உடனடிச்செய்திகள்

Monday, September 16, 2019

இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்பது தமிழை அழிக்கும் செயல்! பெ. மணியரசன் அறிக்கை!




“இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்பது

தமிழை அழிக்கும் செயல்!”




தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் அறிக்கை!


இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா, தமது “இந்தி நாள்” – சுட்டுரை (ட்விட்டர்)யிலும், விழா உரையிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும் – இந்தியாவின் அடையாளத்தை உலகெங்கும் தெரிவிப்பதற்கும் இந்தியால் மட்டுமே முடியும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு மதிப்புகள் உள்ள அதே வேளை இந்தியாவின் ஒவ்வொரு மனிதனிடமும் – இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் இந்தியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தி வாரத்தில் அவரவர் தாய்மொழியைப் பேசும்போது இந்திச் சொற்களையும் கலந்து பேசுமாறு வலியுறுத்தியுள்ளார்.


அமித்சாவின் இந்தக் கருத்துகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானவை! இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு – 343, இந்திய ஒன்றிய அரசின் அலுவலகங்களில் பயன்படுத்தும் மொழியாக இந்தியையும், அடுத்த நிலையில் ஆங்கிலத்தையும் கூறுகிறது. இந்தியை ”தேசிய மொழி” என்று அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.



இந்தி மொழி பரப்பும் வாரம், சமற்கிருத மொழி பரப்பும் வாரம் என்று இந்திய அரசு கடைபிடிப்பது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும்! எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதவற்கான “இந்திய மொழிகள் வாரம்”தான் கடைபிடிக்க வேண்டும்.



இந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு இந்தியில் பேசுங்கள் என வலியுறுத்துவது தமிழ் போன்ற தொன்மை வாய்ந்த மொழிகளை அழிக்கும் செயலாகும்! உலக அளவில் இந்தி மொழியால் மட்டும்தான் இந்தியாவின் அடையாளம் காணப்பட வேண்டுமென்று பா.ச.க. ஆட்சியாளர்கள் விரும்புவது தமிழினம் போன்ற பல்வேறு இன அடையாளங்களை மறுப்பது மட்டுமின்றி, அழிப்பதும் ஆகும்!



இந்தியாவில் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி இந்தி என்று கூறி, அதுதான் இந்தியாவின் அடையாளம் என்று அமித்சா கூறுகிறார். ஒருவேளை ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் சீனாவையும் ஒரே நாடாக்கியிருந்தால், அப்பொழுது சீன மொழிதான் அதிகம் பேரால் பேசக்கூடிய மொழியாக இருக்கும். பா.ச.க.வினர் சீன மொழியை தங்கள் ஆட்சி மொழியாக – அடையாள மொழியாக ஏற்றுக் கொள்வார்களா?



தனித்தனியே இருந்த பல்வேறு இன அரசுகளை அழித்து, வரலாற்றில் முதல் முதலாக இருநூறு ஆண்டுகளுக்கு முன் “இந்தியா” என்ற பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். அந்த உண்மையை இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதியோர் தங்கள் கருத்தில் கொண்டிருந்ததால்தான், இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றார்கள். “இந்தியன்” என்றொரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறாமல், “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்று மட்டுமே கூறினார்கள். இந்தியை “தேசிய மொழி

(National Language) எனக் குறிப்பிடாமல், “ஒன்றிய அரசின் அலுவல் மொழி” (Official Language of the Union) என்று அரசமைப்புச் சட்டம் வரைந்தோர் அறிவித்தார்கள்.


இந்த அரசமைப்புச் சட்டத்தையே குப்புறக் கவிழ்த்துவிட்டு, அரசமைப்புச் சட்டத்தில் இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட நாளில் (14 செப்டம்பர் 1949), “இந்தி வாரம்” கடைபிடிக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொல்வது உண்மைக்குப் புறம்பான செய்தி!



இந்தி வாரத்தில் தாய்மொழியில் பேசுவோர், இந்தி மொழியையும் கலந்து பேசுங்கள் என்று அமித்சா அறிவுரை கூறுவதிலிருந்தே ஆட்சியாளர்களின் தொலைநோக்குத் திட்டம் தமிழ் போன்ற தேசிய இன மொழிகளை அழிப்பதுதான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.



இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த இந்தியைத் திணிக்கிறோம் என்று சொல்லும் அமித்சாக்கள், உலக வரலாற்றில் மொழி ஒடுக்குமுறையால் பிரிந்து போன நாடுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.



ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாக பிரிந்து போனதற்கு முதன்மையானக் காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்! தாய்மொழியைப் பேசும்போது இந்தியைக் கலந்து பேசுங்கள் என்று அமித்சா கூறுகிறார். ஈராக்கின் அதிபர் சதாம் உசேன், தன் நாட்டில் இருந்த குர்திஷ் தேசிய இன மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசக் கூடாது என்று கட்டளையிட்டார். அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்தபோது, குர்திஷ் மக்கள் அதை வரவேற்று அமெரிக்காவுடன் இணக்கம் கண்டு தங்களுக்கான தன்னாட்சி மண்டலத்தை (Autonomus State) உருவாக்கிக் கொண்டார்கள்.



இந்திய ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருத திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்து வருவதைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித் திணிப்பு எதிர்ப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT