உடனடிச்செய்திகள்

Monday, July 16, 2012

காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது! நெய்வேலி நிறுவனத் தலைமையகம் முற்றுகை! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவு


காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது!

நெய்வேலி நிறுவனத் தலைமையகம் முற்றுகை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15.07.2012 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து, பா.தமிழரசன், க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கிருட்டிணகிரியில் படுகொலை செய்யப்பட்ட பெ.தி.க. அமைப்பாளர் தோழர் பழனி அவர்களுக்கும், மறைந்த பாவலர் பல்லவன் அவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. கீழ்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
நெய்வேலி நிறுவன முற்றுகை

காவிரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் இடைக்காலத் தீர்ப்பே செயலில் உள்ளது. இத்தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு சூன் மாதம் 10.16 டி.எம்.சி காவிரித்தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். சூலை மாதம் 15 ஆம் நாள் வரை 21.38 டி.எம்.சி திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆகமொத்தம்  தமிழகத்திற்கு உரிமையான ஏறத்தாழ 33 டி.எம்.சி காவிரிநீரை கர்நாடகம் முடக்கி வைத்திருக்கிறது.

கர்நாடகத்தில் பருவமழை வழக்கத்தைவிட இதுவரை குறைவாக பெய்திருப்பதாக கர்நாடகம் அரசு கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகள் வறண்டிருக்கவில்லை. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஏமாவதி ஆகிய அணைகளில் மொத்தம் 65 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் உள்ளது. அதிலிருந்து சூன் மாதத்திற்கு உரிய தண்ணீரை திறந்திவிட்டிருந்தால் கூட தமிழகத்தில் குறுவை சாகுபடியை நம்பிக்கையோடு தொடங்கியிருக்க முடியும்.

ஆனால் அடாவடித் தனமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரை முடக்கி வைத்து ஒரு சொட்டுத் தண்ணீரும் திறந்து விடமாட்டோம் எனக் கொக்கரிக்கிறது. இதனால் காவிரி பாசனப் பகுதியில் குறுவை சாகுபடி கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மழையும் பெய்யாத நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாக உள்ளது.

இராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர்த் திட்டங்கள் பலவும் காவிரி நீரை நம்பியே உள்ளன. இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் நெருங்கி வருகிறது.

காவிரி ஆணையத்தைக் கூட்டி இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என இந்திய அரசும் ஆணையிடவில்லை. இந்திய அரசு  தனது சட்டக் கடமையை நிறைவேற்ற மறுக்கிறது. தனது மவுனத்தின் மூலம் கர்நாடகத்திற்கு சார்பாக நடந்துகொண்டு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

அதே நேரம், காவிரி நீர் மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு செயலில் இருக்கும் இன்றைய நிலையிலும் நெய்வேலி இரண்டாவது அனல் மின்நிலையத்திலிருந்து கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட் மின்சாரம் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

இந்நிலையில் பதிலடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர தமிழர்களுக்கு வேறுவழியில்லை. எனவே “காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பாதேஎன்ற முழக்கத்தை முன்வைத்து வரும் ஆகஸ்டு 10 வெள்ளியன்று நெய்வேலியில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது. இப்போராட்டத்தை கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென்று த.தே.பொ.க கேட்டுக் கொள்கிறது.


ஆகஸ்டு 6 ஹிரோஷிமா நாளில் அணு உலைக்கெதிரான ஆர்ப்பாட்டம்


இரண்டாவது உலகப்போரில் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மக்களின் நினைவை ஏந்தி அணு ஆற்றலின் அழிவு வேலையை கண்டிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 6-ஆம் நாள் ஹிரோஷிமா நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இந்நாளில் மின்சார உற்பத்தி என்ற பெயரால் தலைமுறை தலைமுறையாக மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பேரழிவை உண்டாக்கும் அணு உலைகளை மூடக்கோரி கண்டன இயக்கங்கள் நடத்துவதென பல்வேறு சூழலியல் அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும்முடிவு செய்துள்ளன.

 இதற்கு இசைய வரும் ஆகஸ்டு 6 ஹிரோஷிமா நாளில் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை மூடுமாறு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதெனதலைமைச் செயற்குழு முடிவு செய்தது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சிதம்பரம், தஞ்சை, ஒசூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தை இக்கோரிக்கையில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளையும், இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தபட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து காயத்திரி என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயலில் உள்ள இட ஒதுக்கீடு திட்டத்திற்கு இதன்மூலம் இக்கட்டு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இச்சிக்கல் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க இந்திய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவரும் நிலையில் இவற்றின் முடிவுகள் தெரியும் வரை இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. இதனை வலியுறுத்தி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நடப்பில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முன்வரவேண்டும் என தலைமைச் செயற்குழுக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தோழமையுள்ள,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்

நாள் :16.07.2012 
இடம் : சிதம்பரம்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT