உடனடிச்செய்திகள்

Tuesday, September 24, 2019

“அன்பே சிவம் என்றால் – இனி ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அடிப்பார்கள்!” ஐயா பெ. மணியரசன் உரை!

“அன்பே சிவம் என்றால் – இனி ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அடிப்பார்கள்!” 
சத்தியவேல் முருகனார் பவள விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழ்த்தேசிய ஆன்மிகச் சான்றோர் ஐயா மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் 70ஆம் அகவை நிறைவு பெற்று – 71ஆம் அகவைத் தொடங்கும் நாளான 21.09.2019 காரி (சனி)க் கிழமை பிற்பகல் 2.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை பவள விழா சீரும் சிறப்புமாக சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் :
“தமிழர் ஆன்மிகத்திற்கும் தமிழ் வழிபாட்டிற்கும் தம்மை ஒப்படைத்துக் கொண்ட ஐயா சத்தியவேல் முருகனார் அவர்களுக்கும், அவர்களின் இல்லத்தரசியார் அம்மா மல்லிகா அவர்கட்கும் அவர்கள் மகன் திருச்சுடர் நம்பி அவர்கட்கும், மகள் அருட்செல்வி அவர்கட்கும் இந்த பவள விழா நாளில் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்தியவேல் முருகனார் பற்றி எனக்கு 2002-ஆம் ஆண்டுதான் தெரிய வந்தது. அப்போது கரூர் அருகே திருமுக்கூடலூரில் உள்ள திருமுத்தீசுவரர் கோயில் குடமுழுக்கை ஆன்மிகத் தமிழ்ப் பெரியவர்களைக் கொண்டு தமிழ்வழியில் தமிழின உணர்வாளர்களும், தமிழ் ஆன்மிகர்களும் நடத்தி விட்டனர். பிராமணர்களும், அவர்களின் ஆதிக்கவாத ஆன்மிகத்திற்குப் பலியான தமிழர்களும் வானம் இடிந்து விழுந்ததைப் போல் அலறி ஆர்ப்பரித்துக் கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

தமிழினத்தைச் சேர்ந்த தருமபுரம் ஆதின கர்த்தரும் திருப்பனந்தாள் ஆதினகர்த்தரும் கண்டனம் தெரிவித்தனர். பிராமணர்களைக் கொண்டு மறுபடி அக்கோயில் கோபுரத்திலும் உட்புறமும் தண்ணீர் விட்டுக் கழுவி “தீட்டுக்” கழித்தார்கள்.

இதற்கெல்லாம் அவர்கள் சொன்ன காரணம், ஆகமப்படி பிராமணர்கள்தாம் அர்ச்சனை செய்ய வேண்டும்; குடமுழுக்கு நடத்த வேண்டும்; அதுவும் சமற்கிருத மந்திரங்களை ஓதித்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பதுதான்! பிராமணரல்லாதோர் குடமுழுக்கு செய்யக் கூடாது; தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது; அபச்சாரம்; அபச்சாரம் என்றார்கள்.

அந்தக் கூச்சல்களுக்கிடையே, ஒரு குரல் எழுந்தது. “எந்த ஆகமத்தில் அப்படி இருக்கிறது? எடுத்துக் காட்டுங்கள்! இருபத்தெட்டு ஆகமங்களில் எதில் இரு இருக்கிறது? ஆகமங்களைப் படித்தவன் நான். ஒரு ஆகமத்திலும் சாதி வேறுபாடு கூறப்படவில்லை. தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று எந்த ஆகமத்திலும் கூறப்படவில்லை. ஆகம விதிப்படி பார்த்தால் பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கக் கூடாது. கட்டி எழுப்பப்பட்ட கோயில் வழிபாட்டை ஏற்காத பிராமணர்கள் ஸ்மார்த்தர்கள். ஆகமப்படி அவர்கள் கோயிலின் கொடிக் கம்பத்தைத் தாண்டி கோயிலுக்குள் நுழையக் கூடாது” என்று குரல் எழுப்பியவர் ஐயா சத்தியவேல் முருகனார். தமிழ்நாடே அதிர்ந்தது! அப்போதுதான் ஐயா அவர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

அப்போது, செயலலிதா அம்மையார் முதலமைச்சர். அவர் காஞ்சி சங்கராச்சாரியார் செயேந்திர சரசுவதி தலைமையில் இதுபற்றி ஆன்மிகப் பெரியவர்கள் கலந்து பேசி முடிவெடுக்க ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அக்கூட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், ஒற்றைக் குரலாக – தமிழில் வழிபாடு நடத்த – தமிழ் அர்ச்சகராகச் செயல்புரிய எந்த ஆகமும் தடை விதிக்கவில்லை என்று எடுத்துக்காட்டுகளோடு வாதிட்டார் சத்தியவேல் முருகனார்.

சத்தியவேல் முருகனார் மீது வழக்கு

ஆகமப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தவும், வழிபாடு நடத்தவும் சத்தியவேல் முருகனார்க்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி – தருமபுரம் ஆதினகர்த்தரும், திருப்பனந்தாள் ஆதினகர்த்தரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாங்கள் – பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் – ஒன்றுகூடி திருப்பனந்தாள் மடாதிபதியைக் கண்டித்து – அந்த மடத்தைச் சுற்றி வந்து – அதன் வாசலிலும் நின்று முழக்கமிட்டு, கண்டனப் பேரணி நடத்தினோம். பேரணி முடிவில் கண்டனப் பொதுக் கூட்டமும் நடத்தினோம்.

இதை அறிந்த சத்தியவேல் முருகனார் அவர்கள் என் மீது அன்பு செலுத்திப் பாராட்டினார்கள்.

சிதம்பரம் கோயில், தீட்சிதர்கள் சொத்தா?

தமிழ்ப் பேரரசர்களும் தமிழ் அறச் சிந்தனையாளர்களும் எழுப்பிய சிதம்பரம் நடராசர் கோயிலை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தீட்சிதர்களைக் கோயில் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றி அக்கோயிலை தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அப்போது, தி.மு.க. ஆட்சி நடந்தது. அறநிலையத்துறைக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகளும், தமிழ் உணர்வாளர்களாக இருந்தார்கள். தில்லைக் கோயிலை அறநிலையத் துறையில் சேர்ப்பதற்குரிய அத்தனை ஞாயங்களையும் சட்ட விதிகளையும் எடுத்து அவர்களிடம் விளக்கினார் சத்தியவேல் முருகனார்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கு சட்ட நுணுக்கங்கள் – மரபுகளையும், ஆகம விதிகளையும் தில்லைக் கோயிலின் வரலாற்றுச் செய்திகளையும் விளக்கிச் சொன்னவர் சத்தியவேல் முருகனார். வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு வெற்றி கிடைத்தது! தில்லை நடராசர் கோயில் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய ஆட்சித் துறை ஏற்று நடத்த 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால், ஆரியம் கூக்குரலிட்டது! சுப்பிரமணிய சாமி தலைமையில் தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.தி.மு.க. தலைவர் செயலலிதாவை தீட்சிதர்கள் நேரில் சந்தித்து முறையிட்டார்கள். அதன் பலனாக, செயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அவ்வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் உரியவாறு வாதிடவில்லை. உச்ச நீதிமன்றம் 2014 சனவரியில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, கோயிலைத் தீட்சிதர்கள் வசம் ஒப்படைத்தது. நீதிமன்றமாக இருந்தாலும் சென்னைச் சூழலுக்கும் தில்லிச் சூழலுக்கும் வேறுபாடு எப்போதும் உண்டு!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க. ஆட்சியில் 2006இல் ஓர் அரசாணை பிறப்பித்தார்கள். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிராமண அர்ச்சகர்கள் வழக்குப் போட்டார்கள். இவ்வழக்கில் 2015இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்களா, அவ்வாறு ஆக முடியாது என்று கூறியுள்ளார்களா என்பது பற்றி செய்தி ஊடகங்களில் ஒரே குழப்பம்! தீர்ப்பு வெளியான அன்று இரவு சத்தியம் தொலைக்காட்சியில் இத்தீர்ப்பு பற்றி விவாதம்! என்னையும் அழைத்திருந்தார்கள். தீர்ப்பு பற்றி தெளிவுபடுத்திக் கொள்வதற்காக ஐயா சத்தியவேல் முருகனாரிடம் தொலைப்பேசி வழியாக விளக்கம் கேட்டேன். தெளிவாகச் சொன்னார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தபோது, அதில் தன்னையும் எதிர்த்தரப்பாக இணைத்துக் கொண்டு தானே உச்ச நீதிமன்றத்தில் கூர்மையாக வாதாடியவர் சத்தியவேல் முருகனார் அவர்கள்.

அர்ச்சகர் பணிக்கு “சாதி” அடிப்படைக் கூறு அல்ல! ஆனால், ஆகமப்படி கட்டப்பட்ட கோயில்களில் அந்தந்த ஆகமதத்தை – சமயப் பிரிவைச் சேர்ந்தவர்களைத்தான் அர்ச்சகராக அரசு அமர்த்த வேண்டும் என்பதே தீர்ப்பு என்றார்கள்.

அதாவது, இந்துக் கோயிலாக இருந்தாலும், அதில் சைவம் – வைணவம் போன்ற பிரிவுகள் மற்றும் ஆகமப் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றை வகையறாக் கோயில்கள் (Denomintion Temples) என்று வகைப்படுத்துவார்கள். அந்தந்த வகைக் கோயிலில் – அந்தந்த வகை வழிபாடு செய்வோரைத்தான் அர்ச்சகராக அமர்த்த வேண்டும். எடுத்துக்காட்டாக, சைவக் கோயிலில் சைவப் பிரிவைச் சேர்ந்தவரும், வைணவர் கோயிலில் வைணவப் பிரிவைச் சேர்ந்தவரும் அர்ச்சகராய் அமர்த்தப்பட வேண்டும். இதில் என்ன சிக்கல்? ஒன்றுமில்லை! உச்ச நீதிமன்றம் சொல்கின்ற ஆகமக் கோயில்கள் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு என்ற உண்மையையும் சத்தியவேல் முருகனார் சொன்னார்.

மேலும், இத்தீர்ப்பை விளக்கி ஏடுகளில் செவ்வி கொடுத்தார். “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, ஐயா அவர்களின் விரிவான நேர்காணலை ஒரு கட்டுரை போலவே போட்டிருந்தது. தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், அதைத் தமிழாக்கி – பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்பினார்.

ஆனால் தங்கள் ஆட்சியில் இந்த அரசாணையை வெளியிட்ட தி.மு.க. ஆடவில்லை; அசையவில்லை! ஏற்கெனவே தமிழ்வழி அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ள பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாகக் கோயில்களில் பணியமர்த்துமாறு ஆட்சியாளர்களுக்குக் கோரிக்கை வைத்து, பரப்புரை செய்தது தமிழ்த்தேசியப் பேரியக்கம். செயலலிதா ஆட்சி அத்தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்தது. அதைச் செயல்படுத்துமாறு கலைஞர் கருணாநிதியோ அ.தி.மு.க. அரசை வலியுறுத்த மறுத்தார் கலைஞர் கருணாநிதி.

இந்து மதம் – ஒரு கூட்டு மதம்

இன்று ஆரியத்துவ ஆன்மிக ஆக்கிரமிப்பு தமிழ்நாட்டில் தீவிரமாகி வருகிறது. நாம் இந்து மதத்தை எதிர்க்க வேண்டியதில்லை. இந்து மதத்தை ஆரியப் பிராமணர்கள் உருவாக்கவில்லை. இந்து மதம் என்ற பெயரை 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேய ஆட்சிதான் கொடுத்தது. சிந்து நதியை அடையாளமாக வைத்து இந்தியா என்று ஒரு நிர்வாகப் பெயர் கொடுத்ததும், இந்து என்று மதப்பெயர் கொடுத்ததும் வெள்ளையரே!

இந்து என்ற சொல்லில் எந்தக் கெட்ட உட்பொருளும் இல்லை. பல்வேறு சமயப் பிரிவுகளின் தொகுப்புக்குப் பெயர்தான் இந்து மதம்! இந்து மதத்தை உருவாக்கிய தலைமை ஆசான் யாரும் இல்லை! தலைமை குருமார் யாரும் இல்லை. புனிதமான ஒற்றைத் தத்துவ நூல் இல்லை. ஒற்றைக் கடவுள் வழிபாடும் இல்லை. பல கடவுள்களை வழிபடும் மக்கள் இந்து மதத்தில் இருக்கிறார்கள். கடவுளை மறுப்பவர்களும் இந்து மதத்தில் இருக்கிறார்கள். யாரும் ஒருவரை இந்து மதத்திலிருந்து நீக்க முடியாது. தமிழர்களுக்கு எதிரானவை – ஆரிய பிராமணிய வைதீகமும், வர்ணாசிரமமும்தான்!

இந்த ஆரிண பிராமணிய வர்ணாசிரமத்தை எதிர்க்க வேண்டும். இந்து மதத்தை எதிர்க்க வேண்டியதில்லை.

தமிழ்ச் சிவநெறி

தமிழ்ச் சைவம் – இயல்பாகவே ஆரிய – சமற்கிருத – வைதீக – வர்ணாசிரம எதிர்ப்புச் சமயம்தான்! தமிழை முதன்மையாகக் கொண்டது. தமிழ்ச் சைவமும் சரி, தமிழ் வைணவமும் சரி, இரண்டும் சாதி கடந்த மனித ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன.

“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே”

என்றார் திருமூலர்! தமிழ்ச் சைவமும், தமிழும் பிரிக்க முடியாதவை!

“திசையனைத்தின் பெருமையெலாம்
தென்திசையே வென்றேற
அசைவில்செழும் தமிழ் வழக்கே
அயல் வழக்கின் துறை வெல்ல”

என்றார் சேக்கிழார். திருநாவுக்கரசர் ஊர் ஊராகச் சென்று சைவம் பரப்பிய செய்தியை “தமிழ்நாடெங்கும் போனார் ஞானத் தலைவர்” என்றார் சேக்கிழார்! சிவபெருமானையும் தமிழ் மொழியையும் இணைத்தே முதன்மைப்படுத்துகிறது தமிழ்ச் சைவம்!

இன்னிசையால் தமிழ் பாடும் ஞான சம்பந்தன் என்று பெருமையாகக் கூறிக் கொண்டவர் திருஞானசம்பந்தர். தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றார் மாணிக்கவாசகர். இவர்கள் தமிழைத் தமிழ்நாட்டை முதன்மைப்படுத்தியதால் பிராமணர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்லை!

தமிழர் மாலியமும் தமிழைத்தான் முதன்மைப்படுத்தியது. பூதத்தாழ்வார் தன்னைப் “பெருந்தமிழன்” என்று கூறிப் பெருமைப்பட்டார். ஆனால், இன்று தமிழ் வைணவம் பிராமண ஆதிக்கத்தின் கீழ் இருப்பதுதான் கொடுமை!

அன்பே சிவம் என்றால் அடி விழும்

இன்று ஆரிய பிராமண ஆதிக்கம் அரசியல் அதிகாரத்தோடு சாட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு வருகிறது. நீங்கள் தமிழில் “அன்பே சிவம்” என்றும், “நம சிவாய வாழ்க!” என்றும் தெருவில் சொல்ல முடியாத காலம் நெருங்கிக் கொண்டுள்ளது. “அன்பே சிவம்” என்று ஆன்மிகக் குரல் எழுப்பினால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் உங்களை அடிக்கும்! “ஜெய் ஸ்ரீராம் எனச் சொல்; ஜெய் ஹனுமான் சொல்; பாரத் மாத்தா கீ ஜே சொல்” என்று கூறி, அந்தப் பரிவாரங்கள் அடிக்கும்!

அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் விநாயகர் அகவல் பாடவில்லை! “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், பாரத் மாத்தா கீ ஜே” – முழக்கங்கள்தான் போட்டார்கள்.

“மாலே, மணிவண்ணா! ஆழிமழைக் கண்ணா” என்று தமிழ் வைணவர்கள் தெருவில் பாடினாலும் அடிப்பார்கள். ”ஜெய் ஸ்ரீராம்” சொல்லச் சொல்வார்கள்!

அப்படியெல்லாம் தமிழ்நாட்டில் செய்ய முடியாது என்று எண்ணாதீர்கள்! அவர்கள் அன்றும் இன்றும் சிறுபான்மைதான்! நாம் பெரும்பான்மைதான்! ஆனால், அவர்கள் ஆதிக்கத்தைத்தான் நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவர்கள் புதிதாகக் கொண்டு வந்த சற்கிருதத்தில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்றார்கள்; ஏற்றுக் கொண்டோம்! அவர்கள் தமிழ் முருகனை – சுப்ரமணிய என்றார்கள்; நாம் முருகனைக் கைவிட்டு சுப்ரமணியவை உச்சரிக்கிறோம். ஐயாறப்பனை அவர்கள் பஞ்ச நதீசுவரர் என்றார்கள் ஏற்றுக் கொண்டோம். அறம் வளர்த்த நாயகியை தர்மசம்வர்த்தினி என்றார்கள். ஏற்றுக் கொண்டோம்! இந்த சமற்கிருதப் பெயர்களில் வடநாட்டில் – ஆரிய வர்த்தத்தில் கோயில்கள் இருக்கின்றனவா? இல்லை!

நம்முடைய முதுகுன்றத்தை விருத்தாச்சலம் என்று மாற்றினார்கள். ஏற்றுக் கொண்டோம். நம்முடைய மரைக்காட்டை வேதாரணியம் என்று மாற்றினார்கள், ஏற்றுக் கொண்டோம். இப்படி எத்தனையோ கடவுட் பெயர்களை – ஊர்ப் பெயர்களை சமற்கிருதப் பெயர்களாக மாற்றினார்கள், ஏற்றுக் கொண்டோம். இன்றைக்குத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுகிறார்களா? இல்லை! மிகப்பெரும்பாலோர் சமற்கிருதத்தில் பெயர் சூட்டுகிறார்கள். பேசுவது, எழுதுவது ஆங்கிலம்; பெயர் சூட்டுவது சமற்கிருதம்! என்னே கொடுமை!

வீதிக்கு வாருங்கள்

சிவநெறி, மாலிய நெறிகளில் உள்ள ஆன்மிகச் சான்றோர்களே, ஆன்மிகத் தொண்டர்களே, ஐயா சத்தியவேல் முருகனார் போல் தமிழினம் காக்க, தமிழ் மொழி காக்க, தமிழர் ஆன்மிகம் காக்க வீதிக்கு வாருங்கள்! நம் அடையாளத்தை அழித்து நம்மை ஆரிய பிராமண அடிமைகளாக்கிடத் துடிப்போர் – வேத, இதிகாச, புராணப் புரட்டு ஆன்மிகத்தை முன்வைத்து வீதிக்கு வந்துள்ளார்கள்; நம் மக்களைத் தங்கள் தலைமையின் கீழ் திரட்டிக் கொள்கிறார்கள்!

நம்முடைய வள்ளலார் போல் மறைமலை அடிகளார் போல், நமது சமத்துவ ஆன்மிகத்தைத் தமிழினத் தற்காப்புத் தத்துவமாக்குங்கள்! வீதிக்கு வாருங்கள்! சமற்கிருதம் கலக்காமல் – தனித்தமிழில் எழுதவும் பேசவும், பிராமணப் புரோகிதர்களை அழைக்காமல் தமிழ் அறவோரைக் கொண்டு குடும்பச் சடங்குகளை, கோயில் விழாக்களை நடத்தவும், 1916இல் தனித்தமிழ் இயக்கம் கண்டார் மறைமலை அடிகளார்.

வீதிக்கு வந்த வள்ளலார் மனித சமத்துவத்திற்கான – தமிழர், தமிழ் மொழிக் காப்பிற்கான சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு செயல்படும் தமிழர்களே, தமிழ் மொழி காக்க – தமிழ் இனம் காக்க வீதிக்கு வாருங்கள்! ஐயா சத்தியவேல் முருகனார் போல் வெளியே வாருங்கள்!”.
(21.09.2019 அன்று நிகழ்த்திய சொற்பொழிவில் நேரங்கருதி குறைத்துக் கொண்ட சில செய்திகள் இதில் கூடுதலாக இடம் பெற்றுள்ளன).

நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புத் தலைவர்களும் பங்கேற்று ஐயா சத்தியவேல் முருகனாரின் பணிகளைப் பாராட்டினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், நடுவண் சென்னை செயலாளர் தோழர் மு. வடிவேலன், தோழர்கள் பிரசாந்த், முத்துராமலிங்கம், கோ. செந்தாமரை, மணி தெள்ளியன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT