உடனடிச்செய்திகள்

Friday, March 4, 2011

தமிழர்களை புறக்கணிக்கும் இந்திய அரசு! நாளை(05.03.2011) ஆவடியில் ஆர்ப்பாட்டம்!

தமிழர்களைப் புறக்கணிக்கும் ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலை!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலை உள்ளிட்ட 6 படைக்கலன் தொழிற்சாலைகளுக்காக அண்மையில் சார்ஜ்மென்(Chargeman) உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், அதிகளவில் அயல் மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் வெறும் 15 விழுக்காட்டு அளவிற்கே தமிழர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தமிழர்களை அவர்களது மண்ணிலேயே புறக்கணிக்கும் நடவடிக்கையாகும். இதற்கு அங்குள்ள தொழிற்சங்கங்களே கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆவடித் தொழிற்சாலை மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கும் பல்வேறு இந்திய அரசுத் தொழிற்சாலைகளிலும் இதே போன்று மண்ணின் மக்களான தமிழர்களைப் புறக்கணிக்கும் நிலை தொடர்ந்து வருகின்றது. திருச்சி திருவெறும்பு+ரில் அமைந்துள்ள இந்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனம் 2007ஆம் ஆண்டு அதிகளவில் மலையாளிகளையும், பீகாரிகளையும் பணியில் அமர்த்தியதைக் கண்டித்து அந்நிறுவனத்தின் வாயிலில் த.தே.பொ.க. போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழர்களைப் புறக்கணிக்கும் போக்கைக் கைவிடக்கோரியும், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்திலும் மண்ணின் மக்களான தமிழர்களுக்கு 85 விழுக்காட்டு இடங்களை ஒதுக்க வேண்டுமெனக் கோரியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, ஆவடி திண்ஊர்தித் தொழிற்சாலை நிர்வாகத்தின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் 05.03.2011 அன்று மாலை ஆவடி பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குவார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, தமிழர் தன்மானப் பேரவை அமைப்பாளர் ஆவடி மனோகரன், தமிழர் தேசிய இயக்கம் முத்தமிழ்மணி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தாயகக் காப்பு உணர்வுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவை நல்கும் விதமாக அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
போராட்டம் குறித்த தொடர்புக்கு: 9941089659

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT