உடனடிச்செய்திகள்

Friday, July 6, 2012

தனியார் நிறுவனங்கள் இலாபம் கொழுக்கும் வகையில் மின்கொள்முதல்: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் உணர்வாளர்களும், அமைப்புகளும் கடிதம் எழுத வேண்டுகோள்!


தனியார் மின் நிறுவனங்கள் இலாபம் கொழிக்கும் வகையில்தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சார கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்இம்முடிவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தடுத்த நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்த மின்சாரம் வாங்க முடிவு செய்திருக்கும்தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு வாரியத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துவதோடுமக்களை கடுமையாக  பாதிக்கும். அமைச்சர்களுக்கும்தனியார் மின் நிறுவனங்களுக்கும் இடையே கையூட்டு வழித் தொடர்பிருப்பதால் தான்இவ்வாறான மோசமான முடிவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் எடுத்திருப்பவர் என நாம் ஐயப்படுகிறோம்.

இது குறித்துதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளருக்குதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியம் நடப்பு சூலை-2012க்குஇந்து பாரத் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ5.50க்கு வாங்கும் முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.  இது சட்ட விரோதமானது;  வாரியத்திற்கு ஆண்டுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தக்கூடியது.  மேலும் ஒரு கட்டண உயர்வுக்கு இட்டுச் செல்லக் கூடியது. 

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களோடு செய்து கொள்ளப்பட்ட மின்வாரியத்தின் ஒப்பந்தம் 31.05.2012 உடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் அவசர முடிவாக சூன் 2012க்கு மட்டும் ரூ5.05க்கு சந்தை நிலவரத்தைவிட கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வாரியம் முடிவெடுத்தது. இம்முடிவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மிகுந்த தயக்கத்தோடு ஏற்பதாக 2.06.2012 அன்று அறிவித்தது.

இப்போது மீண்டும் சூலை 2012க்கு தனியாரிடம் யூனிட்டுக்கு ரூ5.50 விலை கொடுத்து வாங்குவதாக முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.  வாரியம் தனது இம்முடிவிற்கு ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியையும் பெறவில்லை.  இது சட்டவிரோதமானது ஆகும். 

இன்றைய நிலையில் எரிவாயு அடிப்படையில் மின்உற்பத்தி செய்யும் தனியார் மின்சாரத்தின் அதிகபட்ச சந்தை விலை ரூ3.40 ஆகும். (எ.கா.பென்னா நிறுவனம்) மின்வாரியத்தின் சொந்த எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ2.90 ஆகும். நிலக்கரியைப் பயன்படுத்தி மின்வாரியம் தயாரிக்கும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ3.10 மட்டுமே.  நிலக்கரி மின்சாரம் தனியாரிடம் வாங்கினால் அதன் விலை யூனிட்டுக்கு ரூ4.28 ஆகும். 

சந்தை நிலவரம் இவ்வாறு இருக்க இந்து பாரத் உள்ளிட்ட தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்வாரியம் யூனிட்டுக்கு ரூ5.50 கொடுத்து வாங்குவது நியாயமற்றது. தனியார் நிறுவனங்களுக்குச் சார்பாக மின்வாரியம் இவ்வாறு முடிவெடுத்துவிட்டதோ என்று ஐயுற அடிப்படை இருக்கிறது. 

ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியம் பெரும் இழப்பில் இயங்கி வருவதாகவும்கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் இருக்கும் வாரியத்திற்கு அரசு பல்லாயிரம் கோடி மானியம் அளித்து தூக்கி நிறுத்தி வந்ததாகவும்வேறு வழியின்றி கடுமையான மின்கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விளக்கம் அளித்தார். 

இச்சூழலில் சந்தை விலையைவிடக் கூடுதலாக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு வாரியம் முனைந்திருப்பது மேலும் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.5000கோடி இழப்பை ஏற்படுத்தும்.  அதாவது இம்முடிவு செயலாகிற ஒவ்வொரு நாளும் வாரியத்திற்கு ஏறத்தாழ ரூ13.7கோடி  இழப்பு ஏற்படுகிறது என்று பொருள்.  அதே நேரம் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் கூடுதலாக ரூ3 கோடி இலாபம் பெறுகின்றன. 

இச்சுமை முழுவதும் வருங்காலத்தில் கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப்படக்கூடும். தனியார் மின் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் இலாபம் பெற்றுத் தருவதற்காக மின்வாரியத்திற்குத் தேவையற்ற இழப்பை ஏற்படுத்தியுள்ள வாரிய இயக்குநர் குழு (Board Of Directors) முடிவு மிகவும் தவறானது.  இச்செயலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

ஒழுங்கு முறை ஆணையம் தலையிட்டு மின்வாரியத்தின் இந்த மக்கள் பகை முடிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தோழர் கி.வெங்கட்ராமன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதே போன்ற கடிதத்தை அவரவர்களும்தனிப்பட்ட முறையிலும்அல்லது அவர்களது அமைப்பைச் சார்ந்தும் எழுதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்புமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின்னஞ்சல் முகவரி: tnerc@nic.in

இடம்: சென்னை-17
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT