற்சொன்னவாறு 26 டி.எம்.சி. நீர் தரவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் இந்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்து உழவர் அமைப்புகள் கூட்டத்தைக் கூட்டி காவிரி உரிமையை மீட்க செயலில் இறங்க வேண்டும். அனைத்துத் கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். மக்களைத் திரட்டி “காவிரி உரிமை மீட்பு நாள்” என்று ஆணை அறிவித்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும், தமிழக அரசுக்கும் வலியுறுத்தும் வகையில் வரும் 2013 டிசம் பர் 3 செவ்வாய் அன்று காவிரி பாசன மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், நாகை, மாவட்டத்  தலைநகரங்களிலும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும், பல்லாயிரக் கணக்கில் உழவர்களையும் தமிழின உணர்வாளர்களையும் திரட்டி 2013 டிசம்பர் 29 ஆம் நாள் ஞாயிறு அன்று தஞ்சையில் முழுநாள் காவிரி மாநாடு நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் இக்கூட்டத்தில், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருட்டிணன், த.தே. பொ.க. பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் மு. சேரன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம், பொதுச் செயலாளர் தெ. காசிநாதன், காவிரி தனபாலன், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் திருநாவுக்கரசு, பாரம்பரிய நெல்காப்போர் இயக்கத் தலைவர் செயராமன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவில் காவிரி தனபாலன் நன்றி கூறினார்.




(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, )

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT