கீழமை நீதிபதிகள் பணிக்கு வெளி மாநிலத்தவரை
அழைக்கும் அறிவிப்பை இரத்து செய்க!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டில் 176 குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பம் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 09.09.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது (அறிவிப்பு எண் - 555/2019). அதில், இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேர்வெழுதலாம் என்றும், தமிழ் தெரிந்திருக்க வேண்டிய முன் நிபந்தனை இல்லை என்றும், வேலையில் சேர்ந்த பிறகு தகுதிகாண் காலத்திற்குள் (Probation Period) இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத் தேர்வெழுதினால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 2016இல் தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வை இந்தியாவிலுள்ள அனைவரும் எழுதலாம் என்றும் நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாக்கித்தான், வங்காளதேசம், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் எழுதலாம் என்றும் திருத்தம் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சி. கடந்த 2017 செப்டம்பரில் அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்விலும், 2018 பிப்ரவரியில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தேர்விலும், 2019 ஏப்ரலில் மின்வாரியத்திற்கான பொறியாளர் தேர்விலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழர்களுக்குள் எழும் சிக்கல்களிலும், தமிழ்நாட்டு மக்கள் மீது போடப்படும் வழக்குகளிலும் சாட்சியங்கள் தமிழில்தான் இருக்கும். காவல்துறை ஆவணங்களும் தமிழில்தான் இருக்கும். தமிழ் தெரியாத வெளி மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள், மாவட்ட அளவில் செயல்பட்டால் இந்த சாட்சியங்களை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? மாவட்ட நீதிமன்றம் வரை தமிழில் வழக்கு நடத்தலாம், தீர்ப்பெழுதலாம் என்று தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ் தெரியாத பிறமொழியாளர்கள் நீதிபதிகளானால் இச்சட்டம் நடைமுறையில் சாகடிக்கப்பட்டு விடும்.
கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், சத்தீசுகட் போன்ற மற்ற மாநிலங்களில் மாநில அரசு வேலைகள் – நடுவண் அரசு வேலைகள் – தனியார் துறை வேலைகள் அனைத்திலும் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்குவதற்கான விழுக்காட்டு ஒதுக்கீடுகள் அரசு ஆணைகளாக, சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளன. அண்மையில்கூட, ஆந்திரப்பிரதேச அரசு தனியார் துறையில் 75 விழுக்காட்டு வேலைகளை தெலுங்கு மக்களுக்கு வழங்க வேண்டுமென்று தனிச் சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறான ஒரு சட்டமியற்ற தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். இதன் மர்மம் என்ன? பொது மக்களைப் பொறுத்தவரை இம்மறுப்பை இனத்துரோகம் என்றுதான் புரிந்து கொள்கிறார்கள்.
குசராத்தில் மாவட்ட அளவிலான நீதிபதிகள் தேர்வுக்கு குசராத் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் (நாள் – 26.08.2019, அறிவிப்பு எண் - RC/0719/2019-20) குசராத்தி மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான நீதிபதி வேலையில் சேர தமிழ் மொழி அறிந்திருப்பது முன் நிபந்தனை அல்ல; வேலையில் சேர்ந்த பிறகு கற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசே கூறியிருக்கிறது. குசராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க அம்மாநில உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரமளித்துள்ள சட்டம், தமிழ்நாடு அரசுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறதா? தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இதற்கு விடை சொல்ல வேண்டும்!
ஏன் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி மாநில வேலை வாய்ப்பில் தொடர்ந்து வேலையற்றுத் துயருரும் தமிழ் இளைஞர்களைப் புறக்கணிக்க வேண்டும்? ஏன் வஞ்சிக்க வேண்டும்?
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டு நூற்றுக்கு நூறு – நூற்றுக்கு தொண்ணூறு வீதம் வட இந்தியர்களையும், வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கிறது நடுவண் அரசு. அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாக வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வந்து குவிந்து தனியார் துறை வேலைகளையும் கவ்விக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமைகளைத் தடுத்து மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு வேலை உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இந்திய அரசோடு போட்டி போட்டுக் கொண்டு வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வேலைகளுக்கு அழைப்பது சொந்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நீதிபதிகள் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று, தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் நீதிபதிகளாக செயல்பட மண்ணின் மக்களுக்கே வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment