உடனடிச்செய்திகள்

Thursday, July 26, 2012

காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு!


காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு
நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு!


தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரைத் தராத கர்நாடகத்திற்குநெய்வேலியிலிருந்து மின்சாரம் தரக் கூடாது என வலியுறுத்தி வரும் ஆகத்து-10 வெள்ளியன்று காலை 10 மணிக்கு, இந்திய அரசின் நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்துகின்றது. இப்போராட்டத்திற்குதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்.
இப்போராட்டத்தை விளக்கி த.தே.பொ.க. வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர், ஏமாவதி, கபினி உள்ளிட்ட அணைகளில், மொத்தக் கொள்ளளவில் முக்கால் பாகம் தண்ணீர் நிரம்பி விட்டது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பது உண்மை இல்லை. கர்நாடகம் தமிழர்கள் மீது பகை உணர்ச்சி கொண்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 26 இலட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரினால் காலம் காலமாகப் பாசனம் பெற்று வருகிறது. சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரை – தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள்  குடிநீருக்குக் காவிரியை நம்பி உள்ளனர்.
ஏடறிந்த காலந்தொட்டுக் காவிரிக்கும் தமிழர்களுக்கும் தாய் – சேய் உறவு தொடர்கிறது.  தமிழர் நாகரிகத்தின் வளர்ப்புத் தாய் காவிரி. தமிழ் இனத்தின் அடையாளம் காவிரி.
இவ்வாண்டு ஐந்து லட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடியைச் செய்ய விடாமல் பாழடித்துவிட்டது கர்நாடகம். ஒரு போகச் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. தமிழகத்திற்குரிய தண்ணீரைச் சட்ட விரோதமாகத் தனது கோடைச் சாகுபடிக்குப் பயன்படுத்திக் கொண்டது. 
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருக்கிறது.  இடைக்காலத் தீர்ப்பு 1991இல் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு இந்திய அரசால் அதன் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரம் பெற்றுள்ளது. 
அந்த இடைக்காலத் தீர்ப்பின்படி சூன்மாதம் 10.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும், சூலை மாதம் 42.76 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும் கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். மூர்க்கத்தனமாகக் கர்நாடகம் மறுத்துவிட்டது.  தட்டிக் கேட்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய இந்திய அரசு நயவஞ்சகமாக மவுனம் காக்கிறது.  மறைமுகமாகக் கர்நாடகத்தின் மூர்க்கத் தனத்தை ஆதரிக்கிறது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டும்கூட பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தைக் கூட்ட மறுக்கிறது இந்திய அரசு.
சூடானில் உற்பித்தியாகி எகிப்தில் பாயும் நைல் ஆறு எந்தத் தடையுமின்றி ஓடுகிறது.  பகை இருந்தபோதும், இந்தியாவில் உற்பத்தியாகும் சிந்து, சீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானில் தடையின்றிப் பாய்கின்றன.  பல நாடுகளுக்கிடையே ஓடும் ஆறுகளின் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள ஹெல்சிங்கி உடன்பாடு உள்ளது.
இந்தியாவுக்குள் இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள சட்டமில்லையா? இருக்கிறது. அது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் (1956). அச்சட்டப்படி அமைக்கப்பட்டதுதான் காவிரித் தீர்ப்பாயம். அதன் தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கிறது கர்நாடகம். கர்நாடகத்தின் இனவெறிக்குத் துணை போகிறது இந்திய அரசு.
 நர்மதை, கிருஷ்ணா, ஆறுகளின் தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்புகள் செயல்படுகின்றன.  காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பு மட்டும் கழிவறைக் காகிதம் ஆனது ஏன்? நாம் தமிழர்கள் என்பதாலா?
 உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்கிறது கேரளம்! அந்த அராஜகத்திற்கு ஆதரவு தருகிறது இந்திய அரசு! இந்தியாவில் தமிழ் இனத்திற்குச் சட்ட நீதி எதுவும் கிடையாதா?
சிறுவாணியில் அணைகட்டிக் கோவை, திருப்பூர் மாவட்டக் குடிநீரைத் தடுக்கப் போகிறது கேரளம். அமராவதிக்குத் தண்ணீர் வழங்கும் பாம்பாற்றில் அணை கட்டப் போகிறது கேரளம்.  பாலாற்றில் கணேசபுரத்தில் அணைகட்டிக் கசிவு நீரையும் தடுக்கப் போகிறது ஆந்திரப் பிரதேசம்.
 இனிப் பதிலடி கொடுக்காமல் சட்டம் பேசிப் பயனில்லை தமிழர்களே! நம் நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்குப் பதினோரு கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகம் போகிறது. அதைத் தடுப்போம். அம்மின்சாரம் தமிழ்நாட்டிற்குப் பயன்படட்டும். அங்கிருந்து கேரளத்துக்கு ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் போகிறது.  ஆந்திரத்துக்கு ஆறு கோடி யூனிட் மின்சாரம் போகிறது. தமிழர்கள் மட்டும் ஏமாளிகளா?
 காவிரியில் கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுப்போம்! பாகுபாடு காட்டும் இந்தியாவுக்குப் பாடம் புகட்டுவோம்! கர்நாடகச் சிறையிலிருந்து காவிரியை மீட்போம்! களம் அழைக்கிறது வாருங்கள் தமிழர்களே!
 இவ்வாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ் உணர்வாளர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.(செய்தி; த.தே.பொ.க., செய்திப் பிரிவு, இணைப்பு: போராட்டத் துண்டறிக்கை)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT