உடனடிச்செய்திகள்

Friday, October 11, 2013

தோழர் தியாகு உயிரைக் காப்போம்! இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்


தோழர் தியாகு உயிரைக் காப்போம்!

இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தோழர் தியாகுவின் உயிரைக் காப்போம் எனவும், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் அக்டோபர் 11 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, "இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்" சார்பில் வழக்கறிஞர் பாவேந்தன் தலைமையேற்றார். இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்க அமைப்பாளர் தோழர் மதியவன் தொடக்கவுரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தொழிற்சங்கத் தலைவர் திரு. கோ.வி.சிவராமன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் செல்வி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. இரா.அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி உரையாற்றினார்.

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன், த.இ.மு. சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

தஞ்சை

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன் தலைமையேற்றார்.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு துரை.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தோழஎ ஜெ. கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் பாரி, திராவிடர் விடுதலை கழகம் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் திரு. மதுபூர் ஆ.மைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.

சிதம்பரம்

சிதம்பரம், வடக்கு வீதி தலைமை அஞ்சலகம் முன்பு காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் மூத்த நகர்மன்ற உறுப்பினர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர் திரு. ஆ.இரமேஷ் தலைமைத் தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துணை பொதுச் செயலாளர் திரு. உ.கண்ணன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. வ.க.செல்லப்பன், ம.தி.மு.க குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு. பா.ராசாராமன், நாம் தமிழர் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. செ.புகழேந்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் திரு. பழமலை, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.  

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிறைவுறையாற்றினார். த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் நன்றி தெரிவித்து பேசினார்.

தமிழக உழவர் முன்னணி, சிதம்பரம் சிறுதொழில் முனைவோர் அமைப்பு, மனித உரிமைகள் கழகம், தமிழக மாணவர் முன்னணி உளளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில்  திரளாகக் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையேற்றார். மனித நேயப் பேரவை அமைப்பாளர் திரு.பஞ்சநாதன், விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் திரு. விடுதலைகாசி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. ஜோதிவேல், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி தோழர் தி.ஞானப்பிரகாசம், த.தே.பொ.க. முருகன்குடி செயலாளர் தோழர் கனகசபை, தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. இராமகிருட்டிணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.இ.மு தோழர் மணிமாறன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் ஆயம் தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதுரை

மதுரை தலைமை அஞ்சலகம் முன்பு தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில், காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தோழர் ஆரோக்கியமேரி தமையேற்றார். புரட்சி கவிஞர் பேரவை திரு. மறவர்கோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திரு. முதல்வன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் விடுதலைச்செல்வன், ஆதித்தமிழர்ப் பேரவை தோழர் செல்வம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் தோழர் திவ்யா, தமிழ் தமிழர் இயக்கம் தோழர் பரிதி, தமிழ்நீதி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் இராசேந்திரன், வழக்கறிஞர் பகத்சிங், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தமிழ்ப்புலிகள் அமைப்புத் தோழர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உரையாற்றினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். மேநாள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் தோழர் ஒப்புரவாளன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் ராஜா, மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. குமரேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், த.க.இ.பே. அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செம்பருதி உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சி காதிகிராப்ட் சந்திப்பு அருகில் மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமையேற்றார். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் நிலவழகன், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் தோழர் ம.ஐயப்பன், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஆரோக்கியசாமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் சினி விடுதலைஅரசு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. கலியப்பெருமாள், பெரியார் பாசறை தோழர் அன்பழகன், தமிழ்நாடு மக்கள் கட்சி வழக்கறிஞர் கென்னடி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்புக் குழு உறுப்பினர் கவிஞர் இராசாரகுநாதன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தோழர் பிரபு, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்புத் தோழர் வெங்கடேசன், தோழர் வெட்டுபெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன் , தோழர் வெ.க.லட்சுமணன் ஆகியோர் உரையாற்றினர்.

( செய்தி : த,தே.பொ.க.செய்திப் பிரிவு)



Thursday, October 10, 2013

”சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை” தோழர் கி.வெங்கட்ராமன் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் பேட்டி!

Untitled
”சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியான பேட்டியில் தெரிவித்துள்ளார்..

அதன் முழு விவரம்:

ராகுல் காந்தியை புதிய நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதமுடியுமா?, 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான மக்களின் அதிருப்திகளை அவரால் எதிர்கொள்ள முடியுமா? பதில் சொல்கிறார், தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.

”ராகுல்… நச்சுச் சூழலின் வாரிசு!”

”காங்கிரஸ் கட்சி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்து மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. எதிர்வரும் தேர்தல் அந்தக் கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கப்போகிறது. ஆகவேதான், அவர்கள் தோற்றுப்போன ஓர் அரசின் பிரதிநிதியான மன்மோகன் சிங்கை ஓரம் கட்டிவிட்டு, ராகுல் காந்தியை முன்னே கொண்டுவருகின்றனர். 

ஆனால், இந்தச் சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை என்பதுதான் யதார்த்தம்.

நாளைக்கே ராகுல் காந்தி பிரதமராக வந்தாலும், மன்மோகன் சிங் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இதே தனியார் மய, தாராளமயக் கொள்கைகளைத்தான் இன்னும் வேகமாக; நாசூக்காக அமல்படுத்தப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், இன்றைய அரசியல் என்பது கட்சிகளும் கம்பெனிகளும் இரண்டறக் கலந்ததாக மாறிவிட்டது. முன்பு எல்லாம் கம்பெனிகள், கட்சிகளுக்கு காசு கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வார்கள். அதை நாம் ‘லஞ்சம்’ என்போம்; அவர்கள் ‘நன்கொடை’ என்பார்கள். இப்போது இந்த இடைவெளியே இல்லை. கம்பெனியே கட்சி ஆரம்பிக்கிறது; கட்சிக்காரர்கள் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். 

இதனால் கம்பெனிகளின் ஒட்டுண்ணிகளாக, ‘கட்சிக்காரர்கள்’ பரிணாம வளர்ச்சி அடந்துள்ளனர். இந்த ‘ஒட்டுண்ணி முதலாளிகள்’ இருக்கும்வரை ராகுல் காந்தியால் எந்த மாற்றத்தையும் செயல்படுத்த இயலாது.”

”அதாவது, ‘ராகுல் காந்தி நல்லது செய்யத்தான் நினைக்கிறார். ஆனால், அரசியல் சூழல் அவரது கைகளைக் கட்டிவைத்திருக்கிறது’ என்கிறீர்களா?”

”இல்லை. அப்படி நல்லது செய்ய நினைப்பவராக இருந்தால், ‘நான்சென்ஸ்’ என்று பிரதமருக்கு எதிராக அற ஆவேசத்துடன் பொங்கி எழும் அவர், தன் சொந்த சகோதரியின் கணவரான ராபர்ட் வதேராவின் டி.எல்.எஃப் முறைகேடுகளை வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும். 

ஹரியானா மாநிலத்தையே வளைத்துப்போடும் அளவுக்கான வதேராவின் நிலச் சூறையாடல் வெளிப் படையாக அம்பலப்பட்ட பின்னரும், ராகுல் காந்தி பெயர் அளவுக்குக்கூட கண்டிக்கவில்லை. இதில் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டு, உத்தரப்பிரதேசத்தின் குடிசை வீட்டில் கஞ்சி குடிப்பதால் மட்டும் அவர் ஏழைப்பங்காளன் ஆகிவிடமாட்டார். இந்தக் கஞ்சி குடிக்கும் காட்சியை எல்லாம் இவரது அப்பா ராஜீவ் காந்தி காலத்திலேயே பார்த்துவிட்டோம்.

கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில்கூட காங்கிரஸ் கட்சி, ‘ஆம் ஆத்மி’ என்பதைதான் தங்களின் தேர்தல் முழக்கமாக முன்வைத்தது. ‘ஆம் ஆத்மி’ என்றால், ‘சாமானியன்’ என்று பொருள். அந்தச் சாமானியர்கள், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடியைச் சூறையாடியிருக்கிறார்கள் என்பதைதான் நாம் பார்த்திருக்கிறோமே! இந்த நச்சுச் சூழலின் வாரிசான ராகுல் காந்தி மட்டும் எப்படி மேன்மையானவராக இருப்பார்?”

”காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் குறைந்தபட்சம் மதச்சார்பற்ற அம்சத்திலேனும் ஆதரிக்கலாம் அல்லவா?”

”பா.ஜ.க. மதவாதக் கட்சி என்பதாலேயே, காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சியாகிவிடாது. உண்மையில், பா.ஜ.க. ஒரு தீவிர இந்துத்துவக் கட்சி என்றால், காங்கிரஸ் ஒரு மிதவாத இந்துத்துவக் கட்சி. பாபர் மசூதி இடிப்பு, நரசிம்மராவ் அரசின் பாதுகாப்புடன்தான் நடைபெற்றது.
மத்தியப்பிரதேசத்தில் பசு வதை தடைச் சட்டம் கொண்டுவந்த திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அதே திக்விஜய் சிங்தான், ‘உமாபாரதி முட்டை கலந்த கேக் சாப்பிட்டார்’ என்று அதை ஒரு தேசியப் பிரச்னையாக மாற்றினார். குஜராத்தில் மோடி மட்டும்தான் மதவெறியரா? அங்கு பாரதிய ஜனதாவில் இருந்து விலகிவந்த அதே காவிக் கும்பல்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுகின்றனர்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் அகமதாபாத்தில்தான், தலித் மக்களுக்கு என்று தனியே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இப்படி நவீன நகர்ப்புறச் சேரிகள் அமைப்பதை காங்கிரஸ் தடுத்து நிறுத்தவில்லையே? குறைந்தபட்சம் குஜராத்தில்கூட வலுவான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த வில்லையே? ஆகவே, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்றது என்பது ஒரு போலித் தோற்றம். இதைத் தாங்கிப் பிடிப்பவராகவே ராகுல் காந்தியும் இருக்கிறார்.”

” ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’, ’100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்’ போன்ற அம்சங்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு செயல்பட்டிருக்கிறதே?”

”ஆர்.டி.ஐ. என்பது, பெரும் போராட்டத்துக்குப் பிறகு வேறு வழியே இல்லாமல் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், பெரும் ஊழலுக்குள் சிக்கிக்கிடப்பதை நாடே அறியும்.

‘தமிழ் இனம்’ என்று எடுத்துக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சி பெரும் துரோகம் இழைத்துவிட்டது என்பதையும், ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது என்பதையும் யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது!
ஈழத் தமிழர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியத் தமிழர்களுக்கே காங்கிரஸ் கட்சியால் எந்தப் பயனும் இல்லை. தமிழ்நாட்டுக்கு, காங்கிரஸ் அரசால் எந்தப் பொருளாதார ஆதாயங்களும் இல்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 5.9 கோடி லிட்டர் மண்ணெண்ணெயை மானிய விலையில் மத்தியத் தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்துவந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை 2.9 கோடி லிட்டராகக் குறைத்துவிட்டார்கள்.

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் 13-வது நிதி ஆணையம், ‘மத்திய அரசின் வருவாயில் இருந்து, ஆண்டு ஒன்றுக்கு 5.01 சதவிகிதம் நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. அதன்படிதான் ஒதுக்கீடும் நடந்துவருகிறது. ஆனால், சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கீட்டை 2.5 சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். இதற்கு, ‘தமிழ்நாடு செயல்திறன்மிக்க மாநிலம்’ என்று சப்பைக் காரணம் சொல்கிறார்கள். இது மோசடியான வாதம்.

தமிழ்நாட்டுக்கான வருமானம் எங்கிருந்து வருகிறது? இந்திய அரசு, இங்கிருந்து அள்ளிச்செல்லும் வரி வருவாயில் பாதியையாவது கேட்டுப் பெறக்கூடிய அரசியல் துணிச்சல், கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ கிடையாது. அதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளை திறந்து, மக்களுக்கு சாராயம் விற்று வருமானத்தைப் பெருக்குகிறார்கள். இந்தச் ‘செயல்திறனுக்குதான்’ நிதியை பாதியாகக் குறைக்கிறார்கள். பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தவறு இல்லை. அதை மத்திய நிதியில் இருந்து ஒதுக்கிக் கொடுக்கவேண்டும். பக்கத்து மாநிலத்தின் நிதியில் இருந்து எடுத்துத் தரக் கூடாது. ஆக, காங்கிரஸ் ஆட்சி என்பது, தமிழ்நாட்டுக்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது!”

”’மதவாதத்தை உயர்த்திப்பிடிக்கும் பாரதிய ஜனதாவின் மோடியைவிட, ‘குறைந்த தீமை’ (Lesser evil) என்ற அடிப்படையில், காங்கிரஸின் ராகுல் பரவாயில்லை’ என்று சிலர் சொல்கிறார்களே?”

”எரியும் கொள்ளியில், சின்னக் கொள்ளி, பெரிய கொள்ளி என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. தீமை என்றால் தீமைதான். 2004-ல் பா.ஜ.க. ‘பெரிய தீமை’ (Greater evil); காங்கிரஸ் ‘குறைந்த தீமை’ (Lesser evil). இப்போது அப்படியே தலைகீழாகத் தெரிகிறது. எது ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அது பெரிய தீமையாகத் தெரிவது இயல்பு. ஆனால், மக்களாகிய நமக்கு இரண்டு கழிசடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. நாங்கள் ‘தேர்தலைப் புறக்கணியுங்கள்’ என்கிறோம். அதையும் மீறி வாக்குச்சீட்டில் எதையாவது பதிவுசெய்ய வேண்டும் என்றால், இப்போதுதான் ‘யார் மீதும் நம்பிக்கை இல்லை’ என்பதை பதிவுசெய்ய ‘நோட்டா’ (NOTA) என்ற வசதி வாக்குச்சீட்டில் வந்துவிட்டதே… அதைப் பயன்படுத்துங்கள்.”

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Monday, October 7, 2013

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தோழர் தியாகு!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தோழர் தியாகு!

 

காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி "இலங்கையில் காமன்வெல்த் - எதிர்ப்பியக்கம்" சார்பில், காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த அக்டோபர் 1 முதல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தோழர் தியாகுவுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உண்ணாப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தன.

 

அவ்வகையில், போராட்டத்தின் 7ஆம் நாளான இன்று (அக்டோபர் 7) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், த.தே.பொ.க. தோழர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.முருகன், தோழர் அ.ஆனந்தன், தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள், இதில் பற்கேற்றனர்.


போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தோழர் தியாகுவின் உடல்நிலையை சோதித்தது. அதன்பின், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாப் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

 

'இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகுவின் போராட்டத்தை முடக்காதே!' என கூடியிருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்களுக்கிடையில், அரசு மருத்துவ வாகனத்தில் தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டாது. தற்போது, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

 

தோழர் தியாகுவின் போராட்டம், நம் அனைவரின் போராட்டம்! போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய, அனைவரும் ஒருங்கிணைந்து உழைப்போம்!

 

 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)


Friday, October 4, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகு உண்ணாப்போராட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர்கள் நேரில் சென்று ஆதரவு!



தமிழீழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, அவ்வாறு நடைபெற்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை, சென்னை உயர்நீதிமன்ற அனுமதியோடு 01.10.2013 அன்று மாலை முதல் தொடங்கியுள்ளார். 


சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இன்று(03.10.2013) மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அவரை நேரில் சந்தித்தனர்.


போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய தோழர் கி.வெங்கட்ராமன், இப் போராட்டம் தமிழகமெங்கும் விரிவுபட வேண்டுமென சுட்டிக்காட்டிப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் த.இ.மு. செயலாளர் தோழர் கோ.நல்லன், தோழர்கள் கவிபாஸ்கர், முத்துக்குமார், அர.குமரேசன், புதுமொழி, செம்மொழி, கடாபி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.


காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என போராடுவோம்! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க வேண்டுமென குரல் கொடுப்போம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இன்று(03.10.2013) மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அவரை நேரில் சந்தித்தனர். 

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய தோழர் கி.வெங்கட்ராமன், இப் போராட்டம் தமிழகமெங்கும் விரிவுபட வேண்டுமென சுட்டிக்காட்டிப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் த.இ.மு. செயலாளர் தோழர் கோ.நல்லன், தோழர்கள் கவிபாஸ்கர், முத்துக்குமார், அர.குமரேசன், புதுமொழி, செம்மொழி, கடாபி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர். 

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என போராடுவோம்! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க வேண்டுமென குரல் கொடுப்போம்!




(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT