உடனடிச்செய்திகள்

Wednesday, December 24, 2008

கைதுக்கு சற்றுமுன் பெ.மணியரசன் பேட்டி - இன்றைய(24-12-2008) குமுதம் ரிப்போர்ட்டர்


மீண்டும் அரங்கேறியிருக்கிறது கைதுப்படலம்.  இந்த முறை இயக்குநர் சீமானுடன் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோரும் கைதாகியிருக்கிறார்கள். ஈரோட்டில் கடந்த 14-ம் தேதி தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், `தமிழர் எழுச்சி உரை வீச்சு' என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், ராஜீவ் படுகொலையைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகவும் தமிழக காங்கிரஸார் போர்க்கொடி தூக்க, இந்த மூவரும் கைதாகியிருக்கிறார்கள்.

வத்தலகுண்டில் படப்பிடிப்பில் இருந்த சீமானும், மேட்டூரில் கொளத்தூர் மணியும் 19-ம் தேதி கைது செய்யப்பட, அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மணியரசனும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற பரபரப்பான சூழ்நிலை. சென்னை, தியாகராய நகரில் உள்ள தனது அலுவலகத்தில் போலீஸார் வருகைக்காகக் காத்திருந்த மணியரசனை அன்று மாலை சரியாக ஆறு மணிக்குச் சந்தித்தோம்.

இயக்குநர் சீமான், கொளத்தூர் மணியும் கைதாகக் காரணமாக இருந்த அந்தக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது?

``தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்களின் உரிமையை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப் படுகொலை செய்கிறது. சிங்கள அரசை ஆதரித்து ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வருகிறது, இந்திய அரசு. ஒன்பது கோடி உலகத் தமிழர்களின் கோரிக்கைக்கு இந்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது. இத்தாலியர்கள் கொல்லப்பட்டால், அவர்களைக் கொல்கின்ற அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் தருமா? மலையாளிகளைக் கொல்கிற அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் தருமா? தமிழினத்தை அழிக்கத் துணை போகும் இந்திய அரசை அந்தக் கூட்டத்தில் வன்மையாகக் கண்டித்தோம்.

ஈழத்தில் மட்டுமின்றி, தமிழக  மீனவர்கள் 406 பேர் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாடுகளுக்கு இடையே கடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாடுகளுக்கு இடையே யுத்தம் வரும் போதுகூட ஒரு நாட்டின் மீனவர்களை எதிரி நாட்டு ராணுவம் கொல்வதில்லை. இந்தியா- பாகிஸ்தான்  இடையே அடிக்கடி போர் மேகம் சூழ்கிறது. இருந்தும் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீன்பிடிக்கும் குஜராத், மகாராஷ்டிரா மீனவர்களை அந்நாட்டு ராணுவமோ, கராச்சி மீனவர்களை இந்திய ராணுவமோ சுட்டுக் கொன்றதில்லை. எல்லை தாண்டினால் கைது செய்து எச்சரித்து அனுப்புகிறார்கள். ஆனால், தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக நமது மீனவர்களை சிங்களப் படையினர் கொல்கிறார்கள். இதற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சல்தான் காரணம் என்றும் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தோம்.

தமிழர்கள் உறுதியாக எழுந்து நின்றால்தான் இழந்த உரிமைகளைப் பெறமுடியும். ஒற்றுமை இருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள உரிமைகளைப் பெறமுடியும் என்றும் பேசினோம். ஈழத்தில் மட்டுமல்ல; தமிழகத்திலும் தமிழனின் உரிமை மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் மின்வெட்டு கடுமையாக இருக்கிறது. ஆனால், நமக்குக் காவிரி நீர் தரமறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் செல்கிறது. காவிரி நீர்ப் படுகைகளில் கிடைக்கும் பெட்ரோல் முழுவதையும் தமிழகத்துக்குப் பயன்படுத்தினால், பெட்ரோல் விலையும் உயராது என்றும் பேசினாம். எங்களது இந்தப் பேச்சு, இந்திய இறையாண்மைக்கு எந்தளவுக்குப் பங்கம் ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. தமிழினம் கொல்லப்படும் போது ஒப்பாரி வைத்து அழுதால் கூட இலக்கணப் பிழை என்று சொல்லிக் கைது செய்கிறார்கள். என்னைக் கைது செய்ய வரும் போலீஸாருக்காகக் காத்திருக்கிறேன்.''

அப்படியென்றால், இந்தக் கைது நடவடிக்கையில் ஏதாவது அரசியல் பின்னணி இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா?

``அந்தக் கூட்டத்தில் இளங்கோவனின் தமிழின விரோதப் போக்கைப் பட்டியலிட்டேன். திருமா வளவனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வரும் இளங்கோவன், டெல்லி சென்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்கக் கூடாது என்றார்.    ஈரோட்டில் கன்னடர்களின் ஆதரவால் வெற்றி பெற்றதாக தவறாக நினைத்துக் கொண்டு, தன்னை  வெற்றிபெறச் செய்த தமிழர்களிடம் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தவர்,  இளங்கோவன். சுப.தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு ஐ.நா. சபையே கண்டனம் தெரிவித்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் வைக்கப்பட்டிருந்த சுப. தமிழ்ச்செல்வன் இரங்கல் போஸ்டர்களைக் கிழித்தெறிய, தன் கட்சிக்காரர்களை இளங்கோவன் தூண்டினார்.

அவருக்கு ராஜீவ் காந்தி மீது இருக்கும் பற்றைவிட தமிழினத்தின் மீது இருக்கும் பகை உணர்ச்சியே அதிகம். எங்களைக் கைது செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தவர், மொடக்குறிச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனிச்சாமி. மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் அவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கோஷ்டி ஆள். எனவேதான் இந்தக் கைதுக்கு இளங்கோவனின் நெருக்கடியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறோம்.''

ஈழப் பிரச்னையில் தமிழக முதல்வரின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

``கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். பதவி  அரசியலில் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என மாறி மாறி நிற்கிறார். கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக, இந்திய அரசு அறிவித்தது. ஆனால், இன்று வரை அவர் இலங்கை செல்வதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை. இதை, கருணாநிதியின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், கருணாநிதியே அலட்சியமாகத்தான் அந்தக் கோரிக்கையை வைத்தார்.

தமிழினத்துக்கு எதிராக ஓடும் சாக்கடை ஆற்றின் இரு கரைகளாக கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் தமிழினப் பகைக்கு எதிரானவர்கள் கருணாநிதி பக்கமும், கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு எதிரானவர்கள் ஜெயலலிதா பக்கமும் இருந்து, இரு கரைகளையும் பலப்படுத்துகிறார்கள். அடிக்க அடிக்க மேலே எழும் பந்துபோல இந்தக் கைதால் தமிழர்களின் எழுச்சி விஸ்வரூபம் எடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்'' என்று மணியரசன் சொல்லி முடிக்க, அவரைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர். ``ஈழத் தமிழர்களைக் காப்பாற்றாத இந்திய அரசைக் கண்டிக்கிறோம்'' என்ற தோழர்களின் கோஷங்களுக்கு இடையே ஜீப்பில் ஏற்றப்பட்டார், பெ.மணியரசன்.

படம்: ஞானமணி
 
நன்றி  குமுதம் ரிப்போர்ட்டர் - 24-12-2008

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT