உடனடிச்செய்திகள்

Sunday, March 31, 2019

மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி! தோழர் பெ. மணியரசன்

மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி! தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் “மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி!” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது :

“மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அதன் பிறகு இந்தியாவில் தேர்தலே நடக்காது என்றும், அந்த பாசிச அபாயத்தைத் தடுக்க இராகுல்காந்திக்கு வாக்களிக்க வேண்டும்; இந்த அபாய கட்டத்தில் ஈழத்தில் தமிழினப் படுகொலையில் பங்கு கொண்ட காங்கிரசு என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று தமிழின உணர்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.

இராகுல் காந்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர் எதேச்சாதிகாரியாக மாற மாட்டார்; சனநாயகததைக் காப்பார்; முறையாகத் தேர்தல் நடத்துவார் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

இராகுலின் பாட்டி இந்திரா காந்தி 1969இல் தலைமை அமைச்சராக இருந்தபோது, மொரார்சி தேசாய், எஸ்.கே. பாட்டீல், நிஜலிங்கப்பா, அதுல்யா கோஷ் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்து முற்போக்குக் காங்கிரசு உருவாக்குகிறேன்; மன்னர் மானியம் ஒழிக்கிறேன்; வங்கிகளை அரசுடைமை ஆக்குகிறேன் என்று முழங்கி காங்கிரசைப் பிளந்து இந்திரா காங்கிரசை உருவாக்கினார். 1971 மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று தலைமை அமைச்சராகத் தொடர்ந்தார்.

அதே இந்திரா காந்திதான் 1975இல் எதேச்சாதி காரியாக மாறி அவசர நிலை பிறப்பித்து, சனநாயக உரிமைகளைப் பறித்தார். இலட்சக்கணக்கானோரை சிறைகளில் அடைத்தார். 1976இல் நடத்த வேண்டிய மக்களவைப் பொதுத் தேர்தலையும் நடத்தாமல் தள்ளி வைத்தார்.

அனைத்திந்திய அளவில் சி.பி.ஐ. கட்சியும், தமிழ் நாட்டளவில் அ.இ.அ.தி.மு.க.வும்தான் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்தை ஆதரித்தன. அனைத்திந்திய அளவில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் மக்களும் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடினர். இதனால் உலக நாடுகளின் அழுத்தமும் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக வந்தது.

வென்று விடுவோம் என்ற நப்பாசையில் 1977இல் மக்களவைப் பொதுத்தேர்தல் நடத்தினார் இந்திரா காந்தி. அவருடைய கட்சியும் தோற்றது; அவரும் அவரின் அடாவடி மகன் சஞ்சய் காந்தியும் தோற்றனர். சனதாக் கட்சி என்ற கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.

பாட்டியைப் போல் இராகுல் மாற மாட்டார் என்பதற்பு என்ன உறுதி? மோடியிடமிருந்தும், இராகுலிடமிருந்தும் வேறு யாரிடமிருந்தும் சனநாயகத்தைக் காப்பது கட்சிகள் மற்றும் மக்களின் கடமை ஆகும்!

அடுத்து, முகாமையான ஒரு கருத்து; எதிரி முன் வைக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் நிலையில் இருப்பது சமூகப் பொறுப்பும் இல்லை; இலட்சிய அரசியலும் அன்று!

எதிரி முன்வைக்கும் இரு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்வது இருக்கின்ற சமூக நிலை (Status Quo) நீடிக்கவே பயன்படும். இப்படியான “தேர்வுக்கு” முடிவும் இருக்காது.

இலட்சியவாதிகள் தங்களின் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். போதிய மக்கள் ஆதரவில்லையெனில் பொறுமையாக மாற்றுக் கருத்துகளை விதைக்க வேண்டும். மக்களை ஈர்க்கப் புரிய வைக்கப் புதிய உத்திகளையும் போராட்டங்களையும் வகுக்க வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது! ”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT