உடனடிச்செய்திகள்

Wednesday, March 10, 2021

இந்திக்காரர்களைப் பார்த்தாவது இன உணர்வு கொள்க! - ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
இந்திக்காரர்களைப் பார்த்தாவது 
இன உணர்வு கொள்க!

தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

“எங்கள் மாநிலத்தில் தனியார் துறையில் 100க்கு 75 வேலை மண்ணின் மக்களுக்கு மட்டுமே தரவேண்டும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்போம்”.

இப்படி வாக்குறுதி அல்ல, சட்டமே இயற்றி இருக்கிறார்கள், அரியானா மாநிலத்தில்! பா.ச.க. தலைமையிலே கூட்டணி ஆட்சி அங்கு நடக்கிறது. பா.ச.க.வைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் அரியானாவின் முதலமைச்சர்!

அந்த சட்ட முன் வரைவைக் கையொப்பமிட்டு சட்டமாக்கிய ஆளுநர் பெயர் சத்திய தேவ் நாராயண் ஆர்யா! பெயரே அவர் எப்படிப்பட்ட பின்னணி கொண்டவர் என்பதைக் கூறுகிறது.

அரியானா இந்தி மாநிலம்! அந்த அரியானாவில் உள்ள தனியார் துறை வேலைகளை, அம்மாநில மண்ணின் மக்களுக்குக் கிடைக்காமல் பறித்துக் கொள்ளும் வெளி மாநிலத்தவர் யார்?

பெரும்பாலும் உ.பி., பீகார், இராசஸ்தான் போன்ற இதர இந்தி மாநிலங்களைச் சேர்தவர்களே அந்த வெளியார்! பஞ்சாபியரும் ஒரு பகுதி இருக்கலாம். இவர்கள் எல்லாம் அரியானாவின் இந்திக்காரர்களுக்கு அயலார்!
ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைகளைப் பறித்துக்கொள்ளும், இந்திக்காரர்களிடமிருந்தும், அயல் மாநிலத்தவரிடமிருந்தும் மண்ணின் மக்களுக்கு அரியானாவைப் போல் பாதுகாப்புச் சட்டம் தேவை என்று போராடும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் இனவெறி அமைப்பு என்கின்றனர் இங்குள்ள பா.ச.க.-காரர்கள். அப்படி நமக்குப் பட்டம் கொடுப்பது, தமிழர்களின் உரிமைகளை மீட்பதில் நாம் உறுதியாக நிற்கின்றோம் என்பதற்கான சான்றிதழ்!

ஆனால் இங்கு இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோரும், தீவிரத் திராவிடம் பேசுவோரில் ஒரு சாராரும் உதட்டளவுத் தமிழ்தேசியர்களும், நாம்  “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே, வெளியாரை வெளியேற்றுவோம்” என்று முழங்குவதற்காக, நம்மை இனவெறியர்கள் என்கிறார்கள்.

பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல தாயகங்கள் கொண்ட இந்தியாவை ஒற்றைத் தாயக ஒரு தேசமாவும், இந்தியன் அல்லது பாரதீயன் என்ற ஒரே இனமாகவும், கற்பனை செய்து கொள்ளுமாறு நம்மைக் கட்டாயப்படுத்தும் பா.ச.க. ஆளும் அரியானா என்ற இந்தி மாநிலத்தில் வெளியார் வேலைக்கு வரம்பு கட்டித் தடைச் சட்டம் போட்டிருக்கிறார்கள்.

பா.ச.க.ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அரியானாவைப் போல் வெளியார் வேலை தடைச் சட்டம் கொண்டு வரப்போவதாக அம்மாநில முதலைமைச்சர் செளகான் அறிவித்துள்ளார்.

அரியானாவுக்கு முன்னோடியாக ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு ஆட்சி-அதன் முதல்வர் ஒய்.எஸ்.செகன் மோகன் ரெட்டி 2019-ஆம் ஆண்டே, தனியார் துறையில் ஆந்திரத்தின் மண்ணின் மக்களுக்கு 75 விழுக்காடு வேலைச் சட்டத்தை இயற்றிவிட்டார்.

அதற்கு முன் கர்நாடகம், குசராத், மராட்டியம், சத்தீசுகட் போன்ற மாநிலங்கள், மாநில அரசு மற்றும் தனியார் துறை வேலைகளுக்கு மட்டுமின்றி, நடுவண் அரசு வேலைகளுக்கும் மண்ணின் மக்கள் முன்னுரிமை ஆணைகள் வெளியிட்டுச் செயல்படுத்தி வருகின்றன.

ஆளுநரின் கையெழுத்தை 2021 மார்ச் தொடக்கத்தில் பெற்று “அரியானா மாநில மக்கள் வேலைச் சட்டம் – 2021” (Haryana State Employment of Local Canditates Act - 2021) செயலுக்கு வந்துவிட்டது. இதன்படி, 50,000 ரூபாய் வரை மாதச் சம்பளம் வாங்கும் அனைத்துத் தனியார் துறை வேலையிலும் 75 விழுக்காடு வரை, கட்டாயம் அரியானாவின் மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும் என்கிறது. தவறினால் தண்ணடனை உண்டு!

தாய் மண்ணிலேயே வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனாதைகள் ஆக்கப்பட்டுள்ள தமிழின இளையோர் “மண்ணின் மக்களுக்கே வேலை, வெளியாரை வெளியேற்று” என்று முழங்கி வீதிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தியத் தேசிய வாதக் கட்சிகளின் தலைமைகளும், திராவிட வாத கட்சிகளும் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை, பாரத மாதா பசனையை ஓங்கி ஒலிக்கின்றன. மண்ணின் மக்கள் வேலை உரிமைச் சட்டங்களை எதிர்க்கின்றன. பள்ளிப் பருவத்திலேயே தமிழின மறுப்பையும் “இந்தியன்” என்ற விருப்பையும் பாடத்திட்டங்களில் சேர்த்துள்ளன. அதுமட்டுமல்ல, பாரதவாத, திராவிட வாதக்கட்சிகள் – பாரத தேசியத்தைப் பரப்பி வருகின்றன. இந்தியா, பல்வேறு இனங்களின் ஒன்றியம் என்ற உண்மையை மறைக்கின்றன.

ஆங்கில இந்துவின் ஆத்திரம்
அரியானாவின் சட்டத்தைக் கண்டு ஆங்கில இந்து ஏடு ஆத்திரப்பட்டு 9.3.2021 இதழில் ஆசிரிய உரை எழுதியுள்ளது.

“அச்சுறுத்தும் கொடுஞ்சட்டம் – அரியானாவின் 75 விழுக்காட்டு வேலை உள்ளூர்காரர்களுக்கு என்பது பேரழிவின் முன்னறிவிப்பு” (Alarming diktat – Haryana’s new 75% jobs for locals’ law is a harbinger of doom) என்று தலைப்பிட்டுள்ளது அவ்வேடு.

அரியானா போன்ற மாநிலங்கள் போட்டிருக்கும் இச்சட்டம் அரசமைப்புச்சட்ட உறுப்புகள் 19(1)(g) மற்றும் 16(2) ஆகியவற்றுக்கு  எதிரானது என்று கூறும் இந்து, மறைமுகமாக – உச்சநீதிமன்றம் இச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோருகிறது.

“தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திறன் மிக்கத் தொழிலாளிகள் அரியானா மக்களிடம் இருக்க மாட்டார்கள்.”

“அதிகாரிகள் தொழிற்சாலை வளாகங்களுக்குள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து, வெளிமாநிலத்தவர் வேலை செய்கிறார்களா என்று விசாரித்துத் தொந்தரவு கொடுப்பார்கள். மறுபடியும் “தொழிற்சாலை ஆய்வாளர் ஆட்சி (Inspector Raj) உருவாகும். இதனால் முதலாளிகள் அரியானாவுக்கு வெளியே தொழிற்சாலைகளைக் கொண்டு போய் விடுவார்கள். அதன் பிறகு, அரியானாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்கிறது இந்து. அரியானாவில் மண்ணின் மக்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமானதால்தான் இச்சட்டம் வந்துள்ளது என்ற உண்மையை மாற்றிப் பேசுகிறது இந்து.

“ஆனால் மண்ணின் மக்களுக்கு வேலை முன்னுரிமை என்ற போக்கினால் வெளிநாட்டு முதலாளிகள் அரியானாவில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறெங்கும் தொழிற்சாலை தொடங்க வரமாட்டார்கள். தலைமை அமைச்சரின் ஒரே தேசம் ஒரே சந்தை – (ஒரே பாரதம் – ஒரே ஸ்ரேஷ்ட பாரதம்) என்ற முழக்கத்தை வீணடித்துவிடும்” என்கிறது இந்து.

மிகையான தொழிற்சாலைக் குவிப்பு சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற மண்ணாகத் தாயகத்தை மாற்றும் என்கின்ற உண்மையை மறுக்கிறது இந்து. 

“பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், “வங்கிகளில் பீகார் மக்கள் சேமிக்கும் தொகைகள் அளவிற்குப் பீகாரிலுள்ள வங்கிகள் பீகார் மக்களுக்குக் கடன் தருவதில்லை” என்று குறைபட்டுக் கொண்டுள்ளார்”. என்கிறது இந்து. 

“இது போன்ற, “மாநில விசா” தரும் சட்டங்கள் இயற்றுவதை இந்திய அரசு தடைசெய்ய வேண்டும் என்று ஆத்திரப்படுகிறது இந்து!

ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்கள் உருவானாலும், அல்லும் பகலும் ஆரியத்துவா முழக்கமான இந்துத்துவா இரைச்சல் போட்டாலும், மோடி மஸ்த்தான்கள் “ஒரே தேசம், ஒரே சந்தை” போன்ற முழங்கங்களை எழுப்பினாலும், இந்தியா பல தேசிய இனங்களின் – பல தேசங்களின் துணைக் கண்டம் என்பதை யாராலும் மறைக்க முடியாது; இந்தியைப் பொது மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கும் வடமாநில மக்கள், தங்களின் தாய் இனத்தையும் தாய்மொழியையும் மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு இந்தி இணைப்பு மொழியே தவிர தாய் மொழி அல்ல! அது மட்டுமல்ல, இந்தியும் சமற்கிருதமும் யாருக்கும் தாய் மொழிகள் அல்ல என்ற உண்மையும் மறைந்துவிடாது.

பிரித்தானியப் பீரங்கிகளின் ஆக்கிரமிப்பால் இணைக்கப்பட்ட பல்வேறு மொழி-இனத் தாயகங்களின் பிணைப்பே இந்தியா என்ற வரலாற்று உண்மையும் மாறிவிடாது. அதனால்தான் மத்தியப் பிரதேசம், அரியானா, பீகார் போன்ற இந்தி மாநிலங்களிலும், குசராத் போன்ற சேட்டுகளின் மாநிலத்திலும் மண்ணின் மக்கள் – வெளியார் என்ற சட்ட ஏற்பாடுகள் வேலைவாய்ப்பில் இருக்கின்றன.

அதுசரி, திராவிடத் திணிப்பாளர்கள் அரசியல் அம்பலம் செய்யும் தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைச் சட்டங்கள் இல்லையே ஏன்?  

மது போதைக்கு அடிமை ஆனவர்கள் தன் உணர்வு, தன்மதிப்பு அனைத்தையும் இழந்து விடுகிறார்கள் அல்லவா! திராவிடம் என்பது ஆரியம் உற்பத்தி செய்த மது! அதைத் தமிழ்நாட்டில் கள்ளச் சாராயமாகத் தயாரித்துத் தமிழர்களுக்கு வழங்கினார்கள். கள்ளச்சாரயத்திற்குப் போதை அதிகம்! அந்த போதையில் தமிழ் மொழி உணர்வு, தமிழ் இன உணர்வு, தமிழர் தாயக உணர்வு அனைத்திலும் நமக்கு ஊனம் ஏற்பட்டுள்ளது.

இப்போது இந்திக்காரர்களைப் பார்த்தாவது தமிழர்கள் இன உணர்வு கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT