உடனடிச்செய்திகள்

Wednesday, March 9, 2011

மலையாள ஆலுக்காசை வெளியேற்று! - தஞ்சையில் மறியல் 350 பேர் கைது!

மலையாள ஆலுக்காசை வெளியேற்று!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் மறியல்
350 பேர் கைது!
தமிழ்நாட்டில் நகைவணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள ஆலுக்காஸ் நகை மாளிகையைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றக் கோரி இன்று (09.03.2011) காலை 10.30 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆலுக்காஸ் நகை மாளிகை முன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆலூக்காஸ் நகை மாளிகை முன்பு திரண்ட இனஉணர்வாளர்கள் கையில் த.தே.பொ.க. கொடியை ஏந்தியபடி “வெளியேற்று! வெளியேற்று! மலையாள ஆலூக்காசை வெளியேற்று!” என்று ஆக்ரோசமாக ஒரே குரலில் முழக்கமிட்டனர்.

பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக முழக்கமிட்டுக் கொண்டிருந்த இனஉணர்வாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரான்சிஸ் ஆலூக்காஸ் நகை மாளிகைக்குள் முழக்கமிட்டுக்கொண்டே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத ஆலூக்காஸ் நகை மாளிகை நிர்வாகத்தினர் உடனடியாகக் கடையை மூடினர்.

போராட்டக் குழுவினர் அத்தனைபேரும் நகை மாளிகையின் படிக்கட்டிலும் வாசலிலும் சாலையிலும் கீழே அமர்ந்து முழக்கமிடத் தொடங்கினார்கள்.

த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.சு முனியாண்டி, த.இ.மு. தஞ்சை நகரச் செயலாளர் செந்திறல் உள்ளிட்டோர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் அருகாமையிலிருந்த ஜோஸ் ஆலூக்காஸ் கடையை நோக்கி விரைந்தனர். இதையும் எதிர்பார்த்திராத காவல்துறையினர் போராட்டக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதற்குள் திணறிப் போயினர். போராட்டத்தின் போது நகை மாளிகையின் மீது கற்கள் வீசப்பட்டன. ஆலூக்காசின் விளம்பரப் பலகை கிழிக்கப்பட்டது.

நாற்பது நிமிடங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது. இறுதியில் 3 சிற்றுந்துகள் 2 காவல் வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்களில் போராட்டத்திற்குத் தலைமைவகித்த தோழர் பழ.இராசேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, ஓசூர் மாரிமுத்து, மதுரை ஆனந்தன், த.தே.பொ.க.தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி, த.இ.மு. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் செந்திறல், பூதலூர் ஒன்றிய மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரெ.கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் காமராசு, த.இ.மு.ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ம.கோ.தேவராசன், சிதம்பரம் த.இ.மு. செயலாளர் குபேரன், தோழர்கள் கோவை சங்கர், பரமக்குடி இளங்கோ, குடந்தை விடுதலைச் சுடர், நாகை ரவி, திருத்துறைப்பூண்டி அரசு, காட்டுமன்னார்குடி அருளமுதன், சென்னை நாகராசு, செங்குன்றம் பன்னீர் செல்வம், மன்னார்குடி இரெ.செ.பாலன், மதுரை ராசு, கீரனூர் ஆரோக்கியசாமி, பெண்ணாடம் முருகன், திருச்சி செயலாளர் கவித்துவன், இனியன், மகளிர் ஆயம் தஞ்சை அமைப்பாளர் இலெட்சுமி, பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் மீனா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டோர் தஞ்சை கீழவாசலில் உள்ள அன்னை திருமணமண்டபத்திற்குக் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தஞ்சையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கும்பகோணம் ஆலூக்காஸ் நகை மாளிகை இன்று மூடப்பட்டது. தஞ்சை மற்றும் குடந்தை நகரங்களைச் சேர்ந்த பொற்கொல்லர்களும் நகை வணிகர்களும் போராட்டக் களத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சென்றனர். குடந்தை விஸ்வகர்மா சங்கத்தினர் தங்கள் பதாகையோடு போராட்டத்திற்கு வந்திருந்தனர்.

இரண்டு நகைமாளிகை முன்பும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. உடனடியாக அதிரடிப்டையினர் வரவழைக்கப்பட்டனர். அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் ஆலூக்காஸ் நகை மாளிகைகள் உள்ள சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடைசி செய்தி கைது செய்யப்பட்ட அத்தனைபேரையும் சிறைக்கு அனுப்புவதற்காக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.










போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT