உடனடிச்செய்திகள்

Thursday, November 16, 2017

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2016இல் செய்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது, தமிழ்நாடு அரசு!

நேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு! அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவர் என்று அவ்விளம்பரம் கூறுகிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கான சாதிகள் பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள அட்டவணை சாதிகள் என்ற தலைப்பில், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் கவுடா, ஹெக்டே, லிங்காயத்து போன்ற கர்நாடக மாநில சாதிகளும், மராட்டா என்ற மராட்டிய மாநில சாதியும், ஜெட்டி என்ற குசராத் மாநில சாதியும், கேரள முதலி என்ற கேரள சாதியும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை போல் இன்னும் பல இருக்கின்றன. இச்சாதியினர் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டைப் பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களையும் இவர்கள் அபகரிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் வரலாற்று வழியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் இடம் அளிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் பரம்பரையாகவும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், இன்றைக்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும்கூட, அவர்களது சாதி இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் ஏற்கப்படாமல், தமிழர்கள் அனைவரும் “பொதுப்பட்டிய”லிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில்தான், தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான 1058 இடங்களில், கணிசமான வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாகப் பொதுப் பட்டியலில் 68 விழுக்காட்டினர் தேர்வு செய்யப்பட்டுள்ள அநீதி வெளிவந்தது. தமிழ் மக்களுக்குரிய இடங்களை ஆக்கிரமிக்கும் இந்த வெளி மாநிலத்தவருக்கு வேலை தரக் கூடாது என்றும், அவர்களைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அந்த இடங்களைத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியும், 23.11.2017 அன்று சென்னை தரமணியிலுள்ள நடுவண் (சென்ட்ரல்) பாலிடெக்னிக் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்து, அதைவிடப் பேரிடியாக இப்பொழுது வெளி நாடுகள் – வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது.

பதவியில் இருக்கிற காலத்திற்குள் தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தையும் பலி கொடுத்துவிட்டு, தாங்கள் ஆதாயமடைய வேண்டும் என்ற நிலையில்தான் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இருப்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, தமிழர்கள் விழிப்புணர்ச்சியுடன் கட்சி கடந்து, இன ஒற்றுமையுடன் இளம் தலைமுறையின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க களம் காண வேண்டிய நேரமிது!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 07.11.2016 – திருத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதுபோல், 2018 பிப்ரவரி தேர்வுக்காக வெளியிட்டுள்ள விளம்பரங்களையும் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், குசராத், மராட்டியம் மாநிலங்களைப் போல், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறைப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் - தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ் நாடெங்கும் உரிமைப் போராட்டங்கள் நடைபெற வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம், இதன் முதற்கட்டமாக 23.11.2017 அன்று சென்னை தரமணியில் நடத்தும் போராட்டத்திற்கு தமிழர்கள் திரளாக வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
 
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT