உடனடிச்செய்திகள்

Saturday, November 25, 2017

“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு!” தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டியுடன் புதிய தலைமுறை வார எட்டில் கட்டுரை!

“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு!” தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டியுடன் புதிய தலைமுறை வார எட்டில் கட்டுரை!




“தமிழர்களின் வேலை வாய்ப்பை தமிழக அரசே பறிக்கும் அவலம் - அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு!” என்ற தலைப்பில், 30.11.2017 நாளிட்ட “புதிய தலைமுறை” வார இதழில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டியுடன் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“தமிழக இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசு பணியில் 9351 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்புகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு. இதனால், மாநில அரசின் பணிகளில் பலநூறு வேலைவாய்ப்புகளை பறித்திருக்கிறார்கள் வெளிமாநிலத்தவர்கள்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களைவிடவும் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்கள்தான் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசுப் பணி வாய்ப்புகளும் தமிழக இளைஞர்களிடம் பறிக்கப்படுகிறது. இத்தனைக்கும், இந்தியாவிலேயே படித்து வேலையில்லாத பட்டதாரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இந்நிலையில், இங்குள்ள மாநில அரசுப்பணிகளில்கூட வெளிமாநிலத்தவர்களை அனுமதிப்பது மேலும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகமாக்கி, தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்லும் என்ற குரல் எல்லாமட்டத்திலும் ஒலிக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான 1058 காலிப் பணியிடங்களுக்கு, ‘ஆசிரியர் தேர்வு வாரியம்’ (Teachers Recruitment Board) நடத்திய தேர்வின் முடிவுகளில் நூற்றுக்கணக்கான வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியுள்ளனர். தங்களின் இருப்பிட விபரம் உள்பட பல்வேறு குளறுபடிகள் செய்துதான் இந்த செயல் நடைபெற்றுள்ளதாக அந்த தேர்வினை எழுதிய தமிழக பட்டதாரிகள் குமுறினர். இந்நிலையில், என்ன நிகழ்ந்துள்ளது என நுட்பமாக பார்த்தவர்களுக்கு உள்ளே ஆச்சர்யம் காத்திருந்தது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதமே, மாநில அரசின் தேர்வுகளை வெளிமாநிலத்தவர்களும்வெளிநாட்டினரும் எழுதலாம் என்ற வகையில், விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்திருக்கிறது. ரகசியமாக இருந்த அந்தத் தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக நம்முடன் பேசிய, பல்தொழில் நுட்பக்கல்லூரி ஆசிரியர் தேர்வினை எழுதிய திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞரான பாலசுப்ரமணியன், “நான் எம்.டெக். படித்துள்ளேன். பல ஆண்டுகளாக இந்த தேர்வினை எழுதி வருகின்றேன். இந்த முறை நடந்த தேர்வினை மிகவும் சிறப்பாக எழுதி, எப்படியும் பணி கிடைத்துவிடுமென காத்திருந்தேன். அதுபோல நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தேன். ஆனால், எழுத்து தேர்வு முடிவுகளை பார்த்தவுடன் பெரிய அதிர்ச்சி அடைந்தேன். அதில் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கட் ஆஃப் மார்க் அதிகமாக இருந்தது. சந்தேகத்துடன் என்னவென்று பார்த்தபோதுதான் தெரிந்தது இந்த தேர்வுகளில் பலநூற்றுக்கணக்கான வெளிமாநில மாணவர்கள் தேர்வாகியுள்ளது. அவர்கள் அனைவரும் பல லட்சம் கட்டி ஐஏஎஸ் போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள். அதனால், அவர்களால் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்திருக்கிறது. இதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறோம்” என்கிறார் வேதனையுடன்.

“தமிழ்நாட்டிற்குள்ளேயே உள்ள மத்திய அரசு நிறுவனங்களில், தொடர்ந்து தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலத்தவர்களையே பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்தும் நிலையில், இப்போது தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரிகளில் உள்ள 1058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு ‘ஆசிரியர் தேர்வு வாரியம்’ நடத்திய தேர்வின் முடிவுகள், கடந்த 07.11.2017 அன்று இணையதளத்தில் வெளியாகின. இதில் வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை என்ற நிலையில், அதில் பொதுப்பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது, 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப் பட்டுள்ளன. அதேபோல், மின்னணு தொடர்பியல் (ECE) துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர். இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்கு எடுக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வெளி மாநிலத்தவர்! இதுபோல் ஒவ்வொரு துறையிலும் வெளி மாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர்.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் இடங்களை தட்டிப் பறித்துள்ளனர். இந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணை வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டின்படியான இடங்களிலும் வெளி மாநிலத்தவர் ஆங்காங்கு உள்ளனர். அதையும் கணக்கிட்டால், இந்த விகிதம் இன்னும் அதிகமாகும்! வழக்கமாக இதுபோன்ற தேர்வுகளில் அதிகபட்சமாக தமிழ்நாட்டு மாணவர்கள் 120 முதல் 130 மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால், 140லிருந்து 154 வரை வெளி மாநிலத்தவர் மதிப்பெண் பெற்றுள்ளது. இத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பினும், பாடங்கள் தமிழில்தான் நடத்தப்படுகின்றன. தமிழ்வழிக் கல்வியில் பயின்றுவிட்டு சேரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வின்போது அவர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில், தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள் விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்படுவதால், இந்த உரிமை அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும்! தமிழில் நடத்தப்படும் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆங்கிலமும் பேசத் தெரியாத வெளி மாநிலத்தவர் இருப்பின், அந்த வகுப்பு மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறிதான்! எனவே, இந்த நியமனங்கள் காரணமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும். பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் அச்சத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு திணித்த நீட் தேர்வால், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் வெளி மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப்பட்ட நிலையில், இப்போது தமிழ்நாடு அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாநில அரசே வெளி மாநிலத்தவரைப் பணியில் அமர்த்த முயலும் செயல் கடும் கண்டனத்திற் குரியது.

மகாராஷ்டிரத்தில் 1968-இலிருந்தும், கர்நாடகாவில் 1986-இலிருந்தும், குஜராத்தில் 1995-இலிருந்தும், மேற்கு வங்கத்தில் 1999-இலிருந்தும் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டமியற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டும் அப்படியொரு சட்டத்தை இயற்றவில்லை. மாறாக வேலை வாய்ப்பை மற்ற மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவது மண்ணின் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும்! இது மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டதின் நோக்கத்தை சிதைத்து மண்ணின் மக்களான தமிழர்கள் உரிமையைப் பறிப்பதாகும்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளைச் செய்யும்போது, தமிழ்நாட்டு மரபு வழியில் தமிழ்நாட்டுக் குடிமக்களாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான காலவரம்புடன் கூடிய இருப்பிடச் சான்று, தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல, மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

உடனடியாக பல்தொழில்நுட்பக் கல்லூரிப் பணித்தேர்வு பட்டியலிலிருந்து வெளி மாநில மாணவர்களை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கிய பிறகு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வேண்டும். தமிழர்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டிய நேரமிது. கட்சி கடந்து ஒற்றுமையுடன் இளம் தலைமுறையின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக, 07. 11. 2016 அன்று திருத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதுபோல், 2018 பிப்ரவரி தேர்வுக்காக வெளியிட்டுள்ள விளம்பரங்களையும் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், குஜராத், மராட்டியம் மாநிலங்களைப் போல், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட புதிய சட்டம் இயற்ற வேண்டும்.” என்கிறார் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன்.

“இதற்கும் மேலாக இப்போது தமிழர்களின் தலையில் விழுந்த பேரிடியாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி. என். பி. எஸ். சி. ) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2016இல் செய்த திருத்தம் என்பது, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான். மேலும், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது, தமிழ்நாடு அரசு.

இதன்மூலம், நேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசு.
அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக்கொள்ள வாய்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவர் என்று அவ்விளம்பரம் கூறுகிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கான சாதிகள் பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள அட்டவணை சாதிகள் என்ற தலைப்பில், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் கவுடா, ஹெக்டே, லிங்காயத்து போன்ற கர்நாடக மாநில சாதிகளும், மராட்டா என்ற மராட்டிய மாநில சாதியும், ஜெட்டி என்ற குஜராத் மாநில சாதியும், கேரள முதலி என்ற கேரள சாதியும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இவை போல் இன்னும் பல இருக்கின்றன. இச்சாதியினர் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களில் இடஒதுக்கீட்டைப் பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களையும் இவர்கள் அபகரிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

1956-ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் வரலாற்று வழியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் இடம் அளிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் பரம்பரையாகவும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், இன்றைக்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும்கூட, அவர்களது சாதி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் ஏற்கப்படாமல், தமிழர்கள் அனைவரும் பொதுப்பட்டியலிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

பல்தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர் தேர்வினை எழுதிய கும்பகோணத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணிகண்டன், “தமிழகம் முழுவதும் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறோம். இந்த நிலையில் வெளிமாநிலத்தவர்களும் இங்கு வந்து எங்களுடன் போட்டியிட்டால் எப்படி நாங்கள் வேலைக்கு போக முடியும். இந்த தேர்வுகளில் அதிக அளவில் வெளிமாநிலத்தவர்கள் தேர்வாகியுள்ளனர். குறிப்பாக PT-32 என்ற தேர்வுமையத்தில் மட்டுமே பலநூறு வெளிமாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். இதுபோல சில குறிப்பட்ட தேர்வு மையங்களில் அதிக அளவில் வெளிமாநில மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இது எங்களுக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

இங்கு படித்து வேலையில்லாமல் இருக்கும் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்த அரசு முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் பணிவாய்ப்பை பிற மாநிலத்தவர்களுக்கு தாரைவார்க்கக்கூடாது” என்கிறார் கவலையுடன்.

தமிழகம் முழுவதும் இப்போதைய கணக்குப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் மேல். அவர்களில் பி.இ.,எம்.இ. மற்றும் பிஎச்டி போன்ற உயர்கல்வி படித்தவர்கள்கூட 6 ஆயிரம் ரூபாய் மாதசம்பளத்திற்கு வேலை பார்க்கும் கொடுமை நடந்துவருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.
அரசுப்பணி தேர்வுகளை தொடர்ச்சியாக எழுதிவரும் தஞ்சையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணிகண்டன், “இங்கு என்னை போன்ற பல லட்சம் இளைஞர்கள் கல்விக்கடன் பெற்று படித்துவிட்டு, வேலை இல்லாமல் கடன் சுமையுடன் இருக்கிறோம். எங்களின் ஒரே நம்பிக்கையே அரசுப் பணிகள்தான். அதற்காகத்தான் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்து வருகிறோம். ஆனால், இப்போது வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யார் வந்து வேண்டுமானாலும் இங்குவந்து தேர்வெழுதலாம் என்றால், நாங்கள் எப்படி வேலை வாய்ப்பை பெறுவது?

மற்ற மாநிலங்களில் இதுபோல தமிழக மாணவர்களை தங்கள் மாநில அரசுப்பணிக்கு அனுமதித்தால் நாமும் அனுமதிக்கலாம். எங்குமே எங்களை தேர்வெழுத அனுமதிக்காத நிலையில், இங்கு மட்டும் அவர்களை அனுமதித்தால் அது நியாயமாகுமா?. இப்படியே போனால் தமிழகத்தில் படித்த பல இலட்சம் இளைஞர்களாகிய நாங்கள் என்னதான் செய்வது” என்கிறார் ஆதங்கத்துடன்”.

இவ்வாறு அச்செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT