உடனடிச்செய்திகள்

Friday, March 22, 2019

அன்பார்ந்த தமிழின உணர்வாளர்களே.. வணக்கம்! உங்களுடன் ஒரு கருத்துப் பரிமாற்றம்! தோழர் பெ. மணியரசன்.

அன்பார்ந்த தமிழின உணர்வாளர்களே.. வணக்கம்! உங்களுடன் ஒரு கருத்துப் பரிமாற்றம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மடல்!


தேர்தலில் பங்கெடுக்காத - தேர்தல் வழியாகக் கிடைக்கும் அரசு அதிகாரத்தைப் பெற முயலாத தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினால் தமிழர்களுக்கு என்ன பயன்? இப்பேரியக்கத்தால் தமிழ்நாட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியுமா என்று இன உணர்வாளர்களில் சிலர் கேட்கிறார்கள்.

அவர்களுக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் தெரிவிப்பதற்காக இந்த சிறு விளக்கத்தை அளிக்கிறேன்.

அறிவு, வீரம், அறம் மூன்றையும் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பார் போற்ற வாழ்ந்த தமிழினம் இன்று வீழ்ந்து கிடப்பதேன்?

நாம் வீழ்த்தப்பட்டோம். வீழ்த்தியோர் வெற்றிக் களிப்பில் கொக்கரிக்கிறார்கள்.

ஆரியத்திற்கும் இந்திக்கும் சமற்கிருதத்திற்கும் அடிமைகளாய் காலம் கழிக்கிறோம். வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைப் போரையும் இந்தியாவின் துணையுடன் சிங்களக் கும்பல் குருதி வெள்ளத்தில் மூழ்கடித்தது.

வடவர் தங்களின் ஆதிக்கத்தின் அடையாளமாய் நம் மீது இந்தியைத் திணிக்கின்றனர். பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்களும் தமிழ்நாட்டு மேட்டுக் குடிகளும் ஆங்கிலத்தைத் திணிக்கின்றன.

தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு நீடிக்கக் கூடாது; அதனைக் கலப்பின மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்திய அரசு வடமாநிலத்தவர்களையும், இதர வெளி மாநிலத்தவர்களையும் தமிழ்நாட்டில் குவிக்கிறது. இங்குள்ள இந்திய அரசு தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 100க்கு 95 வீதம் வேலைக்குச் சேர்க்கின்றன.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் வடநாட்டு மற்றும் பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்களின் வேட்டைக்கு ஏலம் விடுகிறது இந்தியா! தமிழ்நாட்டிலோ சிற்றதிகாரக் கேடர்களின் கங்காணி அரசியல்! இவற்றில் சில மாநிலக் கட்சிகள்; மற்றும் சில அனைத்திந்தியக் கட்சிகள். அனைத்தும் தமிழினத்தின் உரிமைகளை அடமானம் வைத்துப் பதவி அரசியல் நடத்துகின்றன அல்லது பாரத மாதா அரசியல் நடத்துகின்றன; தமிழ்நாட்டு உரிமை மீட்பு அரசியல் நடத்தவில்லை!

சட்டமன்றம் - நாடாளுமன்றம் தீர்வு தருமா?

1952 தொடங்கி எத்தனையோ தேர்தல்கள் - எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்து விட்டன. வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்த உரிமைகளையும் விடுதலை பெற்ற இந்தியாவில் இழந்தது தான் மிச்சம்! தேர்தலும் சனநாயக வழியில் இல்லை. பெரும் பணக்காரர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டுமே தேர்தல் களத்தில் போட்டியிடும் நிலையை உருவாக்கிவிட்டனர். அத்துடன், தேர்தலில் சாதி முகாமையான பங்காற்றுகிறது.

தேர்தல் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது ஒரு சனநாயக உரிமை! ஆனால் சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் ஆவது, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது, மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்புவது ஆகியவற்றின் வழியாக நம் உரிமைகளை மீட்கவும் முடியாது; காக்கவும் முடியாது என்பதே நடைமுறை உண்மை!

சட்டப்பேரவைக்கு இறையாண்மையுள்ள அதிகாரம் கிடையாது. இருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் இந்திய ஆட்சியாளர்கள் பறித்து - தில்லியில் குவித்து விட்டனர். கல்வி, நிலம், வேளாண்மை, மருத்துவம், விற்பனை வரி வசூலித்தல் போன்றவற்றில் மாநிலத்திற்கிருந்த உரிமைகளை அரசமைப்புச் சட்டத்திருத்தம் செய்தும், புதிய சட்டங்கள் இயற்றியும் நடுவண் அரசு பறித்து விட்டது. ஜி.எஸ்.டி. - நீட் போன்றவை இவற்றின் விளைவுகளே!

மாநிலங்களுக்கு உள்ள சில உரிமைகளையும் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இந்திய அரசு! காவிரி வழக்கில் - ஏழு தமிழர் விடுதலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் செயலுக்கு வராமல் இந்திய அரசு தடை போடுகிறது. ஒருவகை இன ஒதுக்கலுக்கு (Apartheid) தமிழர்கள் உள்ளாகி இருக்கிறோம்.

நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 543. தமிழ்நாடும் புதுவையும் சேர்ந்து 40 உறுப்பினர்கள். எட்டுக் கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாம் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளோம். பல இனங்களைப் பீரங்கி முனையில் பிடித்து ஒன்றாகக் கட்டி வைத்து இந்தியா என்றது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி! வடநாட்டு வாக்குச் சீட்டுப் பெரும்பான்மையைக் காட்டி - சனநாயகப் போர்வையில் ஆதிக்கச் சட்டங்கள் இயற்றி ஆங்கிலேயர் செய்த பேராதிக்கத்தை வடவர் ஆதிக்கமாக இந்திய ஏகாதிபத்தியம் மாற்றிக் கொண்டது. இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்ட வடமாநிலங்கள் பத்தின் மக்களவை உறுப்பினர்கள் 225 பேர்!

இலட்சியத் தமிழ்த்தேசியம்

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் நம் பேராசான் திருவள்ளுவர்.

சல்லிக்கட்டு உரிமையை மீட்க சட்டப்பேரவையில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ஆட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்றின. ஆனால் இந்திய அரசு ஒப்புதல் அளித்து அவற்றைச் சட்டமாக்க மறுத்தது. சென்னை கடற்கரையிலும் தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் இலட்சக்கணக்கில் கூடி இரவு பகலாய் அறப்போர் நடத்திய மக்கள் எழுச்சியால் சல்லிக்கட்டு உரிமைச் சட்டம் தில்லியில் கையெழுத்தானது. சட்டமன்றம் மசோதா மன்றம் ஆனது; மக்கள் மன்றம் சட்டம் இயற்றச் செய்தது! இது ஓர் எடுத்துக்காட்டு; இப்படியே எல்லாம் நடந்து விடும் என்று கூறவில்லை. இதைவிடக் கடுமையாகப் போராடித்தான் மற்ற பல உரிமைகளை மீட்க வேண்டும்.

சல்லிக்கட்டு எழுச்சி தன்னெழுச்சி! தலைமை அற்றது; காட்டாற்று வெள்ளம் போல் வந்து ஓடி வற்றுவது! தன்னெழுச்சிகளை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது. அந்த சல்லிக்கட்டு எழுச்சி போல், இன்ன பிற உரிமைகளுக்கு மக்களை வீதிக்குக் கொண்டு வரும் இயக்கம் தேவை.

அடிமைப்பட்ட தேசத்தின், ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளை மீட்க தேவையானவை மூன்று. ஒன்று சரியான இலட்சியம், இரண்டு அதற்குரிய தகுதியான - தன்னலமற்ற தலைமை, மூன்று அந்த இயக்கத்தில் மக்களின் பங்கேற்பு! இந்த மூன்றும் இணைந்து செயல்படும் போது, உள்நாட்டு நெருக்கடிகளும் பன்னாட்டு ஆதரவுச் சூழலும் உருவாகும் நிலையில் இலட்சியம் வெற்றி பெறும்! உலகெங்கும் நடந்த உரிமைப் போராட்டங்கள் வெற்றி பெற்ற வரலாறு இதுதான்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தேசிய இலட்சிய இயக்கம் தேவை. அந்த இலட்சிய இயக்கம் தான் தமிழ்த்தேசியப் பேரியக்கம்! பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களின் பாசறையாக இந்த இலட்சிய இயக்கம் செயல்படுகிறது.

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்ற குறளை எண்ணிப் பாருங்கள்! இன உணர்வாளர்களே முடிவெடுங்கள்! எழுந்து வரும் தமிழ்த்தேசிய உணர்வு காலப்போக்கில் திசை திரும்பி வீணாகிவிடக் கூடாது.

உறுப்பினராவீர்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒரு சனநாயக இயக்கம்! கூட்டுத் தலைமையில் நம்பிக்கை உள்ள இயக்கம்! நம் இயக்கம் எவ்வளவு பெரியது என்பதை விடவும் நாம் எவ்வளவு பெரிய இனத்தின் அடையாளமாய் விளங்க வேண்டும் என்ற அக்கறை எங்களுக்கு இருக்கிறது. தமிழ் இனத்தின் அனைத்து ஆற்றல்களின் கொள்கலனாய் தமிழ்த்தேசியப் பேரியக்கம் செயல்பட வேண்டும் என்பது எமது திட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் உறுப்பினராய்ச் சேர வாருங்கள்; ஆதரவாளர்களாய் அணி திரளுங்கள்! உங்கள் ஊர்களில் இலட்சியத் தமிழ்த்தேசியத்திற்கான தொடக்கமாக தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைகள் தொடங்குங்கள். போராட்டக் களத்திற்கு வருவோர் வரலாம்; முடியாதவர்கள் பின்னணியில் நின்று செயலாற்றலாம். எந்த அளவில் எந்த வடிவத்தில் இந்த இயக்கத்திற்குப் பங்களிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை நீங்களே முடிவு செய்து செயல்படுங்கள்!

இந்த இயக்கத்தின் கருத்தியல் மற்றும் செயல்பாடு இரண்டினாலும் ஈர்க்கப்பட்ட பலர் முழுநேரச் செயல்பாட்டாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். மாதச் சம்பள வேலையை விட்டு விலகி தமிழ்த்தேசியப் பணிக்கு வந்தோரும் உள்ளனர்! “தமிழர் கண்ணோட்டம்” என்ற இதழையும் நடத்துகிறோம்!

நிதி தாரீர்!

உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தமிழின உணர்வாளர்களும் கொடுக்கும் நன்கொடையில்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கம் செயல்படுகிறது. மனித உடல் இயங்கக் குருதி ஓட்டம் சீராக இருக்க வேண்டும். மக்கள் இயக்கம் செயல்பட நிதி வருவாய் சரியாக இருக்க வேண்டும். வருவாய் என்பது நன்கொடை வருவாய் தான்! அதுவும் நேர்மையான வழியில்தான் வர வேண்டும்.

“செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகு அதனின் கூரியது இல்” என்றார் திருவள்ளுவர். பகையை வெல்வதற்கு கூர்மையான ஆயுதத்தைவிட நிதி வளம் கூடுதல் முகாமையனது என்கிறார் திருவள்ளுவர். இது அரசுக்குக் கூறியது என்று மட்டும் புரிந்து கொள்ளாமல், இன உரிமை மீட்பு இயக்கத்திற்கும் பொருந்தும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டிற்குத் தேவை; அது வளர வேண்டும் என்று கருதுவோர் உங்களால் முடிந்த நிதியளியுங்கள்! அதை, என் பெயரில் சென்னை கே.கே. நகர் கிளை - சிண்டிகேட் வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில்..
----------------------------------------------------------------
சேமிப்பு கணக்கு எண் : 60032010087176, 
கணக்குப் பெயர் : P. MANIARASAN, 
IFSC CODE : SYNB0006029, 
MICR NO : 600025028 
----------------------------------------------------------------
செலுத்துங்கள்!

இந்த வங்கிக் கணக்கு முழுக்க முழுக்க தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்ந்தது. எனது தனிப்பட்ட கணக்கு அல்ல.

நாம் புதிய வரலாற்றைப்  படைக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படுங்கள்!

நன்றி வணக்கம்!
அன்புடன்,
பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT