உடனடிச்செய்திகள்

Saturday, March 20, 2021

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!” - ஐயா பெ.மணியரசன் கண்டனம்!



ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் 

இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!”


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் கண்டனம்!

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் 22.3.2021 அன்று விவாதத்திற்கு வரப்போகிறது. இந்தத் தீர்மானத்தைப் பிரிட்டன், கனடா, செர்மனி, வடக்கு மாசிடோனியா, மாலவி, மான்டினிக்ரோ ஆகிய ஆறுநாடுகள் முன் மொழிந்துள்ளன.

47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 46-வது கூட்டத்தில் வரவுள்ள இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான இத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கப்போவதில்லை, இலங்கை அரசைத்தான் இந்தியா ஆதரிக்கப்போகிறது என்று உறுதி கூறிவிட்டதாக இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார். (The Hindu 19.3.2021) 

ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் தலைமை ஆணையர் கடந்த பிப்ரவரி மாதம் மேற்படி மன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் சுற்றறிகை அனுப்பியிருந்தார்.

அந்த சுற்றறிக்கையில் அவர், “இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்குப் பொது அரசாகச் செயல்பட வில்லை. ஓர் இனச் சார்பாகச் செயல்படுகிறது. ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அது செயல்படுத்தவே இல்லை. இனியும் அது செயல்படுத்தும் என்று நம்பிட வாய்பில்லை. அங்கு நீதித்துறையின் தற்சார்பு சீரழிக்கப்பட்டுவிட்டது. செய்தி ஊடகங்களுக்கு உரிமை இல்லை. மனித உரிமை அமைப்புகள் அங்கு நடுநிலையுடன் செயல்பட முடியாது. எனவே இலங்கை அரசு நடத்திய மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், படுகொலைகள், காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவர்க்குமான பொறுப்புக் கூறல் (Accountability) போன்றவற்றை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

“இலங்கையின் மேற்படி குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். இதற்கான முன்னெடுப்பை ஐ.நா.பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று, ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையரின் இவ்வேண்டுகோளை எந்த நாடும் சட்டை செய்யவில்லை. பிரிட்டன் முதலிய ஆறுநாடுகள் முன் மொழிந்துள்ள நீர்த்துப் போன தீர்மானத்தைக் கூட இந்திய அரசு ஆதரிக்காது என்று இலங்கையின் வெளியுறவுச் செயலர் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட  ஈழத்தமிழர்கள் இலங்கையில் சிங்களப் பேரின வாத அரசால் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வாறன மனித குலத்திற்கு எதிரான இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு இழைத்த மனிதப் படுகொலைகளை, காணாமல் போனவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகளை, போர்க் குற்றங்களை – மனித உரிமைப் பறிப்புகளை உலக நாடுகள் பலவும் அறியும்.  இக்குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டு மனித உரிமை வல்லுநர்களையும் இணைத்துக் கொண்டு இலங்கை அரசு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015இல் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அதன் மீது இலங்கை அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில் மீண்டும் ஒரு விசாரணை நடத்தக் கோரி பிரிட்டன் முன் மொழிந்துள்ள அரை குறைத் தீர்மானத்தைக் கூட இந்தியா ஆதரிக்காது என்று இலங்கை அதிகாரி கூறிய பின்னும் இன்று வரை இந்திய அரசு அது பற்றி வாய் திறக்காதது ஏன்?
இலங்கை அரசின் தமிழின அழிப்புத் திட்டங்களுக்கு இந்தியாவும் துணை போவது ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இழைக்க உள்ள இந்த அநீதி குறித்து ஏடுகளில் செய்திகள் வந்த பின்னும் தமிழ்நாட்டு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மற்றுமுள்ள கட்சிகள் இந்திய அரசின் சிங்கள வெறி ஆதரவுச் செயல்பாட்டைக் கண்டிக்காமல்  இருப்பது ஏன்? இந்திய அரசின்  இந்த நிலைபாட்டை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  மனித உரிமை நீதியின் பக்கம் இந்திய அரசைத் திருப்ப அனைத்துக் கட்சிகளும் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT