உடனடிச்செய்திகள்

Tuesday, February 20, 2018

பிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர் தற்காப்பு அரசியல்” பொதுக்கூட்டம்!

பிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர் தற்காப்பு அரசியல்” பொதுக்கூட்டம்!
இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. 

அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது!

அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே கடைபிடித்து வருகின்றோம்.
இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், வரும் 25.02.2018 அன்று தமிழ்த்தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுகளும், சிறப்புப் பொதுக் கூட்டங்களும் “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளன.
காவிரி உரிமை மறுப்பு, வெளியார் திணிப்பு, அணுஉலை - மீத்தேன் - நியூட்ரினோ - கெயில் - சாகர் மாலா - நீட் திட்டங்கள் திணிப்பு என பறிக்கப்பட்டுக் கொண்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஜி.ஆர். நகரில், வரும் ஞாயிறு (25.02.2018) மாலை 5.30 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் உள்ளிட்டொர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Monday, February 19, 2018

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!
தமிழினத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள அநீதித் தீர்ப்பு, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.


தீர்ப்பு வெளியான 16.02.2018 அன்று, தீர்ப்பைக் கண்டு கொதித்துப்போன தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், தருமபுரி இந்திய அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், காவிரித் தீர்ப்பு நகலை எரித்ததாகக் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய தருமபுரி த.தே.பே. செயலாளர் தோழர் க. விசயன், தோழர் ஜெ. முருகேசன் ஆகியோரை, 16.02.2018 அன்று நள்ளிரவு வீடு தேடிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

நள்ளிரவு 11.30 மணியளவில் தோழர் விசயன் வீட்டுக் கதவு சாத்தப்பட்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்யச் சென்ற தருமபுரி பி-1- காவல் நிலைய ஆய்வாளர் திரு. இரத்தினக்குமார் வீட்டிற்குள் சுவரேறி குதித்தார். தம்மைக் காவல்துறையினர் கைது செய்ய வந்திருப்பது தெரிந்து தோழர் விசயன் வழக்கறிஞருக்குக் கைப்பேசி வழியே தகவல் சொல்வதைப் பார்த்தவுடன், இரத்தினக்குமார் கதவை வேகமாகத் தட்டிக் கூச்சலிட்டுள்ளார். அதன்பிறகே தோழர் விசயனையும், காரிமங்கலத்திலிருந்த தோழர் ஜெ. முருகேசனையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 147, 188, 290, 293, 285 ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பி-1- காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து விடியற்காலை 5.30 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார். பின்னர், தோழர்கள் இருவரையும் தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜீவா பாண்டியன் அவர்கள் முன் காவல்துறையினர் நேர் நிறுத்தியபோது, தோழர்கள் இருவரையும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார். காவல்துறையினர் மீண்டும் மீண்டும் என நான்கு முறைக் கோரிய போதும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.
காவல்துறையினர் மிகவும் நெருக்கடி கொடுக்கவே, தோழர்கள் இருவருக்கும் நீதிபதி அவர்கள் அங்கேயே பிணை வழங்கியதோடு பிணை தாரர்களை திங்கள்கிழமை (19.02.2018) நேர் நிறுத்தும்வரை சிறையில் வைத்திருக்கும்படி ஆணையிட்டார். இதனையடுத்து, தோழர்கள் இருவரும் தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்று (19.02.2018), வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் இருந்த நிலையில், தோழர் விசயனின் மனைவியும், தோழர் ஜெ. முருகேசனின் தம்பியும் நீதிபதியிடம் தாங்களே முறையிட்டு, பிணைதாரர்களையும் நேர் நிறுத்தி தோழர்களை பிணையில் விடுவதற்கான ஆணையைப் பெற்றனர். பா.ம.க. வழக்கறிஞர் வேல்முருகன் இதற்கான உதவிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்தார்.
இதனையடுத்து, இன்று மாலை தருமபுரி கிளைச் சிறையிலிருந்து விடுதலையான தோழர்கள் விசயன் - ஜெ. முருகேசன் ஆகியோரை எழுச்சி முழக்கங்களுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் வரவேற்று, மலர் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, ஐயா தங்கவேலு, தோழர்கள் கோ. பிரகாசம், கனகராசு, வனமூர்த்தி, தங்கவேலு சங்கர் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு முறையும் கர்நாடகத்தில் காவிரிக்கானப் போராட்டங்கள் நடக்கும் போது, தமிழ்நாட்டு முதல்வர் படத்தையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் படத்தையும், தீர்ப்புகளையும், ஆணைகளையும், பொதுச் சொத்துகளையும், தமிழர்களின் நிறுவனங்களையும், தமிழர்களின் பேருந்துகளையும் கன்னட இனவெறியர்கள் எரித்துப்போராடுகின்றனர். அம்மாநிலக் காவல்துறையினர், அவர்கள் அருகில்கூட வருவதில்லை! ஆனால், தமிழ்நாட்டிலோ தமிழர் உரிமைக்காகப் போராடுவோரை நள்ளிரவில் வீடு தேடிச் சென்று தமிழகக் காவல்துறையினரே கைது செய்த செயல், தமிழின உணர்வாளர்களிடம் கடும் கண்டனத்தை எழுப்பியது. சமூக வலைத்தளங்களில் இக்கைது நடவடிக்கையைப் பலரும் கண்டித்து எழுதினர். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றி!
காவிரி உரிமை மீட்புக்கான நமது போராட்டம் இன்னும் வீரியமாகத் தொடரும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, February 18, 2018

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை புதுச்சேரியில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு - புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமையேற்றார்.

உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் திரு. த. இரமேசு, தமிழர் தேசிய முன்னணி புதுச்சேரி தலைவர் ஐயா இளமுருகன், தமிழ் தமிழர் இயக்கப் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேசு, யாவரும் கேளிர் அறக்கட்டளை திரு. ஏ. கேசவன், தை நிமிர்வு அன்புநிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, February 17, 2018

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி தலைமையில் நடந்த போராட்டத்தில், மாந்த நேயப் பேரவை தோழர் பெ.ச. பஞ்சநாதன், அப்துல் கலாம் இலட்சிய பேரவை திரு. சிவத்திருநாதன், திரு. பாண்டியன், தமிழக உழவர் முன்னணி தோழர் மு. இராமகிருட்டிணன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி தோழர் தி.ஞானப்பிரகாசம், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அ.ரா.கனகசபை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிறைவாக துறையூர் கிளை தோழர் தே.இளநிலா நன்றி கூறினார்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகிய மூன்று பேரையும் கொண்ட அமர்வு, தமிழ்நாடு – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நடுநிலையைக் கடைபிடிக்கவில்லை!

கர்நாடகத்தின் நீர்த் தேவை அதிகமென்று பலவாறாக வர்ணிக்கும் தீர்ப்புரை, தமிழ்நாட்டின் நீர்த் தேவை பற்றி கண்டுகொள்ளவே இல்லை! எடுத்துக்காட்டாக, பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரிப்படுகையில் வருகிறது, அந்தப் பகுதிக்கு மட்டும் காவிரி நீரை வழங்குவதே சரி என்று காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதி முடிவில் கூறியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் முழு பெங்களூருவுக்கும் காவிரித் தண்ணீர் தேவை என்றும், பெங்களூரு உலக நகரம் என்றும் கூறி, அதற்கான கூடுதல் தண்ணீரை தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க.விலிருந்து 14.75 ஆ.மி.க.வை எடுத்து வழங்கியிருக்கிறது!

இந்த 14.75 ஆ.மி.க.வில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கக் கூடிய 20 ஆ.மி.க. நிலத்தடி நீரிலிருந்து 10 ஆ.மி.க.வை எடுத்துக் கொடுக்கிறோம் என்று தீர்ப்புரை கூறுகிறது. அந்த 10 ஆ.மி.க.வையும் கர்நாடகம் தர வேண்டிய 192இல் கழித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. அத்துடன், பெங்களூரு “உலக நகரம்” என்று கூறி, மேலும் 4.75 ஆ.மி.க. தண்ணீரை தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டிய நீரிலிருந்து கொடுக்கிறது.

பெங்களூரு நகரத்திற்கு கூடுதலாகத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ள 270 ஆ.மி.க.விலிருந்து ஏன் எடுக்கவில்லை? பெங்களூருவைவிட தொழில் துறையிலும், மக்கள் தொகையிலும் பெரிய நகரமாகவும், பன்னாட்டுத் தொழிலகங்கள் நிறைந்த நகரமாகவும் சென்னை இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை மாநகருக்குக் குடிநீரைக் கூடுதலாக ஒதுக்க உச்ச நீதிமன்றம் அக்கறைப்படாதது ஏன்?

அடுத்து, தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980இல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது! பாகுபாடான அணுகுமுறை!

உண்மையில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் 1972 – 80க்குப் பிறகு, இன்றைய நிலையில் நிலத்தடி நீர் பல பகுதிகளில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயன்படாத உப்பாகிவிட்டது. கர்நாடகம் காவிரியைத் தடுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி செய்ததால் நிலத்தடி நீரின் ஆழம், பல நூறு அடிகளுக்குக் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல!

இவ்வழக்கில், இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல! எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6A – தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த – அதற்குரிய தனிப் பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே” அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது.

இதிலிருந்து இந்திய அரசின் – பா.ச.க.வின் மோடி அரசின் தமிழ்நாட்டிற்கெதிரான வஞ்சக நெஞ்சம் தெரிய வருகிறது! ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வு, பொறியமைவு அமைப்பது கட்டாயம் என்ற வகையில் தனது தீர்ப்பில் ‘Shall’ போட்டுள்ளது.

அதே வேளை உச்ச நீதிமன்றம், இன்னொரு குழப்பத்தை வைத்துள்ளது! காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன், அதற்கான அதிகாரக் கட்டமைப்பு, தலைமை, உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணி போன்றவற்றை வரையறுத்துக் கூறியுள்ளது தீர்ப்பாயம்! எனவே, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றுதான் குறிப்பாகக் கூறியிருக்க வேண்டும்!

அதைவிடுத்து, ஒரு பொறியமைவு (A SCHEME) அமைக்க வேண்டுமென்று, பொத்தாம் பொதுவில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஏன்? இதைப் பயன்படுத்தி, இந்திய அரசு பல் இல்லாத – அதாவது அதிகாரமில்லாத காவிரிப் பொறியமைவு ஒன்றை அமைக்கும் அபாயம் இருக்கிறது! இந்தக் குழப்பத்தை உச்ச நீதிமன்றம் உருவாக்கி இருப்பது ஏன்?

காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கோ - கர்நாடகத்திற்கோ சொந்தமில்லை, அது “இந்தியத்தேசிய சொத்து” என்று தீர்ப்புரையில் கூறியதன் மர்மம் என்ன? காவிரி ஆறு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உரிமையுள்ள ஆறு! இந்த உரிமை இருப்பதால்தான், தண்ணீர்ப் பகிர்வு அளவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு அதைத் தீர்த்து வைக்க நீதித்துறையை நான்கு மாநிலங்களும் நாடியுள்ளன. 
ஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை – “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி – இந்திய அரசின் சொத்து என்பதாகும்! அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை – இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும்.

உச்ச நீதிமன்ற தீபக் மிஸ்ரா அமர்வுக்கு இந்த கருத்து இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தீர்ப்புரையில், திரும்பத் திரும்ப இந்திய அரசின் “தேசிய நீர்க் கொள்கை” என்ற பழைய சட்டத்தையும் புதிய வரைவையும் கூறுகிறது. “தேசிய நீர்க் கொள்கை” என்பது, ஆறுகளை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி இந்திய அரசின் கையில் வைத்துக் கொண்டு, அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவது என்பதுதான்! உழவர்கள் பாசனத்திற்கோ, மக்கள் குடிநீருக்கோ அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டுமெனில் “மீட்டர்” பொருத்தி, அந்த அளவுக்குக் கட்டணம் செலுத்தும் முறை என்பதுதான் “தேசிய நீர்க் கொள்கை”!

புதிய வரைவு நிலையில் 2012இலிருந்து இருக்கும் “தேசிய நீர்க் கொள்கை”யை உச்ச நீதிமன்ற அமர்வு, சட்டம்போல் எடுத்துக் கொண்டு அதை முதன்மைப்படுத்தி தீர்ப்புரையில் கூறுவதன் மர்மம் இதுதான்!

எந்த வகையில் பார்த்தாலும், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது! மனச்சான்று அற்றது! கட்டப்பஞ்சாயத்துத் தன்மையுள்ளது! கடைசியில், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவிரியை ஒப்படைக்கும் தன்மையுள்ளது! எனவே, இந்த இழப்புகளிலிருந்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க காவிரி வழக்கை – ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மேல் முறையீடாக நாம் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை! ஒன்றிய அரசு அதிகாரப்பட்டியல், மாநில அரசு அதிகாரப் பட்டியல், பொது அதிகாரப் பட்டியல் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிக்கலாக உள்ளது. மேலும், தகுந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு கலந்தாய்வு செய்து, காவிரி வழக்கை விசாரித்துத் தீர்ப்புரைக்க உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வை (Constitutional Bench) உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு அரசு, இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை உரியவாறு அணுக வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அதேவேளை, அரசமைப்பு அமர்வு தீர்ப்பளிக்கும் வரை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்திடுமாறு இந்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

அங்கும் இங்கும்!

அங்கும் இங்கும்!
காவிரி உரிமைப் போராட்டம் நடத்தியதற்காக தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
காவிரி குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென ஆணையிட்டிருப்பதாக சில விவசாய சங்கத் தலைவர்களும், சில ஊடகங்களும் பொய்யாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

சென்னையில் இன்று காலை நடந்த காவிரி உரிமைப் போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன், உண்மை என்ன என்பதை விளக்கினார்.

காவிரித் தீர்ப்பின் 457ஆவது பக்கத்திலுள்ள 403ஆவது பத்தியில், தெளிவாகக் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடாமல் - ஆறு வாரங்களுக்குள் ஒரு திட்டம் ( A SCHEME) நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதையும், அதையே, தமிழக முதல்வர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையின் பக்கம் 11இல் உறுதிப்படுத்தியுள்ளதையும் தோழர் பெ.மணியரசன் அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் இந்திய அரசு, அதிகாரமில்லாத ஒரு மன்றத்தை ஏற்படுத்திவிட்டு, ஒரு போலித் திட்டத்தை முன்வைத்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாகத் காவிரித் தண்ணீர் கிடைக்காமலிருக்க முயற்சிக்கலாம் என்றும் அவர் ஐயம் வெளியிட்டார். தெரிந்தோ தெரியாமலோ தீர்ப்பை மொட்டையாக வரவேற்பது இனத்துரோகம் என்றார்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

பறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்!

பறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்!

 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.



இன்று (17.02.2018), சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன், அகில உலக வள்ளலார் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு. அண்ணாதுரை, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, மாணவர்கள் இலயோலா மணி, பார்வைதாசன், செம்பியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இன்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!

காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்  தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!
காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன், தோழர் முருகேசன் ஆகியோரை, தமிழகக் காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

காவிரிச் சிக்கிலில் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் நேற்று (17.02.2018) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் தருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன், தோழர் முருகேசன் ஆகியோர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் படத்தை எரித்ததாகக் குற்றம் சாட்டி நேற்று நள்ளிரவில் தருமபுரி பி-1- காவல் நிலையக் காவலர்களால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டனர்.

பாரதிபுரத்திலுள்ள தோழர் விசயனின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்ததுடன், மண்ணாடிப்பட்டிலுள்ள தோழர் முருகேசனையும் கைது செய்தனர். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 147, 188, 290, 293, 285 ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவல் நிலையத்தில் சிறையிலுள்ள இவ்விருவரையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து இன்று அதிகாலை நேரில் சந்தித்தார். இருவரையும் நீதிபதி முன் நேர்நிறுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

தமிழர் மீதான இனவெறியே காரணம்!

தமிழர் மீதான இனவெறியே காரணம்!
காவிரிச் சிக்கலில் தமிழினம் துரோகத்தை மட்டுமே சந்திப்பதற்குக் காரணம், தமிழர் மீதான இனவெறியே தவிர தேர்தல் கணக்கு அல்ல!

கர்நாடகத்தைவிடக் கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட - மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டைப் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் அதைவிடக் குறைவாகவுள்ள கர்நாடகத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என இந்திய அரசும், இந்தியக் கட்சிகளும், இந்திய ஊடகங்களும், இந்திய நீதிமன்றங்களும் கருதுவதற்கு அடிப்படைக் காரணம் - தமிழர் மீதான இனவெறியே ஆகும்!
இந்திய - கர்நாடக இனவெறியை மறைக்க வேண்டும் என்பதற்காக, தேர்தலே இதற்குக் காரணம் என்று மடைமாற்றும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலே இல்லாத போது தமிழர் மீது தாக்குதல்களும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து அடாவடித்தனத்திலும் இந்திய - கர்நாடக அரசுகள் ஈடுபட்டன; ஈடுபட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம், கார்ப்பரேட்டுகள்தான் காரணம் என்று மடைமாற்றம் செய்கின்றனர். சென்னையை சூழ்ந்துள்ள கார்ப்பரேட்டுகளைவிடவா பெங்களுருவில் கார்ப்பரேட்டுகள் இருக்கின்றனர்?
இக்காரணங்களையெல்லாம்விட முதன்மைக் காரணம் - தமிழர் மீதான இந்திய - கர்நாடக இனவெறிப் பகையே! அதுவே, காவிரிச் சிக்கலில் நாம் சந்திக்கும் துரோகங்களுக்கு அடிப்படைக் காரணம்!
இனியும் இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழர்கள் ஏமாறக் கூடாது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்!

பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்!


காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாட்டு உரிமையைப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடெங்கும் தமிழர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சை

தஞ்சையில் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11.30 மணியளவில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சிமியோன் சேவியர்ராஜ், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான தோழர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.


தருமபுரி

தருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, நண்பகல் 12.30 மணியளவில் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. விசயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


குடந்தை

குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில், பகல் 1 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன் உள்ளிட்ட தோழர்களைக் காவல்துறையினர் வலுவந்தமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.


திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில், 16.02.2018 மாலை 4 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா சிலை அருகில், ஒன்று கூடிய தோழர்கள், அங்கிருந்து முழக்கங்கள் எழுப்பியபடி புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்து காவிரி உரிமைப் பறிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் சை. செயபால், கோட்டூர் செயலாளர் தோழர் தனபாலன், நகரச் செயலாளர் தோழர் இரமேசு, தமிழக உழவர் முன்னணி தோழர் கோவிந்தசாமி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


ஓசூர்

ஓசூர் – இராம் நகர் – அண்ணா சிலை முன்பு, மாலை 5 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஓசூர் செயலாளர் தோழர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர். திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். காவிரித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதியாக தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில், 177 ஆ.மி.க. என எழுதப்பட்ட தாள்களை தோழர்கள் எரிக்க முயன்றபோது, காவல்துறையினர் அதைத் தடுத்து நிறுத்தவே தள்ளுமுள்ளு ஆனது.


திருச்சி

திருச்சியில், மாலை 5.30 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணி திருச்சி அமைப்பாளர் திரு. நகர் ஆ. செல்லையன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இனியன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் வெள்ளமாள் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர்.


இதேபோல், இன்று (17.02.2018) காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலும், மாலை 5 மணிக்கு, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT