சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவிப்பு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில் 14.11.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், கோ. மாரிமுத்து, நா. வைகறை, குழ. பால்ராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், இரெ. இராசு, ம. இலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்த தோழர்கள் அரியமங்கலம் திரு. இரெ.சு. மணி, காதாட்டிப்பட்டி சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை தமிழின உணர்வாளர் திரு. இராம. இளங்காவன், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, தமிழறிஞர் – பேராசிரியர் மா. நன்னன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 :
தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்தும் தேர்வு முடிவைக் கைவிடாவிட்டால் சென்னையில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்!
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், தொடர்ந்து தமிழர்களைப் புறக்கணித்து வெளி மாநிலத்தவர்களையே பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்தும் நிலையில், இப்போது தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரிகளில் உள்ள 1058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு “ஆசிரியர் தேர்வு வாரியம்” (Teachers Recruitment Board) நடத்திய தேர்வின் முடிவுகள், கடந்த 07.11.2017 அன்று இணையதளத்தில் வெளியாகின. இதில் வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை என்ற நிலையில், அதில் பொதுப்பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது, 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப் பட்டுள்ளன. அதேபோல், மின்னணு தொடர்பியல் (ECE) துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர். இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்கு எடுக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வெளி மாநிலத்தவர்! இதுபோல் ஒவ்வொரு துறையிலும் வெளி மாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர்.
இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் இடங்களை தட்டிப் பறித்துள்ளனர். இந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணை வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டின்படியான இடங்களிலும் வெளி மாநிலத்தவர் ஆங்காங்கு உள்ளனர். அதையும் கணக்கிட்டால், இந்த விகிதம் இன்னும் அதிகமாகும்! வழக்கமாக இதுபோன்ற தேர்வுகளில் அதிகபட்சமாக தமிழ்நாட்டு மாணவர்கள் 120 முதல் 130 மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால், 140லிருந்து 154 வரை வெளி மாநிலத்தவர் மதிப்பெண் பெற்றுள்ளது, இத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.
பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பினும், பாடங்கள் தமிழில் தான் நடத்தப்படுகின்றன. தமிழ்வழிக் கல்வியில் பயின்றுவிட்டு சேரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வின்போது அவர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.
தமிழேத் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்படுவதால், இந்த உரிமை அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும்! தமிழில் நடத்தப்படும் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆங்கிலமும் பேசத் தெரியாத வெளி மாநிலத்தவர் இருப்பின், அந்த வகுப்பு மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான்! எனவே, இந்த நியமனங்கள் காரணமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும்! பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் வினாக்குறியாகும்!
தமிழ்நாட்டின் மீது இந்திய அரசு திணித்த நீட் தேர்வால், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் வெளி மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப்பட்ட நிலையில், இப்போது தமிழ்நாடு அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாநில அரசே வெளி மாநிலத்தவரைப் பணியில் அமர்த்த முயலும் செயல் கடும் கண்டனத்திற்குரியது!
மகாராட்டிரத்தில் 1968லிருந்தும், கர்நாடகாவில் 1986லிருந்தும், குசராத்தில் 1995லிருந்தும், மேற்கு வங்கத்தில் 1999லிருந்தும் என - தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் பல மாநிலங்களிலும் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டமியற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவது மண்ணின் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும்! மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டதின் நோக்கத்தை சிதைத்து மண்ணின் மக்களான தமிழர்கள் உரிமையைப் பறிப்பதாகும்.
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளைச் செய்யும்போது, தமிழ்நாட்டு மரபு வழியில் தமிழ்நாட்டுக் குடிமக்களாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான காலவரம்புடன் கூடிய இருப்பிடச் சான்று, தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல, மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக பல்தொழில்நுட்பக் கல்லூரிப் பணித்தேர்வு பட்டியலிலிருந்து வெளி மாநில மாணவர்களை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கிய பிறகு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வேண்டும்! இல்லையெனில், வரும் 23.11.2017 அன்று சென்னை தரமணி நடுவண் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் அறப்போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துவது என தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது!
தீர்மானம் 2 :
ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய வேண்டும்!
சனநாயகத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெறுவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பது என்பதை வழக்கமாக்கிவிட்ட அரசியல் திருடர்கள் இந்தியா முழுவதும் பெருகியுள்ளார்கள். இந்தியாவிலேயே மிக அதிகமாக அரசியல் கொள்ளை நடைபெறும் மாநிலம், தமிழ்நாடு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இப்பொழுது, ஒரு பிரிவு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், பினாமி தொழில்கள் என்று சற்றொப்ப 200 இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்துள்ளது. இந்த வருமானவரிச் சோதனை என்பது, நரேந்திர மோடி அரசால் அரசியல் உள்நோக்கத்துடன், தனக்கு ஆகாத பிரிவினர் மீது தொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை! அதாவது, நரேந்திர மோடி அரசுக்கு ஊழல் ஒழிப்பிலும், சனநாயகக் கொள்ளையர்களைத் (Decoit of Democracy) தண்டிப்பதிலும் உண்மையான அக்கறையில்லை!
ஆனால், பிடிபடாத திருடர்களை சுட்டிக்காட்டி பிடிபட்ட திருடர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்று பேசுவது தூய்மை நெறியும் அன்று; நீதியும் அன்று! ஒரு சாரார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்று, மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருவதே அறத்தின் பாற்பட்டது!
எனவே, இப்பொழுது தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மீது நடைபெறும் வருமானவரி சோதனைகளை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது! இதையும், குற்றவியல் அழுத்தம் கொடுத்து அ.இ.அ.தி.மு.க.வின் அப்பிரிவை தன்னோடு கூட்டணி சேர்த்துக் கொள்ளும் அரசியல் தந்திரமாக பயன்படுத்தக் கூடாது என்று மோடி அரசைத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது!
அரசியல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, முதல் நிலை ஆதாரங்கள் கிடைத்தால் அவர்களின் சொத்துகள் அனைத்தையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். அச்சொத்துகளை இழந்தோர், நீதிமன்றத்தை நாடி நீதி பெற்றுக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருப்பதால், சொத்துகளைப் பறிமுதல் செய்வது அநீதியாகாது என்பதை இந்திய அரசுக்கு கோரிக்கையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு வைக்கிறது!
தீர்மானம் 3 :
தமிழ்நாடு ஆளுநர் செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடி காட்ட வேண்டும்!
தமிழ்நாடு ஆளுநர் புரோகித் பன்வாரிலால் இப்பொழுது புதுச்சேரியின் கிரண் பேடி போல, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறிக்கும் தில்லியின் கைத்தடியாக செயல்படுவதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!
இன்றைக்குள்ள அரசமைப்புச் சட்டம், மாநில அமைச்சரவைக்கு முழுமையான அதிகாரம் தரவில்லை என்றாலும், அந்த அமைச்சரவையின் ஒப்புதலின்றி நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவில்லை. கோவை மாநகராட்சி அலுவலகம் சென்று, இன்று (14.11.2017) ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டம் செயல்படுகிறதா என்று பேருந்து நிலையக் கழிவறைகளைப் போய் பார்த்திருக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் நேரடிப் பொறுப்பு தமிழ்நாடு அமைச்சரவையிடம் இருக்கிறது. அடுத்தடுத்து இதுபோல் தமிழ்நாடு அமைச்சரவைப் பணிகளில் தலையிட்டு தனிக் கட்டளைகள் பிறப்பிக்கும் திட்டத்தையும் ஆளுநர் புரோகித் வைத்துள்ளார் என்று தெரிகிறது.
இந்த அதிகார ஆக்கிரமிப்பை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்க வேண்டும்! தலைமையமைச்சர் நரேந்திர மோடி தலையிட்டு, புரோகித்தின் அதிகார அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும்! ஆளுநர் தமது அதிகார அடாவடித்தனங்களை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர் செல்லுமிடமெங்கும் தமிழர்கள் கருப்புக் கொடி காட்டி “திரும்பிப் போ!” என்று முழங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு, தமிழ்நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் 4 :
தஞ்சையில் ஊழல் செய்து ஓட்டை மேம்பாலம் கட்டிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும்!
தஞ்சை மேரிஸ் கார்னர் – சாந்தப்பிள்ளை கேட் அருகில் புதிதாகக் கட்டி, பொது மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படாத மேம்பாலத்தில் விழுந்த ஓட்டைகள் வழியே, தமிழ்நாடு ஆட்சியாளர்களின் ஊழல் முகமே வெளிப்பட்டுள்ளது.
“சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் மக்கள் சீரமைப்புக் குழு”வினர், மேம்பாலத்திலுள்ள விரிசலை ஊடகங்களில் வெளிச்சமிட்டுக் காட்டியபிறகு, அந்த விரிசல்களை அடைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகள், மேம்பாலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில் நடைபெறும் ஊழல்களால், அவை தரமற்று இருப்பதோடு மட்டுமின்றி, அவை மிகப்பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் மரணக் கட்டுமானங்களாகவும் அமைகின்றன.
ஊழல்கள் காரணமாக தரமற்ற நிலையிலுள்ள இந்த மேம்பாலத்தை முழுவதுமாக இடித்துத் தள்ளிவிட்டு, தரமான புதிய மேம்பாலம் கட்ட வேண்டும். ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் – ஆட்சியாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் மேம்பாலச் செலவுத் தொகை முழுவதையும் வசூலிக்க வேண்டும். இது குறித்து விசாரிக்க நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.)யின் விசாரணை வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது!
தீர்மானம் 5 :
இந்தியக் கடலோரக் காவல்படையினரைக் கைது செய்ய வேண்டும்!
தமிழகக் கடலோரத்திற்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் மீது, இந்தியக் கடலோரக் காவல்படையினர் 13.11.2017 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிகழ்வு, தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்திய, இத்துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த மீனவர்கள் பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் ஆகியோருக்கு குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். தமிழில் பேசியதற்காகவும், இந்தியில் பேசத் தெரியாது என சொன்னதற்காகவும் மீனவர்களை கடலோரக் காவல்படையினர் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டை இந்தியக் கடலோர காவல் படையினர் மறுத்தநிலையில், தாக்குதலுக்கு உள்ளான படகிலிருந்து துப்பாக்கிக் குண்டினை மீனவர்கள் தமிழகக் காவல்துறையினரிடம் அளித்து அவர்களின் பொய்க்கூற்றை உடைத்தெறிந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு (29.03.2017), நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்திய செய்தி, தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது நடைபெற்றுள்ள துப்பாக்கிச் சூடு நிகழ்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சிங்களக் கப்பல்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதற்கு இந்தியக் கடலோரக் காவல்படை, இதுவரை மறைமுக உதவி செய்து வந்துள்ளது. இப்போது, சிங்களப் படை போல இந்தியப் படையும் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. சிங்களர்கள் பங்காளிகள் – தமிழர்கள் பகையாளிகள் என்ற உறவு முறையைத்தான் இந்திய அரசு கொண்டுள்ளது என்பது இப்போது மேலும் தெளிவாகியுள்ளது.
இந்நிலையில், மீனவர் சங்கங்களின் போராட்டத்திற்குப் பிறகு இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், வெறும் வழக்குப்பதிவோடு நிற்காமல், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இந்தியக் காவல்படையினரைக் கைது செய்து அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!
செய்தியாளர் சந்திப்பு
மேற்கண்ட தீர்மானங்களை விளக்கி, இன்று (15.11.2017) தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர். டி.ஆர்.பி. தேர்வில் வெளி மாநிலத்தவர்களால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைக் கூறினர். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
மேற்கண்ட தீர்மானங்களை விளக்கி, இன்று (15.11.2017) தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர். டி.ஆர்.பி. தேர்வில் வெளி மாநிலத்தவர்களால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைக் கூறினர். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இடம் : தஞ்சை
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment