உடனடிச்செய்திகள்

Friday, March 29, 2019

பாரத மாதா கட்சிகளுக்கு – இந்தி, திராவிட மாதாக் கட்சிகளுக்கு – ஆங்கிலம். தோழர் பெ. மணியரசன்.

பாரத மாதா கட்சிகளுக்கு – இந்தி, திராவிட மாதாக் கட்சிகளுக்கு – ஆங்கிலம். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் “தமிழ் ஆட்சி மொழி” குறித்த கேள்விக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் விடை அளித்துள்ளார். அவ்வினாவும் விடையும் வருமாறு :

கேள்வி : தமிழை ஆட்சி மொழியாக்குவதாகப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டார்கள். பல்வேறு இயக்கங்கள் அதற்காகப் பல போராட்டங்கள்நடத்தின. இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. இனியாவது நடக்குமா? அல்லது இந்தியாவுக்குள் இருக்கும் வரை நடக்காதா? (காரைக்குடி கண்ணன்).

விடை : “ஆட்சி மொழி என்பதில் கல்வி மொழி, நீதிமன்ற மொழி அனைத்தும் அடக்கம்.

தமிழ்நாட்டில் நாம் எட்டுக் கோடிப் பேர் வாழ்கிறோம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழர் தாயக மாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது. நம் தமிழ்மொழி உலகின் மூத்தசெம்மொழி. தனி அரசு கொண்டு வாழ்ந்த இனம் தமிழினம்; தனித் தேசமாக வாழ எல்லாத் தகுதியும் உள்ள இனம் தமிழினம்.

நாம் ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்ததால் ஆங்கிலம் இன்றும் நம்மை ஆள்கிறது. ஆங்கிலேயர்களுக்குப் பிறகு நாம் இந்தியாவிற்கு அடிமைப்பட்டு வாழ்வதால் இந்திநம்மை ஆள்கிறது.

ஆங்கில ஆதிக்கம் இந்தி ஆதிக்கம் இரண்டையும் நீக்கி, தமிழைத் தமிழ்நாட்டின் முழுமையான ஆட்சி மொழி ஆக்க வேண்டுமானால், தமிழ்நாடு முழு இறையாண்மை பெறவேண்டும். அதற்கு முன் நிபந்தனையாகத் தமிழ்த்தேசிய அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க வேண்டும்; அதைத் தத்துவமாய் ஏந்த வேண்டும்.

செர்மனியில், டென்மார்க்சில், நார்வேயில், கொரியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கெல் லாம் அவற்றில் அந்தந்த நாட்டுத் தாய்மொழிதான் அலுவல்மொழி! ஆனால் தமிழ்நாட்டில் அவற்றில் ஆங்கிலம்தான் அலுவல் மொழி! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. தமிழ்அலுவல் மொழியாக இல்லை!

திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தை முதன்மைப்படுத்துகின்றன. காங்கிரசு, பா.ச.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் ஆகிய இந்தியத் தேசியக் கட்சிகள் இந்தியை முதன்மைப் படுத்துகின்றன.

தமிழ்நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் தமிழ்த்தேசியத் தத்துவத்தை ஏந்தும்போது, தமிழ்மொழி இங்கு முழுமையான ஆட்சிமொழியாகும்!”.


இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT