உடனடிச்செய்திகள்

Sunday, July 9, 2017

தொழிற்சங்கத் தலைவர் தோழர் டி. ஞானய்யா மறைவு. கி. வெங்கட்ராமன் இரங்கல்!

தொழிற்சங்கத் தலைவர் தோழர் டி. ஞானய்யா மறைவு. தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், அஞ்சல்துறை – தொலைத்தொடர்பு துறைத் தொழிற்சங்கத் தலைவருமான தோழர் டி. ஞானய்யா, உடல் நலக்குறைவு காரணமாக கோவையில் நேற்று (08.07.2017) காலமானார். அவருக்கு அகவை 97.

தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகளாக செயலாற்றிய தோழர் ஞானய்யா, அத்தொழிற்சங்கத்திலும் இந்திய அரசு ஊழியர்கள் உரிமைப் போராட்டத்திலும் பல நிலைகளில் வழிகாட்டியாக செயல்பட்டவர் ஆவார்.

தனது இறுதி ஆண்டுகளில் மார்க்சியத்தையும் பொதுவுடைமை இயக்கச் செயல்பாடுகளையும் திறனாய்வுப் பார்வையோடு, கட்டுரைகள் பல எழுதியவர். குறிப்பாக மொழி, தேசிய இன உரிமைகள், சாதிச் சிக்கல் குறித்த பார்வைகள் ஆகியவற்றில் பொதுவுடைமை இயக்கம் புதிய பார்வையில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தார். தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் தொடர் வாசகர் அவர்!

தோழர் டி. ஞானய்யா அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும், தமிழகத் தொழிற்சங்க முன்னணி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்னணம்,
கி. வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம் பண்டிதர் சாலை. காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி. அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலை, தி.பி. 2048 ஆடி 13 - காரி(சனி)க்கிழமை
29.07.2017 மாலை 6.30 மணி


தமிழ்ச்சமூகம் இன்று முட்டுச் சந்தில் நிற்கவில்லை; முன்னேறிச் சென்று கொண்டுள்ளது. “காவிய நாயகர்களின்” வருகைக்காக அது காத்திருக்கவில்லை; மக்களே போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்!

தமிழ்நாட்டு ஆறுகளின் கதி என்ன?

வணிக வேட்டைக்கு வந்து ஆட்சி பிடித்த ஆங்கிலேயேர்கள் 1924இல் அருமையான காவிரி ஒப்பந்தம் போட்டு, மேட்டூர் அணை 1934இல் திறந்தார்கள். ஆனால் வெள்ளையரை வெளியேற்றி உருவான இந்திய ஆட்சி காவிரி உரிமையைப் பறித்து விட்டது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து விட்டது மோடி அரசு; கன்னடர் இன வெறிக்குத் துணை போகிறது.

வெள்ளையராட்சி 1895இல் முல்லைப் பெரியாறு அணை கட்டிக் கொடுத்தது. இந்தியத்தேசியம் பேசும் கேரளாவின் காங்கிரசுக் கட்சியும் மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அந்த அணையை உடைக்க நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. அவை அங்கு ஆளும் கட்சிகள்! முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாகத் தூக்கி எறிகின்றன கேரளாவின் இந்தியத்தேசியக் கட்சிகள்! அதில் உள்ள சிற்றணையை மேலும் வலுப்படுத்தத் தமிழ்நாடு அரசு கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை கேரள அரசு!

பாலாற்றில் தமிழ்நாட்டிற்குள்ள வரலாற்று வழி உரிமையை நிலைநாட்டி 1892இல் வெள்ளையர் அரசு ஒப்பந்தம் போட்டது. வெள்ளையர் வெளியேறியவுடன் ஏராளமான அணைகளைப் பாலாற்றில் கட்டி, ஆந்திரப்பிரதேசம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைக் களவாடிக் கொண்டது.

அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணைகள் கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்து விட்டது.

கேரளம் பவானி ஆற்றில் புதிதாக ஆறு தடுப்பணைகள் கட்டிக் கொண்டுள்ளது. சிறுவாணியிலும் புதிதாகத் தடுப்பணை கட்டுகிறது.

இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கெதிராக இனப்பாகுபாடு காட்டுவதால்தான் அண்டை இனங்கள் தமிழ்நாட்டின் சட்டப்படியான ஆற்றுநீர் உரிமைகளைப் பறித்துக் கொண்டன!

கடல் உரிமைப் பறிப்பு


இந்திய அரசு 1974இல் தன்னிச்சையாக சிங்கள அரசுக்குத் தமிழ்நாட்டுக் கச்சத்தீவைக் கொடுத்தது. அதை வைத்து தமிழர்களின் கடல் உரிமையை இலங்கை அரசு பறித்துவிட்டது. எல்லை தாண்டி வந்ததாக 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை சுட்டுக் கொன்றது சிங்களப்படை!

ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்கள் நிரந்தரமாக ஊனப்படுத்தப்பட்டு, துன்பத்தில் உழல்கிறார்கள். சின்னஞ்சிறு இலங்கைக்கு இத்தனை துணிச்சல் கொடுத்தது யார்? இந்தியா! தமிழ் மீனவர்களைத் தாக்கிய, சுட்டுக் கொன்ற - படகுகளைக் கடத்திய சிங்களப் படையாட்கள் மீது ஒரு வழக்கு கூட இந்தியா போடவில்லை.

மலையாள மீனவர் இருவரை அரபிக்கடலில் சுட்டுக் கொன்ற இத்தாலியின் கப்பற்படையினரை சிறைப்பிடித்து வழக்கு நடத்தியது இந்தியா! தமிழர்களுக்கு எதிராக மட்டும் இந்திய அரசு இனப்பாகுபாடு காட்டுவதேன்?

தமிழர்கள் செய்த குற்றமென்ன?

வெள்ளையரை வெளியேற்றும் விடுதலைப் போரில் தமிழர்கள் பங்கேற்கவில்லையா? தடியடிபடவில்லையா? சிறைப் படவில்லையா? செக்கிழுக்கவில்லையா? செத்து மடியவில்லையா? மூவண்ணக் கொடி காக்க உயிர் விடவில்லையா? விடுதலைக்கு முன்னும் பின்னும் தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சி அமைக்க வாக்களிக்கவில்லையா? இந்திய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம் ஏன்? இத்துணை இனப்பாகுபாடு ஏன்?

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. சாதித்ததென்ன?

ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஆண்டுவரும் காலங்களில்தான் மேற்கண்ட உரிமைப் பறிப்புகளும் உயிர்ப்பறிப்புகளும் அரங்கேறின. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் ஆற்றலும் இன்றி, அக்கறையும் இன்றி பதவி மோகம், பணமோகம் ஆகியவற்றில் மட்டுமே அக்கழகங்கள் கவனம் செலுத்தின.

இந்திய ஆளுங்கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றுடன் மாறி மாறி கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை, உயிர்களைக் காவு கொடுக்கும் கங்காணி வேலை செய்தன.

இனியும் இக்கழகங்கள் என்ன செய்யப் போகின்றன? ஏற்கெனவே செய்து வந்த இனத்துரோக வேலைகளைத்தான் செய்யப் போகின்றன!

இந்தி - சமற்கிருதத் திணிப்பு
 

இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, 1965இல் மாணவர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிலும் நடுவண் அரசிலும் அப்போது இருந்த காங்கிரசு ஆட்சிகள் 300 தமிழர்களை சுட்டுக் கொன்றன.

இப்போது பா.ச.க. ஆட்சி இந்தியுடன் சமற்கிருதத்தையும் சேர்த்து வேகமாகத் திணிக்கிறது. ஆரியம் ஆள்கிறது என்பதைப் பறைசாற்றவே சமற்கிருதத்தையும் அதன் ஒரு பிரிவான இந்தியையும் திணிக்கிறார்கள்.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளும் அக்கட்சிகளும் ஒப்புக்கு மட்டுமே இந்தியை எதிர்க்கின்றன.

தி.மு.க.வின் டி.ஆர். பாலு நடுவண் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்த போதுதான், தமிழ்நாட்டுத் தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்பட்டன.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தான் பள்ளிக்கல்வியில் அரசு பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

தமிழ் அழிப்பில் கழக ஆட்சிகள் பங்கு கணிசமானது!

வேளாண்மையையும் குடிநீரையும் அழிக்கும் எண்ணெய் - எரிவளி

பெட்ரோலிய - எரிவளி ஆழ்குழாய்க் கிணறுகள் இறக்கப்பட்ட ஊர்களில் எல்லாம் நிலத்தடி நீர் பாழ்பட்டு, பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படாமல் போய்விட்டது. எனவே இவற்றையும் ஐட்ரோ கார்பனையும் எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். ஆனால், புதிதாக 110 ஆழ்குழாய்க் கிணறுகள் எண்ணெய் மற்றும் எரிவளிக்காக இறக்கப் போவதாக ஓ.என்.ஜி.சி. அறிவித்துள்ளது.

வெளியார் ஆக்கிரமிப்பு 

தமிழ்நாட்டுத் தொழில் வணிகம் அனைத்திலும் வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தேவைக்கு அதிகமாகப் பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் வெளி மாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசுத் தொழிலகங்கள் - அலுவலகங்கள் அனைத்திலும் வெளிமாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் வேலையில் சேர்க்கப்படுகின்றனர்.

மற்றுமொரு கட்சியா? மாற்று அரசியலா?

தமிழர் தாயகம், தமிழ்த்தேசிய இனம், தமிழ் மொழி ஆகியவற்றின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் மாற்று அரசியலே இன்றையத் தேவை!

பழைய தி.மு.க., அ.தி.மு.க.வோ அல்லது அவற்றின் பாணியில் புதிய கட்சிகளோ தேவை இல்லை!

பா.ச.க.வின் இந்துத்துவா

பா.ச.க.வின் இந்துத்துவாவின் உண்மைப் பெயர் ஆரியத்துவா தான்! சொந்த இனத்திலும் அயல் இனங்களிலும் உள்ள சாதாரண இந்து மத மக்களை ஏமாற்றி ஈர்த்துக் கொள்ளவே ஆரியத்துவாவாதிகள் “இந்துத்துவா” என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். தமிழில் அர்ச்சனை செய்யவோ, பிராமணரல்லாத தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆகிடவோ ஆர்.எஸ்.எஸ். ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் பா.ச.க.வின் ஆரியத்துவா பாசிசத்தை எதிர்கொள்வதற்குரிய சரியான அரசியல் சிந்தாந்தம் தமிழ்த்தேசியமே!

உலகின் மூத்த குடிகளாகவும், முதல் இனமாகவும் உள்ள தமிழர்கள் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தமிழ்க்கொடி ஏற்றி ஆண்டவர்கள் தமிழ் வேந்தர்கள்! அறிவியல் - அறம் - வீரம் மூன்றும் தமிழர் மரபின் மூன்று தூண்கள்! மனிதர்கள் அனைவரும் சமம் - தமிழர்கள் அனைவரும் சமம் என்பது தமிழர் அறத்தின் சாரம்!

இந்த மாண்புகள் எல்லாம் இப்பொழுது சிதைந்து கிடக்கின்றன. இவற்றை மீட்போம்!

தமிழர் இனமுழக்கம்

வேளாண் தமிழர் வாழ்வுரிமை காப்போம்; தமிழ்நாட்டுத் தொழில் வணிகத்தில் தமிழர் மேலாதிக்கம் பெறப் போராடுவோம்! நடுவண் அரசு தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்குப் பெறுவோம்; தமிழர் கடல் தமிழர்க்கு உரிமையாக்குவோம்; எல்லா நிலையிலும் தமிழே ஆள வைப்போம்! பா.ச.க.வின் பாசிசம் தடுப்போம்!

தமிழ்த்தேசியச் சுடர் ஏந்துவோம்! தமிழ்த்தேசியத்தின் முகம் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, July 6, 2017

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், திருச்சியில் வரும் வெள்ளியன்று (07.07.2017) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

திருச்சி - சிந்தாமணி அண்ணா சிலை அருகில், 07.07.2017 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்பினரும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டம், அதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்தக் காவிரிப்படுகையையும் காப்பதற்கான போராட்டமாக விரிவடைய வேண்டும்.

எனவே, தமிழின உணர்வாளர்களும் சனநாயக ஆற்றல்களும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, July 5, 2017

கதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்!

கதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்!
கதிராமங்கலத்தைக் காப்பதற்கான களப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “மகளிர் ஆயத்தின்” மகளிர் தோழர்கள், இன்று (05.07.2017) தஞ்சை மாநகரில் செய்தப் பணிகளைப் பார்த்து தஞ்சை மக்கள் திகைத்து நின்றனர்!

கதிராமங்கலத்தில் மக்களைத் தாக்கி ஓ.என்.ஜி.சி.க்கு அடியாள் வேலை பார்த்த காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அச்சிடப்பட்ட சுவரெட்டிகளை குடந்தை நகரில் நாம் ஒட்டிய நிலையில், அதைக் காவல்துறையினர் கிழித்தெறிந்தனர்.
இன்று (05.07.2017) அச்சுவரொட்டிகளை மகளிர் ஆயத்தின் தோழர்கள் தாங்களாகவேச் சென்று தஞ்சையின் முதன்மை வீதிகளில் ஒட்டினர். தள்ளாத அகவையிலும் இளைஞரைப் போல் சுறுசுறுப்போடு செயல்பட்டு வரும் மகளிர் ஆயத்தின் நடுவண் குழு உறுப்பினர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில், மகளிர் தோழர்கள் கோகிலா, சரசுவதி, உமா, தானி ஓட்டுநர் சிவா ஆகியோர் இப்பணியை மேற்கொண்டனர். நாளையும் அப்பணியில் தோழர்கள் ஈடுபடுகின்றனர்.

முன்னதாக, கடந்த 03.07.2017 அன்று திருச்சி நடுவண் சிறைக்கு சென்ற தோழர் இலட்சுமி அம்மாள், வெள்ளம்மாள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினர்.
இதனையடுத்து நேற்று (04.07.2017), கதிராமங்கலத்திற்குச் சென்ற தோழர் இலட்சுமி அம்மாள் உள்ளிட்ட தோழர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் தோழர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மகளிர் ஆயத்தின் பணி தொடர்கிறது!

செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு: 7373456737
www.kannotam.com
முகநூல்: FB/MakalirAayam

சீர்குலைவாளர் கிரண்பேடியைத் திருப்பி அனுப்பிடத் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் போராட வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

சீர்குலைவாளர் கிரண்பேடியைத் திருப்பி அனுப்பிடத் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் போராட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
புதுவை மாநிலத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் அத்து மீறல்களும், தன்னல நோக்கில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயல்பாடுகளும் அன்றாடம் பெருகிக் கொண்டே வருகின்றன.

அண்மையில் முதலமைச்சர், அமைச்சரவை ஆகிய சட்டப்படியான சனநாயக நிறுவனங்களைப் புறந்தள்ளிவிட்டு, பா.ச.க. கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை புதுவை சட்டப்பேரவையின் நியமன உறுப்பினர்களாக அமர்த்தி, அவர்களுக்கு கமுக்கமாகப் பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ச.க.வுக்கு ஓர் உறுப்பினர் கூட இல்லை. பா.ச.க.வின் மாநிலத் தலைவராக உள்ள சாமிநாதன் என்பவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு காப்புத்தொகை இழந்தவர். மேற்படி சாமிநாதன் மற்றும் பா.ச.க. பொருளாளர் சங்கர், பா.ச.க.வைச் சேர்ந்த பள்ளிக்கூட அதிபரும், ஆர்.எஸ்.எஸ். ஊழியருமான செல்வகணபதி ஆகிய மூவரையும் நடுவண் அரசுக்கு, கிரேன்பேடி பரிந்துரை செய்து உள்துறையின் ஒப்புதல் கடிதம் பெற்று, அம்மூவருக்கும் பதவியேற்பு உறுதிமொழியும் செய்து வைத்துள்ளார்.

புதுவை மாநில அமைச்சரவையைப் புறந்தள்ளிவிட்டு, சட்டப்பேரவை நியமன உறுப்பினர்கள் பதவிக்கு பா.ச.க.வைச் சேர்ந்த மூவர் பெயரை நடுவண் அரசுக்குக் கிரேன்பேடி பரிந்துரை அனுப்பிய உடனே அதை இரத்து செய்ய கேட்டு, புதுவை சட்டப்பேரவைக் காங்கிரசு உறுப்பினர் லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது. நீதித்துறையையும் புறக்கணித்துவிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன் அவசரத்துடன் கிரேன்பேடி இம்மூன்று பேர்க்கும் பதவியேற்பு உறுதிமொழி வழங்கினார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை, முதல்வரின் நிதி அதிகாரம் முதலியவற்றில் தலையிடுவது, கிரேண்பேடியின் அன்றாட நடவடிக்கைகளாக உள்ளன. தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்காமலேயே அத்தொகுதியில் திடீர் ஆய்வு என்று தெருக்களில் சுற்றுவதும் அடிக்கடி நிகழ்கிறது. இவற்றிலெல்லாம், புதுவை முதலமைச்சர் நாராயணசாமியைப் புறந்தள்ளி, கிரண்பேடி அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்து வருகிறார்.

பாரதிய சனதா கட்சிக்கு ஆன்மிக ஒழுக்கமும் இல்லை; அரசியல் ஒழுக்கமும் இல்லை! பா.ச.க.வின் நடுவண் அரசுதான் கிரேண் பேடியின் இத்தனை அத்துமீறல்களுக்கும் அதிகார அலங்கோலங்களுக்கும் பின்னணித் தூண்டுதலாகச் செயல்படுகிறது.

மாநில உரிமைகளை நடுவண் அரசு பறிப்பதை சனநாயக உணர்வாளர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும். அத்துடன் புதுச்சேரி என்பது தமிழர்களின் இன்னொரு தாயகம்!

அதிகார வெறியோடும், அலங்கோல உளவியலோடும் அத்துமீறல்கள் செய்து, புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும், சனநாயகத்தையும் சீர்குலைக்கும் “துணைநிலை ஆளுநர் கிரேன்பேடியைத் திரும்ப அழைத்துக் கொள்” என்று தமிழ்நாட்டுத் தமிழர்களும், புதுவைத் தமிழர்களும் சேர்ந்து போராட வேண்டும். தமிழ்நாட்டுக் கட்சிகளும் அமைப்புகளும் இந்த முழக்கத்தை முன்வைத்துப் போராட வேண்டுமென்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கிரண்பேடியை வெளியேற்றுவதற்காக வரும் சூலை 8 அன்று, புதுச்சேரியில் நடைபெறும் முழு அடைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் புதுச்சேரி பிரிவு பங்கேற்கிறது. அதனை வெற்றிகரமாக செயல்படுத்திட புதுவை மக்கள் அனைவரையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, July 4, 2017

தமிழ்நாடு காவல்துறையா? ஓ.என்.ஜி.சி. அடியாள் படையா? கதிராமங்கலம் போராட்டம் குறித்த சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர்!

தமிழ்நாடு காவல்துறையா? ஓ.என்.ஜி.சி. அடியாள் படையா? கதிராமங்கலம் போராட்டம் குறித்த சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர்!
கதிராமங்கலத்தில் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும், காவல்துறையினரால் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், கதிராமங்கலம் பிரமுகர் திரு. தர்மராசன் உள்ளிட்ட 10 தோழர்களை விடுதலை செய்யக் கோரியும், நேற்று (03.07.2017) இரவு கும்பகோணம் வட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 

“தமிழ்நாடு காவல்துறையா? ஓ.என்.ஜி.சி. அடியாள் படையா? கதிராமங்கலம் காப்புப் போராளிகள் பேரா. த. செயராமன், க. விடுதலைச்சுடர், கா. தருமராசன் உள்ளிட்ட பத்து பேரை விடுதலைச் செய்! பொய் வழக்கைக் கைவிடு!” – இதுதான் அச்சுவரொட்டியிலிருந்த வாசகங்கள்! 

நேற்றிரவு ஒட்டப்பட்ட அச்சுவரொட்டிகளை காவல்துறையினர் தேடித்தேடி கிழித்துள்ளனர். காவல்துறையினர்தான் அவற்றைக் கழித்தார்கள் என்று அதை நேரில் பார்த்த பொது மக்கள் பலரும் தெரிவித்துள்ளனர். 

சுவரொட்டிகள் மூலம் தங்கள் கருத்தை வெளியிடுவது அவ்வளவு பெரிய குற்றமா? சட்ட விரோதச் செயலா? ஓ.என்.ஜி.சி.யின் அடியாள் படையாக தமிழ்நாடு காவல்துறையினர் செயல்படலாமா என்று நாம் சுவரொட்டியில் எழுப்பிய கேள்விக்கு, “ஆம்.. அப்படித்தான் செயல்படுவோம்” என்று பதில் கூறியுள்ளது, தமிழ்நாடு காவல்துறை! 

மக்களைப் பாதுகாக்கும் பணியைக் கைவிட்டு விட்டு, ஊரை அழிக்கும் ஓ.என்.ஜி.சி.க்கு அடியாள் வேலை பார்ப்பது, தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், தற்போது சுவரொட்டி கிழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருவது, “அடியாள் படை” என்ற நம் கூற்றை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது! 

நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளைக் கிழித்தார்கள் அல்லவா? சுவர்களிலிருந்து கிழித்தெறியப்பட்ட சுவரொட்டியை, இதோ இப்பொழுது சமூக வலைத்தளங்கள் வழியாகப் பகிர்கிறோம். தற்போது அவை, நம் ஒவ்வொருவர் கணினியின் வழியாகவும், கைப்பேசி வழியாகவும் ஆயிரம் ஆயிரமாய் பரவப் போகிறது? என்ன செய்துவிட முடியும் உங்களால்? 

காவல்துறையினரின் சனநாயக விரோத அடக்குமுறைகளை மீறித் திமிறி எழுவோம்! பொய் வழக்கில் சிறைபட்ட போராளிகளை விடுதலை செய் என்று திசை எங்கும் முழங்குவோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com, www.tamizhthesiyam.com

Sunday, July 2, 2017

தோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்!
மூத்த பொதுவுடைமைவாதியும், மார்க்சிய அறிஞரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) தமிழ்நாடு செயலாளருமான தோழர் கோவை ஈசுவரன் அவர்கள், நேற்று (02.07.2017) மாலை சென்னையில், உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

சென்னை நந்தனத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு, மா.லெ. மக்கள் விடுதலை தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜெ. சிதம்பரநாதன், தமிழக மக்கள் முன்னணித் தலைவர் தோழர் அரங்க. குணசேகரன், வழக்கறிஞர் அஜிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இடதுசாரி இயக்கத் தோழர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மலர் மாலை வைத்து, தோழருக்கு வீரவணக்கம் செலுத்தி, அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் உரையாற்றினார்.

தோழர் கோவை ஈசுவரன் அவர்களின் பன்முகப் பங்களிப்பு குறித்தும், தன் குடும்பத்தையே பொது வாழ்வில் ஈடுபடுத்தி அவர் வழிகாட்டியாக விளங்கியது குறித்தும் தோழர் கி.வெ. குறிப்பிட்டுப் பேசினார்.

பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர் கண்ணன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

இன்று (02.07.2017) மாலை, அவரது உடல் நந்தனம் இல்லத்திலிருந்து அவரது இறுதி வணக்க ஊர்வலம் புறப்படுகின்றது.

தோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhdesiyam.com 

Friday, June 30, 2017

வெறியாட்டம்!

வெறியாட்டம்!
கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலில், அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது காவல்துறையினர் வன்முறை ஏவி, மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட 13 பேர் மீது கொடுந்தாக்குதல் நடத்தி, காவல்துறையினர் கைது செய்து, பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். அவர்களது தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை அவர்களும், ஊர் பொதுமக்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஊரில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

Friday, June 23, 2017

”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!

”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!
தஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பாதிப்புகளை விளக்கும் “கதிராமங்கலம் கதறல்” ஆவணப்படத்தை கடந்த 20.06.2017 அன்று குடந்தையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிட்டது. அது குறித்த செய்தி விகடன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அது வருமாறு : 

கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி செயல்படுத்தி வரும் எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருப்பது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.அந்தப் படத்தைப் பார்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என எண்ணிய ஓ.என்.ஜி.சி நிறுவனம்,ஆவணப்படம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களை சாமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிராமங்கலம் கிராமம். கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல், நெற்கதிரை கூரையில் வேய்ந்து கொடுத்த காரணத்தால், கதிர் வேய்ந்த மங்கலம் என்ற பெயர் வந்ததாக வரலாறு. காவிரி ஆறு மற்றும் விக்கிரமனாறு நடுவில் அமைந்துள்ள இந்தக் கிராமம் ஒருகாலத்தில், பசுமைக்குப் பஞ்சம் இல்லா ஊராக இருந்தது.நெல் சொரிந்த வயல்வெளிகள், வரப்பை மறைத்த கரும்புக் காடுகள், குருவிகளும் காக்கைளும் தின்று மிச்சம் வைத்த சோளத் தோட்டங்கள் எனப் பல்வேறு பசுமை அடையாளங்களைத் தாங்கி நின்றிருந்தது கதிராமங்கலம்.

இப்படி தழைத்தோங்கிய விவசாய நிலத்தில்,கடந்த 2002 -ம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி.சி எண்ணை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் படம் பிடித்துக் காட்டும் ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளது பன்மைவெளி வெளியீட்டகம்.

மக்கள் போராட்டம் 

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, கதிராமங்கல கிராம மக்களுடன் சேர்ந்து "கதிராமங்கலம் கதறல்" என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். 47 நிமிடம் ஓடக் கூடிய இந்த ஆவணப்படம் ஊர் மக்களின் போராட்டக் காட்சிகளுடன் தொடங்குகிறது. மக்கள் போராட்டம் அரசின் அடக்குமுறை ஆகியவற்றைக் குறித்த செய்திகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.15 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக இருந்த கதிராமங்கலம் தற்போது அதன் பசுமைத் தன்மையில் இருந்து எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்பதைக் காட்சிகள் எடுத்துரைக்கின்றன. ஊர் பெரியவர்கள்,படித்தவர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கிராமத்தின் கடந்த கால நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் விரிவாக அதில் பேசுகின்றனர்.அப்படி பசுமைப் போர்த்தியக் கிராமம் தற்போது குடிதண்ணீருக்கே தள்ளாடி நிற்கிறது என நீள்கிறது இந்தப் படம்.

இப்படியான அவல நிலை வருவதற்கு மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நடைமுறைப்படுத்தியுள்ள திட்டமே காரணம் எனக் காட்சிகளை ஆங்காங்கே அம்பலப்படுத்துகிறது.மத்திய அரசின் கோர முகத்தைக் கிழித்துக் காட்டும் இந்த ஆவணப்படத்துக்குத்தான் தற்போது ஓ.என்.ஜி .சி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்த ஆவணப்படத்தை மக்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது' என விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்த ஆவணப்படத்தை இயக்கிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதியிடம் பேசியபோது, " 2002 -ல் மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி. சி, எண்ணெய் எடுக்கும் இந்தத் திட்டத்தை கதிராமங்கலத்தில் செயல்படுத்தியது.9 இடங்களில் இதற்கான பைப் லைன்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

பூமியில் துளை போட்டு இங்கிருந்துதான் குத்தாலத்தில் உள்ள ஆயில் ஃபீல்டு கிடங்குக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நீர் ஆதாரம் முற்றிலுமாகக் குறைந்து பாலைவனமாகி விட்டது. அதுமட்டுமன்றி நீரில் ஆயில் கலந்துவருவதும் அவ்வப்போது பூமியில் புதைக்கப்பட்டுள்ள பைப் லைன்கள் வெடித்து விபத்து ஏற்படுவதுமான சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் முகம் பாதிக்கப்பட்டுள்ளது.இப்படியான பல பிரச்னைகளை அனுபவித்து வந்த நிலையில்தான் போராட்டத்தை அந்தக் கிராமத்து மக்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தையும் கிராமத்தின் நிலையையும் பதிவு செய்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்த ஆவணப்படத்தை கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வெளியிட்டுள்ளோம்.

இந்த ஆவணப்படத்துக்குத்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'எண்ணெய் எடுக்கும் திட்டம் குறித்து ஆவணப்படங்கள், செய்திகள் அறிக்கைகள் வந்தால் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம்' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் போன்றத் திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துதான் இதுவரை ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆவணப்படும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டத்தால், எப்படி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்குகிறது.இந்த ஆவணப்படத்தைப் பார்த்து மக்கள் எங்கே திட்டத்தை நிறுத்தி விடுவார்களோ எனப் பயந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது" என்கிறார்.

நன்றி: விகடன் 
http://www.vikatan.com/news/tamilnadu/93126-this-is-what-happening-in-kathiramangalam.html

ஆவணப்படத்தைப் பெற : 
https://www.facebook.com/panmaiveli/photos/a.1461988764024142.1073741828.1460639837492368/1907244619498552/?type=3&theater

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச : 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannotam.com 
இணையம் : www.tamizhdesiyam.com

Wednesday, June 21, 2017

“சிறை மானியக் கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும்” தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பெ. மணியரசன் வேண்டுகோள்!

“சிறை மானியக் கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும்” தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களும் 26 ஆண்டுகளாக சிறையில் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

இராசீவ்காந்தி கொலை வழக்கில், தடா சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தில், பேரறிவாளன் சொல்லாத செய்தியை தான் சேர்த்துக் கொண்டதாக அன்றைய விசாரணை அதிகாரி தியாகராசன் அண்மையில் குற்றவுணர்வுடன் கூறியிருந்தார். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், தடா வழக்கின் கீழ் இராசீவ்காந்தி கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு எவ்வாறு சோடிக்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். 

மேலும், அவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ் அவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராசீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்படாத புதிர்கள் பல இருக்கின்றன, அவர்களுக்குத் தண்டனை குறைப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஏழு தமிழர்களும் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மன உளைச்சல்களுக்கு ஆளாகித் துன்புறுகின்றனர். தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு இராபர்ட் பயாஸ் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், நாளை (22.06.2017) தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறைத்துறை மானிய கோரிக்கை வருகிறது. இந்த ஏழு தமிழர்களுக்கும் முதல் கட்டமாக, உடனடி நிவாரணமாக நீண்டகால பரோல் வழங்கி வெளியே அனுப்புமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, June 17, 2017

தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் நால்வரையும் விடுதலை செய்க! இன்று (17.06.2017) - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம்!

தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் நால்வரையும் விடுதலை செய்க! இன்று (17.06.2017) - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம்!
தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய “குற்றத்”திற்காக கைது செய்யப்பட்டு, “குண்டர்” சட்டம் ஏவப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், தோழர்கள் இளமாறன், அருண்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யக் கோரி, இன்று (17.06.2017) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகின்றது.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் பங்கெடுக்கிறது. நாளை (17.06.2017) மாலை 3 மணிக்கு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து முதல்வர் வீட்டை முற்றுகையிடும் பேரணி நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT