உடனடிச்செய்திகள்

Tuesday, November 12, 2013

இலங்கை காமன்வெல்த் மாநாடு: தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!


இலங்கை காமன்வெல்த் மாநாடு:
தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது, இந்தியா அதை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்றத் தீர்மானம் இன்று(12.11.2013) தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் செயலலிதா அவர்களால் மீண்டும் முன்மொழியப்பட்டு மீண்டும் நிறை வேற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இது போன்றதொரு தீர்மானம் இதே சட்டப்பேரவையில், 24.10.2013 அன்று நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பலனில்லாத நிலையில், தமிழக அரசு - தமிழக கட்சிகள் - தமிழக மக்கள் ஆகியோர் செயல்படுத்தத்தக்க வேலைத்திட்டத்துடன் கூடிய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், இந்திய அரசை வலியுறுத்துவதற்கான புதிய செயல்திட்டம் எதுவும் இல்லாத இந்தத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒரு சட்டப்பேரவைத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மாறாக, முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, அதில் தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்துவது, முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு புதுதில்லி சென்று பிரதமரைச் சந்திப்பது போன்ற செயல் திட்டங்களை தீர்மானித்திருக்க வேண்டும்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தனது அரசு இத்திசையில் செயல்பட்டது போல் காட்டிக் கொள்ளப் பயன்படுமே தவிர, இத்தீர்மானத்தால் ஒரு பயனும் இல்லை. இதுவொரு சடங்குத் தீர்மானம்!

இனியும் கூட செயல்படக் காலமிருக்கிறது; தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி செயல்திட்டமுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றி ஒட்டுமொத்தத் தமிழகத்தை அச்ச்செயலில் இறங்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார், வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் என இந்திய அரசு எடுத்திருக்கும் நிலை, தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சிக்கும் நாடகமாகும்.

இந்தத் தீர்மானத்தைக் கூட தமிழகக் காங்கிரசு கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டப்பேரவையில் ஆதரிக்க மறுத்தது, அக்கட்சிகளின் தமிழினத் துரோகம் தொடர்கிறது என்பதற்கான சான்று! அக்கட்சிகளின் தமிழின எதிர்ப்பு நிலைபாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT